அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, February 24, 2011

துவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்!!!

TMH-Indian-history-Custom-2.jpg
வரலாறு அபாயகரமானது. பிசாசாக உருமாறி மக்களை ஆட்கொண்டு ஆட்டிப்படைப்பது. நம் நாட்டின் வரலாறு என்னும் பெயரில் எழுதப்பட்டிருப்பது, பரப்பப்படுவது பெரும்பாலும் கடந்த காலத்தின் உண்மையான சித்தரிப்பு அல்ல.

எழுதுபவர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப, அவர்களது குறுகிய சாதி, சமய, அரசியல் தேவைகளுக்கு ஏற்றவண்ணம் திரித்து, மறைத்து, கூட்டிக்கழித்து எழுதப்பட்டிருப்பது.

சமுதாயப் பொறுப்புணர்வு இல்லாமல், தங்கள் துவேஷங்களையே வண்ணக் கலவையாக்கி வரலாற்றைத் தீட்டியிருக்கிறார்கள் பல மேதாவிகள்.

‘நம் நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் இருவேறுபட்ட இனங்கள், வேறுபட்ட கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள்… அவர்களிடையே பாலமிட முடியாத பிளவுகள் காலங்காலமாக இருந்திருக்கின்றன…’ என்பவை போன்ற மதவாதக் கருத்துகள் இத்தகைய வக்கரித்த வரலாற்றின் வார்ப்புகள் தாம்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நம் நாட்டின் வரலாறு சொல்லொணாச் சிதைவுக்கு உள்ளாயிற்று. தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்ட மக்களைப் பிரித்தாளும் ராஜதந்திரத்தின் அற்புதக் கருவியாக வரலாற்றை ஆங்கிலேயர் பயன்படுத்தினர்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகோன்னதத்தை வலியுறுத்த, அதற்கு முன்னர் முஸ்லிம்கள் ஆண்ட காலத்தை இருண்ட காலமாகச் சித்தரித்தனர்.

முஸ்லிம் மன்னர்களைக் கொடுங்கோலர்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும் மதவெறியர்கள் என்றும் இந்தியக் கலாச்சாரத்தைச் சீரழித்தவர்களென்றும் காட்டி, அவர்களது கொடிய ஆதிக்கத்திலிருந்து இந்துக்களை மீட்கவந்த ரட்சகர்களாகவும் கருணா மூர்த்திகளாகவும் தங்களைச் சித்தரித்துத் தங்கள் ஆதிக்கத்தை நியாயப்படுத்தினர்.

திட்டமிட்டு, நாசூக்காக வரலாற்றில் விஷத்தைக் கலந்தனர்.

இப்படி விஷமத்தில் பிறந்த வரலாறு, நம் நாட்டின் சில தலைவர்களுக்கும் மதவாதப் பிரச்சாரகர்களுக்கும் மிகச்சிறந்த கருவியாகப் பயன்பட்டது.

இன்று நம் நாட்டில் தலை விரித்தாடிக்கொண்டிருக்கும் மதத் துவேஷமும் நூற்றுக்கணக்கான உயிர்களைக் குடித்துள்ள மதக் கலவரங்களும் இத்தகைய வரலாற்றுத் தத்துவம் மக்களிடையே பரப்பப்பட்டதன் விபரீத விளைவுகள்தாம்.

முஸ்லிம் மன்னர்கள் மதவெறியின் காரணமாக ஆயிரக்கணக்கான இந்துக் கோயில்களை இடித்தார்கள் என்பது இன்று அனைத்து மக்களாலும் நம்பப்படும் ‘உண்மை’யாகிவிட்டது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், அதைச் சரியான கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

பல முஸ்லிம் மன்னர்கள் இந்துக் கோயில்களைக் கட்டியும் உள்ளனர்.

மகதராஷ்டிரத்தின் மராத்துவாடா இந்து, முஸ்லிம் கலாச்சாரங்கள் பெருமளவு ஒன்றாகக் கலந்த பகுதி. இப்பகுதியில் மிகப் பெரிய மதவெறியராகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் ஓளரங்கசீப் எண்பதுக்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களைக் கட்டியுள்ளார். அவர் இப்பகுதியில் கட்டிய மசூதிகளை விடக் கோயில்கள் தான் அதிகம்.

ஓளரங்கசீப் சதாராவிலிருந்த இந்துக் கோயிலை இடித்தார் என்பது உண்மை. அதற்குக் காரணம் மதவெறியல்ல. அக்கோயிலில் பெருமளவு நிலைபெற்றிருந்த தேவதாசி முறைதான் காரணம் என டாக்டர். பி.வி. ரானடே என்னும் வரலாற்று அறிஞர் குறிப்பிடுகிறார்.

ஜெய்னா என்னும் ஊரில் உள்ள கணபதி கோயிலுக்கு ஓளரங்கசீப் தானப் பத்திரம் எழுதி அளித்தார்.

புனே மாவட்டத்தில் சின்சுவாட் என்னும் இடத்தில் உள்ள கணபதி கோயிலை 16ஆம் நூற்றாண்டில் கட்டியவர் பிஜாப்பூர் சுல்தான் இப்ராஹிம் ஆதில்ஷா.

தௌலதாபாத்தில் உள்ள சரஸ்வதி பௌதி என்னும் புண்ணியக் கிணற்றை கி.பி.1335ஆம் ஆண்டு கட்டுவித்தவர் முகமது பின் துக்ளக். இதில் விடுவதற்கான தண்ணீரை துக்ளக் பிரயாகையிலுள்ள திரிவேணி சங்கமத்திலிருந்து வருவித்தார்.

டெல்லி சுல்தானிய அரசை நிறுவிய முகமது கோரி வெளியிட்ட ஒரு நாணயத்தில் லக்ஷ்மி உருவமும் மற்றொன்றில் சிவனின் ரிஷப வாகனமும் பொறிக்கப்பட்டிருந்தன.

முஸ்லிம் மன்னர்கள் பலர் இந்துப் பெண்களை – குறிப்பாக ராஜபுதனத்து அரச குடும்பத்துப் பெண்களை – மணந்து கொண்டனர் என்பது நமது பள்ளிகளில் கூடக் கற்பிக்கும் வரலாற்றுப் பாடம்.

ஆகவே முஸ்லிம் மன்னர் பரம்பரையிலேயே இந்து ரத்தம் கலந்திருந்தது.

இதே போன்று இந்து மன்னர்களும் மசூதிகளை ஆதரித்தனர்.

சிவாஜியின் பேரன் சத்ரபதி ஷாஹூ குல்தாபாத்தில் இருக்கும் ஔரங்கசீபின் சமாதிக்குப் பெருமளவு தானம் அளித்தார் என்பதைப் பத்திரங்களின் ஆதாரத்துடன் ரானடே கூட்டிக்காட்டுகிறார்.

நாம் நினைவில் கொள்ள வேண்டியது இன்னொன்று.

கோயில்கள் இடிக்கப்பட்டதன் காரணம் மதவெறியல்ல. ஆக்கிரமிக்க முற்படும் மன்னர்கள், தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் எதிரியை அவமானப்படுத்தவும் எதிரிநாட்டின் முக்கிய ஸ்தலங்களை நாசப்படுத்துவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மன்னர்களின் ஆளுமையை நிலைநாட்டும் முக்கியச் சின்னங்களாகக் கோயில்கள் திகழ்ந்தன.

ஆகவே தான் தங்கள் பெருமையைப் பறைசாற்ற அரசர்கள் கோயில்கள் கட்டினர். இதன் காரணமாகவே கோயில்கள் அந்நியத் தாக்குதல்களுக்கு முக்கிய இலக்குகளாயின. கோயில்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த செல்வத்தைக் கொள்ளையடிப்பதும் இதன் நோக்கம்.

இந்துக் கோயில்களை இடித்துத் தகர்த்த இந்து மன்னர்களும் உண்டு! எதிரி நாட்டு மசூதிகளை இடித்த முஸ்லிம் மன்னர்களும் உண்டு!

நம் நாட்டில் வரலாற்றுக்கான இலக்கணத்துடன் எழுதப்பட்ட முதல் வரலாற்று நூல் என்று கருதப்படுவது கல்ஹனா எழுதிய ராஜதரங்கிணி என்னும் காஷ்மீரத்தின் வரலாறு.

அதில் ஹர்ஷர் என்ற இந்து மன்னர் காஷ்மீரத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் இருந்த எல்லாத் தெய்வச்சிலைகளையும் நொறுக்கி நாசம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மன்னரின் அமைச்சரவையில் சிலைகளை உடைப்பதற்காகவும் அவற்றை உருக்கி, விலையுயர்ந்த ஊலோகத்தைச் சேகரிப்பதற்காகவும் தனிப்பொறுப்பு வகித்த இந்து அமைச்சர் ‘தேவோத்பாதநாயகா’ (தெய்வத்திற்குத் துன்பம் விளைவிக்கும் அதிகாரி) எனப் பெயர் கொண்ட ஒருவர் இருந்தார் என்று புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் கோசாம்பி குறிப்பிடுகிறார்.

மற்றொரு வரலாற்று அறிஞர் ஆர்.எஸ்.சர்மா இன்னொரு உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார்.

கஜினி முகமது, கோரி முகமது, தைமூர் ஆகிய முஸ்லிம் மன்னர்கள் இந்நாட்டின் மீது படையெடுத்து வந்து, அக்கிரமங்கள் புரிந்ததைப் பற்றிச் சொல்லும்போது, இதே மன்னர்கள் மத்திய ஆசியாவிலிருந்த முஸ்லிம் ராஜ்யங்களின் மேல் படையெடுத்துச் சென்று, அங்கிருந்த மசூதிகளை நாசம் செய்ததையும் அந்நாடுகளின் முஸ்லிம் மக்களுக்குச் சொல்லொணாத் துன்பங்களை விளைவித்ததையும் மறந்துவிடக் கூடாது எனக் கூறுகிறார்.

இதே போன்று, இந்து மன்னர்களால் அழிக்கப்பட்ட இந்துக் கோயில்கள், புத்த, ஜைனக் கோயில்கள், குறிப்பாகத் தமிழ் நாட்டிலும் கர்நாடகாவிலும் பல உண்டு. இவர்கள் எல்லோரையும் ஊக்குவித்தது மதவெறியல்ல. அதிகார, ஆக்கிரமிப்பு வெறியேயாகும். அரசியல் வரலாற்றின் இத்தகைய வேட்டைகளுக்கும் கொடுமைகளுக்கும் சுரண்டல்களுக்கும் மதச் சாயம் பூச முயல்வது மக்களைப் பிரித்தாளும் சில்லறைத்தனமாகும்.

நமது கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வரலாறு இகழ்ந்து ஒதுக்கப்பட்ட பாடமாகிவிட்டது. ஆனால் வரலாறு இன்றி எந்தச் சமுதாயமும் வாழ இயலாது. கல்வி நிறுவனங்கள் விஞ்ஞானரீதியான வரலாற்றைப் புறக்கணித்ததன் விளைவு மதவாதிகள் இன்று அதை ‘ஹைஜாக்’ செய்யும் நிலை உருவாகிவிட்டது.

- முனைவர் வசந்தி தேவி, சக்தி

நேரமில்லை! நேரமிருக்கிறது!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும்,சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)


தொழ நேரமில்லை!

ஓத நேரமில்லை!

பசியாற நேரமில்லை!

படிக்க நேரமில்லை!

தூங்க நேரமில்லை!

பர பரவென்ற வேலையால்

பறந்து கொண்டு இருக்கிறேன்!

பணம் உண்டு பையில்

மதிய உணவு இல்லை கடையில்

நேரத்தில் சாப்பிட நேரமில்லை!

படைத்தவனை நினைக்க நேரமில்லை!

பண்பாக இருக்க நேரம் நேரமில்லை!

பழகியவனை பார்க்க நேரமில்லை!

மனைவியிடம் பேச நேரமில்லை!

மக்களிடம் பேச நேரமில்லை!

பள்ளி விட்டு வரும் பிள்ளையை

பாசத்தோடு கொஞ்ச நேரமில்லை!

தாயை கவனிக்க நேரமில்லை!

தந்தையை கவனிக்க நேரமில்லை!

உற்றாரை கவனிக்க நேரமில்லை!

ஏழை வரி கொடுத்து

ஈட்டிய செல்வத்தை

தூய்மையாக்க நேரமில்லை!

நேரமிருக்கிறது!

மனிதா நேரமிருக்கிறது!

உயிர் பிரிய நேரமிருக்கிறது!

மண்ணறைக்கு செல்ல நேரமிருக்கிறது!

மண்ணறை கேள்விக்கும் நேரமிருக்கிறது!

நல்லடியார்களுக்கும் நேரமிருக்கிறது!

தீயவர்களுக்கும் நேரமிருக்கிறது!

மண்ணறை அழைக்கிறது

நான் தனி வீடாவேன்

புழு பூச்சிகளின் பிறப்பிடமாவேன்

நல்லவர்களுக்கு நிம்மதியளிப்பேன்

தீயவர்களுக்கு நோவினை தருவேன்!

நன்மை தீமை பிரித்தறிந்து

மண்ணறையில் கேள்விக்கும்

மண்ணறையின் வேதனைக்கும்

நேரமிருக்கிறது!

மறுமை கேள்வி கேட்கப்படும் நாள்!

மனிதன் மதி மயங்கி நிற்கும் நாள்!

மண்ணாகி இருக்கக் கூடாதா? நான்

மறுமையை சந்திக்காமல் இருந்திருப்பேனே!

மனிதன் அலறும் நாளுக்கு நேரமிருக்கிறது!

தந்தையை கண்டு மகன் ஓடுவான்!

மகனை கண்டு தந்தை ஓடுவான்!

மனைவியை கண்டு கணவன் ஓடுவான்!

கணவனை கண்டு மனைவி ஓடுவாள்!

நண்பனை கண்டு நண்பன் ஓடுவான்!

எங்கே ஓடுவார்கள்! நன்மையை தேடி!

மறுமையில் ஓட நேரமிருக்கிறது!

மறுமையில் விவாதம்

மனைவியிடம் கணவன்

உனக்கு வாரி வழங்கினேன்

உன் நன்மையிலிருந்து

எனக்கு கொஞ்சம் கொடு

மனைவி ஒத்துக்கொள்வாள்

நீங்கள் சிறந்த கணவர்தான்

எனக்கும் நன்மைதான் வேண்டும்

பாசமிகு கணவனை பிரிந்து

வெருண்டு ஓடுவாள்

ஓடுவதை காண நேரமிருக்கிறது!

பெற்ற மக்களிடம் ஓடுவான்

பெற்றெடுத்த மக்களே!

நான் சிறந்த தந்தையல்லவா!

துன்பம் தொடாமல் அனைத்து

வளங்களையும் தந்து ஆளாக்கினேன்!

உன் நன்மையிலிருந்து

எனக்கு கொஞ்சம் கொடு

பிள்ளைகள் ஒத்துக்கொள்வார்கள்!

நீங்கள் சிறந்த தந்தைதான்

எங்களுக்கும் நன்மைதான் வேண்டும்!

தந்தையிடம் இருந்து

வெருண்டு ஓடுவார்கள் பிள்ளைகள்!

காட்சிகளை காண நேரமிருக்கிறது!

உலகைப் படைத்தவனின் கோபம்

உலகம் முழுவதிலும்

அழிவுகள் சிறிது சிறிதாக! பெரிதாக

அழிவுக்கும் நேரமிருக்கிறது!

மனிதனுக்கோ

மறுமை பயம்

மனதில் இல்லை!

சகோதரச் சண்டை,

உடன்பிறந்தார் சண்டை

குலச்சண்டை,

தெருச்சண்டை,

சம்பந்தி சண்டை,

குழந்தைகள் சண்டை,

அடுத்தவன் வீட்டின்

இடத்தை அபகரித்த சண்டை

படிப்பில், அறிவில், ஆற்றலில்,

பணத்தில், அழகில், குலத்தில்

பெருமை, ஆணவம் மேலோங்க

பிறரிடம் ஏளனச்சண்டைகளுக்கு

நேரமிருக்கிறது!

மனிதர்களே பாசமும்

கேள்விக்குறியாகும் நாள்!

உங்கள் செல்வமும்

பலன் தர முடியாத நாள்!

எந்த பரிந்துரையும்

ஏற்றுக் கொள்ளப்படாத நாள்!

இம்மை, மறுமையின் அதிபதி

வல்ல அல்லாஹ்!

நீதி வழங்கும் நாள் -அந்த

மறுமைக்கு நேரமிருக்கிறது!

மண்ணறைகளைச்

சந்திக்கும் வரை

அதிகமாகத்(செல்வத்தை)

தேடுவது உங்கள்

கவனத்தைத்

திருப்பி விட்டது.

பின்னர் அந்நாளில்

அருட்கொடை பற்றி

விசாரிக்கப்படுவீர்கள்.

(அல்குர்ஆன்:102:1,2, 8)

அலாவுதீன்.S

தி.மு.க. ஆட்சியில் உருவான புதிய கல்வித் தந்தைகள்!


''தி.மு.க. இம்முறை ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கல்லூரி நடத்தியது எ.வ.வேலு மட்டும்தான். ஆனால், இன்று பெரும்பாலான அமைச்சர்கள் கல்லூரிகள் ஆரம்பித்துவிட்டார்கள். இது கட்சிக்கு நல்லதல்ல. அனைவரும் அதைக் கட்சிக்கு எழுதிவைத்துவிடுங்கள்!'' என்று ஒரு நாள் அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி சீறினார். அவரே அதிர்ச்சியடையும் அளவுக்கு தமிழக அமைச்சரவையில் இப்போது கல்வித் தந்தைகள் அதிகம்!

ஜெகத்ரட்சகன், ஜேப்பியார், ஏ.சி.சண்முகம், வேலூர் விஸ்வநாதன் போன்றவர்கள் எம்.ஜி.ஆரின் கடைக்கண் பார்வையால் கல்வி நிறுவனங்களை அமைத்து வளர்ந்தவர்கள் என்றால், கருணாநிதியின் ஆசீர்வாதம் காரணமாக... வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் பரிணமித்து இருக்கிறார்கள். சேலம், திருச்சி, விழுப்புரம், வேலூர், கடலூர், கோவை நகர்ப் பகுதியில் வலம் வந்தால், இவர்களது பிரமாண்டமான கல்லூரிக் கட்டடங்களைத் தரிசிக்கலாம்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள சிவரக்கோட்டையில் பிரமாண்டமாக உருவாகிறது தயா இன்ஜினீயரிங் கல்லூரி. மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு சொந்தமான இந்த கல்லூரி அடுத்த கல்வி ஆண்டில் இருந்து செயல்படத் துவங்குமாம்.

''அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மற்றும் நேருவின் மனைவி சாந்தா ஆகியோர் இணைந்து நாராயணா அறக்கட்டளை வைத்துள்ளனர். அதன் சார்பாக ஒரு கல்லூரி நடத்துகின்றனர். அந்தக் கல்லூரிக்காக ஏழை, எளிய விவசாயிகளிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு 100 ஏக்கர் நிலத்தை அபகரித்து உள்ளனர். தேசிய நெடுஞ்சாலைக்காக இந்த நிலங்கள் முன்பு தேர்வு செய்யப்பட்டது. ஆனால், அந்த நிலங்களுக்கு பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக, இப்போது புங்கனூரில் இருக்கும் ஏரியை வளைத்து தேசிய நெடுஞ்சாலைக்குப் பாதை அமைத்து வருகின்றனர். இது என்ன தர்மம்?'' என்று கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி திருச்சியில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டப் பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா முழங்கினார்.


ஜெயலலிதா குறிப்பட்டது திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தாயனூர் கிராமத்தில் இயங்கி வரும் கேர் இன்ஜினீயரிங் கல்லூரி பற்றித்தான். அந்தக் கல்லூரியின் சேர்மனாக இருப்பவர் நேருவின் தம்பி ராமஜெயம். நேருவின் அக்காள் மகனும், மாப்பிள்ளையுமான செந்தில் இதன் நிர்வாக அதிகாரி. இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த இன்ஜினீயரிங் கல்லூரி, நேருவின் தந்தை பெயரில் இயங்கி வரும் நாராயணா எஜுகேஷனல் டிரஸ்ட் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஜெயலலிதா குறிப்பிட்டதுபோல, நேருவின் மனைவி சாந்தாவும் சகோதரர் ரவிச்சந்திரனும் டிரஸ்ட்டை நடத்த, குடும்ப உறுப்பினர்கள் பலரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

ஊரகத் தொழில் மற்றும் கால்நடைத் துறை அமைச்சரான பொங்கலூர் பழனிச்சாமிக்கு சொந்தமான கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி, கோவை அருகே பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கல்லூரி, விஜயலட்சுமி பழனிச்சாமி சாரிடபிள் டிரஸ்ட் மூலமாக நடத்தப்படுகிறது. தங்களுக்கு சொந்தமான நிலத்தில் இந்தக் கல்லூரியைக் கட்டி இருக்கிறாராம் பழனிச்சாமி. இந்தக் கல்லூரியின் நிர்வாகத்தை அமைச்சரின் மகளும், நிர்வாக அறங்காவலருமான வித்யா கோகுல் கவனித்து வருகிறார்.

''கருணாநிதிக்கு மிக நெருங்கிய வட்டத்தில் இருந்துகொண்டு, அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி வரும் அமைச்சர்கள் யாரும், நன்றிக் கடனாகக்கூட கருணாநிதியின் பெயரை வைக்கவில்லை. ஆனால், பொங்கலூரார்தான் தலை​வரின் பெயரைச் சூட்டி தன்னுடைய நன்றி உணர்ச்சி​யைக் காட்டி இருக்கிறார்...'' என்று பொங்கலூராரின் கோஷ்டி பெருமை அடித்துக்கொள்கிறது.

'கனிமொழிக்கு சொந்தமானது இந்தக் கல்லூரி. பொங்கலூர் பழனிச்சாமியின் பெயரை இதற்குப் பயன்படுத்திக்கொண்டார்கள்!’ என்று சொல்பவர்களும் உண்டு. நீலகிரி தொகுதியின் எம்.பி-யாக ஆ.ராசா வந்து உட்கார்ந்த சில காலங்களிலே, இந்தக் கல்லூரி அவரது பெயருக்கு மாற்றப்பட்டுவிட்டது என்ற லெவலுக்குக்கூட லோக்கல் தி.மு.க-வுக்குள் புகைந்தது. ஆனால், பொங்கலூரார் தரப்போ... எல்லாவற்றையும் அடியோடு மறுத்துச் சிரிக்கிறது.

வேளாண் துறை அமைச்சரான வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சொந்தமாக உத்தம சோழபுரத்தில் வி.எஸ்.ஏ. குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன் (இன்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ.) இருக்கிறது. வி.எஸ்.ஏ. என்றால் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் என்று அர்த்தம். அமைச்சரின் மகனான எம்.எல்.ஏ.ராஜா இதன் சேர்மன். இந்தக் கல்லூரியைக் கட்டுவதற்காக அருகில் இருந்த கஞ்ச மலையை சேதம் செய்தார்கள் என்றொரு புகார் எழுந்து அடங்கியது. இந்தக் கல்லூரி தவிர ஆட்டையாம்பட்டியில் பழைய ஸ்கூல் ஒன்றை சில மாதங்களுக்கு முன் விலைக்கு வாங்கி, வி.எஸ்.ஏ. மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் என்ற பெயரில் நடத்தி வருகிறார்கள்.


தி.மு.க-வின் கடலூர் மாவட்டச் செயலாளராகவும் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருக்கிறார் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். அவருடைய சித்தப்பா தெய்வ​சிகாமணி, நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஸ்டோர் கீப்பராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதாவது 2008-ல் காட்டுமன்னார்கோவிலில், சந்திரவதனம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மற்றும் சந்திரவதனம் ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனம் என்ற பெயரில் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அவரே சேர்மனாகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

2008-ம் ஆண்டு மேல​பழஞ்சநல்லூர் என்ற இடத்தில் எம்.ஆர்.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரி சுமார் மூன்று ஏக்கரிலும், 2009-ம் ஆண்டு வீராணம் நல்லூர் என்ற இடத்தில் எம்.ஆர்.கே இன்ஜினீயரிங் கல்லூரி ஒன்றை சுமார் 20 ஏக்கரிலும் நடத்தி வருகிறார். இதை பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் நிர்வகித்து வருகிறார். கதிரவன்தான் சேர்மன். நாட்டார்மங்கலம் கிராமத்தில் கல்வி நிறுவனத்துக்காக கட்டடம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எம்.ஆர்.கே. கல்வி அறக்கட்டளைக்கு பன்னீர்செல்வத்தின் சித்தப்பா தெய்வசிகாமணி சேர்மனாக இருக்கிறார்.

சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் துரைமுருகன், தனது மகன் கதிர்ஆனந்த் பெயரில் கிங்ஸ்டன் கலை மற்றும் பொறியியல் கல்லூரியை நடத்தி வருகிறார். காட்பாடியில் இருந்து சித்தூர் போகும் வழியில் சுமார் 6 கி.மீ தொலைவில், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தக் கல்வி நிறுவனம் நடந்து வருகிறது. இந்தக் கல்லூரிக்கு அருகில்தான் அரசின் வெடி மருந்துத் தொழிற்சாலை நடந்து வருகிறது. இதன் அருகில் எந்தவொரு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தக் கூடாது என்பது அரசு விதி. அதையும் மீறி இந்தக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அதனால், 'அரசு வெடி மருந்துத் தொழிற்சாலையை வேறு இடத்துக்கு மாற்றலாமா...’ என்ற அளவுக்கு ஆலோசனைகள் நடக்கிறது.

விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலா​ளரும், அமைச்சருமான பொன்முடி, சிகா என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி இருக்கிறார். அதன் மூலம், சிகா மேலாண்​மைக் கல்லூரி, மற்றும் சிகா டீச்சர் டிரெயினிங் கல்லூரி ஆகிய​வற்றை கப்பியாம்புலியூர் என்ற இடத்தில் நான்கு ஆண்டு காலமாக நடத்தி வருகிறார். மேலும் விக்கிரவாண்டி அருகே சூர்யா பொறியியல் கல்லூரி ஒன்றையும் மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சூர்யா பொறியியல் கல்லூரி பொன்முடியின் மகன்களான பொன்.கௌதமசிகாமணி, அசோக் சிகாமணி ஆகியோர் பெயரில் நடத்தப்படுகிறது.


முன்னரே சொன்னது மாதிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் எ.வ.வேலுவின் கல்வி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் பொறியியல் கல்லூரி, கம்பன் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி, குமரன் பாலிடெக்னிக், கம்பன் ஐ.டி.ஐ., ஜீவா வேலு உறைவிடப் பள்ளி ஆகியவற்றை வேலு நடத்தி வருகிறார்.


ஆக மொத்தம், தமிழக அமைச்சரையில் நான்கில் ஒரு பங்கு மந்திரிகள் கல்வித் தந்தையராக வளர்ந்திருக்​கிறார்கள்.

''இது பொற்கால ஆட்சி!'' என்று சமீபத்தில் நடந்த ஒரு பரிசளிப்பு விழாவில் எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்னார். அதற்கு பதில் அளித்த கருணாநிதி, ''பொற்காலம் என்பது கலைஞர்களுக்கு, நடிகர்களுக்கு என்று மாத்திரம் இல்லாமல், ஏழை எளியவர்களுக்கு என்றைக்கு நற்காலம் பிறக்கிறதோ, என்றைக்கும் அந்த நற்காலம் நீடிக்கிற நிலைமை ஏற்படுகிறதோ, அதுதான் பொற்காலமாகும்!'' என்று சொன்னார்.

இந்தக் கட்டடங்களை எல்லாம் பார்த்தால் யாருக்குப் பொற்காலம் என்பது சொல்லாமலே புரிகிறது!

- நன்றி : ஜூனியர்விகடன் - 27-02-2011

காவிமன்றத்தின் தீர்ப்பு!!!

வெற்றி என்பது உன்னை உலகிற்கு அடையாளம் காட்டும்

தோல்வி என்பது உன்னை உனக்கே அடையாளம் காட்டும்




ஒரிசா மாநிலத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு பஜ்ரங் தள்ளைச் சேர்ந்த தாரா சிங் என்ற இந்து பயங்கரவாதியின் தலைமையில் வந்த கும்பலொன்று, அம்மாநிலத்தில் மதப் பிரச்சாரம் செய்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறித்துவப் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், சிறுவர்களான பிலிப், திமோதி என்ற அவரது இரு மகன்களையும் – அவர்கள் மூவரும் ஒரு ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் உயிரோடு எரித்துக் கொன்றனர். இப்பயங்கரவாதப் படுகொலையைச் செய்த தாரா சிங் உள்ளிட்ட 13 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த குர்தா குற்றவியல் நீதிமன்றம், தாராசிங்கிற்குத் தூக்கு தண்டனையும், மற்ற 12 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது.

இவ்வழக்கின் மேல்முறையீட்டில், ஒரிசா உயர் நீதிமன்றம் தாரா சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது; ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 12 குற்றவாளிகளுள் மகேந்திரா ஹெம்ப்ராம் என்பவனின் தண்டனையை மட்டும் உறுதி செய்து, மீதி 11 குற்றவாளிகளையும் நிரபராதிகள் என விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

ஒரிசா உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரிசா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இம்மி பிசகாமல் உறுதி செய்து தீர்ப்பளித்திருக்கிறது. “அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்க வேண்டும்; அதுவும் அந்தந்த சம்பவத்தின் உண்மை நிலை, சூழ்நிலையை பொறுத்தே அமைய வேண்டும்; இவ்வழக்கில் பாதிரியார் ஸ்டெயின்ஸும் அவரது இரு குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் எரித்துக் கொல்லப்பட்டிருந்தாலும், (குற்றவாளிகளின்) நோக்கம் மதப் பிரச்சாரம் என்ற பெயரில் ஏழை பழங்குடியின மக்களைக் கிறித்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் ஸ்டெயின்ஸுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான்” எனக் குறிப்பிட்டு, தாரா சிங்கின் தண்டனை குறைக்கப்பட்டதை நியாயப்படுத்தியிருக்கிறது. இவ்வழக்கில் சதித் திட்டம் தீட்டப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

1999-ஆம் ஆண்டு ஸ்டெயின்ஸ் பாதிரியார் தனது குழந்தைகளோடு எரித்துக் கொல்லப்பட்டபொழுது நாட்டில் நிலவிய சூழ்நிலை என்ன? அப்பொழுது வாஜ்பாயின் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடி மக்களும் இந்து மதத்தில் இருந்து தப்பித்து ஓடுவதைத் தடுக்கும் முகமாக, “மதமாற்றம் பற்றித் தேசிய விவாதம் நடத்த வேண்டும்” என ஆர்.எஸ்.எஸ். கும்பல் கூச்சல் போட்டுக் கொண்டிருந்ததோடு, மைய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரவும் முயன்று கொண்டிருந்தது.

இதற்கு இணையாக இன்னொருபுறம் குஜராத்திலுள்ள டாங்ஸ் மாவட்டத்தில் கிறித்தவர்கள் மீதும் தேவாலயங்கள் மீதும் தாக்குதலை நடத்தி வந்தது, ஆர்.எஸ்.எஸ். இத்தாக்குதலுக்கு அம்மாநில பா.ஜ.க. அரசு துணை நின்றது. இதே காலகட்டத்தில் ஒரிசாவில் பா.ஜ.க. – பிஜு ஜனதாதள் கூட்டணி ஆட்சிதான் நடைபெற்று வந்தது. நாடெங்கிலும் கிறித்தவர்களைக் குறிவைத்துத் தாக்குவது என்ற ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் ஸ்டெயின்ஸ் பாதிரியாரை உயிரோடு கொளுத்தும் சதித் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது போல ஸ்டெயின்ஸ் பாதிரியாருக்கு ஒரு பாடம் புகட்டுவது மட்டும்தான் தாரா சிங்கின் நோக்கம் என்றால், அவர் தனது இரு குழந்தைகளோடு தூங்கிக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து ஜீப்பைக் கொளுத்தியிருக்க வேண்டிய அவசியமே கிடையாது. அவரை எழுப்பி மிரட்டிவிட்டு, ரெண்டு தட்டுதட்டிவிட்டுப் போயிருக்கலாம். ஆனால், தாரா சிங் தலைமையில் வந்த கும்பலோ, மனோகர்பூர் கிராமத்திற்குள் நுழைந்தவுடன், அக்கிராமத்தின் தகவல் தொடர்புகளைத் துண்டித்தனர். தீ வைக்கப்பட்ட ஜீப்பில் இருந்து அம்மூவரும் தப்பித்துவிடாதபடி ஜீப்பைச் சுற்றி நின்றுகொண்ட அக்குண்டர்கள், அம்மூவரும் கருகி இறந்தபின்தான் அக்கிராமத்தை விட்டுத் தப்பிச் சென்றனர்.

ஸ்டெயின்ஸ் பாதிரியாரை உயிரோடு கொளுத்திக் கொல்லுவதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். கும்பல் மதம் மாற்றும் பாதிரியார்கள், மதம் மாறிய பழங்குடியினரை மட்டுமின்றி, நாடெங்கிலும் உள்ள சிறுபான்மை கிறித்தவ சமூகத்தினர் மத்தியில் பாதுகாப்பற்ற அச்ச உணர்வை உருவாக்க முயன்றது என்பதுதான் உண்மை. இந்தியத் தண்டனைச் சட்டங்களின்படி பயங்கரவாதக் குற்றமாகக் குறிப்பிட்டிருக்க வேண்டிய இக்கொலையை, நீதிபதிகள் சாதாரண கொலை வழக்காக நீர்த்துப் போகச் செய்துவிட்டனர்.

ஒரு உயிரற்ற கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில், அப்பாவியான அப்சல் குருவுக்குத் தூக்கு தண்டனை அளிக்கத் தயங்காத உச்ச நீதிமன்றம், இவ்வழக்கில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்டு மூவரை உயிரோடு கொளுத்திக் கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்காமல் கருணை காட்டியிருக்கிறது. எப்பேர்பட்ட நடுநிலை! எப்பேர்பட்ட மதச்சார்பின்மை!

இப்படுகொலை பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட வாத்வா கமிசன், “1991-க்கும் 1998-க்கும் இடைபட்ட காலத்தில் ஒரிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் – படுகொலை நடந்த பழங்குடியின மக்கள் வசித்து வரும் மாவட்டம் – குறிப்பிடத்தக்க அளவில் கிறித்தவ மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இக்காலகட்டத்தில் கிறித்தவ மக்கள் தொகை அதற்கு முந்தைய காலத்தைவிட 575 எண்ணம்தான் அதிகரித்திருக்கிறது. இது இயற்கையான உயர்வுதான்” எனக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ இந்த உண்மையை ஒதுக்கித் தள்ளிவிட்டு, மதம் மாற்றுவதைத்தான் அபாயகரமானதைப் போலத் தீர்ப்பு எழுதியுள்ளனர்.

‘‘பலவந்தமாகவோ, ஆசை காட்டியோ, மதம் மாற்றியோ, மற்ற மதங்களைவிடத் தன் மதம் உயர்ந்தது என்ற கருத்தின் அடிப்படையிலோ மற்றவர்களது நம்பிக்கைகளில் தலையிடுவதை நியாயப்படுத்த முடியாது” என்ற நீதிபதிகளின் சூக்குமமான வார்த்தைகளுக்கு, “கிறித்தவர்கள் மருந்து கொடுத்து, கல்வி கொடுத்துப் பழங்குடியின மக்களை மதம் மாற்றுவது சட்டப்படி குற்றம்” என்ற ஆர்.எஸ்.எஸ்.-இன் கொள்கையைத்தான் பொழிப்புரையாக எழுத முடியும்.

இக்காவித் தீர்ப்பைக் கண்டித்துப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தவுடன், “பாதிரியார் ஸ்டெயின்ஸும் அவரது இரு குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் எரித்துக் கொல்லப்பட்டிருந்தாலும், (குற்றவாளிகளின்) நோக்கம் மதப் பிரச்சாரம் என்ற பெயரில் ஏழை பழங்குடியின மக்களை கிறித்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் ஸ்டெயின்ஸுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான்” என்ற வரிகள் வரும் பத்தியைத் தீர்ப்பில் இருந்து நீதிபதிகள் நீக்கிவிட்டனர்.

இதை நீக்கியவுடன், ” தாரா சிங்கிற்கு மரண தண்டனை அளிக்கப்படாதது ஏன்?” என்ற கேள்வி வந்துவிடும் என்பதை உணர்ந்திருந்த நீதிபதிகள், “குற்றம் நடந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டதால், ஒரிசா உயர் நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை அதிகரிக்கத் தேவையில்லை” எனத் தீர்ப்பைத் திருத்தியும் விட்டனர்.

தாரா சிங்கிற்கு அதிகபட்ச தண்டனை அளிக்கக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டுதான் நீதிபதிகள் செயல்பட்டுள்ளனர் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

600-க்கும் மேற்பட்ட முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்ட மும்பக் கலவரம் நடந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. 2,000 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்ட குஜராத் கலவரம் நடந்து 8 ஆண்டுகள் மறைந்துவிட்டன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பார்த்தால், இக்குற்றச் செயல்களைப் புரிந்த இந்து மதவெறி பயங்கரவாதிகளுள் ஒருவருக்குக்கூட அதிகபட்ச தண்டனை அளிக்கவே முடியாது.

“பலவந்தமாகவோ, ஆசை காட்டியோ, மதம் மாற்றியோ, மற்ற மதங்களைவிடத் தன் மதம் உயர்ந்தது என்ற கருத்தின் அடிப்படையிலோ மற்றவர்களது நம்பிக்கைகளில் தலையிடுவதை நியாயப்படுத்த முடியாது” என்பதற்குப் பதிலாக, “மற்றவர்களின் மத நம்பிக்கையில் எந்த வழியில் தலையீடு செய்வதையும் நியாயப்படுத்த முடியாது” எனத் தீர்ப்பு தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது. முழுக்க நனைந்த பின்னும் முக்காடு போட்டுத் திரிவது என்பது இதுதானோ!

கட்டுரை வெளியிட்டது வினவு

கோத்ராவின் தீர்ப்பு மோடியின் அரசை உலுக்கியது!

புதுடெல்லி: கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த சபர்மதி இரயில் எரிப்பு சம்பவத்தின் போது மோடியின் அரசு கோத்ராவில் வாழக்கூடிய முஸ்லிம்கள் மீது வழக்கு போட்டு பாரபட்சமின்றி கைது செய்தது. ஆனால் இன்று சிறப்பு நீதி மன்றம் வெளியிட்ட தீர்ப்பில் 63 நபர்களை நிரபராதி என்று தீர்ப்பளித்து விடுதலை செய்துள்ளது. மேலும் 31 நபர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான தண்டனை விபரத்தை நீதிமன்றம் வருகின்ற 25ஆம் தேதி அன்று வெளியிட உள்ளது.

இன்று தீர்ப்பை வழங்கிய சிறப்பு நீதி மன்றம் 31 நபர்கள் மீது பிரிவு 302ன் படி குற்றத்தை உறுதி செய்துள்ளது.

கடந்த 2002 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 27ஆம் நாள் அன்று சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயில் கோத்ரா அருகே தீப்பிடித்து எரிந்ததில் 59 கரசேவர்கள் உடல் கருகி உயிர் இழந்தனர். நீதிமன்றம் கூறும் போது இந்த செயலின் பின்னனியில் மிகப்பெரிய கூட்டுச்சதி உள்ளது என்று கூறியுள்ளது. இருந்த போதும் தீர்ப்பின் முழு நகல் வெளியிடும் வரை எந்த ஒன்றையும் உறுதியாக கூற முடியாது. மாநில அரசாங்கம் கூறுவது போல இது பாகிஸ்தானின் கூட்டுச்சதியா அல்லது இயல்பாக நடந்த ஒரு விபத்தான் என்பதை கூற முடியாது.

தொடக்கத்தின் காவல்துறையின் விசாரணையின் போது இது இயல்பாக நடந்த ஒரு விபத்து பெரும் மதக்கலவரத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது. ஆனால் இதனை விசாரித்த மாநில அரசால் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு காவல் படையின் அறிக்கை படி, இது நன்கு திட்டமிடப்பட்டு நடந்தேரியுள்ளது, என்றும் மெளவி உமர் என்பவர் 4 நபர்களை ஏவி கரசேவர்களை கொல்வதற்க்காக இரயிலுக்கு தீ வைத்துள்ளார் என்று அவர் மீது குற்றம் சுமத்தியது. இன்று நீதிமன்றம் மெளவி உமர் ஒரு நிரபராதி என்று கூறி தீர்ப்பளித்துள்ளது.

பாடாய்ப்படுத்தும் காதல்!


"டீன் ஏஜ்" எனப்படும் வயதுப் பிள்ளைகளின் உள்ளத்தில் பல்வேறு வகையான மனக்கிளர்ச்சிகள் தோன்றுவது இயல்பு. அவர்களின் உள்ளத்தில் வித்தியாசமான, விசித்திரமான, வசீகரமான எண்ணங்கள் சிறகடித்துப் பறக்கத் தொடங்குவது இந்த வயதில்தான் என்றே சொல்லலாம்.

பெற்றோராரகிய நாம் இந்த பருவத்தை அடைந்திருக்கும் நமது பிள்ளைகளின் உளப்பாங்கையும் புறச்செயற்பாடுகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டிய காலகட்டம் இதுவாகும். அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் அதற்க்காகக் காலம் முழுவது கண்ணீர் சிந்திக் கதறும் நிலையும் ஏற்படலாம்.

பாடாய்ப் படுத்தும் காதல் வயதுப் (TEEN AGE) பிள்ளைகள் விஷயத்தில் பெற்றோர்கள் எதிர்கொள்ளக்கூடிய ஒரு பெரும் பிரச்சனை என்று இந்தக் "காதல்" விவகாரத்தைக் குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். முதலில், பெற்றோராகிய நாம் 'எதிர்பால் கவர்ச்சி' என்பது இயல்பான ஒரு மனவெழுச்சி என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். சினிமா, சின்னத்திரை, திரையிசைப் பாடல்கள், மூன்றாந்தரப் பத்திரிக்கைகள், நாவலகள் என்பன "காதல்" உணர்வு பற்றிய அதீதத் கற்பனைகளை, ஒருவகையான சுவாரசியத்தை இளம் உள்ளங்களில் விதைப்பதில் பெறும் பங்கு வகிக்கின்றன என்பதை நாம் அறிவோம்.

இந்த நிலையில் வெறும் எதிர்பால் கவர்ச்சியை "காதல்" என்று நம்பி அது புனிதமானது அதற்பொருட்டு பெற்றோரையும் குடும்பத்தையும் உதறித்தள்ளலாம் அது நிறைவேறாத பட்சத்தில் சாவதே ஒரே தீர்வு என்றெல்லாம் வீண் பிரமைகளை வளர்த்துக் கொள்ளும் இளம் சிறுவர் சிறுமியரைப் பற்றி நாம் அன்றாடம் காண்கிறோம், கேள்விபடுகின்றோம். இதனைத் தவிர்க்க என்ன வழி?

சிறு வயது முதலே பிள்ளைகளுடன் தோழமையுடன் கூடிய சுமூகமான, கலகலப்பான உறவ நிலையைப் பேணும் பெற்றோராக நாம் இருக்கும் பட்சத்தில் பிள்ளைகள் தமது விஷயங்களை ஒளிவுமறைவு இன்றி நம்மோடு பகிர்ந்து கொள்ள முன்வருவார்கள். பெற்றோர் தமது பிள்ளைகளுடன் வாழ்க்கை என்றால் என்ன? குடும்பம் என்றால் என்ன? பிள்ளைகளை நல்லவிதமாக வளர்க்க பெற்றோர் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள்! பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக எத்தகைய தியாகங்களைச் செய்துவருகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் முடிந்தளவு எளிமையாக அன்றாடம் கலந்துறையாடுவதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும். கணவன் மனைவி இருவரும் தொழில் பார்ப்பவர்களாக இருந்தால் இரவுணவை குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிரித்துப் பேசியபடி உண்ணும் வழக்கத்தை கடைபிடிக்கலாம் இரவு உணவின் போதோ அதன் பின்போ சற்று மனம்விட்டு உரையாடலாம்.

உதாரணமாக "இன்னைக்கு உன் வகுப்பில் என்னென்ன பாடம் நடந்தது? எப்படி, பின்னேரம் விளையாட்டும் பயிற்சியெல்லாம் ஒழுங்கா நடந்ததா? உன் தோழிக்கு உடம்பு சரியில்லைன்னியே இப்போ எப்படியிருக்கு? இந்த செமஸ்டர் எக்ஸாம் முடிஞ்ச கையோடு எங்காவது பிக்னிக் போகலாம்" என்ற ரீதியிலான உரையாடல்கள் பெற்றோர் பிள்ளைகளிடையே உள்ள இடைவெளிகளை குறைக்கப் பெரிதும் உதவும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

நம்முடைய பெற்றோரைவிட நமக்கு நெருக்கமான உறவு கிடையாது அவர்கள் எப்போதும் நமது நலனையே நாடுவார்கள். எந்தப் பிரச்சனை என்றாலும் அவர்களிடம் மனம் விட்டுப் பேசலாம். அவர்கள் நமக்கு உரிய வழிகாட்டல்களை வழங்கி உதவுவார்கள்; இக்கட்டான நிலைமைகளில் நம்மைக் கைவிடமாட்டார்கள் தோள்தந்து உதவித் தூக்கிவிடுவார்கள் என்பதான மனப்பதிவுகள் பிள்ளைகளின் மனதில் மிகக்கவனாமாக ஏற்படுத்தப்படுமானால், எத்தனையோ பிரச்சனைகளை எழாமலேயே தவிர்த்துக் கொள்ள முடியும் இன்ஷா அல்லாஹ். நமது சொல்லும் செயலும் பிள்ளை களின் மனதில் இத்தகைய நேர்மறைப் பதிவை ஏற்படுத்தத் துணையாக நிற்கும் என்பதில் நாம் யாரும் ஐயம் கொள்ளத்தேவையில்லை.

எவ்வளவுதான் வேலைப் பளு இருந்த போதிலும் குழந்தைகளுக்காக அன்றாடம் நமது நேரத்தில் ஒரு சிறு பகுதியையேனும் ஒதுக்குவதற்கு நாம் மறந்துவிடக்கூடாது. நிம்மதியான ஒரு குடும்ப வாழ்வு வாய்க்காத பட்சத்தில் எவ்வளவு பணமிருந்தென்ன, எவ்வளவு சொத்து சுகம் இருந்தென்ன! என்ற வாழ்க்கைத் தத்துவத்தை நாம் மனங்கொள்ளவேண்டும். மனிதன் நிம்மதியாக வாழ்வதற்காகத்தான் தொழில் செய்து பணம் சம்பாதிகிறானே தவிர அதுமட்டுமே வாழ்க்கையாகிவிடாது. எனவே பணம் சம்பாதிக்கும் பராக்கில் நாம் நம் குழந்தைகளுக்கு நம்முடைய அன்பயும் அரவணைப்பும் தேவைப்படும் தருணத்தில் அவற்றைத் தரத் தவறி விட்டு அவர்கள் கைசேதப்பட்டு வருந்தியழுவதில் எத்தகைய பிரயோசமும் இல்லை என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

குழந்தைகளை நாம் உரிய கட்டுப்பாட்டோடு வளர்க்கிறோம், அன்பும் அரவணைப்பும் தேவையான வசதிவாய்ப்புகளும் வழங்கின்றோம், இருந்தும் பருவக்கிளர்ச்சியின் உந்துதலால நம்முடைய மகள் தவறிழைத்துவிடுகின்றால் என்று வைத்துக்கொள்வோம். இத்தகையதோர் இக்கட்டாண நிலையில் நம்முடைய அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்? எடுத்த எடுப்பில் வாய்க்கு வந்தவாறு திட்டி அடித்து இம்சித்துத் துன்புறுத்துவது சரியான விதத்தில் பிரச்சனையைத் தீர்ப்பதாக அமைந்துவிடுமா? ஒரு போதும் இல்லை. அத்தகைய அணுகுமுறை நிலைமையை இன்னுமின்னும் சிக்கலாக்கும் நம் மீதான வெறுப்பை வளர்த்து தான் நம்பி நேசிக்கும் நபர் மீதான விருபத்தையும் நம்பிக்கையயும் அதிகரிக்கச் செய்யும்.

என் பெற்றோருக்கு என்மீது அன்பில்லை, உண்மை அன்பு அந்த நபரிடமே உள்ளது என்ற விபரீதமான மனப்பதிவை ஏறப்டுத்திவிடக்கூடும். எனவே முள்மீது விழுந்துவிட்ட சேலையைக் கிழிந்துவிடாமல் மீட்டெடுக்கும் சாமர்த்தியத்துடனும் மிகுந்த கவனத்துடனும் தீர்க்க முயலவேண்டும். இதற்கு மிகுந்த பொறுமையும் நிதானமும் நமக்கு கைவர வேண்டும் என்பது மிக முக்கியமானது.

ஒரு நாள் மாலை நேரம் என் உறவினர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மனி ஒருவர் வாடிச் சோர்ந்த முகத்துடன் என்னைச் சந்திக்க வந்திருந்தார். சிவந்த விழிகளும் உப்பிய முகமும் அவர் அதிகனேரம் அழுதிருக்கிறார் எனபதைச் சொல்லாமல் சொல்லி நின்றன். வழமையான உபசரிப்புகளைத் தொடர்ந்து ஏதாவது பிரச்சனையா? என்று மெல்ல விசாரித்தேன். உடனே பொலபொலவென கண்ணீர் சிந்தத் தொடங்கிவிட்டார். அவர் அழுது முடியும் வரை நான் பொறுமையாக இருந்தேன். சற்று நேரத்தில் தன்னை ஓரளவு ஆசுவாசப்படுத்திக் கொண்டவராய் திக்கித் திணறி தன்னுடைய பிரச்சனையை என்னோடு பகிர்ந்து கொண்டார். அவருடைய கணவர் பல வருடங்களாக வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இரண்டு மகள்கள் ஒரு மகன் என்று மொத்தம் மூன்று குழந்தைகள் அவருக்கு. மூத்த மகளுக்கு இப்போதுதான் 14 வயது பள்ளிக்கூடம் செல்லும் வழியில் யாரோ ஒரு பையனோடு காதல்.

தற்செயலாகப் புத்தகப் பையைப் பார்த்த போது சில கடிதங்களும் வாழ்த்து அட்டைகளும் சிக்கியுள்ளன. ஆத்திரம் தாங்காமல் பிள்ளையைத் தாறுமாறாக அடித்து ஓர் அறைக்குள் போட்டுப் பூட்டிவிட்டு என்னைத் தேடி வந்துள்ளார். தன்னுடைய சகல சந்தோஷங்களையும் குடும்பத்துக்காகத் தியாகம் செய்துவிட்டு மத்திய கிழக்கு நாடொன்றில் வருடக்கணக்காகப் பாடுபட்டு உழைக்கும் தன் கணவருக்கு என்ன பதில் சொல்லப் போகிறேன் என்பதே அந்தத் தாயின் குமுறலாக இருந்தது. இத்தகைய ஒரு நிலைமையில் இப்படிக் கரடுமுரடாக நடந்து கொண்டது தப்பு இது ஒரு பிழையான அணுகுமுறை என்பதையெல்லாம் எடுத்துச் சொன்னாலும் அதனைப் புரிந்துகொள்ளும் மன நிலையிலோ உளப் பக்குவத்திலோ அந்தத் தாயார் தற்போது இல்லை என்பதை நான் தெளிவாகப் புரிந்து கொண்டேன். எனவே பிரச்சினையை வேறு வகையில் கையாளுவது என்று தீர்மானித்துக் கொண்டேன். நான் அவரிடம் வீட்டுக்குச் செல்லுமாறும் இன்னும் சற்று நேரத்தில் தற்செயலாக வருவது போல அங்கே வருவதாகவும் கூறி வழியனுப்பி வைத்தேன். ஆயிற்று இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த அந்த வீட்டில் மயான அமைதி ஓர் அறைக்குள் இருந்து மட்டும் மெல்லிய விசும்பல் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. நான் சற்று உரத்த குரலில் ஸலாம் கூறினேன். நான் அங்கே செல்லும் போது வழமையாகப் பேசுவது போன்று சகஜமாகக் குரல் வைத்து கொண்டேன்.

பொதுவாகக் கொஞ்சம் பேசிவிட்டு அந்தப் பிள்ளையின் பெயரைக் குறிப்பிட்டு "எங்கே காணோமே!" என்று விசாரித்தேன். என் சைகையைப் புரிந்து கொண்டு "அதோ அவள் அந்த அறையில் இருக்கிறாள்" என்று கூறினார் அந்தத் தாயார் நான் மெல்ல உள்ளே சென்றேன். மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல் நிலைகுலைந்து போயிருந்தாள் அந்தச் சிறுமி. கன்னங்கள் இரண்டிலும் காணப்பட்ட கைவிரல் அடையாளம் அவள் நிலையை எனக்கு உணர்த்தின. கட்டிலில் போய் அமர்ந்து "என்னம்மா?" என்றது தான் தாமதம், மடியில் முகம் புதைத்துக் "கோ" வென்று கதறினாள். ஆறுதலாக அவள் முதுகை வருடி, அழுது முடியும் வரை காத்திருந்தேன். பின்னர் அவளைத்தேற்றி என்னோடு வீட்டுக்கு அழைத்து வந்து நிதானமாக விசாரித்ததில் அந்த பெண்குழந்தையின் பிரச்சனையில் இருந்த மற்றொரு கோணம் எனக்குப் புலப்பட்டது. உண்மையில் நடந்தது என்ன என்பதைப் பற்றி சற்று நிதானமாக விசாரித்துப் பார்க்க‌ அந்த பெண்மணி முயற்சி எடுத்திருக்கவே இல்லை. பள்ளிக்கூடம் செல்லும் வழியில் அந்தப் பையன் தினமும் அவளைப் பின் தொடர்ந்து வந்திருக்கின்றான். அதைப்பற்றி அவள் ஓரிரு தடவைகள் தன் தாயிடம் முறையிட்டும் அவர் அதனை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து பின்னால் வருவதும் அவளைக் காதலிப்பதாகக் கூருவதுமாக ஓரிரு மாதங்கள் கதை தொடர்ந்துள்ளது. பின்னர் ஒரு நாள் சடுதியாக ஒரு கடிதத்தை அவளிடம் நீட்டி தான் அவளை உயிருக்குயிராகக் காதலிப்பதாகவும் அவள் தனக்குக் கிடைக்காத பட்சத்தில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறி, நஞ்சுக் குப்பி ஒன்றைக்காட்டி பயமுறுத்தியிருக்கிறான் செய்வதறியாது திகைத்துப்போன அவள், வேறு வழியின்றி அந்தக் கடிதத்தை எடுத்துப் புத்தக்ப்பைக்குள் போட்டுக் கொண்டு வந்திருக்கிறாள். இதுபோல நாலைந்து சம்பவங்கள் நடந்துள்ளன.

இதற்கிடையில், அவளின் வகுப்புத் தோழியர் அவனின் பெயரைக்கூறிக் கிண்டலடிக்கவும் அளவுக்கு நிலமை போய்விஅ அந்தக் "காதலை" ஏற்பதா வேண்டாமா என்ற இரண்டுங்கெட்டான் நிலமையில் தவிதிருக்கிறாள். அதேசமயம், தன்னை ஒருவன் விழுந்து விழுந்து காதலிக்கிறான் தன் பின்னாடியே அலைகிறான் என்பதையெல்லாம் உள்ளூரச் சற்றுப் பெருமிதமாகவும் உணர்ந்திருக்கிறாள். அவன் பெயரை அவள் பெயரோடு சேர்த்து தோழிகள் கேலி செய்யம் போது மனதுக்குள் இனம் புரியாத ஒரு கிளுகிளுப்பு எழவும் தவறவில்லை. அவள் தன்னுடைய நிலையை தேம்பித் தேம்பி அழுதபடி ஒளிவுமறைவின்றி ஒருவாறு சொல்லி முடித்தாள். எனக்கு அவளை நினைத்து பரிதாபமாக இருந்தது. பின்னர் நான் அந்தச் சிறுமியிடம் வாழ்க்கை என்பது அவள் நினைப்பதைப்போல அவ்வளவு சுலபமான ஒன்றல்ல. இதெல்லாம் வெறுமனே பருவக் கிளர்ச்சியால் ஏற்படும் வெறும் ஈர்ப்பு மட்டுமே அதனை மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்டு ஒரு திருமண வாழ்வை அமைத்துவிடமுடியாது படிக்கிற வயதில் காதல் என்ற வலையில் வீழ்ந்து வாழ்வை இழந்து சமூகத்தின் முன் அவமானப்படுவது எவ்வளவு பயங்கரமானது என்பதை நான் அவளிடம் எடுத்து விளக்கினேன். அவளுடைய தந்தை அவர்களின் நல்வாழ்வுக்காக குடும்பத்தைப் பிரிந்து மத்திய கிழக்கில் அல்லும் பகலும் எவ்வளவு கஷ்டப்படுகின்றார். அவர்களை நல்ல முறையில் வளர்ட்து ஆளாக்க வேண்டும் என்பதற்காக அவளின் அன்னை எவ்வளவு பாடுபடுகிறார் எந்த நேரமும் அவர்களைப் பற்றிய கவலையிலேயே பொழுதைக் கழிக்கிறார் என்பதையெல்லாம் தெளிவுபடுத்தினேன்.

கூடவே, அந்தப் பையனின் நிலைமை என்ன? படிப்பைப் பாதியில் கைவிட்டுவிட்டு பொழுதுபோக்காக ஊர் சுற்றித்திரியும் ஓர் இளைஞனைத் திருமணம் முடித்துப் பிரச்சனைகள் இன்றி மகிழ்வோடு வாழ்வதென்பது நடைமுறைச் சாத்தியமா? அவன் கடைசிவரை அவளை வைத்துக் கண்கலங்காமல் வைத்துக் காப்பாற்றுவான் என்பதற்க்கான உத்தரவாதம் என்ன என்பன போன்ற கேள்விகளால் அவளது சிந்தனையைத் தட்டியெழுப்பினேன்.

நீ இல்லாவிட்டால் செத்துவிடுவேன் தற்கொலை செய்வேன் என்பன போன்ற வாக்குமூலங்கள் எவ்வளவு அபத்தமானவை, போலியானவை என்பதைப் பற்றி விளக்கினேன். " நீ சம்மதிக்காவிட்டால் நஞ்சு குடிப்பேன்" என்று மிரட்டி பலாத்காரத்தால் பெறமுனையும் அன்பு ஒருபோதும் வாழ்க்கை முழுவதையும் கொண்டு நடாத்துவதற்கு உறுதுணையாய் அமையப் போவதில்லை என்றும் அப்படி மிரட்டுபவனிடம், "சரி, நஞ்சைக் குடி, எனக்கென்ன!" என்று விட்டேத்தியாய் பதில் சொன்னால் அவன் தானாகவே விலகிக் கொள்வான் என்றும் கூறவே, அவளுடைய முகத்தில் இலேசான ஒரு தெளிவு தோன்றுவதை அவதானித்தேன். பின்னர் அவளாகச் சற்று நேரம் யோசிக்கட்டும் என்று அவகாசம் அளித்து விட்டு சூடாக ஒரு கப் தேநீர் குடிக்குமாறு உற்சாகப்படுத்தினேன். "புதிய பாணியில் ஒரு தலையலங்காரம் செய்துவிடுகிறேன் வா!" என்று அழைத்து அன்போடு தலைவாரிப் பின்னிவிட்டேன். அன்றிரவு அவளது பிரச்சனை பற்றி மேற்கொண்டு நான் எதுவுமே பேசவில்லை. இரண்டு நாட்கள் அவள் என்னோடு இருந்தாள் ஒரு மகளாய், தோழியாய் என்னோடு வெகு உற்சாகத்தோடு அவள் அந்த இரண்டு நாட்களையும் கழித்தாள். வீட்டை அடையும் வேளை அவள் என்னிடம் சொன்ன வார்த்தைகள் இப்போதும் என் காதில் எதிரொலிக்கின்றன;

"ஆன்ட்டி, நீங்க என் உம்மாவா இருந்திருக்கக் கூடாதான்னு ஆசையா இருக்கு. எங்க உம்மா என்கிட்ட இன்னும் கொஞ்சம் அன்பாய், புருஞ்சு கொள்ளுற மனசோடு நடந்திருந்தா இந்த மாதிரி ஒரு பிரச்சனைல நான் மாட்டிக்கொண்டிருக்கவே மாட்டேன்னு தோணுது ஆனா, இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல ஆன்ட்டி, நான் ஒரு நல்ல மகள்தான்னு எங்க உம்மாவுக்கு புரிய வைப்பேன். நல்லாப் படிச்சி எங்க வாப்பா கனவை நனவாக்குவேன். இன்ஷா அல்லாஹ்!"


இதற்கிடையில், அந்தப் பெண்ணுடன் துணைக்குக் கூடவே அவளது தாயார் சென்று வரலானார். தன் மகளின் மனமாற்றமும் வெளிப்படையான பேச்சும் அந்தத் தாயின் மனதை நெகிழச் செய்தன. இருவர் மத்தியிலும் இருந்த இடைவெளி படிப்படியாகக் குறையத் தொடங்கியது அவர் தன்னுடைய ஆச்சரியத்தை என்னோடு பகிர்ந்து கொண்டபோது மனதுக்கு நிறைவாக இருந்தது.

மேற்படி சம்பவத்தின் மூலம் நாம் பெறத்தக்க படிப்பினைகள் எவை என்று நோக்குவோம். முதலாவதாக, தன்னுடைய வயது அந்த பிள்ளைகள், குறிப்பாக பெண் பிள்ளைகள் எத்தகைய மனத்தடையும் இன்றி வெளிப்படையாகத் தம்மோடு கலந்துரையாடக்கூடிய சூழலை நாம் வீட்டில உருவாக்கிக் கொள்ளவேண்டும். தனக்கொரு பிரச்சனை வருமிடத்து நேரே தன் பெற்றோரிடம் வந்து ஆலோசனை கேட்கக்கூடிய தோழமையான, புரிந்துணர்வுள்ள நிலைமை குடும்பத்தில் கட்டியெழுப்பப்பட வேண்டும். அழுத்தமாகச் சொல்வதானால் ஒரு தாய் தன் வயது பெண் பிள்ளையிடம் ஒரு தோழியைப் போலப் பழக வேண்டும். அவளுடன் மகிழ்ச்சியோடு சிரித்துப் பேசி, நாலு விஷயங்களை உற்சாகத்தோடு கலந்தாலோசிக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவளுடைய தோழியர் யார் யார் அவள் எங்கெல்லாம் சென்று வருகிறாள், எத்தனை மணிக்கு எங்கே வகுப்பு நடக்கிறது. அங்கு சென்று வர எடுக்கும் கால அவகாசம் என்ன முதலான சகல் விபரங்களையும் அறிந்து வைத்திருப்பவராக ஒரு தாய் இருக்க வேண்டும். பருவ வயதை அடைந்த ஒரு பெண் பிள்ளை தனக்கு ஏற்படக்கூடிய நெருக்கடிகளைத் தன் தாயிடமே முறையிட முனையும் என்பதே யதார்த்தம். அத்தகைய சந்தர்ப்பங்களை அலட்சியம் செய்யாமல் காது கொடுத்துக் கேட்டு அவற்றுக்குரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய கடமை பெற்றோருக்கு குறிப்பாகத் தாய்க்கு உண்டு. மேலே நாம் கண்ட சம்பவத்தில் தன்னை ஒருவன் பிந்தொடர்ந்து வருகிறான் என்று தன் மகள் முறையிட்டபோதே அது பற்றி அந்தத் தாய் கவனம் செலுத்தியிருந்தால் பிரச்சனை முற்றாமல் ஆரம்பத்திலேயே அதைத் தடுத்திருக்க முடியும். அவ்வாறே, மகளின் புத்தகப் பையில் இருந்து கடிதம் முதலானவை அகப்பட்டதும் எடுத்த எடுப்பில் ஆவேசமாக நடந்துகொள்ளாமல், என்ன நடந்தது, ஏன் இப்படி நடந்துகொண்டாய் என்பதையெல்லாமல் நிதானமாக விசாரித்திருக்கவேண்டும். அப்படிச் செய்திருந்தால் நடந்துள்ள சம்பவத்தின் மறு பக்கமும் தன் மகளின் மீது முழுத்தவறும் இல்லை என்பதையும் அந்தத் தாயாரால் புரிந்துகொள்ள வாய்ப்புப் கிடைத்திருக்கும்.


இப்படிக்கு

சகோதரி லறீனா அப்துல் ஹக்

விப்ராண்ட் குஜராத் : மோடியின் பொய்ப்பிரச்சாரம்!!!



"விப்ராண்ட் குஜராத்". அதாவது, அதிரவைக்கும் குஜராத். இது, கடந்த பல மாதங்களாக "நர வேட்டை நாயகன்" நரேந்திர மோடி செய்து வரும் பிரச்சாரம். வளர்ச்சி என்ற பெயரில் மோடி செய்து வரும் இந்த மோசடிப் பிரச்சாரத்தால் அதிர்வது குஜராத் அல்ல! அங்குள்ள அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தான் என்ற உண்மைகள் வெளிவரத்துவங்கிவிட்டன.

"இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி அடந்த மாநிலம் குஜராத்! இவ்வளர்ச்சிக்கு முழுக்க முழுக்க காரணம் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிதான்!" என தேசிய பத்திரிக்கைகள் முதல் உள்ளூர் பத்திரிக்கைகள் வைர புகழாரம் சூட்டி வருகின்றன. நீதிபதி கிருஷ்ணய்யர் போன்ற நடுநிலையாளர்கள்
பண முதலைகளுடன் மோடி
கூட வளர்ச்சித்திட்டங்களில் குஜராத்தை முன்மாதிரியாகக்கொள்ளவேண்டும் என நமக்கு ஆலோசனை வழங்குகின்றனர். ஆனால் குஜராத்தைக்குறித்து அதிகாரப்பூர்வ ஆவணங்கள் கூறும் செய்தி கள் மேற்கண்ட கருத்துகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவையாகும்.

சமூக வளர்ச்சித்திட்டங்களில் குஜராத் இன்றைக்கும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதிலும் குஜராத்தின் மோடி அரசு தோல்வியையே சந்தித்துவருகிறது. நகரத்தை மையமாகக்கொண்ட வளர்ச்சிதிட்டங்கள் கிராமங்களில் வாழும் மக்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும், ஆதிவாசிகளையும் கவனத்தில் கொள்வதில்லை. சமூகவியல் கோட்பாட்டிற்கு முரணான நகரமேம்பாட்டு திட்டங்கள் சமூக சமநிலைப்பாட்டை சீர்குலைக்கிறது. கடந்த மே 1ஆம் தேதி டெல்லியில் நடந்த திட்டக்கமிஷனின் உறுப்பினர்கள் மற்றும் செயலாளர்களின் கூட்டத்தில் குஜராத்தின் சமூக வளர்ச்சித்துறையில் ஏற்பட்டுள்ள சோர்வு பெரும் விவாதத்தை கிளப்பியிருந்தது. குழந்தைகள் மரணம், பிரசவத்தின்போது தாயின் மரணம், ஊட்டச்சத்துக்குறைவு, படுமோசமான ஆரம்பக்கல்வித்துறை உள்ளிட்டவைகளில் குஜராத் தோல்வியடைந்துள்ளதாக அக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

திட்டக்கமிஷனின் அறிக்கை கூறுவது என்னவெனில், வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் சதவீதம் குஜராத்தில் 31.8 ஆகும். இது ஜம்மு கஷ்மீர், தமிழ் நாடு, கேரளா, ஹரியானா,பஞ்சாப், ஹிமாச்சல், ஆந்திரா ஆகிய மா நிலங்களை விட அதிகமாகும். குழந்தைகள், பெண்கள் ஆகியோரின் ஊட்டச்சத்துக்குறைவு காரணமாக ஏற்படும் மரணங்கள் குஜராத்தில்தான் அதிகம். திட்டக்கமிஷனின் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காண்பிப்பது என்னவெனில், ஊட்டச்சத்த்துக்குறைவின் காரணமாக மாநிலத்தில் 56 சதவீத குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதாகும்.

கர்ப்பிணிகளின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக குஜராத் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் மகளிர் நல மருத்துவர்களை உட்படுத்தி துவக்கப்பட்ட "சிரஞ்சீவி ப்ராஜக்ட்" எவ்வித முன்னேற்றமுமடையாமல் முடங்கி போய் விட்டது. கிராமப்பகுதிகளில் ஆரம்ப் சுகாதாரநிலையங்களின் குறைபாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளில் குறைபாடு ஆகியனவும் விவாததிற்கிடையானது. குஜராத்தில் பள்ளிக்கூடங்களிலிருந்து படிப்பை இடையில் நிறுத்துபவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட அதிகமாகும்.

குஜராத் மாநிலத்தின் சார்பாக கலந்துகொண்ட பிரதிநிதியிடம் திட்டக்கமிஷனின் உயர்மட்ட உறுப்பினர் ஒருவர், " நீங்கள் குஜராத்தில் என்ன செய்கின்றீர்கள்?" என கேள்வி எழுப்பினார். இச்செய்தியினை சில பத்திரிக்கைகள் வெளியிட்டிருந்தது. நேஷனல் க்ரைம் ரிக்கார்ட்ஸ் பீரோவின் (NCRB) சமீபத்திய சில புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுவது குஜராத்தின் இதர சமூகப்பிரச்சனைகளைக் குறித்ததாகும். பருவமடையாத இளம் வயது குற்றவாளிகளின் எண்ணிக்கையில் குஜராத இந்தியாவில் முன்னிலையில் உள்ளது. கடுமையான குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களின் வயது சராசரி 16 முதல் 18 லிருந்து 14 முதல் 16 ஆக குறைந்துள்ளது.

பூரண மதுவிலக்கு அமுலிலிருந்தும் மாநிலமான‌ குஜராத்தில் எளிதாக கிடைக்கிறது கள்ளச்சாராயம். இதனை விற்பதற்கு சிறுவர்களை ஈடுபடுத்துவதாக அந்த அறிக்கை கூறுகிறது. என்.சி.ஆர்.பி. அறிக்கையில் இடம்பெற்றுள்ள குஜராத்தின் இன்னொரு முக்கிய பிரச்சனை பால்யவிவாகம். இந்தியாவிலேயே அதிகமாக பால்ய விவாகங்கள் என்றழைக்கப்படும் சிறுவர் திருமணங்கள் அதிகம் நடைபெறுவது மோடியின் குஜராத் மாநிலத்தில் தான். கடந்த காலங்களைவிட பால்ய விவாகங்களின் எண்ணிக்கை குஜராத்தில் அதிகரித்து வருகிறது.

வடக்கு குஜராட்தில் பனட்கந்தா, ஸபர்கந்தா, தாஹட் ஆகிய பகுதிகளில் திருமணமாகும் இளம்பெண்களின் சராசரி வயது 12 ஆகும். இத்தகைய ஆதிவாசி மக்கள் வாழும் பகுதிகளில் அரசு சார்பாக எவ்வித தலையீடும் இல்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன 2008ம் ஆண்டில் மட்டும் இப்பகுதிகளில் நடந்த பால்ய விவாகங்களின் எண்ணிக்கை 23 ஆகும். அஹ்மதாபாத்தை மையமாகக் கொண்டு செயல்படும் பெண்கள் அமைப்பான "விமன்ஸ் ஆக் ஷன் குரூப்" கூறுவது என்னவெனில், ஆதிவாசிகள் வசிக்கும் பகுதிகளில் ஒரு புகார் வழக்காக பதிவுச் செய்யப்படுகிறது என்றால். பதிவுச் செய்யப்படாத 100 புகார்கள் உள்ளனவாம். வள்ர்சியின் பெயரால் மண்ணின் மைந்தர்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிப்பது இதர மாநிலங்களைப்போல் குஜராத்திலும் தீவிரமாக நடந்துவருகிறது. ஆனால், குஜராத்தின் நிலைமை பயங்கரமாகும் அளவை சர்வேக்களோ, அதிகார்ப்பூர்வ‌மான பட்டாக்களோ, இதர ஆவணங்களோ விதியோகிக்கப்படாத குஜராத்தின் கிராம பிரதேசங்களில் விவசாய நிலங்களை அபகரிப்பது மோடி அரசைப்பொறுத்துவரை சர்வ சாதாரணமானதாகும். இக்காரணதினாலதான் பெரும் தரகு முதலாளிகள் கேட்கும் போதெல்லாம் உடனடியாக கொடுக்கும் பாரிவள்ளலாக மோடி திகழ்கிறார். இவ்வாறு சொந்த வசிப்பிடங்களிலிருந்து விரட்டியடிக்கப்படும் அப்பாவி மக்களுக்கு வேறு நிலமோ அல்லது புனர்வாழ்வு திட்டங்களோ அரசு சார்பாக அளிக்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை.

அதுமட்டுமல்ல அரசு நிலத்தை ஆக்கிரமித்தார்கள் என இவர்கள் மீது கடுமையான குற்றம் சுமத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பின்னர் இவர்களுக்கு வாக்குரிமையோ ரேசன் கார்டோ வழங்கப்படுவதில்லை. இவ்வறு வசிப்பிடங்களிலிருந்து அகற்றப்படுபவர்கள் முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்தவர்களாகயிருந்தால் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு நுழைந்தவர் கள் என முத்திரை குத்தப்படுகின்றனர்.

வளர்ச்சித்திட்டங்களின் பெயரால் முஸ்லிம்களின் வரலாற்றுச் சின்னங்களையும் வணக்க வழிப்பாட்டுத்தலங்களையும் இடிப்பது மோடி அரசின் வாடிக்கையான நிகழ்வாகும். சில பகுதிகளில் ஒரு பிரிவைச் சார்ந்த மக்களை மட்டும் அவர்கள் வசிக்கும் நிலத்தை கைப்பற்றிவிட்டு அவர்களை நகர்புறங்களுக்கு விரட்டுகிறார்கள்.

போலிமோதல் கொலைகள் குஜராத் காவல்துறையின் ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. ஷொஹ்ராபுதீன் ஷேக், இஷ்ரத் ஜஹான், துளசி பிரஜாபதி ஆகியோரின் போலிஎன்கவுண்டர் கொலகள் இதற்கு சில உதாரணங்கள் மட்டுமே. இந்த போலிமோதல் கொலைகளுக்கு குஜராத் உள்துறை அமைச்சர அமீத்ஷா நேரடியாக தலைமையேற்றுள்ளார் என சி.பி.ஐ கண்டறிந்துள்ளது. குஜராத் மா நிலத்தில் பத்திரிக்கை சதந்திரத்திற்கு மோடி அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் குறித்து பிரபல மனித உரிமை ஆர்வலர் தீஸ்டா செடல்வாட் கேரளாவுக்கு வருகை தந்த வேளையில் கூறியிருந்தார்.

குஜராத்தில் அமைச்சர்களின் அலுவலகங்களுக்கோ அரசு நிறுவனங்களுக்கோ, மருத்துவமனைக்கோ சென்று செய்தி சேகரிப்பதற்கு பத்திரிக்கையாளர்களுக்கு சுதந்திரம் இல்லை. குஜராத் அரசின் நூற்றுக்கும் மேற்பட்ட துறைகளிலிருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டட்தின் படி விவரங்கள் கிடைப்பதில்லை.

குஜராத் அரசின் பல துறைகளிலும் நடைபெறும் செயல்பாடுகள் மர்மமாகவே உள்ளன. மதவாத சிந்தனையுடைய குஜராத் அரசின் அதிகார வர்க்கட்திடமிருந்து சாதாரண மக்களுக்கு உபயோகமான எவ்வித உதவியும் கிடைப்பதில்லை. இத்தகைய மக்களின் உரிமையை மறுப்பது குறித்து கேள்வி எழுப்பினால் அவர்களை உள்ளே தள்ள சபர்பன் சிறை போன்ற பிரசித்திபெற்ற சித்திரவதை முகாம்கள் மோடி அரசினால தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலம் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை தண்ணீர் தட்டுபாடு. கோடைக்கால வறட்சியில் குடிநீருக்காக கிராமத்தும் பெண்கள் பல கிலோமீட்டர்கள் தொலைவிற்கு நடந்து செல்வது குஜராத் கிராமப்பிரதேசங்களில் நிரந்தர காட்சியாகும். விவசாயத்திற்கு தேவையான‌ தண்ணீர் கிடைக்காததால் பிப்ரவரி மாதத்திற்கு முன்பே விவசாயிகள் அறுவடை செய்து விடுகின்றனர்.

பின்னர் வரும் நான்கைந்து மாதங்கள் விவசாயிகளுக்கு துயரமாக மாறுகிறது. இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்காக நர்மதா நதியின் மீது மத்திய அரசின் உதவியுடன் துவக்கப்பட்ட அணைக்கட்டுத்திட்டம் பல ஆண்டுகளாகியும் முடிவடையவில்லை. குஜராத் மாநிலம் கிராம மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த கனவுத்திட்டம் இதுவரை நிறைவேறாமல் நீண்டு கொண்டே செல்கிறது. அணைக்கட்டு மற்றும் அணைக்கட்டுடன் கிராமங்களை இணைக்கும் கால்வாய்களின் பணி பூர்த்தியானால் விவசாயிகளுக்கு மிகப்பெரும் ஆசுவாசமாக இருக்கும். குஜராத் மாநிலம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி "சுவர்ணம் குஜராத்" என்ற பெயரில் அரசு கருவூலத்திலிருந்து கோடிக்கணக்கான பணத்தை செலவழிக்கும் மோடி சாதாரண மக்களின் பிரச்சனையை கண்டும் காணாதது போல் நடித்து வருகிறார்.

வளர்ச்சி என்றால் கோடிக்கணக்கான முதலீடுகளும், நாற்கரச் சாலைகளும் (FOUR WAY ROADS) மேல்தட்டு மக்களின் ஆடம்பரவாழ்க்கையும் தான் என்ற ஊனமான வளர்ச்சிக்கனவுகளில் திளைப்பவர்கள்தாம் மோடிக்காக கை தட்டுகின்றனர். அம்பானிகளும் டாட்டாக்களும் மோடிக்கு புகழாரம் சூட்டுவதன் ரகசியம் இதுதான். ஒரு ஆட்சியாளர் என்ற நிலையில் சாதாரண மக்களின் முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாத மோடியின் அரசு இந்தியாவின் இதர மாநிலங்களைவிட வெகுதூரம் பின் தங்கியே உள்ளது.

இது தான் பா.ஜ.க ஆட்சி! இவர் தான் அந்த நரேந்திர மோடி 2002 குஜராத் இனப்படுகொலைக்குப் பிறகு மோடியை நரமாமிச வேட்டைக்காரணாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் ஒரு இந்துத்துவவாதியாகவும் மட்டுமே ஊடங்கள் கூறிவருகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல! வளர்ச்சி என்ற பெயரால் இந்த தேசத்தின் உயிர்த்துடிப்புகளான சாமான்ய மக்களை நசுக்கி அவர்தம் வாழ்வினை மண்மூடிப் போகச்ச் செய்யும் முதலாளித்துவ வர்க்கத்தின் அடிவருடி தான் இந்த மோடி; ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களின் எதிரி தான் இந்த மோடி; விவசாயிகளின் விரோதி தான் இந்த மோடி; அடித்தட்டு மக்களின் வாழ்வை கட்டங்களைச் செய்யும் காலன் தான் இந்த மோடி என்பதை மேற்கூறிய ஆய்வுகள் மிகத்துள்ளியமாக‌ படம்பிடித்துக்காட்டுகின்றன. இனியேனும் இந்த மக்கள் விரோத மோடியை சாமான்யர்களும், கற்றறிந்த மேதைகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

திற (OPEN IT)

"திற" (OPEN IT) குஜராத்தில் பெண்களுக்கெதிராக நடந்த பாலியல் வன்முறையை விளக்கும் குறும்படம்!




அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! இந்த குறும்படம் நம் சமூக மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரத்தை விளக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த குறும்படத்தை தயாரித்தவர்கள் முஸ்லிம்கள் அல்ல, மாறாக மாற்று மத சகோதரர்கள் குஜராத்தில் நடந்த கொடுமைகளை வெளிப்படுத்தவேண்டும் என்றும், அதன் மூலம் சமூகத்தை விழிப்படையச்செய்யவேண்டும் என்பதற்க்காகவே! அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான் "உங்களுக்கிடையே கருத்துவேறுபாடு கொண்டு பிரிந்துவிடாதீர்கள், உங்களுடைய பலம் குன்றிவிடும், நீங்கள் கோழைகளாகிவிடுவீர்கள்" எனக்கூறுகிறான். நமக்கிடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி விட்டு ஒட்டு மொத்த சமுதாய நலனுக்காக போராடவேண்டும். அது தான் சமூகத்திற்கு நன்மை பயக்குமே ஒழிய ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி, அவதூறு பேசுவதால் எந்த ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை. நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடு இருக்கலாம்! அதனால் ஒற்றுமையாக வாழ முடியாதா என்ன? ஒவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதனுடன் வேறுபடத்தான் செய்வான், ஒவ்வொருவருடைய கருத்துக்களும் வேறுபடத்தான் செய்யும், அப்படி இருக்க ஒருவரைஒருவர் காறி உமிழத்தான் வேண்டுமா? சிந்தியுங்கள்! செயல்படுங்கள்! வல்ல ரஹ்மான் நம் சமூக மக்களுக்கு பாதுகாப்பை வழங்கிடுவானாக!

இப்படிக்கு

முஸ்லிம் உம்மத்