சென்னை:தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், அரசு துறைகளில் இருந்து பதில் மற்றும் விளக்கங்களை பெற, பணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை' என, மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. மத்திய, மாநில அரசு துறை திட்டங்கள் குறித்து விளக்கங்கள், சந்தேகங்களுக்கான பதில்களை பெற, தகவல் உரிமை சட்டம் உருவாக்கப்பட்டது.
இச்சட்டத்தின் மூலம் தகவல்களை இலவசமாகப் பெற முடியும். ஆனால், சமீபகாலமாக, சில துறைகளில் இருந்து தகவல்களை பெற கட்டணம் செலுத்த வேண்டும் என, அத்துறை சார்பில், எழுத்து பூர்வமாகவே தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய துணை தலைவர் சடகோபன், தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து கூறியதாவது:
சென்னை-அரக்கோணம் இடையே, புறநகர் மின்சார ரயில்களின் கால அட்டவணை மற்றும் கால தாமதம் குறித்து, சில சந்தேகங்கள் எழுப்பி, தெற்கு ரயில்வே தகவல் பெறும் பிரிவின் துணை பொது மேலாளருக்கு, சென்ற ஆண்டு மே 29ம் தேதி, கடிதம் அனுப்பினேன். அதற்கு வந்த பதில் கடிதத்தில், "நீங்கள் குறிப்பிடும் தகவல்களை திரட்டுவதற்கான சம்பளம் மற்றும் அலவன்ஸ் தொகையாக, 379 ரூபாய் மற்றும் ஒரு பக்க காகிதத்திற்கு இரண்டு ரூபாய் என, மொத்தம் 381ரூபாயை செலுத்தவேண்டும்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது. இக்கடிதம், ஆவடி முதன்மை கோட்ட மின் பொறியாளர் அலுவலகத்தில் இருந்து மூத்த கோட்ட மின் பொறியாளர் அதிகாரி சாலிக்ராம் என்பவர் பெயரில் அனுப்பப்பட்டிருந்தது.
அதிர்ச்சி அடைந்த நான், தெற்கு ரயில்வே மற்றும் புதுடில்லியில் உள்ள மத்திய தகவல் ஆணையத்திற்கு தெரிவித்து, தகவல் பெற கட்டணம் தேவையா என கேள்வி எழுப்பி கடிதம் அனுப்பினேன். என் கடிதத்தை பரிசீலித்த ஆணையம் அளித்த பதில் கடிதத்தில், "கட்டணம் எதுவும் செலுத்தத் தேவை யில்லை; இதுபோல், பல நிறுவனங்கள் பணம் கேட்பதை தடுத்து நிறுத்தும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தது. இவ்வாறு சடகோபன் கூறினார்.
நன்றி: தினமலர்
No comments:
Post a Comment