அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, January 14, 2010

தமிழக அரசுக்கு கடன் ரூ.74,858 கோடி


தமிழக அரசுக்கு கடந்த மார்ச் நிலவரப்படி, 74, 858 கோடி ரூபாய் கடன் பொறுப்பு உள்ளது என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

பேரவையில் எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா, தான் முக்கியமான 3 கேள்விகளைக் கேட்கப் போவதாகவும், அதற்கு முதல் அமைச்சர் பதில் கூற வேண்டுமென்றும் சொல்லிவிட்டு, மூன்று கேள்விகளைக் கேட்டார். அதற்கு பதில்களைக் கேட்ட ஜெயலலிதா, அதற்காக அவையிலே காத்திருக்க விரும்பாமல் பேசி முடித்தவுடன் அவசர அவசரமாகப் புறப்பட்டுப் போய் விட்டார்.

இருந்தாலும் அவர் கேட்ட மூன்று கேள்விக்கும் என்னுடைய பதில்கள் இதோ :-

முதல் கேள்வி:

தற்போது தமிழகத்தின் கடன் சுமை எத்தனை கோடி ரூபாய்?

பதில்: ஏற்கனவே மேலே கூறியவாறு 31௩௨009 அன்று மாநில அரசின் மொத்த கடன் பொறுப்புகள் ரூபாய் 74,858 கோடி ஆகும்.

இரண்டாவது கேள்வி:

21 லட்சம் வீடுகளை இலவசமாக ஏழை எளிய மக்களுக்கு கட்டிக்கொடுப்பதற்கு பணம் எங்கிருந்து பெறப்போகிறீர்கள்?

பதில்: இந்த வீட்டு வசதித்திட்டம் ஒரு திட்டச்செலவு என்பதால் மாநில அரசின் ஆண்டு திட்டத்திற்கான நிதி ஆதாரங்களிலிருந்து இத்திட்டத்திற்கான செலவு மேற்கொள்ளப்படும். 21 லட்சம் வீடுகள் கட்ட ரூபாய் 12,600 கோடி தேவைப்படும். 21 லட்சம் வீடுகள் 6 ஆண்டுகளில் கட்டிக்கொடுக்கப்படும் என்பதால் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 2,100 கோடி தேவைப்படும். வரும் 2010௨011 நிதி ஆண்டில் 3 இலட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்க இருப்பதால் ஒரு வீடு கட்ட ரூபாய் 60,000 என்ற மதிப்பீட்டில் ரூபாய் 1800 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

மூன்றாவது கேள்வி:

மாநில மொத்த பொருளாதார வளர்ச்சி வீதத்தில் ஏன் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது?

பதில்: தி.மு.கழக அரசு பொறுப்பேற்றபின் முதல் ஆண்டான 2006௨007 நிதி ஆண்டில் தமிழக பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம் 11.29 சதவீதம் ஆகும். 2008௨009-ம் ஆண்டில் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 4.55 விழுக்காடாக மத்திய புள்ளியியல் நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 32 மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் நேரடி ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகள் ஆகியவற்றில் 18 மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் நேரடி ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே இந்த மதிப்பீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

வளர்ந்த மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்கள் 4.5 விழுக்காட்டிலிருந்து 5.5 விழுக்காடு அளவிலேயே ஆண்டு வளர்ச்சி வீதங்களை பெற்றுள்ளன. 2008௨009 ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சி வீதம் 5.53 சதவீதம். கர்நாடகத்தின் வளர்ச்சிவீதம் 5.08 சதவீதம். தமிழகத்தின் வளர்ச்சிவீதம் 4.55 சதவீதம்.

விவசாயிகளுக்கு நிலம்

உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியினாலும் அதன் காரணமாக நமது நாட்டில் தொழில் துறையிலும் குறிப்பாக ஏற்றுமதியிலும் மந்த நிலை காணப்படுவதால் தொழில் துறையில் முன்னணி மாநிலங்களாகிய தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் ஆகியவை குறைந்த அளவிலேயே வளர்ச்சி வீதத்தை அடைந்திருக்கின்றன. மேலும் தொழில் துறையில் முன்னணி மாநிலங்களாக விளங்கும் குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி வீதம் குறித்து புள்ளிவிவரங்கள் இன்னும் பெறப்படவில்லை. 2008௨009-ல் 4.55 சதவீதமாக வளர்ச்சி வீதம் குறைந்து உள்ளதற்கு முக்கிய காரணம் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியின் தாக்கமேயாகும்.

எதிர்க்கட்சித்தலைவர் அடுத்து முக்கியமாக கேட்டது, 2006-ம் ஆண்டு 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று சொன்னீர்களே, 2 லட்சத்து 11 ஆயிரத்து 366 ஏக்கர் நிலம் தானே வழங்கியிருக்கிறீர்கள் என்று வினா எழுப்பிய போது, "56 லட்சம் ஏக்கர் என்பது அ.தி.மு.க. நிதி நிலை அறிக்கையிலே கூறப்பட்டிருந்த வாசகம். அதை உண்மையென்று நம்பி நாங்களும் 56 லட்சம் ஏக்கர் என்று வெளியிட்டு விட்டோம்" என்று கூறினேன்.

தரிசுநில மேம்பாட்டு திட்டம்

உடனே ஜெயலலிதா, "எங்கள் ஆட்சியில் வெளியிடப்பட்ட நிதி நிலை அறிக்கையில் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் பண்படுத்தப்படும் என்று அறிவித்தோமே தவிர, அந்த 55 லட்சம் ஏக்கர் நிலமும் அரசிடம் இருக்கிறதென்று சொல்லவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால் அதைக்காட்டட்டும் பார்க்கலாம்" என்றார். அதற்கு நான், "நீங்கள் 55 லட்சம் ஏக்கர் நிலம் பண்படுத்தப்படும் என்று நிதி நிலை அறிக்கையிலே குறிப்பிட்டிருந்ததை நம்பி, அப்படி பண்படுத்தப்பட்டால் அதை ஏழை எளியவர்களுக்கு தரலாம் என்று அறிவித்தோம்" என்று கூறினேன்.

இதோ 2001௨002ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை-நிதியமைச்சராக இருந்த பொன்னையன் 18௮௨001-ல் படித்தது -பத்தி 18-"பயிர் செய்ய ஏற்ற 20 லட்சம் எக்டேர் (50 லட்சம் ஏக்கர்) தரிசு நிலங்களை வரும் ஐந்தாண்டு காலத்திற்குள் மேம்படுத்திட மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் தரிசுநில மேம்பாட்டு திட்டம் எனும் மிகப்பெரிய அளவிலான தொலை நோக்குத் திட்டம் ஒன்றை ஏற்கனவே அறிவித்துள்ளார்".

நிதிநிலை அறிக்கை

இந்த அறிவிப்பினை நம்பித்தான் 2006௨007-ம் ஆண்டு தி.மு.கழக நிதிநிலை அறிக்கையில் 50 லட்சம் ஏக்கர் என்று குறிப்பிடப்பட்டது என்று நான் விளக்கினேன். இதனை இப்போது சொல்லவில்லை, 2006-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையிலேயே பத்தி 14-ல் "இதற்கு முன்பிருந்த ஆட்சியில் 2001௨002-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் தமிழகத்தில் மொத்தம் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளன என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனையொட்டி தி.மு.கழக தேர்தல் அறிக்கையில் இந்த தரிசு நிலங்களை சீர்செய்து நிலமற்ற ஏழை விவசாய குடும்பங்களுக்கு அரசு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றும் சொல்லப்பட்டுள்ளது. பேரவையிலே "காட்டட்டும் பார்க்கலாம்" என்று ஜெயலலிதா சவாலிட்டதற்கு இதோ நிதி நிலை அறிக்கையிலே கூறப்பட்டுள்ள வாசகங்களையே எடுத்துக்காட்டி விட்டேன். என்ன செய்யப்போகிறார் ஜெயலலிதா?இறுதியாக ஜெயலலிதா 21 இலட்சம் இலவச வீடுகளை ஆறு ஆண்டுகளில் கட்டித் தருவதைப் பற்றி பேசி, அது மக்களை ஏமாற்றுவதற்கான திட்டம் என்றும் ஆனால் மக்களை ஏமாற்ற முடியாது என்றும் அதற்கு 1800கோடி ரூபாய் நிதிக்கு எங்கே போகப் போகிறீர்கள் என்றெல்லாம் கேட்டார். வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படுகிறதா என்பதை இன்னும் சில வாரங்களில் வரவிருக்கின்ற நிதி நிலை அறிக்கையிலே ஜெயலலிதா தெரிந்து கொள்வார் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

--அந்திமழை--

No comments: