சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகள் யார்?
நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை), ‘சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பிணவானவர்கள். (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வீன் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான். (இதைப் போன்றே,) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; அகம்பாவம் கொண்டவர்கள்; பெருமை பிடித்தவர்கள்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :ஹாரிஸா இப்னு வஹ்ப் (ரலி), ஆதாரம் : புகாரி.
முஸ்லிம்கள் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்கக் கூடாது!
ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி.
பினக்கிற்குப் பிறகு முதலில் பேசுபவர் தாம் சிறந்தவராவார்: -
ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி), ஆதாரம் : புகாரி.
நபி (ஸல்) அவர்களின் கனிவு: -
நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்து கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் தடித்த கரை கொண்ட நஜ்ரான் நாட்டு சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களை நெருங்கி அந்தச் சால்வையால் (அவர்களை) வேகமாக இழுத்தார். அந்தக் கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப்பகுதி நபி (ஸல்) அவர்களின் தோள்பட்டையில் அடையாளம் பதித்துவிட்டிருந்ததை கண்டேன். பிறகு அவர், ‘முஹம்மதே! உங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்’ என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டுப் பிறகு அவருக்குக் கொடுக்கும்படி ஆணையிட்டார்கள். என்று அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.
உண்மை சொர்க்கத்திற்கும் பொய் நரகத்திற்கும் வழிவகுக்கும்: -
உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும. ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார்.
(இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் ‘பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார் என்று
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.
நயவஞ்சகனின் மூன்று அடையாளங்கள்: -
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று. பேசினால் பொய் சொல்வான்; வாக்களித்தால் மாறு செய்வான்; அவனை நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில் மோசடி செய்வான்) என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.
பொய்பேசுபவர்களுக்கான தண்டணைகள்: -
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் இன்றிரவு (கனவில்) இருவரைப் பார்த்தேன். அவர்கள் என்னிடம் வந்து (என்னைப் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று பல காட்சிகளைக் காட்டினார்கள். அவற்றில் ஒன்றுக்கு
விளக்கமளிக்கையில்) ‘தாடை சிதைக்கப்பட்ட நிலையில், நீங்கள் பார்த்தீர்களே அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச, அது அவரிடமிருந்து பரவி உலகம் முழுவதையும் அடையும். எனவே, ழூழூ(நீங்கள் பார்த்த) அந்தத் தண்டனை
அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும் என்று அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : சமுரா இப்னு ஜுன்தப் (ரலி), ஆதாரம் : புகாரி.
ஒரு முஃமினை காஃபிர் என்று ஏசுவது கூடாது: -
‘ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரரைப் பார்த்து காஃபிரே! (இறைமறுப்பாளனே!) என்று அழைத்தால் அவர்கள் இருவரில் ஒரவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ்
இப்னு உமர் (ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.
அல்லாஹ்வின் மீது மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும்!பெற்றோர் அல்லது பிள்ளைகளின் மீது சத்தியம் செய்யக் கூடாது!
(என் தந்தை) உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் பயணிகள் சிலரிடையே இருந்து கொண்டிருந்தபோது அவர்களை அடைந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் தம் தந்தையின் மீது சத்தியம் செய்தார்கள். உடனே இறைத்தூதர் (ஸல்)
அவர்கள் மக்களை அழைத்து, ‘அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் தந்தையர் மீது சத்தியம் செய்வதை அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துவிட்டான். சத்தியம் செய்யமுற்படுபவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது மெளனமாக இருந்துவிடட்டும்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :இப்னு உமர் (ரலி), ஆதாரம் : புகாரி.
கடமையாக்கப்பட்ட தொழுகை தவிர மற்ற தொழுகைகளை ஒருவர் தம் வீட்டிலேயே நிறைவேற்றுவது தான் சிறந்ததாகும்!
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (ரமளான் மாதத்தின் ஓர் இரவில்) பாயினால் ஒரு சிறிய அறையை (பள்ளிவாசலில்) அமைத்துக் கொண்டு அதில் தொழுவதற்காகப் புறப்பட்டார்கள். அந்த இடத்தைத் தேடி (நபித்தோழர்களில்) சிலரும் வந்து
நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். பிறகு அடுத்த நாள் இரவும் வந்து கூடினர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தோழர்களிடம் வராமல் தாமதப்படுத்தினார்கள். எனவே, தோழர்கள் தங்களின் குரலை எழுப்பி (சப்தமிட்ட)னர்.
(நபியவர்களுக்கு நினைவூட்ட அவர்களின் வீட்டுக்) கதவின் மீது சிறு கற்களை எறிந்தனர்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கோபத்துடன் அவர்களை நோக்கி வந்து, ‘(இத்தொழுகையில் கலந்துகொள்ளும்) உங்களுடைய இச்செய்ல தொடர்ந்து கொண்டே போகிறது. (இத்தொழுகை) உங்களின் மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என்று நான் எண்ணி (அஞ்சி)னேன். (எனவேதான் இன்று நான் உங்களிடம் வரவில்லை.) எனவே, உங்கள் இல்லங்களிலேயே (கூடுதலான நஃபில்) தொழுகையைத் தொழுதுவாருங்கள். கடமையாக்கப்பட்ட தொழுகை தவிர மற்ற தொழுகைகளை ஒருவர் தம் வீட்டிலேயே நிறைவேற்றுவது தான் சிறந்ததாகும்’ என்றார்கள். அறிவிப்பவர் : ஸைத் இப்னு ஸாபித் (ரலி), ஆதாரம் : புகாரி.
உண்மையான வீரன் யார்?
மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.ஆதாரம் : புகாரி.
நாணம் இறை நம்பிக்கையில் அடங்கும்: -
நபி (ஸல்) அவர்கள் (அன்சாரிகளில்) ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது தொடர்பாகத் தம் சகோதரரைக் கண்டித்துக் கொண்டிருந்தார். ‘நீ (அதிகமாக) வெட்கப்படுகிறாய். (இதனால் உனக்கு வரவேண்டிய நன்மைகள்
பாதிக்கப்படுகின்றன.) வெட்கத்தால் உனக்கு நஷ்டம் தான்’ என்பது போல் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அவரைவிட்டுவிடு! நாணம் இறை நம்பிக்கையில் அடங்கும்’ என்றார்கள். அறிவிப்பவர் :
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), ஆதாரம் : புகாரி.
No comments:
Post a Comment