மும்பை : "இந்தியா - பாகிஸ்தான் இடையே நட்பு தொடர்ந்து வந்த நிலையில், திடீரென பெரும் இடைவெளி விழுந்துவிட்டது; எதற்கெடுத்தாலும், இரு நாடுகளும், அமெரிக்காவை அண்டியிருப்பதை கைவிட வேண்டும்; பரஸ்பரம் பேசித்தீர்க்க வேண்டும்'-முஷாகித் உசேன்; பாகிஸ்தானில் மூத்த பத்திரிகையாளர்; அரசியலில் புகுந்து முஷாரப் கட்சியில் தலைவர்; கோல்கட்டாவில் இருந்து வெளிவரும் டெலிகிராப் உட்பட சில முக்கிய இந்திய பத்திரிகைகளில் கட்டுரை எழுதி வருபவர்.மும்பை பயங்கரம் நடந்ததை அடுத்து, பாகிஸ்தானில் இருந்து வந்த முதல் அரசியல் தலைவர் இவர்.
பேட்டியில் கூறியதாவது:இந்தியாவும் பாகிஸ்தானும் வார்த்தைபோரில் இறங்கியிருப்பது துரதிருஷ்டமானது; இரு நாடுகளும் அண்டை நாடுகள் என்ற நட்போடு இருக்க வேண்டும். மும்பை பயங்கரத்துக்கு முன், இஸ்லாமாபாத் மேரியாட் ஓட்டலில் பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர்; மும்பை பயங்கரத்துக்கு பின், பெஷாவரில் குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தியுள்ளனர். இப்படி பயங்கரவாதிகள், இந்தியா மட்டுமின்றி, பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் பரவி தாக்குதல் நடத்தித் தான் வருகின்றனர். அவர்களை ஒடுக்க வேண்டுமானால், இந்திய , பாக்.,கில் அமைதி நிலவ வேண்டுமானால், முதலில் இருநாடுகளும் எதற்கெடுத்தாலும் அமெரிக்காவிடம் போய் கெஞ்சுவதை நிறுத்த வேண்டும்; தங்கள் பிரச்னைகளை தாங்களே தீர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். மும்பை பயங்கரத்தை தொடர்ந்து, பயங்கரவாதிகள் தொடர்பான ஆதாரங்களை அமெரிக்கா, ஜெர்மனியிடம் சொல்ல இந்தியா தீவிரமாக இருக்கிறது;
ஆனால், பாகிஸ்தானிடம் நேரடியாகவே தெரிவித்து, விசாரணை செய்து, அதன் ஒத்துழைப்பையும் பெற்று தீர்த்துக்கொள்ளலாம். அப்போது தான் பாகிஸ்தானும் பொறுப்புடன் செயல்படும். மும்பை பயங்கரத்தில் சிக்கிய பயங்கரவாதியின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டவுடன், பாகிஸ்தானிடமே கூறி, விளக்கம் பெற்றிருக்கலாம். அதன் மூலம் உலகுக்கும் எடுத்துக்காட்டலாம். எதற்கும் போர் உதவாது; அமைதிக்கு தொடர்ந்து முயற்சிக்கும் பேச்சு தான் உதவும். இவ்வாறு உசேன் கூறினார்.
No comments:
Post a Comment