புதுடெல்லி:ஜனநாயக அமைப்புகள் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், பாராளுமன்றம்தான் தேச மக்களின் ஆன்மா என்றும் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தனது சுதந்திர தின செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்திய நாட்டின் 66-வது சுதந்திர தினத்தையொட்டி குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது: ஊழலுக்கு எதிராகக் கோபம் கொள்வதும், போராட்டம் நடத்துவதும் நியாயமானதுதான்.
ஆனால், இந்தப் போராட்டங்களின் போது சில சமயங்களில் மக்கள் தங்கள் பொறுமையை இழந்து விடுகின்றனர். ஆனால், அதற்காக ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த ஜனநாயக அமைப்புகள்தான் அரசியலமைப்புச் சட்டத்தின் தூண்களாக உள்ளன. அதில் கீறல் ஏற்பட்டால் நமது அரசமைப்புக் கோட்பாட்டை நிலைநிறுத்த முடியாது. அவை தான் மக்களுக்கும், கொள்கைகளுக்கும் இடையே பாலமாக இருக்கிறது.
நமது பாராளுமன்ற அமைப்புகள்தான் ஜனநாயகத்தின் தூண்களாக இருந்து வருகின்றன. இவற்றின் செயல்பாட்டில் சற்று தொய்வு ஏற்பட்டிருக்கலாம். அவற்றில் விரிசல் ஏற்பட்டால் ஜனநாயக மரபுகளை கட்டிக்காக்க முடியாது. எனவே அவற்றை வலுவானதாக மாற்றுவதே சரியானத் தீர்வாக இருக்கும்.
ஜனநாயக அமைப்புகள் நமது சுதந்திரத்தின் பாதுகாவலர்கள் என்பதை உணர வேண்டும்.
பாராளுமன்றத்திடமிருந்து சட்டமியற்றும் அதிகாரத்தையும், நீதிமன்றங்களின் நீதி வழங்கும் அதிகாரத்தையும் யாரும் பறித்துவிட முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
அதிகாரம் பெற்றவர்கள் சர்வாதிகாரிகளாக மாறிவிட்டால், ஜனநாயகம் பாதிக்கப்படும்; அதேபோல, போராட்டங்கள் தொற்றுநோய் போல பரவினால் குழப்பம்தான் ஏற்படும்.
அனைவரும் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளும் நடைமுறைதான் ஜனநாயகம். அதில் வெற்றியோ, தோல்வியோ நம் அனைவருக்கும் பொதுவாகத்தான் இருக்கும்.
நன்னடத்தை, மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளித்தல் ஆகியவை ஜனநாயகத்தின் கீதமாக ஒலிக்க வேண்டும். அதில் சில சமயங்களில் சுருதி சேராமல் போய்விடுகிறது.
எவ்வாறிருந்தாலும், ஜனநாயகத்தின் தீர்ப்பு நாளாக அமைந்துள்ளது தேர்தல்தான். பாராளுமன்றம் என்பது நாட்டு மக்களின் ஆன்மாவாக அமைந்துள்ளது. அதன் உரிமைகளையும், கடமைகளையும் நாம் கேள்விக்குள்ளாக்குவது அபாயமானது.
இந்த விஷயங்களை நான் அறிவுரையாக கூறவில்லை; எனது வேண்டுகோளாகவே தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் நடைமுறைகள் மூலம் நமது குறைகளை தீர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பை ஜனநாயகம் வழங்கியுள்ளது.
அறிவுத் தேடலில் உள்ள இளம் தலைமுறையினருக்கு, அவர்களது திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். அது இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும். இந்திய பொருளாதாரம் தீர்க்கமான நிலையை அடைந்துவிட்டால், அதுவே அடுத்த நிலைக்கு வேகமாக கொண்டு செல்வதற்கான காரணியாக அமைந்துவிடும்.
கல்வி என்பது விதை. அது மரமாக வளர்ந்து பலன் தரும் பழம்தான் பொருளாதாரம். நல்ல கல்வியை அளித்தால், நோய், வறுமை, பசிக்கொடுமை ஆகிய அனைத்தும் நீங்கிவிடும்.
ஏற்கெனவே எனது பதவியேற்புரையில் தெரிவித்தபடி, அனைவருக்கும் அறிவுசார் செல்வம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் இளைஞர்களை தயார்படுத்த வேண்டும்.
இந்தியாவிலிருந்து வறுமை, நோய், பசிக்கொடுமையை அகற்றுவதற்கான இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment