கட்டுப்பாடு இழந்து நிற்கும், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்றுவதில், கோஷ்டி தலைவர்கள் வரிந்துக்கட்டிக்கொண்டடு, டெல்லியில் காய்களை நகர்த்தி வருகின்றனர்.
முன்பு காங்கிரஸ் தலைவராக வாசன் பதவி ஏற்ற பின், மாநில நிர்வாகிகள் நியமிக்கபடவில்லை என்ற ஒரு குறையை தவிர, கட்சியை பலவீனப்படுத்தும் அளவிற்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை.அவர் தலைவராக இருந்த போது, 2004ல், லோக்சபா தேர்தல் வந்தது. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி, 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது.
அதன்பின், புதிய தலைவராக கிருஷ்ணசாமி பதவி ஏற்றார்.இவர் பதவி ஏற்றும் மாநில நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. இவர் தலைவர் பதவியில் இருந்த போது, சட்டசபை தேர்தலை காங்கிரஸ் சந்தித்தது. அதன்பின், 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, கிருஷ்ணசாமி தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, தங்கபாலு தலைராக்கப்பட்டார்.லோக்சபா தேர்தலில், தி.மு.க.கூட்டணியில் 10 எம்.பி. சீட்டுகளிலிருந்து, 13 சீட்டுகளாக பெற்றுக் கொண்டாலும், ஆறு பேர் மட்டும் தான் எம்.பி.யாக வெற்றி பெற்றனர்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.கூட்டணியில், காங்கிரஸ் 63 சீட்டுகளை பெற்றாலும், தகுதியில்லாத வேட்பாளர்கள் தேர்வு, வேட்பாளர்கள் தேர்வில் குளறுபடி போன்றவை காரணமாக தங்கபாலுவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு, காங்கிரசில் கலவரம் நடந்தது. கட்சியின் கட்டுப்பாடு சீர்குலைந்து, தடி எடுத்தவர்கள் தண்டல்காரர்கள் என்பது போல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக, காங்கிரசார் உள்குத்து வேலைகளில் ஈடுப்பட்டனர்.
தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான ரிசல்ட் வந்தால் தான் தங்கபாலு தலைக்கு மேல் தொங்கும் கத்தி விலகும். இல்லையென்றால், அவரது பதவி பறிபோவது உறுதி என்கிறது காங்கிரஸ் வட்டாரம். தமிழக சட்டசபை தேர்தல் முடிவு தலைகீழாக இருக்குமானால், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் நாற்காலி பறிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
தேர்தல் முடிவு வெளிவருவதற்கு முன்பே, டில்லியில் கோஷ்டி தலைவர்கள் அனைவரும் சோனியாவை சந்தித்து தமிழக காங்கிரஸ் நிலவரத்தை விலாவாரியாக விளக்கியுள்ளனர். ரிசல்ட் வந்த பின் முடிவு எடுக்கலாம் என, மேலிடம் காத்திருக்கிறது. இந்நிலையில், அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தற்போதைய நிலையில் மத்திய அமைச்சர்கள் வாசன், சிதம்பரம் ஆகிய இருவரில் ஒருவரை தலைவராக நியமித்தால் தான், கட்சி பலப்படுத்தப்படும் என்ற நிலை உருவாகியுள்ளது. கட்சியைகட்டுக்கோப்புடனும், எழுச்சியுடனும் நடத்தி செல்வதற்கு இந்த இரு தலைவர்களால் தான் முடியும் என்பது தொண்டர்களின் எண்ண ஓட்டம்.
ஆனால், சிதம்பரத்தை பொறுத்தவரையில், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சராக இருப்பதால், அவரால் அப்பதவியை விட்டு விலகி, மாநில தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ள விரும்ப மாட்டார். ஆனால், தன் ஆதரவாளரும், கடலூர் எம்.பி.யுமான, கே.எஸ்.அழகிரிக்கு தலைவர் பதவியை பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் சிதம்பரம் ஈடுபட்டுள்ளார்.
"தனக்கு மத்திய அமைச்சர் பதவியும், மாநில தலைவர் பதவியும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். ஐந்தாண்டுகள் வரை சுதந்திரமாக செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டும்' என்பன உள்ளிட்டநிபந்தனைகளுக்கு மேலிடம் பச்சைக் கொடி காட்ட வேண்டும் என வாசன் விரும்புகிறார். அவரது விருப்பம் நிறைவேறும் பட்சத்தில், தலைவர் பதவி ஏற்றுக் கொள்வதற்கு அவர் தயாராக இருக்கிறார்.இரண்டையும் தர டில்லி மேலிடம் மறுக்குமானால், மத்திய அமைச்சர் பதவியில் தொடரவும், தன் ஆதரவாளர்களான, எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரில் ஒருவருக்கு மாநில தலைவர் பதவியை வழங்க அவர் பரிந்துரைப்பார் என்று கூறப்படுகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், மாநில தலைவர் மற்றும் செயல் தலைவர் பதவி வகித்த போது, கட்சி பலமாகவே இருந்தது. எனவே, அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால் கட்சியை தூக்கி நிறுத்துவார் என, அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.தனக்கு பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாக பரபரப்பாக பேட்டி தரும் இளங்கோவன், தேர்தல் ரிசல்ட் வரை அமைதி காத்து வருகிறார்.
இவர்கள் போக, சுதர்சன நாச்சியப்பன், வசந்தகுமார், ஜெயக்குமார் போன்றவர்களும் தலைவர் பதவியை எதிர்பார்த்து டில்லியில் காய்களை நகர்த்தி வருகின்றனர் என்கிறது காங்கிரஸ் வட்டாரம்.
No comments:
Post a Comment