அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, March 4, 2009

உறவை முறிப்பதாக சத்தியம் செய்தல்!

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஹாரிஸ் அவர்களின் புதல்வரான அவ்ஃப் இப்னு மாலிக் இப்னி துஃபைல்(ரஹ்) கூறினார்.

ஆயிஷா (ரலி) (தம் வீடு ஒன்றை) ‘விற்றது தொடர்பாக’ அல்லது ‘நன்கொடையாக வழங்கியது தொடர்பாக’ (அவர்களின் சகோதரி அஸ்மாவின் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) (அதிருப்தியடைந்து) ‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தம் முடிவைக்) கைவிடவேண்டும்; அல்லது தான் அவரைத் தடுத்து நிறுத்துவேன்’ என்று கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு ஆயிஷா (ரலி), ‘அவரா இப்படிக் கூறினார்?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘ஆம்’ என்றனர். அப்போது ஆயிஷா (ரலி), ‘இனி நான் இப்னு ஸுபைரிடம் ஒருபோதும் பேசமாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்கிறேன்’ என்று கூறிவிட்டார்கள். நீண்ட நாள்கள் பேச்சு வார்த்தை நின்றுபோனபோது ஆயிஷா (ரலி) அவர்களிடம் (தமக்காகப்) பரிந்து பேசுமாறு (முஹாஜிர்களை) இப்னு ஸுபைர் (ரலி) கேட்டுக்கொண்டார்கள். (அவ்வாறே அவர்கள் பரிந்து பேசியபோது) ஆயிஷா (ரலி), ‘முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் விஷயத்தில் ஒருபோதும் நான் (எவருடைய) பரிந்துரையையும் ஏற்றுக்கொள்ளவுமாட்டேன். என் சத்தியத்தை நான் முறித்துக் கொள்ளவுமாட்டேன்’ என்று கூறிவிட்டார்கள்.

ஆயிஷா (ரலி) இப்னு ஸுபைர் அவர்களிடம் பேச்சை நிறுத்தி நீண்ட நாள்களாகிவிட்டபோது பனூ ஸுஹ்ரா குலத்தைச் சேர்ந்த மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்வத் இப்னி அப்தி யகூஸ் (ரலி) ஆகிய இருவரிடமும் இப்னு ஸுபைர் (ரலி), ‘அல்லாஹ்வை முன்வைத்து உங்கள் இருவரிடமும நான் வேண்டுகிறேன். என்னை (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லக்கூடாதா? என் உறவை முறித்துக் கொள்வதாக அவர்கள் செய்துள்ள சத்தியம் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்லவே!’ என்று கூறினார்கள். எனவே, மிஸ்வர் (ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களும் தம் மேலங்கிகளை அணிந்துகொண்டு இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுடன் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றார்கள்.

(அங்கு சென்ற) உடனே ‘அஸ்ஸலாமு அலைக்கி வ ரஹ்மத்துலலாஹி வ பரகாதுஹு’ என்று சலாம் சொல்லிவிட்டு, ‘நாங்கள் உள்ளே வரலாமா?’ என்று அனுமதி கேட்டனர்.

அதற்கு ஆயிஷா (ரலி), ‘உள்ளே வாருங்கள்’ என்று அனுமதி வழங்கினார்கள். அப்போது அவர்கள் (மூவரும்) ‘நாங்கள் அனைவரும் உள்ளே வரலாமா?’ என்று கேட்டனர்.

ஆயிஷா (ரலி), ‘ஆம்; அனைவரும் உள்ளே வாருங்கள்’ என்று அவர்கள் இருவருடனும் இப்னு ஸுபைர் (ரலி) இருப்பதை அறிந்து கொள்ளாமலேயே கூறினார்கள்.

அவர்கள் மூவரும் உள்ளே நுழைந்ததும், இப்னு ஸுபைர் (ரலி) (தம் சிறிய தாயாரான ஆயிஷா இருந்த) திரைக்குள் நுழைந்து அவர்களைத் தழுவிக்கொண்டு அவர்களிடம் முறையிட்டு அழத் தொடங்கினார்கள்.

மிஸ்வர் (ரலி) அவர்களும் அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்களும் (வெளியே இருந்தபடி) இப்னு ஸுபைர் (ரலி) அவர்களிடம் பேசியே தீரவேண்டும் என்றும் அவருக்காகத் தாங்கள் செய்யும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வேண்டிக் கொண்டிருந்தனர்.

-மேலும், அவர்கள் இருவரும், ‘ஒரு முஸ்லிம் தம் சகோதரிடம் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று’ என்று நபி (ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளதை தாங்கள் அறிந்தே உள்ளீர்கள்’ என்று கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்களிடம் (உறவைப் பேணுவதன் சிறப்பு குறித்து) கசப்பூட்டியும் அவர்கள் அதிகமாகப் பேசியபோது (தாம் செய்த சத்தியத்தைப் பற்றி) அவர்கள் இருவருக்கும் நினைவூட்டியவாறு ஆயிஷா (ரலி) அழலானார்கள்.

மேலும், ‘(நான் அவரிடம் பேசமாட்டேன் என) சத்தியம் செய்து விட்டேன். சத்தியம் மிகவும் கடுமையானதாகும்’ என்று (அவர்கள் இருவரிடமும் திரும்பக் திரும்பக்) கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது இருவரும் (தங்கள் கருத்தை)
வலியுறுத்திக்கொண்டேயிருந்தனர்.

இறுதியில் ஆயிஷா (ரலி) (தம் சகோதரியின் புதல்வர்) இப்னு ஸுபைரிடம் பேசிவிட்டார்கள். தம் சத்தியத்தை முறித்துவிட்டதற்குப் பரிகாரமாக நாற்பது அடிமைகளை விடுதலை செய்தார்கள். அதற்குப் பிறகும் கூடத் தம் சத்தியத்தை நினைவுகூர்ந்து தம் முகத்திரை நனையுமளவிற்கு அவர்கள் அழுவார்கள். (ஆதாரம் : புகாரி)

இந்த நபிமொழியிலிருந்து பெறும் படிப்பினைகள்: -

1) உறவை முறிப்பதாக சத்தியம் செய்யக் கூடாது.
2) ஒரு முஸ்லிம் தன் சகோதர முஸ்லிமுடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்கக் கூடாது
3) முஸ்லிம் இருவருக்கிடையில் பினக்கு ஏற்பட்டால் மேற்கண்ட நபிமொழியை நினைவூட்டி அவர்களிடையே மீண்டும் இணக்கத்தை ஏற்படுத்த முயற்ச்சிக்க வேண்டும்.


No comments: