"நாங்கள் தினந்தோறும் இறக்கிறோம்'' — மும்பய் தாஜ் விடுதியில் பதுங்கியிருந்த முசுலீம் தீவிரவாதிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் நடந்து கொண்டிருந்த நேரத்தில், இந்தியா டி.வி., இம்ரான் பாபர் என்ற தீவிரவாதியிடம் தொலைபேசி மூலம் உரையாடல் நடத்தியபொழுது, "நீ சுற்றி வளைக்கப்பட்டு விட்டாய்; சரணடையவில்லை என்றால் கண்டிப்பாக இறந்து விடுவாய்'' எனக் கூறியதற்கு நாங்கள் தினந்தோறும் இறப்பதாகப் பதில் அளித்தாராம்.
இந்தத் தொலைபேசி உரையாடல் அந்தத் தொலைக்காட்சியில் நேரடியாக ஒலி/ஒளிபரப்பப்பட்டது. இந்த உரையாடல் உண்மையிலேயே நடந்ததா, அல்லது அந்த டி.வி., தனது வர்த்தக நோக்கங்களுக்காக "செட்டப்'' செய்ததா என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது. ஆயினும், காசுமீரில், ஆப்கானில், ஈராக்கில் முசுலீம்கள் அன்றாடம் கொசுக்களைப் போல, இந்தியாவால், அமெரிக்காவால், பாகிஸ்தானால், "நேடோ'' படைகளால் கொல்லப்படுவதை யாரும் சந்தேகிக்க முடியாது.
இந்த மரணங்கள் நமது நாட்டு மேன்மக்களின் மனசாட்சியை ஒருபோதும் உலுக்கியது கிடையாது. இந்த முசுலீம்களின் மரணங்களை விட்டு விடுங்கள். காங்கிரசு கூட்டணி பதவியேற்ற பிறகு, கடந்த நாலரை ஆண்டுகளில் இந்தியாவில் 25,000 குண்டு வெடிப்புகள் நடந்திருப்பதாகவும், அதில் 7,000 அப்பாவிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கு முந்தைய பா.ஜ.க., கூட்டணி ஆட்சியில் நடந்த 36,259 குண்டுவெடிப்புகளில் 11,714 பேர் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தக் குண்டு வெடிப்புகளில் இறந்து போனவர்களில் "இந்துக்களும்'' உண்டு. ஆனாலும், இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா, சிமி காரவெல், ஷோபா டே போன்ற நமது நாட்டு மேன்மக்கள், இந்தக் குண்டு வெடிப்புகளுக்கெல்லாம் மிஞ்சிமிஞ்சிப் போனால் ஒரு அய்யோ பாவத்தை மட்டுமே வாயிலிருந்து கவனியுங்கள், மனத்தில் இருந்து அல்ல உதிர்த்திருப்பார்கள்.
ஆனால், மும்பய்த் தாக்குதலுக்குப் பிறகோ, அவர்களின் மனசாட்சி சாமியாடுகிறது. இத்தாக்குதலில் இறந்து போனவர்களுக்காக மும்பயில் டிசம்பர் 3 அன்று நடந்த அஞ்சலிக் கூட்டத்தில், "பாதுகாப்பு இல்லை; வரி இல்லை'' அதாவது, "எங்களுக்குப் பாதுகாப்பு இல்லையென்றால், வரிகட்ட மாட்டோம்'' என இந்த மேன்மக்கள் முழங்கினர். "நமது கோபத்தைச் செயலாக மாற்ற வேண்டும்'' என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த மேன்மக்களின் கோபம், சிவராஜ் பாட்டீல் உள்ளிட்ட சிலரின் பதவிகளைக் காவு வாங்கிவிட்டது. இந்தக் கோபத்தைக் கண்டு அரண்டு போன மன்மோகன் சிங்,
ஏ.கே. அந்தோணி, பிரணாப் முகர்ஜி ஆகியோர் தங்களின் அமைச்சர் பதவிகளைத் துறந்துவிட முன்வந்தார்களாம்.
மும்பயைச் சேர்ந்த காங்கிரசின் இளம் எம்.பி.யான தியோரா, "தான் அரசியல்வாதியாக இருப்பதற்கு வெட்கப்படுவதாக'' இந்த மேன்மக்கள் முன் கூறி, பாவ மன்னிப்புக் கோரியுள்ளார். ராகுல் காந்தியோ இன்னும் ஒருபடி மேலே போய், "தன் கன்னத்தில் தெருவில் போகும் யாரோ ஒருவர் அறைந்தால், எப்படி அவமானப்படுவோமோ, அதுபோல் உணர்வதாக''க் கண்ணீர் வடிக்காத குறையாக, காங்கிரசு கட்சியின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றியிருக்கிறார்.
ஒரிசாவில் இந்துமதவெறிக் கும்பலால் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியினக் கிறிஸ்துவர்கள் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கான பழங்குடியினக் கிறிஸ்துவர்கள் அகதிகளாகத் துரத்தப்பட்ட பொழுது வராத கோபம்; கயர்லாஞ்சியில் போட்மாங்கே குடும்பத்தினர் ஆதிக்கசாதி வெறியர்களால் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டபோது ஏற்படாத அவமானம், மும்பய்த் தாக்குதலைக் கண்டபிறகு மேன்மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஏற்படுகிறதே, அது ஏன்?
இந்த முறை பொதுச் சொத்துக்கள் மட்டுமின்றி தாஜ் ஹோட்டல், ட்ரைடண்ட் ஹோட்டல், நாரிமன் ஹவுஸ் போன்ற அவர்களின் சொத்துக்களும் தாக்கப்பட்டன. இந்த முறை கொல்லப்பட்டவர்களில் சாதாரண இந்திய மக்கள் மட்டுமின்றி, ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள், யூதர்கள் போன்ற மேன்மக்களும் அடக்கம்.
···
காசுமீரில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கூறப்பட்டு, பல முசுலீம்களின் வீடுகள் குண்டு வீசித் தகர்க்கப்பட்டிருக்கின்றன; புகழ்பெற்ற மசூதிகள் கூட எரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், தீவிரவாதிகளின் இலக்குக்கு ஆளான தாஜ் ஹோட்டலுக்கும், டிரைடண்ட் ஹோட்டலுக்கும் அப்படிபட்ட சோகமயமான முடிவு ஏற்படவில்லை. குண்டுவீசித் தாக்கப்படவில்லை என்பதற்கு அக்கட்டிடங்கள் "பெரியவை'' என்பது மட்டும் காரணமில்லை. மாறாக, அவை, இந்திய ஆளும் கும்பலின் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் ரத்தன் டாடாவின் சொத்து; ஓபராயின் சொத்து. உள்ளேயிருந்தவர்களோ, இந்திய அரசு கிள்ளுக்கீரைகளாக எண்ணும் காசுமீர் முசுலீம்கள் அல்ல; மாறாக, "மேன்மக்கள்'' என்பதுதான் இராணுவத்தின் கையைக் கட்டிப் போட்டுவிட்டது.
மும்பய்த் தாக்குதலில் ஈடுபட்ட முசுலீம் தீவிரவாதிகள் பொதுமக்களை, எவ்வித வேறுபாடும் இன்றி கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக் கொன்றார்கள். அதேசமயம், இப்பிரச்சினையைக் கண்டித்து வரும் முதலாளித்துவ பத்திரிகைகள், தனியார் தொலைக்காட்சிகள், மேன்மக்கள் யாவரும் தங்களின் வர்க்கநலனில் இருந்துதான், மேட்டுக்குடி மனோபாவத்தில் இருந்துதான் இப்பிரச்சினையைக் கையாண்டு வருகின்றனர்.
ஒரே சமயத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் சத் ரபதி சிவாஜி ரயில் நிலையத்தின் மீது நடந்த தாக்குதல், தாஜ் ஹோட்டலைப் போல தொலைக்காட்சிகளிலோ, பத்திரிகைகளின் அட்டை படத்திலோ முக்கியத்துவம் பெறவில்லை. தாஜ் விடுதிக்குள் தீவிரவாதிகள் மூன்று நாட்கள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியது மட்டும் ஊடகங்களின் முக்கியத்துவத்திற்குக் காரணமில்லை. தாஜ் விடுதியின் மீது ஒரு துரும்பு பட்டிருந்தாலும், அது தலைப்புச் செய்தியாக இடம் பிடித்திருக்கும். ஏனென்றால், தாஜ் விடுதி அவர்களின் சொத்து!
இத்தாக்குதலுக்கு முன்பாக, படித்த நடுத்தர வர்க்கத்தினருள் பெரும்பாலோருக்குக் கூட தாஜ் விடுதி பற்றித் தெரிந்திருக்காது. பலான பலான விஷயங்கள் நடக்கும் தாஜ் விடுதி ரத்தன் டாடாவின் வம்சாவளியினருக்குச் சொந்தமானது என்பதற்காகவே, அந்த விடுதி மும்பய் நகரத்தின் அடையாளமாக ஊதிப் பெருக்கப்பட்டது. வெள்ளையன், ஜாம்செட்ஜி டாடாவை பிரபலமான அப்பல்லோ விடுதியில் நுழைய அனுமதிக்கவில்லை என்ற ரோஷத்தில்தான், ஜாம்செட்ஜி டாடா தாஜ் விடுதியைக் கட்டியதாக முதலாளித்துவ பத்திரிகைகள் பீற்றியும் கொண்டன. அதேசமயம், டாடா குடும்பம் வெள்ளைக்காரனுக்கு தரகு வேலை பார்த்துதான் டாடா தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கின என்ற அசிங்கத்தை மட்டும் வசதியாக மறைத்துவிட்டன.
தாக்குதலுக்குப் பிறகு, என்.டி.டி.வி., என்ற தொலைக்காட்சி "மக்களாகிய நாம்'' என்றொரு நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கியது. இதில், மும்பய்த் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சாதாரண பொதுமக்களோ, அதற்கு முன்பு நடைபெற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களோ, 1992 மும்பய்க் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முசுலீம்களோ கலந்து கொள்ளவில்லை. மாறாக, சிமி காரவெல், குணால் கோஹ்லி, ரத்னா பதக், நெஸ்வாடியா, லுகே கென்னி போன்ற மும்பயின் மேன்மக்கள்தான் பங்கெடுத்துக் கொண்டனர். மேல்தட்டுத் திமிரும், முட்டாள்தனமும் நிறைந்த அவர்களின் பிதற்றல்கள்தான், சமூகத்தின் பொதுக் கருத்தாக பார்வையாளர்கள் மீது திணிக்கப்பட்டது.
கேரள முதல்வர் அச்சுதானந்தன், இத்தாக்குதலில் இறந்துபோன மேஜர் உன்னி கிருஷ்ணனுக்கு அஞ்சலி செலுத்த பெங்களூருவில் உள்ள அவர் வீட்டுக்குச் சென்ற பொழுது, உன்னிகிருஷ்ணனின் பெற்றோர், அவரை அவமானப்படுத்தி வெளியேற்றினர். இதனால் அவர், "உன்னிகிருஷ்ணன் இராணுவத்தில் இல்லையென்றால், அவர் வீட்டுப் பக் கம் நாய்கூடப் போகாது'' என எரிச்சலோடு சொன்னார். அரசியல்வாதிகளைப் போட்டு வாங்குவதில் தனிசுகம் காணும் மேட்டுக்குடி கும்பல், நடந்த சம்பவத்தை வெட்டிக் குறுக்கி அச்சுதானந்தன் சொன்னதை மட்டும் ஊதிப் பெருக்கியது.
தங்கள் மகன் இராணுவத்தில் பணியாற்றித் "தியாகி'' யானவன் என்ற திமிரில் அநாகரிகமாக நடந்து கொண்ட உன்னிகிருஷ்ணனின் பெற்றோர்தான் இதில் முதல் குற்றவாளிகள். ஆனால், ஊடகங்களின் ஒருதலைப்பட்சமான பிரச்சாரத்தால், உன்னிகிருஷ்ணனின் பெற்றோர் அனுதாபத்துக்குரியவர்களாகவும்; அச்சுதானந்தன் மூன்றாம்தர வில்லனாகவும் மாற்றப்பட்டார். ஆனால், காசுமீரிலும், வடகிழக்கு இந்தியாவிலும் நீங்கள் மக்களிடம் கேட்டால், அரசியல்வாதிகளைவிடக் கேடுகெட்ட வில்லன்கள் இராணுவத்தினர்தான் என்பார்கள்.
தாக்குதல் நடந்த சமயத்தில் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக இருந்த விலாஸ் ராவ் தேஷ்முக், நடிகரான தனது மகனோடும், மாஃபியா தொடர்பான படங்களை எடுத்துத் தள்ளும் இயக்குநர் ராம்கோபால் வர்மாவோடும் தாஜ் விடுதியைப் பார்வையிட வந்தது ஊடகங்களின் கடும் கண்டனத்திற்குள்ளானது. "அடுத்த படத்திற்கு லொகேஷன் பார்க்க வந்தார்களா?'' என அவர்கள் விமர்சிக்கப்பட்டனர்.
ஊடகங்களின் இந்த விமர்சனம் கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல் எறிவதைப் போன்றது. ஏனென்றால், ஆங்கிலதனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் இத்தாக்குதலை ஹாலிவுட் சினிமா போலத்தான் தொகுத்து வழங்கின. ஒரு தொலைக்காட்சி நிறுவனம், தீவிரவாதிகள் தாஜ் விடுதியைத் தகர்க்கும் நோக்கத்தோடு வந்திருப்பதாகவும்; அதற்காக ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்தை தாஜ் விடுதிக்கு அருகே பதுக்கி வைத்திருப்பதாகவும் "பிரேக்கிங் நியூஸை'' வெளியிட்டது. மறுநாள், இராணுவம் இதனை வதந்தி என மறுத்தது.
இது மட்டுமின்றி, தீவிரவாதிகளின் தாக்குதலைச் சமாளிக்க இராணுவம் எடுக்கும் நிலைகளை உடனுக்குடன் கிரிக்கெட் ஸ்கோர் போல தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பியதால், அதிநவீன கைபேசிகளை வைத்திருந்த தீவிரவாதிகளுக்குத் தங்களைத் தற்காத்துக் கொண்டு, இராணுவத்தின் மீது தாக்குவது மிகவும் வசதியாக அமைந்ததாக இராணுவமே புலம்பும் அளவிற்கு தொலைக்காட்சிகள் "பொறுப்புணர்வுடன்'' நடந்து கொண்டன. இந்த நிகழ்ச்சியை "ஸ்பான்சர்'' செய்தவர்கள் என்ற விளம்பர அறிவிப்பு வராததுதான் பாக்கி. அந்த அளவிற்கு அவர்களின் ஒளிபரப்பில் வர்த்தக நெடி அடித்தது.
தீவிரவாதிகளை எதிர்த்துச் சண்டையிட்டு இறந்து போன இராணுவத்தினருக்கு, போலீசாருக்கு அஞ்சலி செலுத்துவதில் கூட, முதலாளித்துவ ஊடகங்கள் வர்க்கப் பாசத்துடன்தான் நடந்து கொண்டன. என்.டி.டி.வி. ஒளிபரப்பிய அஞ்சலி நிகழ்ச்சியில், உயர் அதிகாரிகளின் பெயர்கள்தான் இடம் பெற்றன. மகாராஷ்டிர போலீசார் அஜ்மல் என்ற தீவிரவாதியை உயிருடன் பிடிக்க முயன்றபொழுது, குண்டடிபட்டு இறந்து போனார், உதவி துணை ஆய்வாளர் துக்காராம் ஓம்பாவே. "அவரின் தியாகத்துக்கு உரிய மதிப்பு கொடுக்கப்படவில்லை'' என ஓம்பாவேயின் மனைவி வெளிப்படையாகக் குற்றஞ்சுமத்தும் அளவிற்கு இந்தப் பாகுபாடு பச்சையாகத் தெரிந்தது.
···
முதலாளித்துவ ஊடகங்களின், மேன்மக்களின் கோபம், "பாகிஸ்தான் மீது உடனடியாக போர் தொடுக்க வேண்டும்'' என்று இந்திய அரசை நிர்பந்திக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நாடு பிடிக்கும் ஆசை "தீவிரவாதத்தின் மீதான போர்'' எனப் புளுகப்படுவதைப் போல, பாக்.கிற்கு எதிரான போரை "பயங்கரவாதத்தின் மீது போர் தொடுப்போம்'' எனப் புனிதப்படுத்துகிறது, இந்தியாடுடே.
"பயங்கரவாதத்தின் மீது போர் என்றால், லஷ்கர்இ தொய்பா மீது மட்டும்தானா? ஆர்.எஸ்.எஸ். இந்து பயங்கரவாதிகள் மீது கிடையாதா?'' என்ற நியாயமான, நடுநிலையான கேள்வி எழாத வண்ணம், பெரும்பாலான வாசகர்களின் பொது புத்தியில் முசுலீம் எதிர்ப்பு பாக். எதிர்ப்பு என்ற இந்து மதவெறி அரசியல் நிறைந்து காணப்படுகிறது. "பாக்.மீது முழுமையான போரை நடத்த முடியாதென்றால், தீவிரவாத முகாம்களை அழிக்கும் ஒரு மின்னல் வேகப் போரையாவது நடத்தலாம்'' என்று ஒற்றையா, இரட்டையா பாணியில் ஆலோசனைகளை அள்ளி விடுகிறார்கள், சில அம்பிகள்.
பாக். மீது போர் தொடுக்க வேண்டும் என்றால், மும்பய்த் தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரத்தை உலக நாடுகள் முன் காட்ட வேண்டும். ஆனால், இந்திய அரசோ விசாரணை இன்னும் நடைபெற்றுக் கொண்டு இருப்பதாகத்தான் கூறுகிறது; தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்திருப்பதற்கான ஆதாரம் இருப்பதாகக் கூறி வருகிறதேயொழிய, பாகிஸ்தான் அரசுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறவில்லை. அமெரிக்காவின் இராணுவத் தளபதிகளுள் ஒருவரான மைக் முல்லேன் "மும்பய்த் தாக்குதலுக்கும் பாக். அரசுக்கும் தொடர்பில்லை'' எனக் கூறி, இப்பிரச்சினைக்கு மங்களம் பாடிவிட்டார். ஆனால், ஊடகங்களும், மேன்மக்களும் ஆதாரம் காட்டத் தேவையில்லை என அடம் பிடிக்கிறார்கள்.
பாக். அரசிற்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் கிடைத்தாலும் கூட, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவால் ஒரு பொம்மைத் துப்பாக்கியைக் கூட தூக்கிக் காட்ட முடியாது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் மற்றும் அல்கய்தாவிற்கு எதிராகப் போர் நடத்திவரும் நேடோ படைகளுக்கு ஆதரவாக, பாகிஸ்தான் தனது படைகளை ஆப்கான் எல்லைப்புறத்தில் நிறுத்தியிருக்கிறது. இந்தியா, பாக்.கிற்கு எதிராகப் படைக ளைத் திரட்டினால், பாகிஸ்தான் தனது படையை ஆப்கான் எல்லையில் இருந்து திரும்பப் பெறும். அமெரிக்காவுக்குத் தலைவலியை ஏற்படுத்தும். இந்தநிலை உருவாவதை, அமெரிக்கா விரும்பாது; அனுமதிக்காது. அதனால்தான், இந்திய ஊடகங்கள் பாக்.கிற்கு எதிரான போர்ப் பரணியைப் பாட ஆரம்பித்தவுடனேயே, அமெரிக்காவின் உள்துறை அமைச்சர் கண்டலீசா ரைஸ், இந்திராவிற்குத் திடீர் விஜயம் செய்து எச்சரித்து விட்டுப் போனார்.
அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் நேரடியாக காலடி எடுத்து வைத்த அன்றே இந்தியாவின் இராணுவ வீம்புக்கு ஆப்பு வைக்கப்பட்டு விட்டது. கடந்த பா.ஜ.க. ஆட்சியில் பாக்.கிற்கு எதிராக போர் தொடுக்க முண்டா தட்டி, பின்பு மீசையில் மண் ஒட்டாத குறையாக படைகளைப் பாசறைக்குத் திரும்பப் பெற்றதே இதற்கு சாட்சி. சூடு கண்ட பூனை என்பதால்தான் காங்கிரசு மட்டுமல்ல, பா.ஜ.க.வும் இந்தப் பிரச்சினையில் அமெரிக்க எஜமானர்களின் மனம் கோணாதபடி நடந்து கொள்கின்றன.
அமெரிக்காவுக்கும் இந்தியாவிற்கும் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கிய நாளில் இருந்தே, "அமெரிக்கா, இந்தியாவைத் தனக்குச் சமமான, நம்பகமான கூட்டாளியாக ஏற்றுக் கொண்டுவிட்டது என்பதற்கு இந்த ஒப்பந்தமே சாட்சி'' என மன்மோகன் சிங் மட்டுமல்ல, இந்தியா டுடே போன்ற ஏடுகளும் திரும்பத் திரும்பக் கூறி வந்தன. ஆனால், அது அடிமைகளின் கனவு என்பதும், மன்மோகன் சிங்கின் அண்டப் புளுகுகளில் ஒன்று என்பதும் நிரூபணமாகிவிட்டது. அமெரிக்கா, இந்த இக்கட்டான தருணத்திலும் பாகிஸ்தானைக் கைவிட மறுத்ததன் மூலம், மன்மோகன் சிங் இந்தியா டுடே கும்பலின் முகத்தில் கரியைப் பூசிவிட்டது.
···
முசுலீம் தீவிரவாதிகளின் இலக்காக இந்தியா இருப்பதை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றால், இந்தியா, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இராணுவ ரீதியிலான நெருக்கத்தை ஏற்படுத்தி வருவதைக் கைவிட வேண்டும்; ஈராக்கிலும், ஆப்கானிலும் அமெரிக்கா நடத்தி வரும் ஆக்கிரமிப்புப் போருக்கு மறைமுக உதவி செய்து வருவ தைக் கைவிட்டு, அப்போரை இந்தியா கண்டிக்க வேண்டும்.
உள்நாட்டில், முசுலீம்கிறித்தவர்களுக்கு எதிராக மதக் கலவரங்களை நடத்திவரும் ஆர்.எஸ்.எஸ். இந்து பயங்கரவாதிகளைத் தண்டித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும், மறுவாழ்வும் வழங்க வேண்டும்.
காசுமீரில் இருந்து இந்திய இராணுவத்தையும், துணை இராணுவப் படைகளையும் திரும்பப் பெறுவதோடு, அம்மக்களுக்குச் சுயநிர்ணய உரிமை வழங்கும் வண்ணம், ஐ.நா. மன்றத்தில் வாக்களித்தபடி, பொதுஜன கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.
இப்படிபட்ட ஆக்கப்பூர்வமான அரசியல் தீர்வுகளை முன் வைத்து, ஒரு விவாதத்திற்குத் தளம் ஏற்படுத்திக் கொடுக்க முன்வராத ஊடகங்கள், இராணுவத் தீர்வை முன் தள்ளுகின்றன. அது செத்த குதிரையை அடிப்பதற்குச் சமம் என்று தெரிந்திருந்தும், போர், போர் என ஊடகங்களும், முன்னாள் இராணுவ அதிகாரிகளும் ஊளையிடுகின்றனர்.
அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பை, இத்தீவிரவாத தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்டு, ஜனநாயகத்தின் மீதான வெறுப்பாக மாற்றிவிட ஊடகங்களும், மேன்மக்களும் முயலுகின்றனர். ஓட்டுக் கட்சிகள், தேர்தல், நாடாளுமன்றம் என்பதற்குப் பதிலாக, திறமையான அதிகாரிகளைக் கொண்ட ஆட்சிமுறை வந்தால், எல்லா பிரச்சினைகளையும் தீர்த்துவிட முடியும் என்ற மாயையை ஏற்படுத்தி, அதிகார வர்க்க பாசிச ஆட்சியை ஏற்றுக் கொள்வதற்கான மனோநிலையை மக்கள் மத்தியில், குறிப்பாக நடுத்தர வர்க்கம் மத்தியில் ஏற்படுத்த இவர்கள் முயலுகின்றனர்.
அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பிறகு, "பேட்ரியாடிக் சட்டம்'' என்ற கருப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது, அமெரிக்க அரசு. நமது நாட்டு மேட்டுக்குடி கும்பலுக்கு அமெரிக்கா வாந்தி எடுப்பதை ருசித்து உண்ணும் பழக்கம் உள்ளதால், அவர்கள் அதுபோன்ற சட்டம் இந்தியாவிலும் வரவேண்டும் என்று கோரினார்கள். பாக். மீது போர் தொடுப்பதை விட, உள்நாட்டில் ஒரு கருப்புச் சட்டத்தைக் கொண்டு வருவது எளிது என்பதால், காங். கூட்டணி ஆட்சி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து, "பொடா''வுக்கு மீண்டும் மறுவாழ்வு கொடுத்து விட்டது.
இப்"புதிய'' சட்டம், முசுலீம் தீவிரவாதத்தை ஒழிக்கிறதோ, இல்லையோ, இந்திய மக்களின் அற்ப அரசியல் ஜனநாயக உரிமைகளையும் ஒழித்துக் கட்டி, ஒரு போலீசு ராஜ்ஜியத்தை நிச்சயமாக உருவாக்கும். இதனை நம்ப மறுப்பவர்கள், "தடா''வும் "பொடா''வும் சாதித்ததை மனசாட்சியோடு பரிசீலனை செய்து பார்க்கட்டும்.