’மார்க்கரீதியான ஒழுக்கத்துடனும், சமூக மரியாதைகளுடனும் நான் வளர்த்த என் பிள்ளைகள் எந்த ஒரு குண்டுவெடிப்பிலும், மனித தன்மையற்ற செயலிலும் பங்காளிகளாக மாட்டார்கள்.எனது பிள்ளைகள் குற்றவாளிகளா? இல்லையா? என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றங்களாகும். அதற்கான வாய்ப்பை அளிக்காமல் இவ்வழக்கு காரணமின்றி இழுத்துக்கொண்டே செல்வதுதான் நாங்கள் அனுபவிக்கும் நீதி மறுப்பாகும் – இது ஒரு தந்தையின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் வேதனையான வார்த்தைகள்.
தனது 5 பிள்ளைகளில் இரண்டு பேர் தேசத்துரோகம் உள்பட பல்வேறு கடுமையான குற்றங்கள் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு அவதியுறும் வேளையில் ஜாமீனில் வெளியே கொண்டுவர கூட முடியாமல் பி.எஸ்.அப்துல்கரீம் என்ற ஆசிரியர் கடுமையான வேதனைகளை உள்ளத்திலே ஒதுக்கி வாழ்கிறார். சிறைக்கு வெளியே இவர் இருந்தாலும் ஒரு கைதியைப் போலவே இவருடைய வாழ்க்கை கழிகிறது.
தடைச்செய்யப்படும் முன்பு ’சிமி’ இயக்கத்தில் இதர இளைஞர்களை போலவே எனது மகன்களும் அதில் பணியாற்றினர். ஆனால், அதனை ஆயுதமாக்கி எந்த பிரச்சனை நடந்தாலும் அதில் குற்றவாளியாக்கப்பட்டு போலீஸின் விசாரணை இவர்களை சுற்றி மட்டுமே நடக்கும் பீதியான நினைவுகளுடன் நான் பயணிக்கிறேன் ஆசிரியர் அப்துல் கரீம் கூறுகிறார். வாழ்க்கைக்கான போராட்டத்தின் அக்னி பரீட்சைகளில் சிக்கி தவித்து அதில் தளராமல் உறுதியாக நிற்க துடிக்கும் ஒரு தந்தையின் அனுபவத்தை அவர் விவரிக்கிறார்.
பொதுவாகவே கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள ஈராட்டுப்பேட்டை கல்வியில் பின்தங்கியுள்ள பகுதியாகும். பெரும்பாலான குடும்பத்தில் 10-வகுப்பை முடித்தவர்களை ஆபூர்வமாகவே காண முடியும். அவர்களுக்கிடையே குடும்பத்தின் பொறுப்புகள் ஒவ்வொன்றாக தனது தலையில் விழுந்த போதும் எவருடைய ஆதரவும் இல்லாதிருந்தும் பத்தாம் வகுப்பில் வெற்றி பெற்று அஃப்ஸலுல் உலமா தேர்வில் தேர்ச்சிப்பெற்று அரபி மொழி ஆசிரியராக பணியாற்றியவர் தாம் அப்துல் கரீம்.
பானாயிக்குளம் சம்பவம் தொடர்பாக அவருடைய மகன்கள் கைது செய்யப்பட்ட போது ஒரு காலத்தில் தாம் பெற்ற பிள்ளைகளால் பாக்கியம் பெற்றவன் என புகழப்பட்ட, பொறாமையுடன் நோக்கப்பட்ட அப்துல் கரீம் ’தீவிரவாதிகளின் தந்தை’ என முத்திரை குத்தப்பட்டார். நீண்ட 29 ஆண்டுகளாக பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு அறிவை கற்றுக்கொடுத்த மனித நேயமிக்க இந்த ஆசிரியருக்கு இத்தகைய குற்றச்சாட்டு தீராத ரணத்தை ஏற்படுத்தியது.
தென் கேரளாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஈராட்டுப்பேட்டை பஞ்சாயத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் மிக அதிக மதிப்பெண்களை பெற்றனர் அப்துல்கரீமின் பிள்ளைகள். ’கல்வி கற்பதில் திறமைசாலிகளாக திகழ்ந்த 5 பேரையும் கடன்வாங்கியும், நிலத்தை விற்றும் எல்லா தந்தைகளைப்போல மிகப்பெரிய நம்பிக்கையுடன் நான் அவர்களை படிக்க வைத்தேன். ஷிப்லியும், அவனது தம்பி ஃபஸ்லியும் கம்ப்யூட்டர் ஹார்டுவேரில் டிப்ளமோவும், ஷாதுலியும், ஃபவுஸினாவும் பி.டெக்கை டிஸ்டிங்சனிலும் (சிறப்பு முதலிடம்) முடித்தனர். ஆனால் தற்போது எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் மதிப்பான வாழ்க்கையை யாசகம் கேட்டு நீதிமன்ற வாசல்களில் ஏறி இறங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது’ அப்துல் கரீம் வருத்தத்துடன் கூறுகிறார்.
பீதிவயப்பட்ட நாட்கள்
2006 ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி அப்துல்கரீமின் வாழ்க்கையில் கறுப்பு அத்தியாமாக மாறியது. நினைவுக்கூற விரும்பாத அனுபவங்களை நன்கொடையாக அளித்த மாதம். அன்று எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பானாயிகுளம் என்ற இடத்தில் இளைஞர்களின் குழு ஒன்று பகிரங்கமாக நோட்டீஸ் விநியோகித்து சுதந்திர தின போராளிகளை நினைவுக்கூர்ந்த நிகழ்ச்சி ஊடகங்கள் மற்றும் அரசின் தலையீட்டால் மிகவும் பிரசித்திப்பெற்றது.
இந்த நினைவு நிகழ்ச்சியில் முன்னாள் சிமி உறுப்பினர்களும் கலந்துக் கொண்டதால் அதனை தடை செய்யப்பட்ட இயக்கத்தின் ரகசிய கூட்டமாக ஊடகங்கள் சித்தரித்தன. தேசிய பத்திரிகைகள் என கூறிக்கொள்ளும் பத்திரிகைகளும், சேனல்களும் எவ்வித உண்மையை கண்டறியும் விசாரணையும் மேற்கொள்ளாமல் கற்பனை கதைகளை எழுதி மலையாளிகளை பீதியின் முள்முனையில் நிறுத்தினர். கேரள பொது சமூகத்தின் உள்ளங்களில் பீதியை உருவாக்கி சமூக பிரிவினையை உருவாக்கியதில் இத்தகைய ஊடக செய்திகள் காரணாமாகின.
‘தீவிரவாதத்தின் அவமானத்தை சுமக்கும் பல்வேறு நபர்களையும், குடும்பத்தினரையும் உருவாக்கிய ஊடக-அரசு பயங்கரவாதம் பானாயிக்குளம் சம்பவத்தை கருவாக்கி தீயை மூட்டியது’ என அப்துல்கரீம் கூறுகிறார்.
மகன்கள் குஜராத் சிறையில்
’பானாயிகுளம் சம்பவத்தில் இளையமகன் ஷாதுலியும், மகள் ஃபவுஸினாவின் கணவர் ராஸிக்கும் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டதை தொடர்ந்து தேசத்துரோகிகள் மற்றும் தீவிரவாதிகளின் தந்தையாக நான் முத்திரைக்குத்தப்பட்டேன். எனது ஐந்து பிள்ளைகளில் இரண்டு பேர் மீதும் மருமகன் மீதும் தேசத்துரோகம், தீவிரவாதம் உள்பட ஏராளமான வழக்குகள் சுமத்தப்பட்டுள்ளன.
இப்பொழுது எனது மூத்தமகன் ஷிப்லியும், இளையமகன் ஷாதுலியும் குஜராத் மாநிலம் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிமி தொடர்பு எனக்குற்றம் சாட்டி 2008 மார்ச் மாதம் 26-ஆம் தேதி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர். இப்பொழுது ஐந்து மாநிலங்களில் நடந்த ஏராளமான வழக்குகளில் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்களின் கைதிற்கு பிறகு 2008 ஜூலை 26-ஆம் தேதி நடந்த குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கிலும் அவர்களை குற்றவாளிகளாக சேர்த்தனர்.
சிறுவயதில் ஷாதுலியை திருக்குர்ஆனை படிக்க கூறும் பொழுது தயங்கும் அவன் சகோதரர்களுடன் சேர்ந்து சிமியில் பணியாற்ற துவங்கிய பொழுது எவரும் நிர்பந்திக்காமலேயே திருக்குர்ஆன் ஓதுவதையும், சமூக பணிகளில் பங்கேற்பதையும் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தது நான் தான்.’ அப்துல் கரீம் கூறுகிறார்.
ஒரு தொலைபேசி எண்ணின் பெயரால்…
மூத்த மகன் ஷிப்லி படிப்பை முடித்த பிறகு முதலில் திருவனந்தபுரத்திலும், பின்னர் பெங்களூர், மும்பை ஆகிய இடங்களில் கம்ப்யூட்டர் ஸாஃப்ட்வெயர் நிறுவனமான டாட்டா எலக்ஸியில் பணியாற்றினான். மீண்டும் பெங்களூருக்கு மாற்றலாகி வேலையில் தொடரவே தனிப்பட்ட காரணத்திற்காக மும்பைக்கு சென்றுள்ளான். 2006 ஜூலை 11 ஆம் தேதி மும்பையில் சிட்டி சர்வீஸ் நடத்தும் ஸபர்மன் ரெயில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
குண்டுவெடிப்பு தொடர்பாக அன்றைய மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ரகுவன்ஷியும், குழுவினரும் முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தனர்.(கொல்லப்பட்ட நேர்மையான அதிகாரி ஹேமந்த் கர்கரே நடத்திய விசாரணையில் ஷிப்லி குற்றவாளி இல்லை என நிரூபணமாகி வழக்கு பதிவு செய்யாமல் ஷிப்லி விடுவிக்கப்பட்டார்). வீட்டில் தந்தையின் தாயார் தீவிரமாக நோய்வாய்ப்பட்டுள்ளார். குண்டுவெடிப்பு நிகழ்ந்த அன்று ’மும்பையில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததால் ரெயில்கள் ஓடவில்லை. ஆதலால் வர இயலவில்லை’ என குடும்பத்தினருக்கு தெரிவித்தார்.
இரண்டு தினங்கள் கழித்து ரெயில் போக்குவரத்து சீரான பொழுது ஊருக்கு வந்து வீட்டில் தந்தையின் தாயாரை சந்தித்துவிட்டு திரும்பி சென்றான். பின்னர் சில தினங்கள் கழித்து மகனை தேடி மஹராஷ்ட்ரா போலீஸார் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் ஷிப்லியை தேடி அவன் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு சென்றதால் அங்கு அவனது பணி பறிபோனது. குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிமி உறுப்பினரிடமிருந்து ஷிப்லியின் மொபைல் நம்பர் கைப்பற்றப்பட்டது தான் அவனை கைது செய்ய காரணமாகும்-அப்துல் கரீம் கூறுகிறார்.
’செய்யாத குற்றத்திற்கு மீண்டும் குற்றவாளியாக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால் அவனை வீட்டிலிருந்து வேறு இடத்திற்கு செல்ல கூறினோம். தாயார் நோய் தீவிரமடைந்து மரணமடைந்தார். இவ்வேளையில் பானாயிகுளம் சம்பவத்தின் பெயரால் இளைய மகனையும், மருமகனையும் போலீஸ் கைது செய்தது. இந்நாட்களில் ஊடகங்கள் கற்பனைகதைகளை பரப்பி கொண்டாடின.’-அப்துல் கரீம் வேதனையுடன் நினைவுக்கூறுகிறார்.
கற்பனையில் வரைந்த கட்டுக்கதைகள்
இந்நிலையில் நிற்கதியற்று குரல் எழுப்பும் இந்த குடும்பத்தின் துயரத்தை எவரும் காண தயாராகவில்லை. பிள்ளைகளின் ஜாமீனுக்காக நீதிமன்ற படிகளை தனித்தே ஏறி இறங்கினார் அப்துல்கரீம். பிள்ளைகளுக்கு ஜாமீன் கிடைக்காத பொழுது உயர்நீதிமன்றத்தில் கதறி அழுதுள்ளார் இந்த ஆசிரியர். ஊடகத்தில் வெளியான செய்திகளையும், போலீசின் பரப்புரைகளையும் கேட்டு ’நன்றாக படித்த இந்த பிள்ளைகளுக்கு இது தேவையா?” என குத்தல் வார்த்தைகளை கூறியும், செய்த உறவினர்களுக்கும், ஊர்வாசிகளுக்கும் கோபத்துடன் ஒருபோதும் அப்துல்கரீம் பதிலளிக்கவில்லை. இறுதியாக 60 தினங்கள் கழிந்த பிறகு உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது.
ஜாமீன் கிடைத்து வெளியே வந்த போது புதிய கதைகளை பத்திரிகைகள் கட்டவிழ்த்துவிட்டன. அதில் மிகவும் வேதனையை அளித்த செய்தி என்னவெனில், ஷிப்லி பணியில் இருந்த வேளையில் துவங்கிய வீட்டுப்பணி தீவிரவாத குற்றச்சாட்டை தொடர்ந்து அவனது வேலை பறிக்கப்பட்டவுடன் முடங்கிவிட்டது. அவ்வேளையில் ’ஷிப்லி ஹெலிகாப்டரை இறக்குவதற்கு வசதியாக மாளிகையை கட்டுவதாக உள்ளூர் செய்தியாளர் ஒருவர் கேரளகவுமுதி என்ற பத்திரிகையில் எழுதினார். இந்த புரட்டையும் அப்துல் கரீம் வாசிக்க நேர்ந்தது.
வேலை விஷயமாக இந்தூருக்கு சென்ற ஷிப்லியை காண ஷாதுலி சென்றான். 2008 மார்ச் 23-ஆம் தேதி ஒருவாரத்திற்கு பிறகு போலீஸ் வீட்டில் ரெய்டுக்கு வந்த பிறகு தான் தெரியும் எனது மகன்களை போலீஸ் கைது செய்த விபரம். இந்த விபரத்தை அதிகாரப்பூர்வமாக பெற்றோரையும், ஷிப்லியின் மனைவி நஜீபாவிடமும் தெரிவிக்க போலீஸ் பத்திரிகையாளர்கள் புடைசூழ வருகை தந்தனர். இந்தூரில் இருந்து கைது செய்த பிறகு நடந்த குண்டு வெடிப்புகள் உட்பட பல்வேறு வழக்குகளில் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.-அப்துல் கரீம் கூறுகிறார்.
கொடூரமான கொடுமைகள்
விசாரணை கைதிகளாக சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களின் வழக்குகள் ஆமை வேகத்தில் நகர்கின்றன. குஜராத் அரசிடம் இவர்களை ஒப்படைத்தபிறகு கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்கள். பல நாட்கள் தூங்கவிடாமல் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள் என தந்தை அப்துல் கரீம் கூறுகிறார். இதற்கு தலைமை வகித்த ஐ.பி.எஸ் அதிகாரி சுதசாமா சொஹ்ரபுதீன் போலி என்கவுண்டர் கொலை வழக்கில் தற்பொழுது இதே சிறையில் விசாரணை கைதியாக உள்ளார்.
தனது மகன்கள் மீதான வழக்குகளை குஜராத்திற்கு வெளியே கொண்டுவரும் முயற்சியில் தற்போது இந்த தந்தை முயன்றுவருகிறார். ’குஜராத் ஸே முஸல்மான கோயி இன்ஸாப் நஹீ மிலேகா’ (குஜராத்தில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்காது) என வழக்கை வாதாடும் குஜராத் மாநிலத்தைஸ் சார்ந்த மூத்த வழக்கறிஞர் கே.எம்.முன்ஷி கூறியதை நினைவுக்கூறுகிறார் அப்துல் கரீம்.
நமது நாட்டின் சட்டங்களை இயற்றியவர்கள் நிரபராதிகள் ஒருபோதும் தண்டிக்கப்படக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். ஆனால், ஏராளமான நிரபராதிகளை வேட்டையாடி அவர்களின் மானத்தையும், ஆயுளையும் நசிக்கஸ் செய்து இறுதியில் நீதிமன்றம் குற்றவாளிகள் அல்லர் எனக்கூறி விடுதலை செய்த அண்மைக்கால சம்பவங்களை அப்துல் கரீம் நினைவுக் கூர்ந்தார்.
உள்ளத்தில் ஒதுக்கியுள்ள வேதனைகளையும், கவலைகளையும் அப்துல் கரீம் அல்லாஹ்விற்கு முன்பு மட்டுமே எடுத்துரைப்பார். குற்றவாளியாக்க காட்டும் அவசரத்தின் நூறில் ஒரு பகுதியை நேர்மையாக இத்தகைய வழக்குகளை விசாரிக்க செலவிடும் துணிச்சலான புலனாய்வு அதிகாரிகள் முன்வரமாட்டார்களா? என எதிர்பார்த்து காத்திருக்கிறார் அப்துல்கரீம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மெளனமாக கதறும் அதே வேளையில் எவ்வித கொடுமையான சூழலிலும் இறைவனின் உதவியை எதிர்பார்க்கும் ஏராளாமான அப்பாவிகளின் சின்னமாக ஆசிரியர் அப்துல் கரீம் நம் முன்னால் தெரிகிறார்.
பேட்டி:எ.எம்.நஜீப்
தமிழில்:அ.செய்யது அலீ.
நன்றி:தேஜஸ்
No comments:
Post a Comment