அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, August 15, 2012

யாருக்கு சுதந்திரம்?



யாருக்கு சுதந்திரம்
66-வது சுதந்திர தினத்தை நமது தேசம் கொண்டாடி முடித்து இருக்கிறது. ஆங்கிலேயர்கள் நமது தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பை விட்டொழித்துவிட்டு சென்ற பிறகு நாம் ஏராளமானவற்றில் முன்னேறியிருக்கிறோம். சாதனைகள் நமது சுதந்திரத்திற்கு புகழ் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. சுதந்திரத்தை விட மதிப்பான வேறெதுவும் இவ்வுலகில் மனிதனுக்கு இல்லை எனலாம்.
“சாரே ஜஹான்சே அச்சாஹ், ஹிந்துஸ்தான் ஹமாரா
ஹம் புல்புலேன் இஸ்கி, ஏ குல்ஸிதான் ஹமாரா…”
“பரந்த உலகில் சிறந்தது எங்கள் இந்தியா
இந்திய பூந்தோட்டத்தின் பறவைகள் நாங்கள்
அதன் மணமும் குணமும் எங்கள் உயிர் மூச்சு…..”
என்ற அல்லாமா இக்பாலின் வரிகளை இன்றும் நாம் வாசிக்கும் பொழுது சுதந்திரத்தின் அழகும், மணமும் நமது உள்ளங்களில் உயிரூட்டும். ஆனால், அந்த சுதந்திரத்தை இன்றைய இந்தியாவில் அனைத்து குடிமக்களும் குறிப்பாக ஏழைகளும், ஒடுக்கப்பட்ட மக்களும் முழுமையாக அனுபவிக்கின்றார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாகவே தொடர்கிறது.
ஏராளமான நிரபராதிகள் இன்று சிறைக் கூடங்களிலேயே தங்களது சுதந்திரத்தை அனுபவிக்கின்றார்கள். ஏன் இவர்கள் வெளியுலகை காணாமல் போனார்கள் என்பது குறித்து நமக்கு நாமே கேள்வி எழுப்ப இந்த சுதந்திர தினம் ஓர் அரிய வாய்ப்பாகும்.
தேசிய அல்லது சர்வதேச தனியார் குத்தகை நிறுவனங்கள் மண்ணிற்கும் மனிதர்களுக்கும் எதிரான தொழிற்சாலைகளை துவக்க வரும்பொழுது அப்பிரதேசத்தில் வாழும் மக்களில் எவரேனும் அதனை எதிர்த்து போராட துணிந்தால் அவர்கள் சிறைக்குள்ளே தள்ளப்படுகின்றார்கள். இவர்களின் மீது சாட்டப்படும் குற்றம், நிறுவனத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள் என்பது அல்ல. மாறாக தேசத்துரோக குற்றம் சுமத்தப்படும். தேசத்துரோக குற்றங்களுக்கு ஜாமீன் கூட கிடைப்பது அபூர்வமாகும்.
சட்டீஷ்கரைச் சார்ந்த ஆசிரியையான சோனிசூரி சட்டவிரோத சுரங்கத் தொழில்களை எதிர்த்ததன் விளைவு தேசத்துரோகம் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்து அனுப்பிய கடிதத்தில் சோனி, தனக்கு நேர்ந்த கொடூரங்களை விவரிக்கிறார். கடிதத்தின் சில பகுதிகளை இங்கு காணலாம்: “இது நான் மட்டும் அனுபவிக்கும் கொடுமை அல்ல. என்னைப்போல சித்திரவதைகளை அனுபவிக்கும் ஏராளமான பெண்கள் இச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பலரும் வேட்டையாடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள். பொய் வழக்குகளில் சிக்கவைத்து குற்றவாளியாக மாற்றப்பட்டவர்கள். இதற்கு எதிராக போராட துணிச்சல் இல்லை என்று மருகி நிற்கின்றார்கள். அவர்களுக்கு உதவ அவர்களுடைய உறவினர்கள் கூட தயாராகவில்லை. வேதனை மிகுந்த அவர்களின் கண்ணீர் கதைகளை கேட்கும் வேளையில் எனக்கு நேர்ந்த கொடுமைகள் சாதாரணம் என்று தோன்றும். நீங்கள் இந்த அபலை பெண்களுக்காக ஏதேனும் செய்தே தீரவேண்டும். இப்போராட்டம் அனைவருக்குமாகும்.”
உச்சநீதிமன்ற வழக்கறிஞருக்கு அனுப்பிய கடிதத்தில் சோனி இவ்வாறு கூறுகிறார்: “சிறையில் அவர்கள் எனக்கு மின்சார ஷாக் கொடுத்தனர். எனது ஆடைகளை அவிழ்த்தனர். நிர்வாணமாக்கப்பட்ட உடலை பார்த்து போலீஸ் சூப்பிரண்ட் ஆபாசமான வார்த்தைகளால் திட்டினார். அவர் சென்ற பின்னர் இதர மூன்று பேர் என்னை கொடுமைக்கு ஆளாக்கினர். கடுமையான வேதனையால் நான் மயக்கமுற்று வீழ்ந்தேன்.”
2011 அக்டோபர் எட்டாம் தேதி இரவு இந்த கொடுமை அரங்கேறியுள்ளது. சோனியின் அந்தரங்க உறுப்புகளில் லத்தியும், உருளை கற்களையும் செருகி தங்களது வெறியை சில காக்கி உடை அணிந்த காலிகள் தணித்துள்ளனர். என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி பரிசோதனை அறிக்கைகளில் இந்த கொடுமை உறுதிச்செய்யப்பட்டது. சோனியின் உடலின் உள் பகுதியில் இருந்து மூன்று கற்கள் கண்டுபிடிக்கப்பட்ட அகற்றப்பட்டன. முதுகெலும்பிற்கு முறிவு ஏற்பட்டுள்ளது. இவ்வளவு கொடூரங்கள் அரங்கேறிய பிறகும் போலீஸ் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்கு மாறாக போலீஸ் சூப்பிரண்டிற்கு தீரச்செயலுக்கான குடியரசு தலைவரின் கேலண்ட்ரி விருதை வழங்கி கெளரவிக்கவும் சட்டம்-ஒழுங்கை பேணி பாதுகாக்கும் அரசு தயங்கவில்லை.
மனிதர்களையும் இயற்கையையும் கொள்ளையடிக்கும் குத்தகை நிறுவனங்களை எதிர்த்தால் அது தேச துரோக குற்றம் என்றால் தேசம் என்றாலே குத்தகை நிறுவனங்கள்தாம் என்ற கொள்கையைத்தான் ஆட்சியாளர்கள் அங்கீகரிக்கின்றார்கள். அவ்வாறெனில் சுதந்திரம் என்றால் மக்களுக்கு எதிரான குத்தகை நிறுவனங்களின் சுதந்திரம் என்பது ஆட்சியாளர்களின் அகராதியில் திருத்தி எழுதப்பட்டுள்ளது போலும்.
பிரிட்டீஷார் இந்தியர்களை அடக்கி ஒடுக்க பிரயோகித்த அதே கறுப்புச் சட்டங்கள்தாம் சுதந்திர இந்தியாவில் இந்திய மண்ணின் மைந்தர்களை ஒடுக்க பிரயோகிக்கப்படுகிறது. பிரிட்டீஷார் காந்தியடிகளை தேசத்துரோக குற்றம் சுமத்தி தண்டித்த அதேச் சட்டத்தின் மறு பதிப்பை பிரயோகித்துதான் டாக்டர்.பினாயக் சென் என்ற வெகுஜன மக்களின் ஆதரவு பெற்ற மருத்துவரை அரசு சிறையில் அடைத்தது.
அவ்வாறெனில் பிரிட்டீஷாரிடமிருந்து யாருக்கு சுதந்திரம் கிடைத்தது என்பது குறித்து இந்திய குடிமக்களாகிய நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
தலித்துகளிலும், பழங்குடியின மக்களிலும், சிறுபான்மை முஸ்லிம்களிலும் எத்தனையோ நிரபராதிகள் கறுப்புச் சட்டங்களில் சிக்கவைக்கப்பட்டு சிறைக்குள் தங்கள் வாழ்க்கையை இழந்து வருகின்றார்கள். மணிப்பூரில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் ராணுவத்தால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். எனினும், ராணுவத்தினர் சில பிரதேசங்களில் பெண்களுக்கு எதிராக கொடுமைகளை இழைக்க ஏதுவாக ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. AFSPA(The Armed Forces (Special Powers) Act) என்ற சட்டத்தின் யதார்த்தம் இதுதான்.
மனோரமா தேவியையும், இரோம் ஷர்மிளாவையும் மறந்துவிட்டு நாம் சுதந்திரத்தின் சுவையை அனுபவிக்க முடியுமா?
கறுப்புச் சட்டங்களை வாபஸ் பெற்றால் மட்டுமே நம்மால் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.
அண்மையில் சானல்-4 தொலைக்காட்சி அலைவரிசையில் ஒரு மணி நேரம் ஒளிபரப்பான ‘கஷ்மீர் டார்ச்சர் டிரெயில்’ என்ற ஆவணப்படம் ராணுவக் குற்றங்களை ஓரளவு வெளிச்சம் போட்டு காட்டியது. 1989 -2009 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்திய ராணுவ மற்றும் துணை ராணுவப் படையினரால் படுகொலை செய்யப்பட்டு அடையாளம் காணப்படாமல் புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டி எடுத்து, ஆய்வு செய்து காஷ்மீர் மீதான சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தினரால் வெளிக்கொணரப்பட்ட “புதைக்கப்பட்ட சாட்சியங்கள்” என்ற ஆய்வு அறிக்கை கஷ்மீரில் நடக்கும் கொடூரங்களை நமக்கு எடுத்தியம்புகின்றது.
ஏகாதிபத்தியம் பரப்புரைச் செய்த இஸ்லாமாஃபோபியா இந்தியாவிலும் ஒரு தேசிய நோயாக பரவி வருகிறது. பீகாரைச் சார்ந்த ஃபஸீஹ் மஹ்மூத் என்ற முஸ்லிம் இளம் பொறியாளர் குறித்து உச்சநீதிமன்றமே பல முறை கேள்வி எழுப்பிய பிறகும் மத்திய அரசால் இதுவரை முறையான பதிலை அளிக்க இயலவில்லை. சவூதியில் இருந்து கைது செய்யப்பட்ட ஃபஸீஹ், இந்திய அதிகாரிகளின் கஸ்டடியில் தான் உள்ளார் என்று அவரது மனைவி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வ சிறைச்சாலைகளை தவிர ரகசியமான பயங்கர சிறைக் கொட்டகைகளும், சித்திரவதை கூடங்களும் நாட்டில் இயங்குகிறது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
ஏற்கனவே  மும்பை, டெல்லி, கொல்கொத்தா, காஷ்மீர், குஜராத் ஆகிய இடங்களில் குவாண்டனமோவை ஒத்த சுமார் 15 சட்ட விரோத சிறைச்சாலைகள் செயல்பட்டு வருவதாக தி வீக் பத்திரிக்கை அதிர்ச்சியளிக்கும் அறிக்கையினை வெளியிட்டிருந்தது. பீகாரைச் சார்ந்த முஸ்லிம் இளைஞர் முஹம்மது கத்தீல் சித்தீகி புனே எரவாடா சிறையில் வைத்துதான் அநியாயமாக கொலைச் செய்யப்பட்டார்.
சுதந்திரப் போராட்டத்தின் வாயிலாக இந்தியாவை விட்டு நம்மால் விரட்டப்பட்ட பிரிட்டீஷாரின் கொடிய சந்ததியான இஸ்ரேலுக்கு எதிராக கட்டுரை எழுதியதற்காக, இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர் செய்யத் முஹம்மது அஹ்மத் காஸ்மி ஜாமீன் கூட மறுக்கப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளார்.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு 9 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட  ஒரு கால் ஊனமுற்ற அப்துல் நாஸர் மஃதனியை அதிகார பாசிச கும்பல்கள் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் மீண்டும் சிறைக்குள் தள்ளியுள்ளன.
நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு ஒரு கண்ணின் பார்வையை இழந்த பிறகு இந்தியாவி உச்சநீதிமன்றம் கூட ஜாமீன் அளிக்க மறுத்து வருகிறது.
1990 க்குப் பிறகு எவ்வித முகாந்திரமும் இல்லாமல் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் போலியான பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் கூட வெளியே விடாமல் இந்தியா முழுவதும் உள்ள பல சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் மஹாராஷ்டிர மாநில சிறைச்சாலைகளில் ஆய்வு செய்த (TISS – டாட்டா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோசியல் சயின்ஸ்) என்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி மஹாராஷ்டிர மாநிலத்தின் சிறையில் உள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் அப்பாவிகளாவார்கள் என்ற அறிக்கை இதற்கு ஒரு உதாரணமாகும்.
ஆகவே, அநியாய சிறைகளுக்கும், கறுப்புச் சட்டங்களுக்கும் எதிரான தொடர் போராட்டங்களே நாம் பெற்ற சுதந்திரத்தை அர்த்தமுடையதாக மாற்றும்.

No comments: