அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, April 13, 2012

கல்வி உரிமைச் சட்டம் – மத்திய அரசு முடிவு சரியே: உச்சநீதிமன்றம்!


right_education11
புதுடெல்லி:மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டம் சரியே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அரசு உதவி பெறாத சிறுபான்மை பள்ளி நிறுவனங்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

மத்திய அரசால் 2009-ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச்சட்டம் தொடர்பாக பல்வேறு தனியார் பள்ளிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி கே.எச். கபாடியா, நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஸ்வதேந்தர் குமார் அடங்கிய பெஞ்ச் கீழ்க்கண்ட தீர்ப்பை வழங்கியது.
“கல்வி உரிமைச் சட்டம் அரசு உதவி பெறாத சிறுபான்மையினர் பள்ளிகளைத் தவிர மற்ற அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சட்டம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு எதிர்காலத்துக்காக அளிக்கப்பட்டது. அதை பின்னோக்கி அமல்படுத்த வேண்டும் எனக் கருதக் கூடாது. சட்டம் இயற்றியது முதல் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கைக்கு இந்த தீர்ப்பு பொருந்தாது. வியாழக்கிழமை (ஏப்ரல் 12) முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வருகிறது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பில், தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியாவும் ஸ்வதேந்தர் குமாரும் அரசு உதவி பெறாத சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு இச் சட்டம் பொருந்தாது என்று குறிப்பிட்டனர். மற்றொரு நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன், “எந்தப் பள்ளிப் பிரிவுகளுக்கும் விதிவிலக்கு அளிக்கக் கூடாது. அனைத்து அரசு, தனியார், சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்” என்று கூறினார்.
இதையடுத்து மூன்றில் இரண்டு நீதிபதிகள் ஆமோதித்த தீர்ப்பை இறுதிப்படுத்தி நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
முன்னதாக, 2009-ம் ஆண்டு நடைபெற்ற மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில், கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. அரசியலமைப்பின் 21(ஏ) விதியின்படி இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி 6 முதல் 14 வயது வரையிலான மாணவர்களுக்கு அனைத்து மாநில அரசுகளும் இலவச, கட்டாயக் கல்வி அளிக்க வகை செய்யப்பட்டது.
இந்த சட்டத்தை எதிர்த்து ராஜஸ்தானில் உள்ள அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தனியார் பள்ளிகளின் சங்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
மனுவில், அரசுத் தலையீடின்றி சுயாட்சியுடன் பள்ளிகள் நடத்த தனியாருக்கு உரிமை வழங்கும் அரசியலமைப்பின் 19(1)(ஜி) சட்டப்பிரிவை மத்திய அரசின் சட்டம் மீறும் வகையில் இருக்கிறது என்று தனியார் பள்ளிகள் குறிப்பிட்டிருந்தன.
மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தினால், பள்ளிகளில் சேர வரும் மாணவர்களுக்கு கட்டாயமாக அனுமதியும் இலவசமாகக் கல்வியும் புகட்ட வேண்டிய நெருக்கடிக்கு தனியார் பள்ளிகள் தள்ளப்பட்டுள்ளன என்றும் அவை முறையிட்டன.
பல மாதங்களாக உச்ச நீதிமன்றத்தில் நீடித்து வந்த இந்த வழக்கில், மத்திய அரசு சில வாதங்களை முன்வைத்தது.
அரசின் நடவடிக்கையில் தவறில்லை: “சமூக, பொருளாதார ரீதியாக நலிவடைந்த வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் பலன் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தகுதிக்கும் திறமைக்கும் வித்தியாசம் உள்ளது. பலவிதமான சூழ்நிலையில் இருந்து பள்ளிக்கல்வி கற்க வரும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சமமான நிலையான கல்வி கிடைக்க வேண்டும். அதை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையில் எந்தத் தவறும் இல்லை” என்று மத்திய அரசு கூறியது.
இத்தீர்ப்பு குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறுகையில்: “கல்வி உரிமைச் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

2 comments:

Anonymous said...

Hello,
I m Really looking forward to read more. Your site is very helpful for us .. This is one of the awesome post i got the best information through your site and Visit also this site
worldfree4u
Really many thanks


Ayush Srivastava said...

Thanks for sharing such an interesting piece of blog post I admire the way of presentation.
Thanks,
Tamilrockers