அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, December 20, 2010

அதிகார அடுக்குகளில் ஒளிந்து கசியும் இந்துத்துவம்.

குஜராத் துவங்கி கோவை வரை.................

இந்திய தேசத்தின் நிழல் கருமையாய் இருப்பதை காவியாய் மாற்ற நூற்றாண்டுகளாக இந்துத்துவ சக்திகள் முயன்றுகொண்டே இருக்கின்றனர். இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்ற அவர்கள் செய்யும் கலவரங்களும், படுகொலைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


அவர்கள் செய்யும் நேரடிக் கலவரங்கள் உடனடியாக மதச்சார்பற்ற சக்திகளால் கண்டிக்கப்படுகிறது. எதிர் வினையாற்றப்படுகிறது.

ஆனால் இந்திய ஆளும் அதிகார வர்க்கத்தில் அவர்கள் ஊடுருவி சட்டப்பூர்வமாய், நீதியின் பெயரால், அதிகாரத்தின் பெயரால், அறத்தின் பெயரால் செய்யும் கொலைகளும் தவறுகளும் வெளியில் தெரிவதில்லை.

இது காவி அதிகாரிகள் மீதான விசாரணைக் காலம். அதிகார அடுக்குகளில் மறைந்து நின்று பல்லிளிக்கும் இந்துத்துவம் குஜராத் துவங்கி கோவை வரை நடத்திய அராஜகத்தின் அம்பல காலம் இது.

“குற்ற எண்ணிக்கையின் அடிப்படையில் ஒப்பிடும்போது இந்தியாவில் செயல்படும் குற்றவாளிக் கும்பல்களில் எதுவும் நிறுவனப்படுத்தப்பட்ட குற்றவாளிக் கும்பலாகிய இந்திய போலிசின் அருகே கூட நெருங்க இயலாது. ரொம்பவும் பொறுப்புணர்வுடன் இதை நான் சொல்கிறேன்”

இது அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.என்.முல்லா அவர்கள் உத்தரப் பிரதேசத்திலுள்ள ஷாகாபாத் காவல்துறையினர் குறித்த தீர்ப்பில் 1961 ஆம் ஆண்டு குறிப்பிட்ட வாசகங்களாகும்.
இந்தத் தீர்ப்பை பார்த்து அதிர்ந்த உத்தரப்பிரதேச அரசு காவல்துறையில் நல்லவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் பொருட்டாவது இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மேல்முறையீடு செய்தது.

இந்த முறையீட்டை தள்ளுபடி செய்த நீதியரசர் முல்லா கூறினார் “ஒரு கூடை நாறிய மீன்களில் நல்லமீனை தேடும் முட்டாள் நானல்ல” என்றார்*.

பாவம் இன்றைய காவல் துறையின் வளர்ச்சியை அறியாதவர். நீதியரசர் இன்று தீர்ப்பளித்திருந்தால் “நல்ல மீன்களே இல்லாத நாறிய கூடையில் நல்ல மீனை தேடச் சொல்லாதே” என்று கோபப்பட்டிருப்பார்.

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான புகார்களில் 60 சதம் காவல்துறையின் மனித உரிமை மீறல்கள் தான் பதிவாகிறது. பதிவானவைகள் தான் 60 சதம் பதிவாகாமல் இன்னும் எத்தனையோ?

காவல் நிலையக் கொலைகள், கடுமையான சித்திரவதைகள், பாலியல் கொடூரங்கள், மூன்றாம்தர சித்திரவதைகள், என்கவுண்டர் கொலைகள் என பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. அதைவிட மிகப்பெரிய அவலம் குஜராத்தில் தங்களது பதவி உயர்வுக்காக இஸ்லாமிய மக்களை போலி என் கவுண்டரில் படுகொலை செய்வது அதிகரித்துக்கொண்டே இருப்பது.

யாருக்காக? எதற்காக?

கடந்த 2010 ஜூலை மாதம் 22 ஆம் தேதி சி.பி.ஐ அதிகாரிகளால் ஒரு முன்னாள் அமைச்சர் வீட்டின் கதவில் விசாரணை சம்மன் ஒட்டப்பட்டது. அந்த அமைச்சரின் வீட்டுக் கதவில் அது ஒட்டப்பட்ட காரணம் அதை அவர் வாங்காததுதான். அந்த அமைச்சர் அமித் ஷா. குஜராத்தின் நரேந்திர மோடி அரசின் உள்துறை இணை அமைச்சராக இருந்தவர். மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட இவர் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டு 3 நாள் விசாரனை செய்யப்பட்டார். இவர்மீது மத்திய புலனாய்வுத் துறை விசாரணை செய்யும் காரணத்தை அறிய 2005 நவம்பர் 26 தேதியில் நடந்த சம்பவத்தை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

அன்றைய தினம் சொராபுதின் ஷேக் மற்றும் அவர் மனைவி கௌசர் பீ ஆகியோர் ஆந்திரப் பிரதேச அரசு வாகனத்தில் மகா ராஷ்ட்ராவில் குஜராத் காவல்துறையால் விசாரணை என்ற பெயரில் கடத்தப்படுகின்றனர். இருவரும் பிணங்களாக அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டனர்.

அந்த என்கவுண்டர் கொலையை பார்த்த ஒரே சட்சி துள்சி பிரஜாபதி அவரும் மார்ச் 2006 ஆம் ஆண்டு என்கவுண்டரில் காவல்துறையால் படுகொலை செய்யப்படுகிறார். சொராபுதின் ஷேக் மரணத்திற்கு நீதி கேட்டு, சொராபுதின் ஷேக் தீவிரவாதி அல்ல என சொல்லி அவரது அண்ணன் ரபாபுதின் உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டுகிறார். உச்சநீதி மன்றம் மத்திய புலனாய்வுத் துறையை இவ்வழக்கை விசாரணை செய்யச்சொல்லி பணிக்கிறது. மத்திய புலனாய்வுத்துறை இந்த என்கவுண்டர் கொலைகள் திட்டமிட்ட கொலை என்றும் இதில் அந்த மாநில முன்னாள் உள்துறை துணை அமைச்சர் சம்பந்தபட்டிருக்கிறார் என அவரை கைது செய்தது.

மற்றொரு சம்பவம். 2004 ஜூன் 15 இஸ்ரத் ஜஹன், ஜாவீத் ஷேக், சீஷன் ஜோஹர், அம்ஜத் அலி ரானா ஆகிய நண்பர்கள் அகமதாபாத் அருகில் உள்ள நரோடாவில் காரில் பயணம் செய்யும் போது குஜராத் காவல்துறையால் என் கவுண்டரில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக காவல்துறை திரைக்கதை எழுதியது.

ஆனால் இதுவும் போலி என்கவுண்டர் கொலைகள் என மத்திய புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதற்கு கொல்லப்பட்ட இளம் பெண் இஸ்ரத்தின் தாயார் ஷமீமா நீதிமன்றத்தின் கதவை தட்டியதுதான் காரணமாகும். இப்படி குஜராத்தில் கடந்த சில ஆண்டுகளில் 34 என்கவுண்டர் கொலைகள் நடந்துள்ளது.

இவைகள் ஒவ்வொன்றையும் விசாரித்தால்தான் இன்னும் உண்மைகள் வெளிவரும். இந்தப் படுகொலைகள் நடந்திட காரணம், ஆட்சியில் உள்ள இந்துத்துவ மதவெறியர்கள் மத்தியில் தங்களது பராக்கிரமங்களைக் காட்டி பதவி உயர்வு பெறத் துடிக்கும் அதிகார வர்க்கத்தின் பதவி வெறியாகும்.

மற்றொன்று இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பூதத்தை காட்டி இந்துத்துவ வெறியை முடிந்த அளவு மக்கள் மனங்களில் விதைப்பது.

இந்த மதவெறிதான் ஆர்.எஸ்.எஸ் காணும் அகண்டபாரதம் என்பதை உருவாக்கும் என நினைக்கின்றனர்.

பாட்னா, அஜ்மீர், கான்பூர், மலேகாவ், தானே, கோவா, நாந்தட், ஹைதராபாத் அகிய இடங்களில் இந்து மதவெறியர்கள் வைத்த வெடிகுண்டுகள் குறித்த விசாரணை ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில் அவர்கள் அம்பலப்பட்டு நிற்கும் நிலை உருவாகி உள்ளது.

இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பூதம் குஜராத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் பயன்படுத்தப்பட்டு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் பழிவாங்கப்பட்டதும் நடந்தது.

குஜராத் வடிவம் மாறி கோவையில்...
2006 ஜூலை மாதம் கோவையில் வெடி குண்டுகளுடன் தீவிரவாதிகள் கைது, தொடர் குண்டு வெடிப்பு நடத்தி தமிழகத்தில் நாசவேலைக்கு சதி, கோவையை அடுத்து சேலத்துக்கும் ஆபத்து, போலிஸ் அலுவலகங்களை தகர்க்க சதி என்று பத்திரிகைகள் கொட்டை எழுத்துகளில் செய்திகளை வெளியிட்டன.

1998 பிப்ரவரி 14ஆம் தேதி நடந்த கொடூர குண்டு வெடிப்பு சம்பவத்தின் ரணங்கள் இன்னும் மக்கள் மனங்களில் இருந்ததால் மக்கள் அதிர்ந்து போனார்கள்.

மேலும் நமது ஊடகங்கள் தங்கள் வசதிக்கும் கற்பனைக்கும் தகுந்தவாறு செய்திகளை முந்தித்தந்தனர்.

இந்து தலைவர்களை தீர்த்துக்கட்ட சதி, கோவையில் கைதான தீவிரவாதிக்கு கேரள குண்டு வெடிப்பில் தொடர்பு, மும்பை தீவிரவாதிகளுடன் தொடர்பு, என்று அடுத்த நாளும் தொடர்ந்தது.

ஒசாமா பின்லேடன் கோவை வந்து தீவிரவாதிகளுக்கு திட்டம் தீட்டி தந்தார் என்று மட்டும்தான் எழுதவில்லை. நீண்ட தாடி, தலப்பாக்கட்டுடன் யாரும் கண்ணில் தட்டுப்படாத காரணத்தால் இதை எழுதவில்லை போலும். தீவிர வாதிகள் கைது செய்யப்பட்டதால் சதி அனைத்தும் முறிய டிக்கப்பட்டது என்று ஊடகங்கள் கூறி முடித்தன.

என்ன நடந்தது? 2006 ஜூலை 22 அன்று நள்ளிரவில் ஹாரூன் பாஷா, மாலிக் பாஷா, அதீக்குர் ரஹ்மான் (எ) போலேசங்கர், ரவி (எ) திப்புசுல்தான், சம்சுதீன் உள்ளிட்ட ஐந்து பேரை கோவை போலிசார் கைது செய்தனர். பைப் குண்டுகள், மேப்புகள் கைப்பற்றப்பட்டன. சதியை திறமையாக முறியடித்த உளவுத்துறை உதவி ஆணையர் ரத்தின சபாபதி, போத்தனூர் பி-13 இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோருக்கு கமிஷனர் கரண் சின்கா பாராட்டு.

அப்போது தமிழகத்தின் அனைத்து செய்திகளும் பின்னுக்குப் போய் மீடியாக்களில் இந்த வெடிகுண்டு குறித்த விவாதங்களே ஆக்கிரமித்திருந்தது.

ஆனால் காவல்துறையினர் தயாரித்த கதையில் ஆங்காங்கு ஓட்டை இருந்ததால், காவல்துறையின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பத்திரிகைகள் மறுபக்கத்தை தேட ஆரம்பித்தன.
சில தகவல்களைத் திரட்டின. ஆனாலும் சதியின் முழுபரிமாணத்தையும் அவர்களால் காணமுடியவில்லை.

அதே நேரத்தில் கைதான ஹாருன் பாஷா குறித்து இருந்த நன்மதிப்பு முறையான நீதிவேண்டும் என கோவை முஸ்லிம் ஐக்கிய ஜமா அத் உள்ளிட்ட பல இஸ்லாமிய அமைப்புகள் களம் இறங்கிவிட்டது.

கமிஷனர் உள்ளிட்ட உயரதிகாரிகளிடமும் முறையிட்டன. அதிகார வர்க்கத்திற்கு மனு போட்டனர். எதிர்ப்புக் குரல் வலுக்கவே, முதலில் உதவிகமிஷனர் நிஜாமுதீன் தலைமையில் விசாரணை நடந்தது. சில சந்தேகங்களை எழுப்பியதோடு விடை காணாமலே அவரும் விடைபெற்றார். வழக்கு சிபிசிஐடி-யின் வசம் போனது. அதன் சிறப்புப் புலனாய்வுக்குழு தலைவராக ஆர்.பாலன் களமிறங்கினார்.

ஏறத்தாழ 15 மாதகாலம் கடுமையான விசாரணையை மேற்கொண்டார். நிதானமாக உண்மைகளை உறுதி செய்துகொண்டார். அவர் எடுத்திருக்கும் வழக்கு மிகவும் நுட்பம் வாய்ந்தது மட்டுமல்ல, தேசபாதுகாப்போடு சம்பந்தபட்டது. எனவே அறிவியல் பூர்வமான தரவுகளையும் சேமித்துக்கொண்டார்.
அவரது விசாரணையின் துவக்கத்திலேயே தமிழக காவல்துறையின் கேவலமான வன்மம் மிகுந்த அணுகுமுறை தெரிந்தது.
இருப்பினும் நீண்ட விசாரணைக்குப் பின் தன்னுடைய இறுதி அறிக்கையில், கீழ்வருமாறு எழுதி முடித்தார்

“பி-13 போத்தனூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 1067/2006 இல் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 120 (பி) 2/இ- வெடிபொருட்கள் சட்டம் 1908, பிரிவு-5இன் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவலறிக்கை மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்பட்டு, அதற்காக தயாரிக்கப்பட்ட கைப்பற்றல் மகஜர்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை, பொய்யானவை என்று என்னுடைய விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் என்னால் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களும், வாக்குமூலங்களும் மேற் கூறப்பட்ட தகவல்களை அறுதியிட்டு உறுதிப்படுத்துகின்றன. எனவே, இது பொய் வழக்கு என்று கூறி இவ்வழக்கை நான் முடிக்கிறேன்.’’

அவர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில் மேலும் கூறுகிறார் “காவல்துறை அதிகாரிகளைத் தவிர, மற்ற சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த அனைத்து சாட்சியங்களும், மேற்படி வழக்கும் முற்றிலும் பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்பதையும், மேலும் இந்த வழக்கில் கூறப்பட்டதைப் போல வெடிகுண்டுகள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்தும் விதமாக உண்மைகள் வெளிவந்துள்ளது” என்று கூறுகிறார்.
அதாவது காவல் துறையினர் தீவிரவாதிகள் என்று கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வெடிகுண்டு கைப்பற்றப்படவில்லை.

அப்படியாயின் ஏது அந்த வெடி குண்டு? யார் செய்தது? யார் போலிஸ் வசம் கொடுத்தது? வெடிகுண்டு செய்பவர்களோடு காவல்துறைக்கு உறவா? அல்லது அவர்களே வெடிகுண்டுகளை செய்தார்களா? தமிழக அரசாங்கம் விசாரித்ததா? விசாரிக்க வேண்டாமா? உண்மை வெளிவந்துவிட்டதால் வெடிகுண்டே இல்லை என்று கூறுவார்களா? அப்படியெனில் வெடி குண்டு வழக்கு ஏன் புனையப்பட்டது?

அடுத்து காவல்துறையினர் எப்படி திருட்டுத்தனமாக நடந்துக்கொண்டனர் என்பதற்கு அசைக்க முடியாத அத்தாட்சியை தருகிறார்.

குற்றம்சாட்டபட்டு கைது செய்யப்பட்ட 5 நபர்களின் வீட்டுக்கும் ஆய்வாளர் பால்ராஜ் என்பவர் தன்னுடன் ஒரு உதவி ஆய்வாளர், எட்டு தலைமைக் காவலர்கள், ஒரு காவலர், ஒரு கிராம நிர்வாக அலுவலர், ஒரு வருவாய் அலுவலருடன் சென்று கைது செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவை அனைத்தும் பொய்யானவையாகும். எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா.

இவர்கள் அனைவரும் சென்று கைது செய்யப்பட்டதாக கூறும் நேரத்தில் காவல் நிலையங்களில் நடக்கும் வருகைப் பதிவு நிகழ்வில் (ரோல் கால்) போத்தனூர் மற்றும் குனியமுத்தூர் காவல் நிலையங்களில் கலந்துகொண்டதாக காவல் நிலைய பொது நாட்குறிப்பில் பதியப்பட்டுள்ளது.

ஆக இவர்கள் கைது செய்யச் சென்றது பொய்யாக இருக்க வேண்டும்.

அல்லது காவல் நிலையத்தில் பொய்யாக எழுதி இருக்க வேண்டும்.

இரண்டும் உண்மையாக இருக்க முடியாது.

இது அப்பட்டமான விதிமீறல். அதே போல கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலருடன் சென்றதாகச் சொன்னதும் பொய்யானதுதான். இதை விசாரணையில் அவர்களே ஒப்புக்கொள்கின்றனர். இன்னும் நிறைய விபரங்கள் காவல்துறையை அம்பலப்படுத்துகிறது அந்த அறிக்கை.

யார் குற்றவாளிகள்...
பொய்வழக்கு புனையப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்ட அந்த இளைஞர்களின் வாழ்க்கையில் அந்த நேரத்தில் அடைந்த துன்பத்தை வார்த்தைகளால் வடிக்க முடியாது.

ஒரு மாதகால சிறைவாசம், விசாரணையில் பட்ட மன உலைச்சல். அந்த ஐந்து குடும்பங்களும் அடைந்த வேதனை. சமூகத்தில் பட்ட அவமானங்கள். குண்டு மீண்டும் வெடிக்குமோ என்ற பீதி. அதனால் அதிர்ந்து போன அப்பாவி மக்கள்.

இதற்கெல்லாம் என்ன நடவடிக்கை?
இந்த காயத்திற்கு மருந்திடுவது யார்?

சி.பி. சி.ஐ.டி அறிக்கை அளித்து இரண்டு மூன்று ஆண்டுகளாகியும் பொய்யான குற்றச்சாட்டு புனைந்து பீதியை உண்டாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

எந்த தண்டனையுமின்றி வெடிகுண்டு தயாரிப்பாளர் ரத்தினசபாபதி அதே கோவையில் மது விலக்கு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக தொடர்கிறார்.

இந்த சம்பவம் நடந்தது கலைஞர் ஆட்சியில்தான்.

காவல் துறையின் மீது குற்றம்சாட்டப்பட்டதும் அவர் ஆட்சியில் தான். சிறுபான்மையினர் நலன் காப்பதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கலைஞர் இதுவரை மவுனம் சாதிப்பது எதனால்.

மைனாரிட்டி திமுக என அதிமுக தலைவி பேசியதை பார்த்து கொதித்தெழுந்து கோவையில் பேசிய முதல்வர் “ஆமாம் நாங்கள் மைனாரிட்டிதான் அதாவது மைனாரிட்டியை ஆதரிக்கும் மைனாரிட்டிகளின் ஆட்சி” என்று வார்த்தை ஜாலங்களை வீசுகிறார்.

வார்த்தைகளை அடுக்கி விளையாடும் எளிதான காரியமல்ல இது. குஜராத்தைப் போல அதிகாரத்தின் அடுக்குகளில் மறைந்து தனது கோரமுகத்தை இந்துத்துவா நிறுவுவதை எதிர்த்து சமர் புரிய வேண்டிய தருணம் இது. பெரியாரின் சுண்டு விரலை பிடித்து வந்ததாக தம்பட்டம் அடிப்பவர் என்ன செய்ய போகிறார்?

(ஆதாரம்: கோவை போலீஸ் நடத்திய வெடிகுண்டு நாடகம். இலக்கிய சோலை- 25, பேரக்ஸ் சாலை, பெரியமேடு, சென்னை-600003)

நிராயுதபாணிகளான அப்பாவிகள் மீது இந்துத்வாவின் கொலை வெறியாட்டம்! – வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள்!!!

நரேந்திர மோடி (கேடி) பிஜெபி அரசும் காவிக்கும்பலும், கோத்ராவில் நடந்த சபர்மதி எக்ஸ்ப்பிரஸ் துக்கத்தைத்தான்,.. 2002 ல் குஜராத்தில் நிராயுதபாணிகளான அப்பாவி மக்கள் மீது ஏவி விடப்பட்ட கொடூரக் கொலை, கற்பழிப்பு, சிசுக்கொலைகள் ஆகியவற்றிற்க்கு காரணமாக காட்டிக் கொண்டிருக்கிறது. தெஹெல்காவின் ஆறுமாத புலனாய்வில் இதன் பின்னணியில் உள்ள பொய்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. நரேந்திர மோடி அரசாங்கமே அடியாட்களுக்கு உத்தரவுகளும், லஞ்சமும் கொடுத்து இந்த கலவரத்தை நடத்தியது என்ற கலவரத்தின் பின்னணி அம்பலமாகியுள்ளது.இதோ நடந்ததாக கண்டறியப்பட்ட உண்மைகள்:

காவல் துறையின் வாதம்:

1. சில முஸ்லிம் அரசியல் வாதிகள் மற்றும் மத முக்கியஸ்தர்கள் சபர்மதி எக்ஸ்ப்பிரஸ்ஸின் எஸ்-6 பெட்டியை February 27, 2002 ல் சதிசெய்து கொளுத்தினார்கள். (கவனிக்க: எதேனும் ஒரு பெட்டியை அல்ல. குறிப்பாக எஸ்-6 பெட்டியை ).

2. முஹம்மது ஹுஸைன், அப்பொதைய கோத்ரா முனிசிபல் கவுன்சில் தலைவர், இரண்டு முஸ்லிம் முனிசிபல் உறுப்பினர்கள் ஆகியோர் இந்த ரயில் பெட்டியை எரிக்கும் குழுவில் இருந்து, எஸ்-6 பெட்டியை எரிக்க தூண்டினார்கள்.

3. போலீஸின் கூற்றுப்படி, எராளமான பெட்ரோல் எஸ்-6 ன் தளத்தில் ஊற்றி, பின் கொளுத்தப்பட்டது. இதற்க்காக 140 லிட்டர் பெட்ரோல் பிப்ரவரி 28ம் தியதி, கலாபாய் என்ற ஒரு முஸ்லிமுக்கு சொந்தமான பெட்ரோல் பம்பில் இருந்து வாங்கப்பட்டது. பின் 9 முஸ்லிம் கூலி தொழிலகளாலும், ஒரு ஹிந்து தொழிலாளியாலும் சபர்மதி எக்ஸ்ப்ரெஸ் நின்றுகொண்டிருந்த காபின் A க்கு கொண்டுவரப்பட்டது.

4. சபர்மதி எக்ஸ்ப்ரெஸ்ஸின் எஸ்-6 பெட்டியின் இணைப்பை மூன்று முஸ்லிம் தொழிலாளர்கள் துண்டித்ததால், ரயில் நிறுத்தப்பட்டது.

5. சில தொழிலாளிகள் 6 இன்ச் கனமுள்ள இரு பெட்டிகளையும் இணக்கும் தொடர்பை சாதாரண கத்தரிக்கோலால் வெட்டிய பிறகு எஸ்-6 க்குள் நுழைந்து பெட்டியின் தரையில் பெட்ரோலை ஊற்றினார்கள். கண்ணாடி உடைந்த ஜன்னல் வழியாகவும் பெட்ரோல் ஊற்றப்பட்டது. மேற்சொன்ன காவல் துறையின் ‘தியரி’ க்கான சாட்சிகள் :

1. போலீஸ் பெரும்பாலும் சம்பவத்தை நேரில் பார்த்த 9 பிஜேபி உறுப்பினர்களின் சாட்சியையே முக்கியமாக எடுத்துக்கொண்டிருக்கிறது. இவர்கள் 41 முஸ்லிம்களை அடையாளம் காட்டியிருக்கிறர்கள். (ஒரு பிஜெபி உறுப்பினர் திலீப் தேஸாதியா, பிறகு தன்னுடைய வாக்குமூலத்தை முழுவதுமாக வாபஸ் வாங்கிக்கொண்டார்.)

2. எஸ்-6 ல் பயணம் செய்த கரசேவகர்களின் வாக்குமூலங்களும் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

3. அங்கு ஏற்பட்ட புகையால் மயங்கிவிட்டதாகவும், என்ன நடந்தது என்றே காண இயலவில்லை என்றும் சொன்ன இரண்டு கரசேவர்கள், ஆறு மாதங்களுக்கு அப்புறம், தங்கள் நிலையை மாற்றி வெளியிலிருந்து எதோ திராவகம் தரையில் ஊற்றப்பட்டதை பார்த்ததாக சொன்னார்கள். இந்த வாக்குமூலம் தான் – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்க்கு 15 தினங்களுக்குமுன் சேர்க்கப்பட்டு – போலீஸ் தியரியின் திடீர் சக்தியாக மாற்றப்பட்டுள்ளது.

4. போரென்சிக் ரிபோர்டின்படி, ” 60 லிட்டர் பெட்ரோல் தென் திசையிலிருந்து பெட்டியின் தரையில் ஊற்றப்பட்டிருக்கலாம் ” என்பது.

5. ஒன்றரை மாதங்களுக்குப்பிறகு, ஒரு டீக் கடை காரர், அஜய் பாரியா என்ற ஒரு சாட்சியை போலீஸ் திடீரென்று கொண்டு வந்து நிறுத்தியது. இந்த அஜய் பாரியா, தன்னை 9 முஸ்லிம் தொழிலாளிகள் எஸ்-6 பெட்டியில் பெட்ரோலை ஊற்றி தீ வைக்குமாறு கட்டயப்படுத்தியதாக விளம்பினார்.

6. இரண்டு முஸ்லிம் தொழிலாளர்கள் கைது செய்த ஒரு வாரத்திற்க்கப்புறம், ட்ரயின் இணைப்பைத் தாங்கள் துண்டித்ததாக ஒப்புக்கொண்டார்கள். அப்புறம் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துமூலமாக இதை வாபஸ் வாங்கிகொண்டார்கள்.

7. இதே போல் இன்னொரு முஸ்லிம் தொழிலாளி எஸ்-6 பெட்டியை கொளுத்திய கும்பலில் தானும் இருந்ததாக ஒப்புக்கொண்ட (?) வர், அப்புறம் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துமூலமாக இதை வாபஸ் வாங்கிகொண்டார்.

8. சம்பவம் நடந்து 1 வருடம் கழித்து போலிஸ் இரண்டு இந்து சேல்ஸ்மேன்களை ஆஜர் படுத்தியது. பிரபாத்சிங் பட்டேல் மற்றும் ரஞ்சித்சிங் பட்டேல்.

இவர்கள் இருவர்தான், பெட்ரொல் பம்பிலிருந்து 140 லிட்டர் பெட்ரோலை விற்ற சேல்ஸ்மேன்கள். இவர்க்ளுள் ஒருவர், அன்றைய தினத்தில் அப்படி யாருக்கும்ம் பெட்ரோல் விற்கவில்லை என்று தெரிவித்தார்.

9. இன்னொரு போலிஸின் சாட்சி, சம்பவ இடத்தில் இருந்த மற்ற முஸ்லிம் தலைவர்களுடன் மவுலவி யாக்கூப் பஞ்சாபி என்பவரும் கொளுத்த தூண்டிவிட்டார் என்று சாட்சி சொன்னார். பின்பு பொலீஸ் பஞ்சாபியை கைது செய்து பின் விட்டுவிட்டது. காரணம் பஞ்சாபி அந்த நாட்களில் சவூதி அரேபியாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் என்பதே.

10. இன்னும் இதில் பங்கெடுத்துக் கொண்டதாகவும், கொளுத்தியதாகவும் ‘ஒப்புக்கொண்ட’ ஆறு முஸ்லிம் தொழிலாளிகள், பின்னர் தங்களுடைய வாக்கு மூலத்தை வாபஸ் வாங்கிகொண்டார்கள்.

இனி தெஹல்கா கண்டறிந்த கொடுமையான உண்மைகள்…

1. பிரபாத்சிங் பட்டேல் மற்றும் ரஞ்சித்சிங் பட்டேல் என்ற இரு பெட்ரோல் பம்ப் சேல்ஸ்மேன்களுக்கும், தலைமை விசாரணை அதிகாரியே லஞ்சம் கொடுத்து, இப்படிச் சொல்லவும், தவறான நபர்களை அடையாளம் காட்டவும் பணித்தார். தெஹெல்க்காவின் கேமராவில் அந்த அதிகாரியே இதை ஒப்புக்கொண்டிருக்கிறார். 50,000 ரூபாய் இதற்க்காக இலஞ்சமாக கொடுக்கப்பட்டது.

2. சம்பவத்தை நேரில் பார்த்ததாக சொல்லப்பட்ட 9 பிஜெபி நபர்களும் அப்பொழுது அந்த இடத்திலேயே இருந்திருக்கவில்லை. தெஹெல்க்கா அவர்களுள் இருவரை – Kakul Pathak and Murli Mulchandani – பேட்டி கண்டதில் தாங்கள் அந்த இடத்திலேயே இல்லை என்றும், தாங்கள் பெயர் இருப்பது தாங்களுக்கே தெரியாது என்றும் கூறினர்.

3. பெட்டியின் இணைப்பை துண்டித்ததாக சொல்லப்பட்ட இரு முஸ்லிம் தொழிலாளிகளும் சித்ரவதை செய்யப்பட்டதாகவும், (பிறப்புறுப்பில் மின்சாரம் செலுத்தியது உட்பட ) தெஹெல்க்காவிடம் வாக்குமூலமாக தந்தனர்.

4. பெட்ரோல் எப்படி எங்கிருந்து ஊற்றப்பட்டது? எப்படி எரிக்கப்பட்டது? என்ற போலீஸின் கூற்றும், போரென்சிக் லாபின் கூற்றும் முற்றிலும் மாறுபடுகிறது.

இது இந்துத்வா நடத்திய கபட நாடகம் என்று வெளிச்சத்திற்க்கு வந்தது. இதுதான் துவக்கம் இனிதான் காவிக்கும்பலின் நரபலி வேட்டை, கொலைகள், கற்பழிப்புகள், சிசுக் கொலைகள், அதை நடத்திய விதம், பேட்டிகள், செய்முறைகள், உத்தரவுகள் எல்லாம் தொடர்ந்து வெளிவர உள்ளன.

சிந்திக்க: ரயிலை கொளுத்தி , ஹிந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் முஸ்லிம்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவிப்பதும், முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடுவதும், குஜராத்தின் ஆட்சியில் நிரந்தரமாக அமர்ந்திருப்பதும் தான் மோடியின் எண்ணம் என்பது வெட்ட வெளிச்சம் ஆகிறது. இவர்கள் தங்கள் ஹிந்துவா சிந்தனையை பரப்புவதற்கும், ஆட்சி கட்டில் நிரந்தரமாக அமர்ந்திருக்கவும் சொந்த மதத்தை சேர்ந்தவர்களையும், தங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களையும் பலிகொடுக்க தயங்க மாட்டார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இவர்கள் பயங்கரவாதி ஹிட்லரின் வழிதோன்றல்கள்.

நன்றி : கதிரவன்

--

மனிதர்களின் ரத்தத்தையும், இயற்க்கை வளங்களையும் உறிஞ்சும்: டாடா!!!

1) 2003 – செப்டம்பரில், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் குஜராத் மாநிலம் மித்னாபூர் சோடா உப்பு ஆலையில் கழிவு நீர்க் கசிவு ஒன்று ஏற்பட்டது. இதனால் கட்ச் வளைகுடாவில் உள்ள தேசியக் கடற்பூங்காவில் 150 ஏக்கருக்கு மேலான நிலபரப்பில் அமைந்துள்ள கடற்பூங்கா மாசுபட்டு போனது. டாடா கெமிக்கல்சின் உப்பளங்கள் அங்குள்ள நிலத்தடி நீரைப் பெருமளவு உப்பு நீராக்கிவிட்டன. டாடா கம்பெனியின் உப்புக் கழிவு நீரைக் கொட்டி வைக்கும் திறந்தவெளிக் கிடங்குகளுக்காக பல கிராமங்களின் விவசாய நிலங்கள் பாழ்படுத்தபட்டன.

2 ) ஜாம்சேத்பூர் மாநகரில் உள்ள ஜூக்சாலைப் பகுதியில் அமைந்துள்ள டாடாவின் இரும்பு எஃகு ஆலை திறந்தவெளியில் ஆயிரக்கணக்கான டன்கள் கொதிகலன் சாம்பலைக் கொட்டி மலை மலையாகக் குவித்திருக்கிறது, . கோடை காலத்தில் அச்சாம்பல் மலைகளில் இருந்து பறந்துவரும் கனரக உலோகத் துகள்கள் நிரம்பிய காற்று சாலைகளில் வாகனங்கள் செல்லமுடியாத அளவுக்கு பார்வையைப் பதிப்பதோடு, சுவாச நோய்களையும் பரப்புகின்றது. மேலும் அப்பகுதி நிலத்தடி நீர் மாசுபட்டு, கடினநீராகி, திடப்பொருட்களின் கரைசல் நிரம்பியதாக உள்ளது.

3) ஜோடா நகரம் இதில் டாடா, பிர்லா, மற்றும் ஜிண்டால் போன்ற கம்பனிகள் இரும்புக் கனிமச் சுரங்கங்களை அமைத்துள்ளன. 1950-களில் இந்நகரம் கனிமவளம் கொழிக்கும் நகராக விளங்கி இந் நிறுவனங்களின் செல்வவளங்களைப் பெருக்கியது; ஆனால், அதனால் அந்த நகரம் ஒரு பயனும் பெறவில்லை. பத்திரிக்கையாளர் தரும் விவரப்படி, ஜோடா நகரமும் அதற்குச் செல்லும் சாலையும் ஒரு பெரிய படுபாதாளக் குழியாக உள்ளது. அடுத்தடுத்து தொடர்ச்சியாக கனிமச் சுமையேற்றிய லாரிகள், இரவுபகலாக 24 மணிநேரமும் நடக்கும் சுரங்கம் வெட்டுதல் பணி, இதனால் மிக மோசமாகத் தூசு கிளப்புவதால் உள்ளூர்வாசிகள், தொழிலாளர்கள், பயணிகள் சுவாசிக்க நல்ல காற்றே கிடையாது.

4) மேற்கு பொக்காரோவில் டாடா எஃகு நிறுவனத்தின் நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. பொக்காரோவில் உள்ள நிலக்கரி கழுவுமிடத்திலிருந்து நிலக்கரி தூசுகள் நிறைந்த கரிக் குழம்புகள் பொக்காரோ ஆற்றுக்குள் கொட்டப்படுகிறது; இதனால் ஆற்றுப்படுகை முழுவதும் நிலக்கரி சாம்பல் படிந்து ஆறே நாசமடையச் செய்து அழிக்கப்பட்டு விட்டது. நிலக்கரியை கழுவ அங்குள்ள ஆற்றில் இருந்து பெருமளவு தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இப்படி கழுவிய பின்னால் வெளியேறும் கழிவு தண்ணீர் மீண்டும் அந்த ஆற்றில் கொட்டப்பட்டு அந்த ஆறு முற்றிலும் நாசம் செய்யப்பட்டது.

5) 1989 மார்ச் மூன்றாம் நாள், டாடா குழுமத்தின் நிறுவனர் நாள் விழாக் கொண்டாட்டம் நடந்தது. அப்போது பிரபலங்களின் இருக்கைப் பகுதியில் திடீரென்று தீப்பற்றிக் கொண்டு விட்டது. அலட்சியம் காரணமாக ஏற்பட்ட இத்தீவிபத்தில் 60 குழந்தைகள் மாண்டு போயினர்; 111 பேர் படுகாயமுற்றனர்; மோசமான ஏற்பாடுகள் காரணமாக உரிய நேரத்தில் விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு வண்டிகள் போச் சேர முடியாமல் போனது. டாடா எஃகு நிறுவனம்தான் விபத்துக்கு முழுப்பொறுப்பாகும் என்று ஆலைகளுக்கான ஆய்வகம் அறிக்கை அளித்துள்ளது. ஆனால், இத்துயரச் சம்பவம் நடந்து பத்தாண்டுகளுக்கு மேலாகியும் பலியானவர்களின் உறவினர்களுக்கோ, படுகாயமுற்றவர்களுக்கோ டாடா நிறுவனம் இன்னமும் நட்டஈடு வழங்கவில்லை. டாடா இரும்பு எஃகு நிறுவனம் ஆலை விபத்துகளுக்குக் கொடுத்து வந்த நட்டஈடுகளை சுட்டிக் காட்டி, அதே அளவு நீதிமன்ற நடுவரிடம் செலுத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றம் பிறப்பித்த ஆணையைக் கூட டாடா நிறுவனம் மதிக்காது மறுத்து வருகிறது.

6) 1920-கள் மற்றும் 1930-களில், டாடா இரும்பு எஃகு கம்பெனியின் நிர்வாகத்துக்கு எதிராகப் பழங்குடித் தொழிலாளர்கள் பலமுறை போராடியிருக்கிறார்கள். குறைவான ஊதியம், வேலை நிலைமைகள், ஆகியவை இவர்கள் போராடுவதற்கான முக்கியமான பிரச்சினைகளாக இருந்தன. ஆனால், பல ஆண்டுகளாக, தொழிற்சங்கங்களை உடைப்பதற்கு அடிக்கடி வன்முறை வழிகளில் ஈடுபட்டு பல படுகொலைகளை நடத்தி டாடா கம்பெனி பெயர்பெற்றதாக விளங்கியது.

7) 1991-இல் ரத்தன் டாடா தலைமைப் பொறுப்பேற்றபிறகு ஆட்குறைப்பு மற்றும் நெறிப்படுத்துவதை மூர்க்கமாக டாடா குழுமம் மேற்கொண்டது. 2003-ஆம் ஆண்டு, டாடா ஹைட்ரோ கம்பெனிகள் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் தங்களுக்குத் தாங்களே மண்ணெண்ணெ ஊற்றிக் கொண்டு டாடா நிறுவனத்தின் தலைமையகத்தின் முன்பு தீக்குளித்தார்கள். டாடா மின்சக்தி கம்பெனியிலிருந்து சட்டவிரோதமாக ஒப்பந்தத் தெழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத்தான் அவ்விரு தொழிலாளர்களும் தீக்குளித்து மாண்டனர். டாடாவின் சுதேசி துணி ஆலையை மூடி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வியாபாரம் செய்ய நினைத்தது டாடா நிறுவனம் இந்த பிரச்சனையில் 2000-ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டு, 28000 ஆலைத் தொழிலாளர்கள் அகதிகளாக வீசப்பட்ட போது, சுதேசி ஆலையின் ஒரு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

8) குறைந்தது இரண்டு தொழிலாளர் முன்னணியாளர்கள் கடந்த காலத்தில் கொல்லப்பட்டனர். அப்துல் பாரி மற்றும் வி.ஜி. கோபால் ஆகிய இருவரும் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தைக்குச் சென்றபோது போட்டி தொழிற்சங்கத்துக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்விரு சம்பவங்களிலும் டாடா நிர்வாகம் பின்னணியில் இருந்து செயல்பட்டதாக டாடா தொழிலாளர்களும் சுயேச்சையான பார்வையாளர்களும் குற்றஞ்சாட்டினர்.

9) 1850-களில் இருந்து அந்நூற்றாண்டின் இறுதிவரை சீனாவிற்கு “ஓபியம்” என்ற கஞ்சா போதை மருந்து ஏற்றுமதி செய்வதில் டாடா குடும்பம் ஈடுபட்டிருந்தது. ஓபியம் இந்தியாவில் விளைவிக்கப்பட்டு, ஆங்கிலேயக் காலனியவாதிகளுக்காக டாடா போன்ற தரகர்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்தார்கள். (சீன மக்களை ஓபியம் போதைப் பழக்கத்தில் மூழ்கடித்து அடிமைப்படுத்திக் காலனியாக்கிக் கொள்ள ஆங்கிலேயர்கள் எத்தணித்தபோது அதற்கு எதிராக சீன மக்கள் நடத்தியதுதான் பிரபலமான ஓபியம் போர். ஓபியம் கடத்திக் குவித்த மூலதனத்தைக் கொண்டுதான் துணி ஆலைகளையும் இரும்பு-எஃகு ஆலையையும் டாடா குடும்பம் நிறுவியது.