டெல்லி: மத்திய அரசு மீதான நம்பிக்கை தீர்மானம் மீதான வாக்கெடுப்பின்போது பாஜக எம்.பிக்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பான விவகாரத்தில் சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங் மற்றும் காங்கிரஸ் எம்.பி. அகமது படேல் ஆகியோர் குற்றமற்றவர்கள் என லோக்சபா கமிட்டி தீர்ப்பு வழங்கியுள்ளதை பாஜக கண்டித்துள்ளது.
இந்த விசாரணையில் முழு உண்மையும் வெளிவரவில்லை என்று அக் கட்சியின் எம்பியும் பணத்தை நாடாளுமன்றத்தில் வந்து கொட்டியவர்களில் ஒருவருமான அசோக் அர்கல் கூறியுள்ளார்.
அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்றதையடுத்து கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி லோக்சபாவில் நம்பிக்கை வாக்கு நடந்தது.
அப்போது பாஜக எம்.பிக்கள் அசோக் அர்கால், பகன் சிங் குலஸ்தே, மகாவீர் பகோரா ஆகியோர் ரூ. 3 கோடி பணத்தைக் கொண்டு வந்து சபாநாயகர் இருக்கை முன்பு கட்டுக் கட்டாக கொட்டினர். இதனால் நாடே பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
அமர்சிங்கும், அகமது படேலும் தான் தங்களிடம் இந்தப் பணத்தைக் கொடுத்ததாக 3 பேரும் குற்றம் சாட்டினர். நம்பிக்கை தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகிக்க வேண்டும் என்று கோரி இந்தப் பணம் கொடுக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. கிஷோர் சந்திர சூர்யநாராயண தியோ தலைமையிலான விசாரணைக் கமிட்டியை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அமைத்தார். இந்தக் குழுவில் பாஜகவைச் சேர்ந்த வி.கே.மல்ஹோத்ரா மற்றும் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த முகம்மது சலீம் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
இந்தக் குழு நேற்று தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், அமர்சிங், அகமது படேல் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று அது கூறியுள்ளது.
ஆனால் குழுவில் இடம் பெற்றிருந்த மல்ஹோத்ராவும், முகம்மது சலீமும் வேறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இருவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கும் ஆதாரம் இல்லை என்று கூறியுள்ள லோக்சபா கமிட்டி, அமர்சிங் மீதான புகாருக்கு நேரடியான ஆதாரம் எதுவும் இல்லை என்று தெரிவித்துவிட்டது.
அதே சமயம், குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களான அமர்சிங்கின் உதவியாளர் சஞ்சீவ் சக்சேனா, கார் டிரைவர் சோஹைல் ஹிந்துஸ்தானி, பாஜக தலைவர் அத்வானியின் உதவியாளரான சுதீந்திரா குல்கர்னி ஆகியோரின் பங்கு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.
இந் நிலையில் இந்தத் தீர்ப்புக்கு பாஜக எம்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அர்கல் கூறுகையில், இந்த விசாரணையில் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இந்தக் குழு அமர்சிங்கிடம் விசாரணையே நடத்தவில்லை என்றார்.
No comments:
Post a Comment