தென்காசி : தென்காசி பிரவுசிங் சென்டர் உரிமையாளர் கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.தென்காசி அம்மன் சன்னதியில் பிரவுசிங் சென்டர் வைத்திருந்தவர் முகமது மைதீன் (53). கேபிள் டிவியும் நடத்தி வந்தார். இவரை கடந்த மே மாதம் ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. இது தொடர்பாக தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து மலையான் தெருவை சேர்ந்த சொர்ணத்தேவர் மகன்கள் சக்தி பாண்டியன் (47), ரவி பாண்டியன் (42), ஐவராஜா கோவில் தெருவை சேர்ந்த பால்துரை மகன் கலைஞர் (எ) சங்கர் (17) உட்பட சிலரை கைது செய்தனர்.
சக்தி பாண்டியன் ஏற்கனவே தென்காசியில் நடந்த 6 பேர் கொலை வழக்கிலும், ரவிபாண்டியன் இந்து முன்னணி அலுவலகத்தில் வெடி குண்டு வீசிய வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இம்மூன்று பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு எஸ்.பி.ஆஸ்ராகர்க் பரிந்துரை செய்தார். இதனையடுத்து மாவட்ட கலெக்டர் ஜெயராமன் இம்மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனடிப்படையில் தென்காசி இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ் மற்றும் போலீசார் சக்திபாண்டியன், ரவி பாண்டியன், கலைஞர்(எ) சங்கர் ஆகிய மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment