அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, March 1, 2012

தேனிலவுக்கு அழைத்துவந்து மனைவியைக் கொன்ற கணவன் தப்பியோட்டம்

Honeymoon trip ended as a tragedyதேனிலவைக் கழிப்பதற்காகத் தன் மனைவியை கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஹோட்டலுக்கு அழைத்துவந்த கணவன், அவரது கழுத்தைவெட்டிக் கொடூரமாகக் கொலைசெய்துவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி இப்படுகொலை இடம்பெற்றிருந்த நிலையில், நேற்று முன்தினம் (28.02.2012) மாலையில் மணப்பெண்ணின் சடலம் காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சுதர்ஷனி ஷகிலா கனகசபை (47 வயது) கடந்த 19 ஆம் திகதி கொள்ளுப்பிட்டியைச் சேர்ந்த  ஒருவரை மறுமணம் செய்துள்ளார். திருமணத்தின்பின் தேனிலவைக் கொண்டாடும் நோக்கில் கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இருவரும் அறையெடுத்துத் தங்கியுள்ளனர். 

நீண்டகாலம் இங்கிலாந்தில் வசித்துவந்த இப்பெண்மணிக்கு முதல் திருமணத்தின் மூலம் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். தன்னுடைய முதல் கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்ற இவர் இதற்கு முன்னரும் இலங்கைக்கு வந்திருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கொள்ளுப்பிட்டியைச் சேர்ந்த ஒருவரை மறுமணமுடித்த இப்பெண்மணி, மேற்படி ஹோட்டலுக்கு தன் கணவருடனும் அவரின் தாயாருடனும் வந்தார் என்றும், சந்தேக நபரான கணவர் கடந்த 25 ஆம் திகதி முதல் தாம் தங்கியிருந்த ஹோட்டல் அறையைச் சுத்தம் செய்வதற்கு சிற்றூழியர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை என்றும் ஹோட்டல் நிர்வாகம் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர் ஹோட்டலில் தங்கியிருந்துவிட்டு இரகசியமாக அங்கிருந்து வெளியேறிச் சென்றவிதம் ஹோட்டல் கேமராவில் பதிவாகியுள்ளது எனக் காவல்துறையினர் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

புதுமணத் தம்பதி தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து சிற்றூழியர்கள் அறைக்கதவை உடைத்து அறையைச் சோதனையிட்டுள்ளனர். அப்போது கழுத்து வெட்டப்பட்ட நிலையில் படுக்கை விரிப்புகளால் சுற்றிக்கட்டப்பட்ட சுதர்ஷனியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் நிர்வாகத்திடமிருந்து வந்த தகவலையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் துரித விசாரணைகளை மேற்கொண்டனர். படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தங்க நகைகள், பணம் முதலான அனைத்து உடைமைகளும் ஹோட்டல் அறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளமையால், இக்கொலை அவரது உடைமைகளின் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல என்பது தெளிவாகியுள்ள அதேவேளை, கொலைக்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது.

குறித்த பெண்மணியின் கழுத்து கூர்மையான ஆயுதத்தினால் வெட்டப்பட்டுள்ளமையால் மரணம் நேர்ந்துள்ளது என மரண பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதிக் காவல்துறைப் பணிப்பாளர் அனுர சேனாநாயக்கா, காவல்துறை அதிகாரி சஞ்சீவ தர்மரத்தினா ஆகியோரின் பணிப்புரைகளுக்கு அமைய, இப்படுகொலையைச் செய்த சந்தேக நபரைத் துரிதமாகக் கைதுசெய்யும் வகையில் கொள்ளுப்பிட்டி காவல்நிலையப் பொறுப்பதிகாரி மங்கல தெஹிதெனியா தலைமையில் காவல்துறையினர் மிகத் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: