அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, May 5, 2011

தொடரும் சான்றுகள்.


மதீனாவில் ஒருநாள்!

மேகங்கள் திரண்டு வானை மூடிக் கொண்டன. அவற்றின் பின்னே சூரியன் மறைந்து கொள்ள, பகல் தன் வெளிச்சத்தை இழந்தது. அதைக் கண்டு வேகமாய்த் தம் வீட்டிற்குத் திரும்பினார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அவர்களது முகத்தில் பெருங் கவலை. சற்றுக் கழித்து வீட்டிற்கு வெளியே சென்று அண்ணாந்து பார்த்தார்கள். சிறிது நேரம் கழித்து, திரண்ட மேகங்கள் மழை பொழிய ஆரம்பித்தன. அந்த மழையைக் கண்டவுடன்தான் நபியவர்களின் முகத்தில் நிம்மதியும் ஆனந்தமும் வெளிப்பட்டு கவலை மறைந்தது.

இதையெல்லாம் நபியவர்களின் மனைவி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா கவனித்துக் கொண்டேயிருந்தார்கள். பெரும் ஆச்சரியம் அவர்களுக்கு. கேட்டேவிட்டார்கள், "மழை வருமுன் உங்கள் முகத்தில் ஏன் அந்தக் கவலை?"

"ஆது இன மக்கள் சந்திக்க நேர்ந்த விதியோ என்ற கவலை" என்று நபியவர்களிடமிருந்து பதில் வந்தது. தொடர்ந்து குர்ஆனின் சூரா அல்-அஹ்காஃபின் 24ஆவது வசனத்தில் ஆது மக்கள் கூறியது பதிவாகியிருந்ததை நினைவுபடுத்தினார்கள் நபியவர்கள்.

ஆனால் (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகம்போல் வருவதைக் கண்டதும், "இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்" எனக் கூறினார்கள்; "அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அந்தக் (கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது"

அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்கள்! மிகச் சிறந்த ஆன்ம பலம் அவர்களின் வலிமை; அத்தகு நபி, திரண்டு வரும் மேகத்திற்குக் கவலை கொள்கிறார்கள்.

அத்துடன் மட்டுமல்லாமல் பலமான காற்று வீசும்போதெல்லாம் இறைவனிடம் இறைஞ்சுவார்கள், "யா அல்லாஹ்! இந்தக் காற்றின் மூலம் அதில் அடங்கியிருக்கும் நன்மைகளை உன்னிடம் வேண்டுகிறேன். இது நன்மையுடன் உன்னால் அனுப்பப்பட்டதாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன். இதில் அடங்கியுள்ள தீமைகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். இது தீது விளைவிக்க உன்னால் அனுப்பப்பட்டதாக இருக்கக் கூடாது என்று ஆதரவு வைக்கிறேன்"

வேகமாய் வீசும் காற்றிற்கும் அச்சம். ஏன் அப்படி? வரலாறுகளை அவர்கள் அறிந்திருந்ததால்!

"ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக" என்று இறைவன் திருமறையில் சூரா அந்அஃராபின் 176ஆவது வசன இறுதியில் அறிவுறுத்துகிறானே, அதை அவர்கள் நன்கு புரிந்து வைத்திருந்ததால்! அந்த வரலாறுகளில் பொதிந்திருந்த நீதியையும் பாடங்களையும் அவர்கள் தெளிவுற உணர்ந்திருந்ததால்!

என்ன வரலாறுகள் அவை? என்னதான் அந்த நீதிக் கதைகள்?

இம்மை, மறுமை; சொர்க்கம், நரகம்; நன்மை, தீமை; சட்டம், ஒழுங்கு; இப்படியெல்லாம் குர்ஆனில் தெரிவித்துக் கொண்டேவரும் இறைவன், ஆங்காங்கே கடந்துபோன நிகழ்வுகளைச் சொல்கிறான் - வரலாற்று நிகழ்வுகள்.

"(நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்தக் குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் - இதற்குமுன் (இது குறித்து) ஏதும் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர்" என்று சூரா யூஸுபில் 3ஆவது வசனமாக அதை நபியவர்களிடமே அவன் கூறுகிறான்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர் இப்புவியில் பல சமூகங்கள் வாழ்ந்து மறைந்தன. அவர்கள், அவர்களுக்கு அனுப்பப்பட்ட நபி, அப்பொழுது நடந்த நிகழ்வுகள் என்று சில சமூகங்களைப் பற்றிய பழைய வரலாறுகள் குர்ஆனில் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்தச் சமூகங்கள் மெதுவே, மெதுமெதுவே நேர்வழியிலிருந்து மிக இலேசாகக் கிளை பிரியும். அப்படி மிக இலேசாக மாறும் கிளைப்பாதை தொடர்ந்து தொடர்ந்து ஒருகட்டத்தில் நேர்வழிக்குச் சம்பந்தமில்லாமல் வெகு தூரமாய் விலகிவிட்டிருக்கும். சரிசெய்ய அவர்கள் மத்தியில் ஒரு நபியை அனுப்புவான் இறைவன். வெகு எளிய மொழியில், சுற்றி வளைப்பது என்று எதுவுமே இல்லாமல் அந்த இறைத்தூதரும் அந்த மக்களின் பிழையை அவர்களின் முகத்தில் விரல் நீட்டிச் சொல்லிவிட்டு மீண்டும் நேர்பாதையில் இணைந்து கொள்வதற்கான வழிமுறைகளைச் சொல்லிவிடுவார்.

ஏற்றவர்கள் புண்ணியம் தேடிக்கொள்ள, "நேர்வழியாவது, மண்ணாவது" என்று நகைப்பும் அக்கிரமும் அகங்காரமும் தீமையும் பாவமும் அழிச்சாட்டியமும் என்று மிஞ்சி நிற்பவர்கள், அந்த நபியிடமும் இறைவனிடமும் அசட்டுத்ததனமாய்ச் சவால் விடும்போது வந்து சேர்கிறது தண்டனை. அந்த மக்கள் சமூகத்தைப் புரட்டிபோடும் தண்டனை.

ஆது சமூகம் என்று மேலே பார்த்தோமல்லவா, யார் அவர்கள்?

ஏக இறைவனை நிராகரித்துவிட்டு இணை வைக்க ஆரம்பித்திருந்தார்கள் அந்த மக்கள். தங்கள் விருப்பத்திற்கு உகந்தவாறு மூன்று சிலைகள் செய்துவைத்துக் கொண்டு, ‘இவர்கள்தாம் எங்களின் கடவுளர்கள். இவர்களது பெயர்கள் சமதா, சமூதா, ஹாரா’ என்று அவற்றிற்கு பெயரிட்டுவிட்டு வழிபட ஆரம்பித்தார்கள். அல்லாஹ் அந்த மக்களில் இருந்தே அவர்களுக்கு ஹுது என்பவரை நபியாகத் தேர்ந்தெடுத்தான். 'அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்’ என்றான். ஹுது அலைஹிஸ்ஸலாம் தம் மக்களிடம் சென்றார்; ஏகத்துவத்தை எடுத்துச் சொன்னார்.
அனைத்தையும் கேட்டுக் கொண்ட அவர்கள், "எங்களைப்போல் நீயும் ஒரு மனிதன்தான். இப்படியெல்லாம்கூட நீ பொய்ச் சொல்வாயா? அதெல்லாம் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று சொல்லிவிட்டார்கள்.

ஆது மக்களுக்கு மகா வலிமையைத் தந்திருந்தான் இறைவன். நவீன வசதிகள் எதுவும் இல்லாத அந்தக் காலத்திலேயே ‘உசர உசரமாய்’ தூண்களெல்லாம் அமைத்து, பிரம்மாண்டமாய் நகரம் அமைத்து, உயரமான குன்றுகளிலெல்லாம் மிகப் பெரும் மாளிகைகளும் கோட்டைகளும் அமைத்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

மனிதனுக்கு வலிமை ஏற்படுகிறது; அதைக் கொண்டு அவனால் இவ்வுலகில் ஏதோ சில பிரம்மாண்ட செயல்கள் புரியமுடிகிறது; அதைப்பார்த்து மக்களில் சிலர் மூக்கின்மீது விரல் வைத்து ஆச்சரியப்படுகிறார்கள். அவ்வளவுதான்! அடுத்து என்ன நிகழ்கிறது? அந்த மனிதனுக்கு அது அளவிலா மமதையையும் ‘தான்’ என்ற செருக்கையும் தந்து விடுகிறது. அது அத்தனையும் ஆது இன மக்களுக்கு வந்து சேர்ந்தது. தங்களை யாராலும் அசைக்கமுடியாது என்று திட்டவட்டமாய் நம்ப ஆரம்பித்து விட்டார்கள் அவர்கள்.

ஹுது (அலை) சொன்ன உபதேசங்களெல்லாம் செவிடன் காதில் வந்துவிழுந்த சங்கொலி ஆகிப்போனது. ஆனாலும் விடவில்லை; அலுக்காமல் தம் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தார் ஹுது! ஆரம்பத்தில் இருந்த நையாண்டி மறைந்து எரிச்சலும் கோபமும் அதிகமாகி ‘என்ன இந்த ஆளுடன் ரோதனை! தம் இஷ்டத்திற்கு வீண் மிரட்டல் மிரட்டிக் கொண்டிருக்கிறார்’ எனறு நினைத்தவர்கள் இறுதியில் அவரிடம், "நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டுவாரும்" என்று சொல்லிவிட்டார்கள்.

சவால்! தங்களது வலிமை உசத்தி என்று அசட்டுத்தனமாய் நம்பி, இறைவனுக்கே சவால்!

‘இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்?’ என்று வந்தது அது. இறைவன் அனுப்பிவைத்த தண்டனை வந்தது!

அடர்ந்து திரண்டு கருமேகம் அவர்களை நோக்கி வர, ‘வளம் பெருக மழை வரப்போகிறது பார்’ என்று ஆவலுடன் காத்திருந்தார்கள் அவர்கள். வந்து சேர்ந்ததோ கொடுமையான சுழல்காற்று. கூடவே பேரொலி. சுற்றி வளைத்தது அவர்களை. வந்தது, நிகழ்ந்தது, முடிந்தது என்றில்லாமல் ஏழு இரவு, எட்டுப் பகல்கள் விடாமல் அடித்துத் துவைத்துச் சாய்த்துவிட்டுதான் ஒருவழியாய் ஓய்ந்தது அது. எல்லாம் முடிந்தபின் பார்த்தால் ஈச்சமரங்களை அடியுடன் பிடுங்கி எறிந்து போட்டால் எப்படி இருக்கும்? அப்படிக் கிடந்தார்கள் அந்த வலிமைமிகு ஆது மக்கள். அதற்குப்பிறகு அவர்களில் மிச்சம் மீதி என்று யாராவது? ம்ஹும்! ஒருவரும் இல்லை.

சுத்தமாக அந்த இனத்தைத் துடைத்துப் போட்டான் இறைவன்.

oOo

தபூக் மீது நபியவர்கள் தம் தோழர்களுடன் படை திரட்டிச் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் அல்-ஹிஜ்ரு என்றொரு பகுதி; அங்குப் படை தங்க நேர்ந்தது. அருகிலேயே ஒரு கிணறு. அதில் நீரிறைத்து அருந்திய முஸ்லிம்கள் தங்களிடமிருந்த மாவில் ரொட்டி சமைக்க அந்த நீரை எடுத்து உபயோகித்து மாவு பிசைந்தனர். அதைக் கேள்விபட்ட நபியவர்கள் உடனே விரைந்து வந்து, ‘பாத்திரத்தில் சமைத்துக் கொண்டிருப்பதைக் கொட்டிவிடுங்கள்; பிசைந்து வைத்துள்ள மாவை ஒட்டகங்களுக்கு அளித்துவிடுங்கள்; இங்குள்ள நீரை யாரும் உபயோகிக்க வேண்டாம்’ என்று கட்டளையிட்டார்கள்!

முன்னொரு காலத்தில் அல்-ஹிஜ்ருப் பகுதியில் ஸமூத் இனம் வசித்து வந்தது. புகழ் பெற்ற சமூகம். அந்தச் சமூகத்து மக்களும் இறைவனுக்கு இணைவைத்து உருவங்களை வழிபட ஆரம்பித்தனர். அந்த மக்களைச் சேர்ந்தவர் ஒருவர் இருந்தார் - ஸாலிஹ். இவரைத் தன் நபியாகத் தேர்ந்தெடுத்து அறிவித்தான் இறைவன். இறைக் கட்டளைப்படி தம் மக்களிடம் சென்றார் ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம். "என் மக்களே! அல்லாஹ்வை வழிபடுங்கள். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. மண்ணிலிருந்து உங்களை உருவாக்கி அதில் உங்களை வாழ வைத்துள்ளான். அவனிடம் பாவ மன்னிப்புக் கேளுங்கள். நிச்சயமாக இறைவன் அருகில் இருக்கிறான்; செவிமடுக்கிறான்."

அதைக் கேட்ட அவர்கள், "ஓ ஸாலிஹ்! நம்ம ஆளு நீ! உன் மீது மிகவும் நம்பிக்கை வைத்திருந்தோம். திடீரென்று நீ எங்களிடம் நம் மூதாதையர்கள் வணங்கியதெல்லாம் தப்பு, அதை வணங்கக்கூடாது என்று சொல்கிறாய். எங்களுக்கு என்னவோ உன் மீது சந்தேகமாயிருக்கிறது" என்றனர்.

"நம்ப முடியவில்லையா? இறைவனிடமிருந்து அத்தாட்சி கொண்டு வரட்டுமா?" என்று கேட்டார் ஸாலிஹ்.

"உனக்கு யாரோ வசியம் செய்துவிட்டார்கள் போலிருக்கிறது. நீயும் எங்களைப்போல் ஒருவன். நீ சொல்வதெல்லாம் உண்மையென்றால் அத்தாட்சி கொண்டுவா பார்ப்போம்."

இறைவன் மாயம் புரிந்தான். பாறையிலிருந்து ஓர் ஒட்டகம் வந்தது! பொம்மை ஒட்டகமல்ல! தோலும் சதையிலுமான உயிருள்ள பெண் ஒட்டகம்! பாறையில் செடி முளைத்தாலே ஆச்சரியமாய் இருக்கிறது. ஒட்டகமே வந்தால்? எவ்வளவு தெளிவான அத்தாட்சி அது? சில மக்கள் உடனே நம்பிக்கைக் கொண்டுவிட்டார்கள். மற்றவர்களுக்கு அப்பொழுதும் முழுநம்பிக்கை வரவில்லை.

ஸாலிஹ் அவர்களிடம், "இந்த ஒட்டகத்தை அதன் போக்குக்கு நீங்கள் விட்டுவிட வேண்டும். அதுவாய் நிலத்தில் மேய்ந்து உண்டு கொள்ளும். இங்குள்ள கிணற்றில் நீர் அருந்திக் கொள்ள நமக்கென ஒருநாளும் ஒட்டகத்திற்கு ஒருநாளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டகத்தை நீங்கள் தீண்டவோ சில்மிஷம் செய்யவோ கூடாது. அதுதான் உங்களுக்குக் கட்டளை."

இந்த ஸமூது மக்களுக்கும் இறைவன் அளப்பரிய ஆற்றலைக் கொடுத்திருந்தான். அந்தக் காலத்தில் என்ன பெரிய மக்கள் தொகை இருந்திருக்கப்போகிறது. தரிசு தரிசாய் எவ்வளவு நிலம் இருந்திருக்கும்? இருந்தாலும் மலைப் பாறைகளைக் குடைந்து குடைந்து அதில் இல்லம் அமைத்திருந்தார்கள் அவர்கள். மிகவும் பலமான இருப்பிடம்! காற்று, மழை, புயல் என்று எதுவும் இலேசில் தாக்க முடியாது. மிகப் பத்திரமாய் இருந்தார்கள்.

திறமையும் பத்திரமும் மனிதனுக்கு ஏற்படும்போது செருக்கும் மமதையும் ஒன்றாய்ச் சேர்ந்து, பலமாய் அவன் மனதில் புகுந்துவிடுகின்றன. அந்தச் செருக்கும் இறுமாப்பும் ஸமூது மக்களின் கண்களை மறைக்க, "நீ நம்புவதை எல்லாம் எங்களால் நம்பமுடியாது" என்று மறுத்துவிட்டனர். அத்துடனாவது விட்டிருக்கலாம் இல்லையா? சதி செய்தார்கள்!

‘என்னவோ மந்திரம் செய்து ஒட்டகத்தை உலவ விட்டிருக்கிறாரே, அதைப் போட்டுத் தள்ளினால் போதும். இந்த விஷயத்தை தீர்த்துவிடலாம். அடுத்து ஸாலிஹையும் அவர் குடும்பத்தையும்கூட கொன்றுவிடலாம். யாராவது கேட்டால் நமக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிவிடலாம்.’
வெறும் ஒன்பதுபேர் கூடித் திட்டம் தீட்டினார்கள். பிறகு மற்றவர்களையும் இணங்க வைத்தார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த இறைவனும் திட்டம் தீட்டினான்.

ஒருநாள் அந்த ஒட்டகம் கிணற்றுக்கு நீர் அருந்த வந்தது. மறைந்து காத்திருந்த அந்த அயோக்கியர்கள் ஒட்டகத்தின்மீது அம்பெய்தார்கள்; பிறகு பாய்ந்து தாக்கினார்கள்; கொன்றார்கள். இறந்துபோனது ஒட்டகம்.

பிறகு ஸாலிஹிடம் சென்று, "என்னவோ மிரட்டல் விடுத்தாயே. நீர் தூதர்களில் ஒருவர் என்றால் எங்களுக்குப் பயமுறுத்தியதைக் கொண்டுவா பார்ப்போம்"

சவால்! இறைவனுக்கே சவால்!

"உங்களது இல்லங்களுக்குச் சென்று மூன்று நாட்கள் நீங்கள் வேண்டியதை அனுபவித்துக் கொள்ளுங்கள். அதுதான் கெடு. அதன்பிறகு தண்டனை வரும். இது பொய் ஆகாது" என்றார் ஸாலிஹ்.

"பார்ப்போம் அதையும்" என்று தங்களது இல்லங்களுக்குத் திரும்பியது அந்த கும்பல்.

சரியாக மூன்றாவது நாள். அதிகாலை நேரம் அது நிகழ்ந்தது. 'குகைக்குள் வீடு கட்டிப் புகுந்து கொண்டால் பாதுகாப்பு; தப்பித்து விடலாம் என்று நினைத்தீர்களா?' என்று இறைவன் பேரிடி ஒன்றை அனுப்பினான். சப்தமென்றால் சப்தம், உயிரைப் பறிக்கும் சப்தம் அது. கூடவே பலமான பூகம்பம் ஒன்று தாக்கியது. அப்படியே அவரவர் வீட்டில் இறந்து போனார்கள் அனைவரும். அதற்குமுன் அங்கு ஒரு சமூகம் வசித்ததா என ஆச்சரியப்படும்படி அந்த இடத்திலிருந்து அவர்களை அழித்து, துடைத்தெறிந்தான் இறைவன்.

"என்னுடைய சமூக மக்களே! உங்களுக்கு இறைவனுடைய செய்தியை எடுத்துச் சொன்னேன். நற்போதனை சொன்னேன். அதையெல்லாம் கேட்க மாட்டேன் என்று சொல்லிவிட்டீர்கள்."

வருத்தப்பட்டார் ஸாலிஹ்!

oOo

மத்யன் என்றொரு நகரம் இருந்தது. அந்த மக்களுக்கு அவர்களில் இருந்தே ஷுஐப் என்பவரை நபியாகத் தேர்ந்தெடுத்து அறிவித்தான் இறைவன்.

அந்த மக்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்றால் வியாபாரத்தில் அளவில் எடையில் தில்லு முல்லு. தங்களுக்கு வேண்டுமா, தேவைப்படும் எடையைவிட அதிகமாக எடுத்துக் கொள்வது; பிறருக்குக் கொடுக்க வேண்டுமா? அளவு குறைந்துவிடும். சாலைகளில் அமர்ந்து கொண்டு பாதசாரிகளை மறித்து அவர்களிடம் கொள்ளையடிப்பது அவர்களது அடுத்த பொழுதுபோக்கு. தவிர இதர அழிச்சாட்டியங்கள்.
ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு முறையாகச் செய்தியை எடுத்துச் சொன்னார். ‘இதோ பாருங்கள். ஒரே இறைவன். அவனை வணங்குங்கள். தெளிவான அத்தாட்சிகள் அளித்துவிட்டான் அவன். அளவில் எடையில் தில்லுமுல்லு செய்யாமல் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். அக்கிரமம் பண்ணிக்கொண்டு திரியாதீர்கள். சாலைகளில் அமர்ந்து கொண்டு கொள்ளையடிக்காதீர்கள்.’

கேட்பார்களா அவர்கள்? ‘சும்மா இருக்கமாட்டீரா நீர்? எங்கள் மூதாதையர் சொன்னபடி வணங்கிக் கொண்டிருப்பதையெல்லாம் நீர் சொல்வதைக் கேட்டு விட்டுவிட வேண்டுமா? எங்கள் சொத்து, எங்கள் பொருள், எங்கள் இஷ்டத்திற்கு அளவு குறைத்தோ கூட்டியோ விற்போம். உமக்கென்ன போச்சு? உம்மையும் உம்மை நம்பிக்கொண்டு இருப்பவர்களையும் ஊரைவிட்டுத் துரத்திவிடுவோம்; கல்லால் அடித்துக் கொல்வோம்’ என்றெல்லாம் மிரட்டல்விட ஆரம்பித்துவிட்டனர்.

சொல்லி சொல்லிப் பார்த்தார் அவர். கேட்டால்தானே?

ஒருநாள் அவர்களையும் பூகம்பமும் பேரிடியும் தாக்கியது. எல்லோரும் அப்படி அப்படியே தத்தம் வீடுகளில் இறந்துவிட்டனர். அதுவும் எப்படி? அவர்களது வீடுகளில் ஒருகாலத்தில் அவர்கௌல்லாம் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்று நம்பவே முடியாதபடி!

மத்யனுக்குப் பெரும் நாசம்.

oOo

பழங்காலத்தில் சோடோம் என்றொரு நகர் இருந்தது. அந்தக் காலத்தில் அது மிக முக்கியமான நகரம். அதில் வாழ்ந்துவந்த மக்கள் விவரிப்பிற்கும் அப்பாற்பட்ட ஒழுக்கங்கெட்டவர்கள். மகாக் கொடியவர்கள். விலங்குகளைவிடக் கீழானவர்களாக இருந்தனர். கொள்ளையடிப்பது அவர்களின் அடிப்படைத் தொழில்.

‘இதென்ன கொலை, கொள்ளை என்று எல்லோரும் செய்யும் பிசாத்து குற்றம்’ என்று அதற்குமுன் மனித சமூகத்தில் யாருமே செய்யாத புதியதொரு பாவச் செயலைக் கண்டுபிடித்தனர் அவர்கள். ஆணோடு ஆண் என்று ஓரினச் சேர்க்கை!

அதையும் கேளிக்கை விடுதிகளில், மக்கள் கூடும் பொது இடங்களில் என்று பலர் பார்க்குமளவில், எத்தகைய கூச்ச நாச்சமின்றி செய்வது மிகப்பழகிப் போய் அவர்களுக்கு இயல்பாகிவிட்டது. அவமானம் என்றொரு வார்த்தையே அவர்களது மொழியில் இல்லை என்றானது.
அந்த நகருக்கு, அவர்களுக்கு, லூத் அலைஹிஸ் ஸலாமைத் தன் நபியாக அனுப்பிவைத்தான் இறைவன். நபி இப்ராஹீமின் (அலை) சகோதரர் மகன்தான் லூத். அவர்களிடம் வந்தார் லூத். "என்ன கொடுமை இது? படைப்பினங்களிலேயே இதற்குமுன் எவரும் எதுவும் செய்யாத ஒரு பாவத்தைப் புரிகிறீர்கள். உங்களுக்கு மனைவிகளாக அமைய பெண்களை இறைவன் படைத்திருக்க ஆண்கள் ஆண்களுடன் காமம் கொள்கிறீர்களே? எல்லை மீறும் பாவம் புரியும் மக்களாய் இருக்கிறீர்கள் நீங்கள்."

"இதோ வந்துட்டாரய்யா ஒழுக்க சீலர். ஊரை விட்டுத் துரத்துங்கள் இவரை."

சொல்லிப் பார்த்தார்; விவரித்துப் பார்த்தார்; கதறிப் பார்த்தார்; இறைவனின் தண்டனையைச் சொல்லி பயமுறுத்திப் பார்த்தார். ம்ஹும்! எதுவும் அவர்கள் காதில் விழவில்லை. "நீ உண்மையானவன் என்றால் உன் இறைவனின் தண்டனையை எங்கள்மீது கொண்டுவா பார்ப்போம்" என்று சொல்லிவிட்டார்கள்.

சவால்! இறைவனுக்கே சவால்!

இறுதியில் ஒருநாள் இறைவன், நபி லூத்திடம் மூன்று வானவர்களை அனுப்பினான், "இன்றே கடைசி. நாளை இவர்கள் கதை முடிந்தது" என்ற செய்தியுடன்! கொடுமையிலும் கொடுமை பெருங்கொடுமை என்னவென்றால் அழகிய ஆண்களின் தோற்றத்தில் லூத் வீட்டிற்கு விருந்தினர்களாக வந்தார்களே அந்த மூன்று வானவர்களையும், "எங்கள் வசம் எங்களது ஆசை தீர்த்துக்கொள்ள அனுப்பிவை" என்று பெரியதொரு ஆண்கள் கூட்டம் நபி லூத் (அலை) வீட்டை முற்றுகையிட்டு விட்டது.

"என்னடா நீங்கள்? இப்படி என் விருந்தினர் எதிரே மானத்தை வாங்குகிறீர்கள்? நம் இனத்துப் பெண்கள் இதோ. இவர்களை மனைவியாக ஏற்றுக்கொண்டு உங்கள் இச்சையைத் தீர்த்துக் கொள்ளுங்கள்" என்று லூத் (அலை) கெஞ்ச, கேட்பவர்களாய் இல்லை அந்த அயோக்கியர்கள். அந்த அயோக்கியர்களுக்கு நபி லூத்தின் மனைவியும் உடந்தை.

லூத் (அலை) அவர்களின் மனைவியைத் தவிர, அவரையும் அவர்தம் குடும்பத்தாரையும் இரவோடு இரவாக திரும்பிப் பாராமல் ஊரைவிட்டு வெளியேறச் சொன்னார்கள் இறைவனின் வானவர்கள். அவ்வாறே வெளியேறினார் லூத்.

மறுநாள் அதிகாலை.

அந்நகரைத் தோசையைப்போல் திருப்பிப் போட்டான் இறைவன்! சுடப்பட்ட செங்கற்கள் வானிலிருந்து அவர்கள் மீது மழையாய்ப் பொழிந்தன! ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவரின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

அழிந்தது சோடோம்!

oOo

முன்னொரு காலத்தில் இப்படியொரு சமூகம் வாழ்ந்தது; இன்னின்ன பாவங்கள் புரிந்தார்கள்; அவர்களை அழித்தேன் என்கிறான் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா. இன்றைய காலகட்டத்தில் இப்பொழுதுள்ள மனித சமூகம் முன்சென்ற அத்தனை சமூகங்கள் செய்த அத்தனை பாவங்களையும் குற்றங்களையும் அக்கிரமங்களையும் அழிச்சாட்டியத்தையும் ஒட்டு மொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு எத்தகைய கூச்சமோ, அருவருப்போ, பயமோ, இன்றிச் செய்து கொண்டிருக்கிறது. பாவங்களெல்லாம் நியாயங்களாகவும், நியாயங்கள் எல்லாம் அக்கிரமமாகவும் ஆகிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் ஊரிலும் சமூகத்திலும் இணை வைப்பு; விஞ்ஞான முன்னேற்றம் அளித்துள்ள மமதை, அகங்காரம், இறுமாப்பு; கொலை, கொள்ளை; ஆச்சாரமாகிப்போன விபச்சாரம், களவு; எங்கோ நடந்தது, யாரோ செய்தார்களாம் என்பதெல்லாம் பழம் செய்தியாகி மிகவும் இயல்பாகிப் போய்விட்ட ஓரினச் சேர்க்கை; வெட்கம் என்ற சொல்லே மறந்து இந்த அயோக்கியத்தனத்திற்கு அங்கீகாரம் கேட்டுத் திரியும் அமைப்புகள்!

என்ன ஆகும்?

நினைவைக் கிளறி நினைவூட்ட, இயற்கைச் சீற்றம் வந்து சேரும்! அனுப்பி வைப்பான் இறைவன். ஆனால் மக்களின் அறிவியல் முன்னேற்றமானது பௌதிக ரீதியாய், தர்க்க ரீதியாய் ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரணம்தேட முற்படுகிறதே தவிர "இறைவன் – இறைச் சக்தி" எனும் அடிப்படையைத் தனது சிந்தையில் இருந்து முழுக்க முற்றிலும் துடைத்துப் போட்டுவிட்டது மிகப்பெரும் கொடூரம்! அழிவின் நிச்சயத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் போக்கு இது.

பூகம்பம், சுனாமி, புயல், எரிமலை என்று ஒவ்வொரு சீற்றத்தையும் அது எப்படி ஏற்படுகிறது என்று கண்டுபிடித்து வைத்திருக்கிறோம்.
பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்திட்டுகள் (Plates) நகர்ந்து பூமி அதிர்கிறதா? அது நிலநடுக்கம் என்கிறார்கள். அறிவியல் அதுபற்றி அறிந்து மேலும் தகவல் சொல்கிறது.

பூமியின் மேற்பரப்பு (Lithosphere) பெரும் பாளங்களாக அமைந்துள்ளது; இவை நகரும் பிளேட்டுகளாக இருக்கின்றன; நிலப்பரப்பிலும், நீரின் அடியிலுமாக உள்ள இவற்றில் ஏழு பிளேட்டுகள் மிகப் பெரியதாகவும், குறைந்தது ஒரு டஜன் சிறிய பிளேட்டுகளும் உள்ளன. இந்த ஏழு பெரும் பிளேட்டுகளில் ஐந்து கண்டங்களும் பசிபிக் முதலிய சமுத்திரப் பகுதிகளும் அடக்கம். இந்தப் பிளேட்டுகள் நாம் சாப்பிடப் பயன்படுத்தும் பிளேட்டுகள்போல் இல்லாமல் ஒவ்வொன்றும் சுமார் 80 கி.மீ. வரை தடிமன். சாம்பாரில் கொதிக்கும் கத்தரிக்காய்போல் இதனடியில் பாறைகளே கொதிக்கும் குழம்பாக இருப்பதாலும், பூமியின் சுழற்சி வேகத்தில் இந்தப் பாறைக் குழம்பு நகர்வதாலும், மேலே இருக்கும் அம்மாம்பெரிய பிளேட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து கொண்டே நகர்ந்தும் செல்கின்றன.

இந்தப் பிளேட்டுகள் ஒரு வருடத்திற்கு ஒரு செ.மீ. முதல் சுமார் 13 செ.மீ. வரை நகர்கின்றன. இது நமது உலக வேகத்திற்கு மிக நுண்ணியதாக இருந்தாலும் இந்த பிளேட்களின் லேசான உராய்வும்கூட பெரும் பூகம்பம் ஏற்படுத்தக் கூடியவை.

Dim lights Embed

Tornado கேள்விபட்டிருக்கிறீர்களா?

Tornado என்பது சுழற்காற்று. இது இந்தியாவில், ஆசியாவில் அதிகம் பரிச்சயமில்லாத ஒன்று. ஆனால் அமெரிக்காவில் இது உண்டு. ஆண்டுதோறும் நம் ஊரில் பருவ மழை தவறினாலும் தவறலாம், அமெரிக்காவில் tornado தாக்கும் மாநிலங்கள் சில உள்ளன, அங்கு இது வரத் தவறுவதில்லை. இதோ கடந்த வாரம்கூட ஒன்று.

Tornado என்பது என்ன?

அடர்த்தியாய் மேகம் ஒன்று திரண்டு வரும். கூடவே மூர்க்கமான, பயங்கரமான காற்று. சுழலும் தூண் போன்ற இந்தக் காற்று மேகத்தையும் பூமியையும் தொட்டு்க் கொண்டு வரும். பெரும்பாலும் கூம்பு வடிவமுள்ள புனல் (funnel) போல் இருக்கும். கூம்பு பூமியை உரசிக் கொண்டிருக்கும்.

ஓர் ஊரின் உள்ளே அந்தக் காற்று புகும்போது அங்குள்ள புழுதி, குப்பை, ஆடு, மாடு, வீடு, ட்ராக்டர், நெடு நெடு கட்டடம் என்று எல்லாமே ஏதோ க்ரைண்டரில் சுழலும் மாவுபோல் அந்தக் காற்றுக்குள் சிக்கி சொப்பு பொம்மைகளாகிவிடும். காற்றின் வேகம் மணிக்கு 177 கி.மீட்டரிலிருந்து 480 கி.மீ. வரை மட்டுமே. இந்தச் சுழற்காற்று கூம்பின் அகலம் 80 மீட்டர். பல கிலோமீட்டர்களுக்குப் பூமியை உரசிக் கொண்டே சென்று மறையும். மிகத் தீவிரமான சுழற்காற்று உண்டு. அது 3 கி.மீ. அகலம் இருக்கும் 100 கி.மீ. வரை பூமியைக் கிழித்துக் கொண்டே செல்லும். பயங்கரப் பின்னணி இசையாக அச்சுறுத்தும் உறுமல் சத்தம் உண்டு. ஜெட் இன்ஜின் போலவோ, வேகமாய் சீறிப்பாயும் ரயில் வண்டி போலவோ, பொத்துக்கொண்டு கொட்டும் நீரருவி போலவோ சப்தம். நிச்சயம் மனதை நிலைகுலைய வைக்கும் சப்தம்.

இவை அத்தனையும் சில நிமிடங்களுக்குத்தான். அது கடந்து முடிந்தபின் பார்த்தால் அகோரம். போரில் குண்டுகள் வீசி மனிதன் நிகழ்த்தும் நாசமெல்லாம் இதனுடன் ஒப்பிடும்போது ஒன்றுமே இல்லை. சில சிறு கிராமங்கள் முற்றிலுமாய் அழிந்திருக்கின்றன.
இதைக் கடந்த 140 ஆண்டுகளாய் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் கடந்த 60 ஆண்டுகளில் மிகவும் முனைப்புடன் ஆராய்ந்திருக்கிறார்கள். இருந்தாலும் இதன் விஷயங்கள் இன்னும் மர்மமானவை என்கிறது விஞ்ஞானம். ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் சில ஆண்டுகளுக்குமுன் வரை சுனாமி என்றொரு வார்த்தையே இருந்த்தில்லை. நமக்கெல்லாம் வெகு பரிச்சயம் பினாமி மட்டுமே. இன்று இந்த ஆழிப்பேரலையின் பேரழிவு எல்.கே.ஜி. பாடப்புத்தகங்களிலும் இடம்பெறுமளவு பிரபலமடைந்துவிட்டது.
இறைவன் ஏதொன்றையும் பொழுது போக்கிற்காகவும் விளையாட்டிற்காகவும் படைக்கவில்லை; ஏதொரு காரணமும் இன்றி அழிப்பதுமில்லை. ஆனால் கேளிக்கைகள் பெருகப் பெருக, உல்லாசமே வாழ்க்கை நியதி என்றாகிவிட, எந்தவொரு பெரும் பேரழிவும் மரத்துப்போன நம் உள்ளங்களை அதிகம் அசைப்பதில்லை. "உச்" கொட்டிவிட்டு அடுத்தச் செய்திக்குத் தாவிவிடும் அளவிற்குப் பற்பல உருப்படியற்ற சங்கதிகள் நம் கவனத்தை ஆக்கிரமித்துவிட்டன.

மனிதன் அறிவு, அறிவு என மனிதன் தேடிப்பெறும் எதுவொன்றும் இறைவன் மீது பயத்தையும் பக்தியையும் அதிகரிக்க உதவாவிடில் அது எத்தகு மேதமை பொருந்திய அறிவாக இருந்தாலும் மலம் துடைத்து எறிந்த காகிதத்தின் அளவிற்குக்கூடப் பயனற்றது.

oOo

இந்த வரலாறுகளையெல்லாம் சொல்லிக் கொண்டே வரும்போது ஆங்காங்கே இறைவன் சில கேள்விகளும், அறிவுரைகளும் சொல்கிறான். எக்கச்சக்க செய்திகள் அதில் நமக்கு அடங்கியுள்ளன.

... நீங்கள் சொற்பத் தொகையினராக இருந்தீர்கள்; அவன் உங்களை அதிகத் தொகையினராக்கினான் என்பதையும் நினைவு கூருங்கள் - குழப்பம் செய்து கொண்டிருந்தோரின் முடிவு என்னுவாயிற்று என்பதைக் கவனியுங்கள் ... (என்றும் கூறினார்). (7:86)

... ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக. (7:84)

(அவ்வாறே அவ்வூரார், அழிந்தனர்) அறிவுள்ள சமூகத்தாருக்கு இதிலிருந்தும் நாம் ஒரு தெளிவான அத்தாட்சியை விட்டு வைத்துள்ளோம். (29:35)

நிச்சயமாக அவ்வூர் (நீங்கள் பயணம்) போய்வரும் பாதையில்தான் இருக்கிறது. (15:76)

இன்னும், நீங்கள் காலை-மாலை வேளைகளில் அவர்களின் (அழிந்து போன ஊர்களின்) மீதே கடந்து செல்கிறீர்கள். நீங்கள் (இதைக்கொண்டு) நல்லறிவு பெற மாட்டீர்களா? (37:137-138)

என் எச்சரிக்கையும் வேதனையும் (அம் மக்களுக்கு) எப்படி இருந்தன? (என்பதைக் கவனிக்க வேண்டாமா?) (54:30)

அவரைப் பொய்யர் என்றனர். ஆதலின் நாம் அவர்களை அழித்தோம்; நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை. (26:139)

ஆகவே, வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது - நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது - எனினும், அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை. (26:158)

நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை. (26:190)

திடமாக முஃமின்களுக்கு இதில் (தகுந்த) அத்தாட்சி இருக்கிறது. (15:77)

நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது. எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை. (26:174)

நோவினை தரும் வேதனையை அஞ்சுபவர்களுக்கு நாம் இதில் ஓர் அத்தாட்சியை விட்டு வைத்தோம். (51:37)

நிச்சயமாக இதில் சிந்தித்துப் பார்ப்போருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (15:75)

நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (54:22)

இறைவன் கூறும் பழைய சங்கதிகள் வெறும் பொழுதுபோக்குக் கதைகள் அல்ல. படிப்பினை பொதிந்தவை. அவன் அனுப்பிவைக்கும் சீற்றங்கள் மதசார்பற்றவை. Tornado, புயல், வெள்ளம் என்பதெல்லாம் அமெரிக்காவின் தனியுரிமையும் அல்ல; பூகம்பம், சுனாமி என்பது Made in Indonesia, Made in Japan -ம் அல்ல.

உமர் ரலியல்லாஹு அன்ஹு கலிஃபாவாய் இருக்கும்பொழுது ஒருமுறை மதீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்களையெல்லாம் அழைத்து உமர் சொன்னார், "மற்றொருமுறை நிலம் அதிர்ந்தால் நிச்சயமாய் நான் உங்களையெல்லாம் விட்டுவிட்டுச் சென்றுவிடுவேன்" (முஸன்னஃப் இப்னு அபீஷைபா 2/358) - மக்களே, பாவம் புரிவதை நிறுத்தித் தொலையுங்கள் - என்று அர்த்தம்.

நாமெல்லாம் உமரும் அல்ல. ஓடிஒளிய தூய நிலப்பகுதி என்று உலகில் இடமுமில்லை. நாம் நம் பாவத்தை உணர்ந்து அவற்றிலிருந்து மீண்டு வாழ்வதே நம்மால் ஆகக்கூடியது.

No comments: