கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக்கோரி இடிந்தகரையில் நடக்கும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று 3வது நாளாக பெருமணல் கிராம மக்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு கருதி அணுமின்நிலைய விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்கள் இன்றும் வேலைக்குச் செல்லவில்லை. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தை மூடக் கோரி இடிந்தகரை மற்றும் கூடங்குளம் சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
கூடங்குளம் அணுமின்நிலையம் அருகே வட்டார, கிராம மக்கள் முற்றுகை மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து போராட்டத்தைத் தொடர் உண்ணாவிரதமாக மாற்றினர்.
2வது நாளான நேற்று தொம்மையார்புரம் பொதுமக்கள் இடிந்தகரை லூர்துமாதா ஆலயம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, கூத்தங்குழி, உவரி, கூடங்குளம் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்.
3வது நாள் போராட்டத்தில் இன்று பெருமணல் மீனவ கிராம மக்கள் கலந்து கொண்டனர். மேலும் திருப்பூர் மக்கள் அமைப்பு இயக்கத்தைச் சேர்ந்த 25 பேரும், கேரளாவைச் சேர்ந்த சிலரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அணுமின் கழகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் குடியிருப்பான அணுவிஜய நகரியத்தில் இன்று காலை 5.30 மணிக்கு அணுமின்நிலை பகுதிக்குச் செல்ல கூடினர். அவர்களை ஏற்றி செல்வதற்காக பேருந்துகள் வரவழைக்கப்பட்டன. என்றாலும் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் அவர்களை அணுமின் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல மறுத்து விட்டனர். இதனால் 8வது நாளாக ஊழியர்கள் யாரும் பணிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த 8 நாட்களாக பராமரிப்பு பணிகளும் நடக்கவில்லை.
கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்து நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் நாளை கூட்டப்புளி கிராமத்தினர் கலந்து கொள்கின்றனர். இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் நாளை மீன் பிடிக்க செல்ல கூடாது; கடைகள் அடைக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. போராட்டம் காரணமாக கூடங்குளம் அணுமின்நிலையத்தின் முன்பு மற்றும் அணுமின் கழக ஊழியர்கள் குடியிருந்து வரும் அணுவிஜய நகரியத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment