போர்ட்டோ பிரின்ஸ்:விமானம் போர்ட்டோ பிரின்ஸ் விமான நிலையத்தில் இறங்கும் பொழுது வெளிச்சத்தை தருவது ரன்வேயில் பொருத்தப்பட்டிருக்கும் விளக்குகளிலிருந்து வரும் ஒளி மட்டுமே.
சாதாரணமாக ஹைத்தி தலைநகர் ஒளிவெள்ளத்தில் மூழ்கியிருக்கும்.(சில நேரங்களில் ஏற்படும் கரண்ட் கட்டைத்தவிர). ஆனால் கடும் பூகம்பம் ஏற்பட்டபிறகு ஜெனரேட்டர்கள் பயன்படுத்தும் சில வீடுகளைத் தவிர கடும் இருள் நிலவுவதாக போர்ட் ஆஃப் பிரின்சிற்கு செய்தி சேகரிக்க வந்த பி.பி.சி நிரூபர் மாத்யூ ப்ரைஸ் கூறுகிறார்.
விமான நிலையத்தில் பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் துவங்கியதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஒரு சி130 ராணுவ விமானத்திலிருந்து பொருட்கள் இறக்கப்படுகின்றன.
விமானத்திலிருந்து நகரத்தை நோக்கிய பயணத்தில் கண்ட காட்சிகள் உள்ளத்தை உருக்குகிறது. நேராக பிளந்து நிற்கும் கட்டிடங்கள், அஸ்திவாரத்தின் மேல் இடிந்து கிடக்கும் மேல் கூரைகள்.புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனையின் அஸ்திவாரத்தை மட்டுமே அங்கு காணமுடிந்தது. தெருவில் எங்கும் மக்களைக் காண முடியவில்லை.
சிலர் எதனையோ முணுமுணுத்துவாறே நடக்கின்றனர்.வேறு சிலர் தளர்ந்து போயுள்ளனர். அவர்களால் வேறொன்றும் செய்ய இயலவில்லை. பூமியின் அதிர்வில் நடுங்கிப்போன அம்மக்கள் தங்களுக்கு பாதுகாப்பான இடமாக காண்பது நட்சத்திரங்களின் ஒளி உமிழும் தெருக்களைத்தான். அவர்களுக்குத் தான் திரும்பிச் செல்ல வீடுகள் இல்லையே. இரவின் நிசப்தத்தை குலைக்கும் விதமாக பல இடங்களிலும் கைக்கொட்டி பாட்டு பாடும் சப்தமும் கேட்கிறது. தங்களுக்கு ஏற்பட்ட துயரத்தை மறப்பதற்காக பாடல்களை அவர்கள் பாடுகிறார்கள்.
தலைநகரில் அமைந்துள்ள பைக்ஸ் மருத்துவமனையில் கண்ட காட்சிகள் கொடூரமாகயிருந்தது. ஒரு இனப்படுகொலை நடந்த சூழலை அது ஏற்படுத்துகிறது. சில உடல்களில் தலைகள் மட்டும் அழுக்கடைந்த துணிகளால் போர்த்தப்பட்டிருக்கிறது. பெரும்பாலான உடல்கள் நிர்வாணமாக கிடத்தப்பட்டிருக்கின்றன.சிலரின் கால்கள் பிறரின் கால்களோடு கோர்த்துள்ளது. இறந்தவர்களில் குழந்தைகள் குறைவாகவே உள்ளனர். ஒரு மூலையில் வெள்ளை நூல்களால் தைக்கப்பட்ட நீல நிற ஆடையுடன் ஒரு குழந்தை கிடக்கிறது.எவரும் அதனை கவனிப்பாரில்லை.
இதற்கிடையே ஒரு போர்வையை விரித்து ஒருவர் படுத்துறங்குகிறார். ஆம் அவர்கள் பிணங்களுக்கிடையே உறங்குகிறார்கள். மருத்துவமனையிலோ ஒரு சில மருத்துவர்களும் குறைந்த அளவிலான மருந்துகளுமே உள்ளன. காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டவர்களால் போதிய மருந்துகள் இல்லாததால் மரணத்தை தழுவியுள்ளனர்.
சேறு புரண்ட தரையில் இரண்டுகால்களும் சேதமடைந்த நிலையில் தலையில் ஏற்பட்ட ஆழமான காயத்துடன் கிடக்கும் தனது மகளை பார்த்து கதறி அழுகிறார்.ஆனால் அவரை விட அவசர சிகிட்சைக்கு பலர் உள்ளதால் மருத்துவருக்கு அந்தப்பெண்ணை கவனிக்க நேரமில்லை. காவா?(இப்பொழுது எப்படியுள்ளது?) என்று அந்தப் பெண்னைப் பார்த்து தந்தை கேட்கிறார்? பரவாயில்லை என்ற ரீதியில் அந்தப்பெண் தலையாட்டுகிறார். அழுதுக்கொண்டிருக்கும் தந்தையை மேலும் கஷ்டத்திற்கு ஆளாக்கவேண்டாம் என்ற எண்ணமாகயிருக்கும். சிகிட்சை கிடைப்பது கடினம் என்பது அந்தப்பெண்ணிற்கு தெரிந்ததோ என்னவோ?
இதற்கிடையில் சுனாமி வரப்போவதாக சிலர் கிளப்பிவிட்ட வதந்தியால் பலரும் கிடைத்ததை பொறுக்கிக் கொண்டு தெருவுகளை நோக்கி ஓடுகின்றனர்.ஆம் இத்தகைய வதந்திகள் கூட அவர்களை பீதிக்குள்ளாக்கும் வண்ணம் அவர்களின் உள்ளங்களை பயம் பாடாய்படுத்துகிறது.
செய்தி:
செய்தி:
No comments:
Post a Comment