அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, March 6, 2011

திக மூலம் காங்கிரஸுக்கு மீண்டும் எச்சரிக்கை!

"திமுக கூட்டணியில் அதிக இடங்களைக் கேட்டுத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் காங்கிரசை கூட்டணியில் இருந்து வெளியேற்றுவது பற்றி திமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும்" என்று திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

தொகுதி பங்கீடு விஷயத்தில் நாளுக்கு நாள் காங்கிரஸ் அதிக நெருக்கடிகளைத் திமுகவுக்குக் கொடுத்துவருகிறது. இறுதியாக 51 லிருந்து 60 தொகுதிகள் வரை இறங்கி வந்த கருணாநிதி, இன்று தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், நேற்றிரவு "63 தொகுதிகள் மற்றும் கேட்கும் தொகுதிகள்" என்ற புதிய கோரிக்கையைக் காங்கிரஸ் வைத்தது.

இதில் அதிக எரிச்சலடைந்த முதல்வர் கருணாநிதி, "இது முறைதானா?" என்று காட்டமான கேள்வியுடன் இன்று அறிக்கை வெளியிட்டார். அத்தோடு, இன்று கூடும் திமுக உயர் நிலைக்குழு கூட்டத்தில் இது தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில், "இன்றைய உயர் நிலைக்குழு கூட்டத்தில் காங்கிரஸைக் கூட்டணியிலிருந்து வெளியேற்ற முடிவெடுக்கவேண்டும்" என தி.க தலைவர் கி. வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது, "தொகுதிப் பங்கீடு விஷயத்தில் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் காங்கிரசுக்குத் திமுக உடன்படக் கூடாது. கூட்டணியில் காங்கிரசைத் தவிர்ப்பது பற்றி திமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும்.

மக்களிடையே திமுகவிற்குச் செல்வாக்கு இருக்கிறது. இந்தச் செல்வாக்கையும் இப்போது கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளையும் வைத்து தேர்தலைச் சந்தித்தாலே திமுக வெற்றி பெற்றுவிடும்" என்று கூறினார்.

இதற்கு முன்னரும் ஒருமுறை வீரமணி இத்தகையதொரு அறிக்கை வெளியிட்டிருந்தார். திமுக தலைவர் கருணாநிதியின் சம்மதமின்றி தி.க தலைவர் கி.வீரமணி இது போன்ற அரசியல் விஷயங்களைப் பேசுவதில்லை என்றொரு கருத்து நிலவும் நிலையில், அவருடைய இப்போதைய கருத்து முதல்வர் கருணாநிதியே வீரமணி மூலமாக காங்கிரசுக்கு இறுதி எச்சரிக்கை கொடுப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முந்தைய வீரமணியின் அறிக்கையில், "இனியும் இனியும் திமுக குட்டக் குட்டக் குனியக் கூடாது. சுயமரியாதையைக் காக்க துணிச்சலுடன் முடிவெடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

"இன்று மாலை கூடும் திமுக உயர் நிலைக்குழு கூட்டத்தில், காங்கிரஸை வெளியேற்றும் முடிவை எடுக்க நாங்கள் தயங்கமாட்டோம்" என்று மறைமுகமாக திமுக காங்கிரஸுக்குக் கூறும் இறுதி எச்சரிக்கையாகவே இப்போதைய வீரமணியின் அறிக்கையையும் எடுத்துக்கொள்ள வழியிருக்கிறது.

ஆனால்,

நடிகர் விஜயகாந்தின் தேமுதிக, அதிமுக கூட்டணியில் போட்டியிடுவது உறுதியாகி விட்ட நிலையில் மூன்றாவது அணி அமைவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லையாதலால், திமுக கூட்டணியினை விட்டுக் காங்கிரஸை வெளியேற்ற திமுகவும் திமுகவிலிருந்து விலகி தனித்துப் போட்டியிடும் விஷப்பரீட்சை முடிவைக் காங்கிரஸும் எடுக்காது என்பதே இப்போதைய நிலை. என்ன நடக்கப்போகிறது என்பது இன்னும் 24 மணி நேரத்துக்குள் தெளிவாகி விடும்

No comments: