சென்னை: தமிழகத்தில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து விவாதிக்க நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை அதன் அகில இந்தியச் செயலாளர் திருநாவுக்கரசர் புறக்கணித்தார். அவர் விரைவிலேயே பாஜகவில் இருந்து விலகுவார் என்று தெரிகிறது.
மக்களவைத் தேர்தலில் சரத் குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி , நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி , ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து பாஜக 12 இடங்களில் போட்டியிட்டது.
இதில் கன்னியாகுமரி , ராமநாதபுரம் தவிர மற்ற தொகுதிகளில் பாஜகவுக்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை.
இந்தப் படுதோல்வி குறித்து சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் இல. கணேசன், துணைத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன், அகில பாரத இணை அமைப்பு பொதுச் செயலாளர் சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஆனால், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அக் கட்சியின் ராஜ்யசபா எம்பியான திருநாவுக்கரசர் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தார்.
இப்போது பாஜக மாநிலங்களவை எம்பியாக உள்ள திருநாவுக்கரசர் தேர்தல் தோல்விக்குப் பின் கட்சியின் எந்தத் தலைவர்களையும் சந்திக்கவும் இல்லை, அவர்களுடன் பேசவும் இல்லை.
இனியும் தமிழகத்தில் பாஜகவில் இருப்பது தனது அரசியல் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று அவர் கருதுவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இதனால் மிக விரைவிலேயே திருநாவுக்கரசர் பாஜகவில் இருந்து விலகுவார் என்று தெரிகிறது.
இதற்கிடையே நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, அதிமுகவின் பணபலமும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடத்தப்பட்ட முறைகேடுகளுமே பாஜகவின் மோசமான தோல்விக்குக் காரணம் என்று நிர்வாகிகள் கருத்து தெரிவித்ததோடு கூட்டம் முடிந்து.
தமிழக மக்கள் பாஜகவை ஏன் ஏற்க மறுக்கிறார்கள் என்ற உண்மையான காரணம் குறித்து விவாதிக்கப்படவில்லை.
No comments:
Post a Comment