Saturday, July 23, 2011

நடுவானத்தில் மோதவிருந்த விமானங்கள் நூலிழையில் தப்பின!

பாட்னா: டெல்லியிலிருந்து கவுஹாத்தி நோக்கி சென்று கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் எதிரே வந்துக்கொண்டிருந்த மற்றொரு விமானத்தின் மீது மோதவிருந்த விபத்திலிருந்து மயிரிழையில் தப்பியது.
ஜெட் ஏர்வேஸ் விமானமும் மற்றொரு சர்வதேச விமானமும் பாட்னா எல்லைக்குள் பறந்து கொண்டிருந்தபோது திடீரென அவை நேருக்கு நேர் வந்து மோத இருந்த வேளையில் இரு விமானிகளும் திறமையாக செயல் பட்டதால் அந்த விபத்திலிருந்து இரு விமானங்களும் தப்பின.
நேற்று காலை 10.15 மணிக்கு 136 பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் டெல்லியிலிருந்து கிளம்பியது. 11.35 மணியளவில் பிகார் தலைநகர் பாட்னா மீது பறந்து கொண்டிருந்தபோது, திடீரென அந்த விமானம் பல மீட்டர் தூரம் கீழே இறங்கியது. இதனால் பயணிகள் அலறிப்போனார்கள்.
இதையடுத்து விமான ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்து பேசிய விமானி தமது பாதையில் மிக அருகே ஒரு போயிங்- 747 சர்வதேச விமானம் அதேபாதையில் எதிரே வந்ததால், விமானத்தின் உயரத்தை உடனடியாக 1,000 அடி குறைக்குமாறு தரைக்கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து உத்தரவு  வந்ததால்தான் உடனடியாக விமானத்தை 1000அடி கீழே இறக்கியதாக கூறினார். இதனால் பயணிகள் பதற்றமடைந்தனர்.

கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாக முஸ்லிம் பெண் புகார்

கர்நாடக மாநிலம் உடுப்பியில் சரலெபெட்டு சிவபாடி உமாமஹேஸ்வரி கோவிலருகே வசித்து வரும் முஸ்லிம் பெண் புஷ்ரா. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு தனது கணவர் ஜாபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு இக்பால் (4), இர்பான் (3), பாத்திமா யாஸ்மீன் (2) மற்றும் ஜலாலுதீன் என்ற ஒன்றரை மாத கைக்குழந்தையும் உள்ளனர்.

மணிப்பால் சரலெபெட்டு சிவபாடி ஸ்ரீ உமாமகேஸ்வரி கோவில் அருகே குடும்பத்துடன் வசித்துவரும் புஷ்ராவை, பஜ்ரங் தள் தீவிரவாத அமைப்பைச் சார்ந்த குண்டர்கள் மனோகர் என்பவனது தலைமையில் புஷ்ராவின் கணவன் ஜாபர் முன்னிலையில் அவரது வீட்டுக்குள் புகுந்து வலுக்கட்டாயமாக அருகிலுள்ள கோவிலுக்கு இழ்த்துச்சென்று இந்து மதத்திற்கு மாறும்படி மிரட்டியுள்ளனர்.
 

புஷ்ரா இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, தான் இஸ்லாமிய மதத்திலிருந்து வெளியேற விரும்பவில்லை என்று உறுதியாகச் சொன்னபோது குழந்தைகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர். கோவில் பூசாரியிடம் புஷ்ரா இந்துவாக விரும்பவில்லை என்றும் இஸ்லாம் மதத்திலேயே தொடரவிரும்புவதாகச் சொல்லி மன்றாடிய பிறகும் பூசாரி வலுக்கட்டாயமாக மதமாற்றும் (பிரவர்த்தன்) நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
 

மங்களூர் காவல்துறை ஆணையர் அலோக் மோகனிடம் நேற்று அளித்த புகாரில் தன்மீதான கட்டாய மதமாற்ற முயற்சிகளையும், தனது உயிருக்கு ஆபத்திருப்பதையும் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில் தனது கணவன் ஜாபர் முன்பாகவே பஜ்ரங்தள் தலைவன் மனோகர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்,குழந்தைகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதையும் கண்ணீருடன் தெரிவித்தார்.
 

கோவிலில் நடந்த கட்டாய மதமாற்ற நிகழ்ச்சியில் தனது எதிர்ப்பை தெரிவித்தபோது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது என்பதால் அமைதியாக இருந்துள்ளார்.இதைக்காரணமாக வைத்து புஷ்ரா இந்துவாக மதம் மாறிவிட்டதாக வதந்தி பரவியதால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 

இவரது கணவன் ஜாபர், திருமணத்திற்கு முன்பு பிரசாந்த் செட்டி என்ற பெயருடன் இந்துவாக இருந்துள்ளார். புஷ்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டபிறகு அடுத்தடுத்து குழந்தைகளைக் கொடுத்துவிட்டு, தற்போது பஜ்ரங்தள் குண்டர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளான். அவரது வீட்டிற்கு பஜ்ரங்தள் குண்டர்களையும் அழைத்து வந்ததோடு, அவன் முன்னிலையிலேயே புஷ்ராவை அவர்கள் பாலியல் நீதியில் துன்புறுத்தியதையும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளான்.
 

தற்போது அவனிடமிருந்து தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு விகாகரத்து கோரியுள்ளார். இனிமேல் அந்த கொடிய மிருகத்துடன் வாழ்வதற்கு தனக்கு விருப்பமில்லை என்றும் கண்ணீருடன் தெரிவித்தார்.மேலும்,இதை போலீசில் தெரிவித்தால் குடும்பத்துடன் கொன்றுவிடப்போவதாக பஜ்ரங்தள் குண்டர்கள் மிரட்டி வருகின்றனர்.
 
புஷ்ராவின் புகாரை ஏற்றுக்கொண்ட மங்களூர் காவல்துறை ஆணையர்,இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

17 மாவட்ட நீதிபதிகள் நியமனம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி, ஜூலை 22: தமிழகத்தில் 2011-ம் ஆண்டு 17 மாவட்ட நீதிபதிகள் நியமிக்கப்பட்டது குறித்து தொடரப்பட்ட வழக்கில் மாநில அரசு, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர், புதிதாக நியமிக்கப்பட்ட 17 நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
 தமிழகத்தில் 17 மாவட்ட நீதிபதிகளை நியமனம் செய்வது தொடர்பாக மாநில அரசு 2010-ம் ஆண்டு விளம்பரம் செய்தது. அந்த இடங்களுக்கு 2,047 பேர் விண்ணப்பித்திருந்தனர். அனைவருக்கும் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்த நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நேர்காணலுக்கு 103 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 இவர்கள் அனைவருக்கும் 2010 நவம்பர் 11 முதல் 13 வரை நேர்காணல் நடைபெற்றது.
 சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இக்பால் தலைமையில் 6 நீதிபதிகள் கொண்ட குழு நேர்காணலை நடத்தியது. அதில், 17 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.
 அவர்களது நியமனம் குறித்த தமிழக அரசின் அரசாணை (எண் : 16 2011) ஆளுநரின் ஒப்புதலுடன் 2011 ஜனவரி 5- ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 இந்த நியமனத்தை எதிர்த்து மணிகண்டன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், நீதிபதிகள் நியமனம் தொடர்பான நேர்காணலில் வழங்கப்பட்ட மதிப்பெண்கள் விவரத்தை அளிக்குமாறு கோரினார். அவரது மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 இந்த உத்தரவை எதிர்த்து மணிகண்டன் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் மேல் முறையீடு செய்தார்.
 இந்த மனு நீதிபதிகள் ஜெ.எம். பாஞ்சால், ஹெச்.எல். கோகலே முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
 மனுதாரர் சார்பில் ஜி. சிவபாலமுருகன் ஆஜராகி வாதாடினார்.
 நேர்காணலில் அளிக்கப்பட்ட மதிப்பெண்களின் விவரங்களைத் தெரிவிக்காதது விதிமுறைகளுக்கு மாறானது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில்கூட மதிப்பெண்களின் விவரங்களை சென்னை உயர் நீதிமன்றம் அளிக்க மறுத்து விட்டது.
 நுழைவுத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியலில் 25-வது நபராக இருப்பவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் தர வரிசையில் 71 மற்றும் 79-வது இடத்தில் இருந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று அவர் வாதாடினார்.
 மனுதாரர் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர், 17 மாவட்ட நீதிபதிகளுக்கு நோட்டீஸ் அளிக்க உத்தரவு பிறப்பித்தனர்.

பாளை சிறை காவலர்கள் குற்றாலத்தில் கும்மாளமிட்டது தொடர்பாக டிஐஜி ராஜேந்திரன் நேரில் விசாரணை நடத்தினார்.



பாளை சிறையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தில் இருந்து வந்தன. இதற்கு ஒரு சில சிறைகாவலர்கள் உடந்தையாக  இருப்பது தெரிவந்ததையடுத்து கண்காணிப்பாளர் ஆனந்தன் கடுமையாக நடந்து கொண்டார். மேலும் சிறைகாவலர்களிடம் கமோண்டோ படையினர் சோதனை நடத்தினர். இது காவலர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாளை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆனந்தன் மதுரை மத்திய சிறைக்கும், பாளை சிறை ஜெயிலர் அன்பழகன் சென்னை புழல் மத்திய சிறைக்கும், பாளை கூடுதல் கண்காணிப்பாளர் ரவீந்திரன் சேலத்திற்கும் மாற்றப்பட்டனர்.

இதனால் குஷியான பாளை சிறை காவலர்கள் 40 பேர் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் சில தினங்களுக்கு முன் குற்றாலம் சென்றனர். அங்கு அவர்கள் விடிய விடிய அருவிகளில் கு(டி)ளித்து கும்மாளம் போட்டனர். அப்போது அவர்கள் போட்ட கூச்சல் குற்றாலத்தையே அதிர வைத்தது. இந்த விபரம் சிறைதுறை டிஐஜி (பொறுப்பு) ராஜேந்திரனுக்குத் தெரியவரவே, அவர் பாளை மத்திய சிறைக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

சிறைகாவலர்கள் இருபிரிவுகளாக செயல்பட்டு வருவதும், இதில் ஒரு பிரிவைச் சேர்ந்த 40 பேர் 2 வேன்களில் குற்றாலத்திற்குச் சென்று கும்மாளமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து டிஐஜி  அவர்களிடம் ''சிறைகாவலர்கள் சாதி உணர்வுடன் செயல்பட கூடாது. ஒற்றுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்'' என்று எச்சரித்துள்ளார்.

சமச்சீர் கல்வி! தமிழகம் முழுவதும் பேரணி ஆர்பாட்டம் மாணவர் சங்கம் அறிவிப்பு.

சென்னை :  தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்தும் உடனடியாக சமச்சீர் கல்வியை அமல்படுத்த கோரியும் தமிழ்நாட்டில் படிக்கும் பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வரும் 26ம் தேதி வகுப்பை புறக்கணித்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தவுள்ளனர்.
இது குறித்து இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் கனகராஜ், பொதுசெயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும். சமச்சீர் கல்விக்கான பொது பாடப்புத்தகங்களை ஜூலை 22க்குள் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இது எல்லோராலும் வரவேற்கப்பட்ட தீர்ப்பு. ஆனாலும் இந்த தீர்ப்புக்கு தடைகோரி உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது தமிழக அரசு. தமிழக அரசின் பிடிவாத போக்கினால், குழப்பமான சூழல் உருவானது. பெற்றோர், மாணவர்கள் கடும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தும், சமச்சீர் பாடப்புத்தகங்களை ஆகஸ்ட் 2க்குள் வழங்க வேண்டுமென காலநீடிப்பு வழங்கியும் உத்தரவிட்டுள்ளது. இறுதி விசாரணை 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலனை புறக்கணித்ததோடு தொடர்ந்து சமச்சீர் கல்வியை சீர்குலைக்கும் நடவடிக்கையில் இந்த அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது. அரசின் நடவடிக்கையை கண்டித்தும் முழுமையான சமச்சீர் கல்வியை அமல்படுத்த கோரி தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

2-ஜி வழக்கு வலுவிழந்து வருகிறது: நீதிமன்றத்தில் ஆ.ராசா


புது தில்லி, ஜூலை 22: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு நாளுக்கு நாள் வலுவிழந்து வருவதாக ஆ.ராசா நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
 இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கான வாதம் 2-வது நாளாக வெள்ளிக்கிழமையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்தது.
 சிபிஐ வழக்கறிஞர் யூ.யூ.லலித்தின் வாதம் சரியாகக் கேட்கவில்லை எனவும், அவர் உரக்கப் பேச வேண்டும் எனவும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.பி.சிங் கோரினார்.
 அப்போது குறுக்கிட்ட மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, "அதற்கு காரணம் (குரல் உரக்க ஒலிக்காதது) அவர்களது வழக்கு நாளுக்கு நாள் வலுவிழந்து வருவதுதான்' என குறிப்பிட்டார்.
 திங்கள்கிழமை வாதம் நடைபெறும்போது ஒலிபெருக்கிக் கருவி வைக்க வேண்டும் என ஸ்வான் டெலிகாம் நிறுவன மேம்பாட்டாளர் ஷாகித் பல்வா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மஜீத் மேமன் வேண்டுகோள் விடுத்தார்.
 ரிலையன்ஸýக்கு ஆதரவாக... வாதத்தின்போது அரசு வழக்கறிஞர் யூ.யூ.லலித் குறிப்பிட்டதாவது:
 ஏற்கெனவே அலைக்கற்றை உரிமம் பெற்றிருந்த டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் இரட்டைத் தொழில்நுட்ப உரிமம் கோரியிருந்தது.
 ஆனால், அதன் மீதான கோப்பு வேண்டுமென்றே 35 நாள்களுக்கு இழுத்தடிக்கப்பட்டது. தில்லி பகுதிக்கான உரிமம் ஏற்கெனவே ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுவிட்டது என டாடா நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டது.
 டாடா நிறுவனத்துக்கு முன்னுரிமை அளித்திருக்க வேண்டிய நிலையில், எந்தக் காரணமும் இல்லாமல் இரட்டைத் தொழில்நுட்ப உரிம உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்றார்.
 பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் கட்டமைப்பு வசதிகளையே பயன்படுத்திக் கொள்ள ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்றும் லலித் குற்றம்சாட்டினார்.
 "எச்.டி.எப்.சி.க்கு 2007 மார்ச் 1-ல் எழுதிய கடிதத்தில் ஸ்வான் டெலிகாம் தனது குழும நிறுவனத்தில் ஒன்று என ரிலையன்ஸ் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸின் அங்கம்தான் ஸ்வான் டெலிகாம் என்பது நிரூபணமாகி உள்ளது' என்றும் லலித் குறிப்பிட்டார்.

நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் வீடுகளில் ரெய்டு : வருமான வரி அதிகாரிகள் திடீர் கிடுக்கிப்பிடி.

கொச்சி: கேரள முன்னணி நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோருக்குச் சொந்தமான திருவனந்தபுரம், கொச்சி, சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் வருமான வரித்துறையினர், ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

கேரளா, திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் மோகன்லால். இவர் மலையாளம், தமிழ் உட்பட, பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். இவர், பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான, மறைந்த கே.பாலாஜியின் மருமகன். இவருக்கு திருவனந்தபுரம், கொச்சி, சென்னை உட்பட பல இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இவரைப் போலவே, மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் மம்முட்டி. இவர், கேரளா, வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு சென்னை, கொச்சி, பெங்களூரு ஆகிய இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இவ்விரு பிரபல நடிகர்களும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக, வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை கிரீன்வேஸ் சாலை விரிவாக்கம் பகுதியில் உள்ள மம்முட்டியின் வீட்டிற்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு, மூன்று கார்களில் வந்த வருமான வரித்துறையினர் திடீரென நுழைந்தனர். மம்முட்டி வீட்டில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஒன்று நடந்ததால், அன்று அவரும், அவரது குடும்பத்தினரும் அங்கிருந்தனர். தொடர்ந்து, இரவு முழுவதும் சோதனை நடத்தப்பட்ட நிலையில், காலையிலும் சோதனை தொடர்ந்தது. வருமான வரித்துறை அதிகாரிகள், பல்வேறு குழுக்களாக, ஷிப்ட் அடிப்படையில், மாறி மாறி வந்து சோதனை நடத்தியுள்ளனர். நேற்று மாலை 5 மணி வரை நடந்த சோதனையில், வீட்டில் இருந்த பல சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கொச்சி, பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள மம்முட்டியின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. அதே போல், சென்னை, எழும்பூரில் உள்ள நடிகர் மோகன்லாலின் வீட்டிற்கு காலை 7 மணிக்கு, வருமான வரித்துறையினர் சென்ற போது, அந்த வீடு ஏற்கனவே வேறு ஒருவருக்கு விற்கப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, எழும்பூர், காசா மேஜர் சாலையில் உள்ள மோகன்லாலின் மாமனார், பழம்பெரும் நடிகர் பாலாஜியின் வீட்டிற்குச் சென்றனர். அங்கிருந்தவர்களிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட வருமான வரித்துறையினர், வீட்டில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். சோதனையின் போது, நடிகர் மோகன்லால், சென்னையில் இல்லை. வெளியூரில் படப்பிடிப்பு ஒன்றில் இருப்பதாக கூறப்பட்டது. பிற்பகல் 2 மணிவரை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக, வருமான வரித்துறையினரிடம் கேட்ட போது, "இது வழக்கமான ஒன்றுதான், அனைத்து இடங்களிலும் சோதனை முடிந்த பின், தகவல்களை அறிக்கை வாயிலாக தெரிவிக்கிறோம்' என்று, மழுப்பி விட்டனர். 

நடிகர் மம்முட்டி வீட்டில், வருமான வரித்துறை விசாரணை பிரிவு இயக்குனர் தலைமையில், பத்து பேர் கொண்ட அதிகாரிகள், சோதனையில் பங்கேற்றனர். நடிகர் மோகன்லால் வீட்டில், ஒரு பெண் அதிகாரி உட்பட மூன்று பேர் கொண்ட குழு, சோதனையில் ஈடுபட்டது. இவ்விரு நடிகர்களுக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் அவர்களுக்கு நெருங்கிய திரைப்படத் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.

"ஷூட்டிங்'கில் மோகன்லாலிடம் விசாரணை : ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கத்தில் "ஷூட்டிங்'கில் இருந்த மலையாள நடிகர் மோகன்லாலிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வாலிநோக்கம் கப்பல் உடைக்கும் தளத்தில், மலையாள நடிகர் மோகன்லால், சினிமா படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தார். மதுரை, மத்திய வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், நேற்று மதியம் 1.15 மணிக்கு மூன்று கார்களில் வாலிநோக்கம் வந்தனர். மோகன்லாலை "கேரவன்' உள்ளே அழைத்துச் சென்று, அவரிடம் மதியம் 1.30 முதல் மாலை 5.30 மணி வரை விசாரணை நடத்தினர். இதன்பின் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திய மோகன்லால், தொடர் விசாரணைக்காக அதிகாரிகளுடன் மதுரைக்குக் கிளம்பிச் சென்றார். விசாரணை குறித்து அதிகாரிகள் தகவல் எதுவும் சொல்ல மறுத்து விட்டனர்.