அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, October 21, 2011

லிபிய முன்னாள் அதிபர் கடாபி சுட்டுக் கொலை !


சிர்தி (லிபியா): லிபிய முன்னாள் ஆட்சியாளர் கடாபி நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். பதுங்கு குழியில் மறைந்திருந்த அவர் மீது புரட்சி படை - நேட்டோ படை அதிரடி தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றது.
எண்ணெய் வளம் கொழிக்கும் லிபியாவை கடந்த 42 ஆண்டுகளாக தன்பிடியில் வைத்திருந்தவர் அதிபர் கடாபி. வயது 69. கடந்த பிப்ரவரியில் அவரது ஆட்சியில் அதிருப்தி அடைந்த இளைஞர்கள் தலைமையில் புரட்சி படை அமைந்தது. கடாபிக்கு எதிரான கிளர்ச்சி தொடங்கியது. அதை ஒடுக்க ராணுவத்தை ஏவினார் கடாபி. இருதரப்புக்கும் பயங்கர மோதல் நீடித்தது.

கடாபிக்கு எதிர்ப்பு: புரட்சி படைக்கு மக்கள் ஆதரவு அதிகரித்ததால் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் தலையிட்டு கடாபியை பதவி விலக வலியுறுத்தினர். மறுத்த அவர், கடைசி லிபியர் இருக்கும் வரை அன்னிய படைகளையும், எதிரிகளையும் எதிர்த்து போராடுவேன் என்றார். இதையடுத்து, ஐ.நா. அனுமதி பெற்று புரட்சி படைக்கு ஆதரவாக நேட்டோ படைகளும் கடாபியின் ராணுவம் மீது தாக்குதல் நடத்தின.
கடாபி மகன் பலி: ஒவ்வொரு நகராக முன்னேறிய புரட்சி படை, ஆகஸ்ட் 23ம் தேதி தலைநகர் திரிபோலியை சுற்றி வளைத்தது.அதிபர் மாளிகையை குறி வைத்து பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது கடாபி தப்பியதாக கூறப்பட்டது. அவரது மகன்களில் ஒருவர் பலியானார். தீவிரமடைந்த தாக்குதலில் கடாபி ஆதரவு படையினர் பின்வாங்கி ஓடினர். மோதலில் பலர் கொல்லப்பட்டனர். எஞ்சியவர்கள் தப்பி தலைமறைவாகினர். இதையடுத்து, அதிபர் மாளிகையை புரட்சி படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கொடி நாட்டினர்.
கடாபி சுற்றிவளைப்பு: அப்போது முதல் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை உதவியுடன் கடாபியை புரட்சி படையினர் தேடி வந்தனர். சிர்தி நகரில் நேற்று நடந்த தேடுதல் வேட்டையில், 
பதுங்கு குழியில் கடாபி தனது ஆதரவாளர்களுடன் மறைந்திருந்ததை புரட்சி படையினர் கண்டுபிடித்தனர். அவர்களை பிடிக்க முயன்றனர்.அப்போது இருதரப்புக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் கடாபி மீது குண்டுகள் பாய்ந்தன. படுகாயம் அடைந்து சரிந்த அவரை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

எனினும், சிறிது நேரத்தில் கடாபி இறந்தார். அவருக்கு வயது 69. இதையடுத்து, ஈராக்கை தொடர்ந்து லிபியாவிலும் அமெரிக்கா உதவியுடன் ஆட்சியாளர் கொல்லப்பட்டுள்ளார். கடாபியின் மறைவை புரட்சி படையினர் தலைநகர் திரிபோலியில் துப்பாக்கியால் வானில் சுட்டும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.
என்ன நடந்தது? இதுபற்றி தேசிய மாற்று ஆட்சி கவுன்சில் அதிகாரி அப்துல் மஜித் மேக்தா கூறுகையில், ‘‘சிர்தி பதுங்கு குழியில் இருந்து பிடிபட்ட கடாபி தப்ப முயன்றதுடன் அவரது ஆதரவாளர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதில் தாக்குதலில் கடாபி படுகாயம் அடைந்தார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்’’ என்றார்.
சுட்டு விடாதீர்கள்: இந்நிலையில், பதுங்கு குழியில் இருந்து கடாபியை வீரர்கள் வெளியே இழுக்கும்போது ‘சுட்டு விடாதீர்கள்’ என்று கூறியதாகவும் தகவல் வெளியானது. தனது ஆதரவாளர்களுடன் வாகனத்தில் அவர் தப்ப முயன்றபோது நேட்டோ படையினர் விமானத்தில் இருந்து குண்டு வீசியதில் கடாபி பலியானதாகவும் இருவேறு தகவல்கள் தெரிவித்தன.
கடாபியின் ஆதரவாளர்கள் மறைந்திருந்த ஒவ்வொரு பகுதியாக கடந்த சில நாட்களில் புரட்சி படை முன்னேறி வந்தது. 2 நாட்களுக்கு முன்பு லிபிய தலைநகர் திரிபோலிக்கு வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லரி, கடாபியை பிடிக்கும் வியூகம் பற்றி நேட்டோ, புரட்சி படையினருக்கு சில தகவல்களை கூறிச் சென்றதாக தெரிகிறது. 
அதன்பிறகு, சிர்தி பகுதியை நேற்று முன்தினம் படையினர் சுற்றி வளைத்து தாக்கினர். அதில் நேற்று கடாபி சுடப்பட்டு பலியானார்.சதாமுக்கு அடுத்ததாக... அரபு நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக எழும் கிளர்ச்சிக்கு இடையே ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் பிடித்து தூக்கிலிடப் பட்டார். அடுத்ததாக லிபிய முன்னாள் அதிபர் கடாபி கொல்லப்பட்டுள்ளது பல நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
கிளர்ச்சியால் எகிப்து, துனிசியா அதிபர்கள் பதவியிழந்து விட்ட நிலையில், எதிர்ப்பாளர்களை ஒடுக்கி வரும் சிரியா, ஏமன் ஆட்சியாளர்களுக்கு இது எச்சரிக்கையாக அமைந்துள்ளதாக சர்வதேச அரசியல் 
நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடாபியின் மகன்களில் ஒருவர் ஏற்கனவே கொல்லப்பட்ட நிலையில், ஒருவர் வெளிநாடு தப்பினார். நேற்று நடந்த சண்டையில் மேலும் 2 மகன்களும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments: