அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, October 23, 2010

மத மோதலுக்கு வித்திடுகிறதா மசூதி ஒலி பெருக்கி?

பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து நடைபெற்ற மும்பை கலவரத்திற்கு பின்னர் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவதை ஓரளவு குறைத்துக் கொண்டிருந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே, கடந்த சில தினங்களாக இஸ்லாமியர்களை சீண்டத் தொடங்கியுள்ளார்.

கடந்த வாரம் மும்பை நகரிலுள்ள சாந்தாகுரூஸ் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மாநகராட்சி மருத்துவமனை ஒன்றில், இரண்டரை மாத ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்டது. இது குறித்து குழந்தையை பறிகொடுத்த பெண்,காவல்துறையில் அளித்த புகாரில், பர்தா அணிந்த பெண் ஒருவர்தான் தனது குழந்தையை கடத்திச் சென்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாராம்.

இது குறித்து செய்தி வெளியானதுமே,அதனை வகையாக பிடித்துக்கொண்டார் தாக்கரே.

இது தொடர்பாக தனது கட்சி பத்திரிகையான "சாம்னா" வில், "குழந்தையை திருடுவதற்கு பர்தா பயன்படுத்தப்படுகிறது எனில் சட்டப்படி அதைத் தடை செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் "பர்தா" வையும், உடல் முழுவதையும் மறைக்கும் வகையிலான ஆடைகளையும் தடை செய்துள்ள பிரான்ஸ் அரசை வெகுவாக பாராட்டியிருந்த தாக்கரே,பர்தாவை தடைசெய்து ஒரு புரட்சிகரமான நடவடிக்கையை பிரான்ஸ் அதிபர் சர்கோஸி எடுத்துள்ளதாகவும் புகழாராம் சூட்டியிருந்தார்.

பால் தாக்கரேவின் இந்த கருத்து மற்ற பத்திரிகைகளிலும் வெளியாக மும்பை இஸ்லாமியர்களிடையே இலேசாக முணுமுணுப்பு கிளம்பத் தொடங்கியது.

இங்கு ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். மும்பை கலவரத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டதால், அதற்கு பின்னர் மும்பையில் வசிக்கும் இஸ்லாமியர்களும் சரி, இந்துக்களுக்கும் சரி, கலவரத்திற்கு பிறகு நடந்த எத்தனையோ - 2008 ல் நடந்த தாக்குதல் உள்பட - குண்டுவெடிப்புகளுக்கு பின்னரும் உணர்ச்சிவசப்படாமல் மிக பக்குவமாக பிரச்சனையை அணுகி, மிகுந்த மன முதிர்ச்சியுடன் நடந்துகொண்டனர்.

அத்துடன் தாக்கரே போன்றவர்களும் அடக்கியே வாசித்தனர்.அதிலும் சமீபத்தில் அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் அலாகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்னர், ஒட்டுமொத்த இந்தியாவுமே ஒருவித பதற்றத்தில் இருந்தது என்றால்,மும்பையில் அந்த பதற்றம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. "மீண்டும் ஒரு கலவரத்தை மும்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டு விடுமோ? " என்ற கவலை இருதரப்பு சமூக தலைவர்களிடமுமே குடிகொண்டிருந்தது.

ஆனால் தீர்ப்பு வெளியான பின்னர் அப்படியான ஒரு சம்பவம் ஏதும் நடந்துவிடாமல் மும்பைவாசிகள் மிக கவனத்துடன் நடந்துகொண்டது,ஒட்டுமொத்த இந்தியாவையுமே மூக்கின் மேல் விரலை வைக்க வைத்தது.

இப்படியான ஒரு சூழ்நிலையில்தான் மீண்டும் திரி கொளுத்த தொடங்கியுள்ளார் தாக்கரே. கடந்த சில வருடங்களாக பாலிவுட் "கான்" நடிகர்களின் பாகிஸ்தான் பற்று குறித்து மட்டும் காட்டம் காட்டி வந்த அவர்,இப்போது நேரடியாகவே இஸ்லாமிய சமூகத்தினர் பின்பற்றும் சில மதச் சம்பிரதாயங்கள் பொது பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது என்று பந்தம் கொளுத்தியுள்ளார்.

கடந்த வாரம் இஸ்லாமிய பெண்கள் அணியும் "பர்தா" உடைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று திருவாய் மலர்ந்திருந்த நிலையில், தற்போது மசூதிகளின் மேல் கட்டப்பட்டிருக்கும் ஒலி பெருக்கிகளால் அக்கம் பக்கம் வசிப்பவர்களுக்கு, குறிப்பாக வீட்டில் பாடம் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு, மிகுந்த இடைஞ்சல் ஏற்படுவதாகவும், ஆனால் காவல் துறை அவர்கள் மீது வழக்கு ஏதும் போடாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தனது "சாம்னா" பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், அண்மையில் மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் நடந்த சிவசேனாவின் தசரா பொதுக்கூட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஒலி பெருக்கிகளில் இருந்து வெளியான ஒலி,நிர்ணயிக்கப்பட்ட டெசிபல் அளவைவிட கூடுதலாக இருந்ததாக வழக்குப் பதிவு செய்த காவல்துறைக்கு, மும்பை நகரில் உள்ள ஆசாத் மைதானம், பெண்டி பஜார் மற்றும் பெரம்பாடா போன்ற இடங்களில் உள்ள மசூதிகளில் கட்டப்பட்டிருக்கும் ஒலி பெருக்கிகளிலிருந்து வெளியாகும் அதிக அளவு சப்தத்தினால், அப்பகுதிகளில் வசிக்கும் இதர சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இரவில் தூங்க முடியாமல் தொல்லை ஏற்படுவதையும், குழந்தைகள் பாடம் படிக்க முடியாமல் அவதிப்படுவதையும் அறியமுடியவில்லையா?

அந்த ஒலி பெருக்கிகளை கட்டிய மசூதி நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தாதர் சிவாஜி பார்க்கில் நடைபெற்ற தசரா பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கும் முன்னர், ஒலி பெருக்கியின் சப்தம் மும்பை உயர் நீதிமன்றம் வரையறுத்த 50 டெசிபல் அளவுக்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்த காவல்துறை.

ஆனால் அன்றைய கூட்டத்தில் ஒலி பெருக்கியிலிருந்து வெளிப்பட்ட சபதத்தின் அளவு 50 டெசிபலை தாண்டியதோடு,சிவசேனாவின் கர்ஜனையை யாராலும் அடக்கவோ அல்லது அமுக்கவோ முடியாது என்று பால் தாக்கரே பகிரங்கமாக சவாலும் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறியதாக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த சிவசேனா நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்தது காவல்துறை.

இதனை தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ள தாக்கரே, "சட்டவிரோதமாக மும்பையில் வந்து குடியேறி இருப்பவர்களது ( பங்காளதேஷ் முஸ்லிம்கள்) மசூதியின் ஒலி பெருக்கியிலிருந்து வெளிவரும் சப்தம் 500 டெசிபலை தாண்டி காதை கிழிக்கிறது. அதனை காவல்துறை வேடிக்கை பார்க்கிறது.

சட்டம் எங்களுக்கும் தெரியும். அதனை யாரும் எங்களுக்கு கற்றுத்தர வேண்டாம்;எங்களது உணர்வுகளை

சட்டம் உணர்ந்துகொண்டால், பின்பு நாங்களும் சட்டத்தை மதிப்போம்" என்று மேலும் காட்டம் காட்டியுள்ளார்.

அதே சமயம் தாக்கரே சுட்டிக்காட்டியுள்ள இந்த மசூதி ஒலி பெருக்கி சப்த பிரச்சனை மும்பையில் மட்டுமல்லாது நாடு முழுவதுமே பரவலாக காணப்படுவதாக குற்றம் சாற்றுகின்றன இந்து அமைப்புகள்.

"
தமிழகத்தில் எடுத்துக்கொண்டால் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காயல்பட்டணம் (தூத்துக்குடி மாவட்டம்) மேலப்பாளையம்(நெல்லை மாவட்டம்), பள்ளப்பட்டி( கரூர்) போன்ற பகுதிகளில் இந்த மசூதி ஒலி பிரச்சனை கண்கூடாக உள்ளது.

அதிலும் மேலப்பாளையத்தில் இந்துக்கள் வசிக்கும் தெருக்களையொட்டி அமைந்துள்ள இஸ்லாமிய தெருக்களின் முனையில் சமீபகாலமாக மசூதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த மசூதிகளிலிருந்து அதிகாலை 3.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை - சமயங்களில் 2 மணி வரை கூட நீளும் - தொழுகைக்கான பாங்கு தொடங்கி பிரசங்கம் வரை ஒலி பெருக்கி மூலமாக வரும் சப்தம்,இந்துக்களுக்கு வெகுவாகவே சிரமத்தை ஏற்படுத்துகின்றன.

தேர்வு காலங்களில் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.வயதானவர்கள், நோயாளிகள் என இந்த ஒலி பெருக்கி சப்தத்தால் பாதிக்கப்படுபவர்கள் அதிகமாக உள்ளனர். இதில் பாதிக்கப்படுபவர்கள் இந்து அல்லது முஸ்லிம் என பாகுபாடெல்லாம் கிடையாது.எல்லோரது வீட்டிலுமே குழந்தைகள், நோயாளிகள், வயதானவர்கள் உள்ளனர்.

ஆண்டாண்டு காலமாக மத நல்லிணக்கம் நிலவும் இங்கு, இப்போது 40 அல்லது 50 வயதுகளில் இருக்கும் பழைய இஸ்லாமிய நண்பர்களிடம், இந்து நண்பர்கள் இது குறித்து தோழமையுடன் குறிப்பிட்டு, இந்த ஒலி பெருக்கி தொல்லைக்கு முடிவு கட்டக்கூடாதா எனக்கேட்டால், "எங்களுக்கும் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் நாங்கள் சொன்னால் அவர்கள் அதனைக் கேட்பவர்களாக இல்லை.

சமீப காலமாக இஸ்லாமியர்களிடையே வெளியில் இருந்து வந்தவர்களால் பல பிரிவுகள் தோன்றிவிட்டன. இவர்கள் வெறித்தனமான அணுகுமுறைகளைக் கொண்டவர்களாக உள்ளனர். இவர்கள்தான் மூலைக்கு மூலை இப்படி புதிய மசூதிகளை கட்டியுள்ளனர். மீறி ஏதும் சொன்னால் எங்களை மத விரோதி போல சித்தரித்துவிடுவார்கள்" என்று வேதனையுடன் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் அவர்கள்.

இறைவனை பிரார்த்திப்பதில் மிக அமைதியான மற்றும் நாகரீகமான முறையைக் கொண்டிருக்கும் மதம் என்ற பெருமையுடைய இஸ்லாம் மதத்தில், இத்தகைய செயல்கள் தொடர்ந்தால், அது பல தாக்கரேக்கள் உருவாக வழி வகுத்துவிடுமே என்பதுதான் சமூக நல்லிணக்கவாதிகளின் கவலை!

No comments: