சென்னை, அக்.6-
பாரதீய ஜனதா கட்சியின் அகிலஇந்திய செயலாளராக இருப்பவர் திருநாவுக்கரசர். டெல்லி மேல்-சபை எம்.பி. ஆக பதவி வகித்து வருகிறார். புதுச்சேரி உள்பட 3 மாநிலங்களுக்கு பா.ஜனதாவின் மேலிட பார்வை யாளராகவும் இருக்கிறார். வாஜ்பாய் மந்திரி சபையில் இணை மந்திரியாக இருந்தார்.
சமீப காலமாக திருநாவுக்கரசர் கட்சியின் செயல் பாடுகளில் பங்கேற்காமல் விலகி இருக்கிறார். பா.ஜனதா மாநில நிர்வாகிகள் கூட்டம், மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இவரது ஆதரவாளர்களும் கட்சியை புறக்கணித்து வருகிறார்கள்.
தற்போது பா.ஜனதாவின் அடிப்படை உறுப்பினர்கள், தீவிர உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. பா.ஜனதாவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்கள் உறுப்பினர் சேர்க்கையை புதுப்பித்துக்கொண்டால்தான் கட்சியில் நீடிக்க முடியும்.
பா.ஜனதாவின் தீவிர உறுப்பினர் சேர்க்கையை புதுப்பிக்கும் காலக்கெடு செப்டம்பர் மாதம் 30-ந் தேதியுடன் முடிவடைந்து விட்டது. ஆனால் திருநாவுக்கரசர் தனது உறுப்பினர் சேர்க்கையை இதுவரை புதுப்பிக்கவில்லை.
திருநாவுக்கரசரின் ஆதரவாளரான புதுக்கோட்டை மாவட்ட பா.ஜனதா தலைவர் முருகேசன் உள்பட 16 பேர் கடசியின் தீவிர உறுப்பினர் சேர்க்கையை புதுப்பிக்கவில்லை எனவே பா.ஜனதாவின் மாநில செயற்குழுவில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க. தலைவர் முருகேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் துரை. திவ்யநாதன், மாநில செயலாளர் சுந்தர்ராஜன், மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மாதப்பன் மற்றும் வீரண்ணசாமி, பண்ணைவயல் தியாகராஜன் உள்பட 16 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
திருநாவுக்கரசர் அகில இந்திய செயலாளராக இருப்பதால் அவரை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் மாநில கட்சிக்கு இல்லை. அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.
எனவே திருநாவுக்கரசரை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து கட்சி மேலிடம் முடிவு எடுக்க வேண்டும் என்று மாநில செயற்குழு கட்சி மேலிடத்துக்கு பரிந்துரை செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
ஏற்கனவே திருநாவுக்கரசர் கட்சி உறுப்பினர் சேர்க்கையை புதுப்பிக்கவில்லை. அவரது ஆதரவாளர்களை தமிழக பா.ஜனதா கட்சியை விட்டு நீக்கிவிட்டது. எனவே திருநாவுக்கரசரை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து கட்சி மேலிடம் பரிசீலித்து வருகிறது. விரைவில் நீக்கப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment