மதுரை: மத்திய அரசு கொண்டுவந்துள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் இயங்கி வந்த மனித நீதிப்பாசறை, கேரளாவில் இயங்கிய நேஷனல் டெவலப்மென்ட் பிரன்ட், கர்நாடகாவில் இயங்கி வந்த போரம் பார் டிகினிட்டி ஆகிய அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற பெயரில் செயல்படும் என அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் தேசிய பொருளாளர் ஷேக் முகமது தெஹ்லான் கூறியதாவது: பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் தேசிய குழு கூட்டத்தில் கேரளா, கார்நாடகா, தமிழகத்தில் வெவ்வேறு பெயர்களில் இயங்கி வந்த இயக்கங்கள் தற்போது ஒன்றிணைக்கப்பட்டு பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற பெயரில் செயல்படும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம், தேசிய புலனாய்வு குழு சட்டம் மற்றும் சட்ட விரோத நடவடிக்கை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மனித உரிமைகளுக்கு எதிரானது மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து கொண்டு இருக்கும் பயங்கரவாதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற ஐ.நா., சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும். மது ஒழிப்பு நடவடிக்கையை தமிழக அரசு முழுமையாக செயல்படுத்த முன் வர வேண்டும். இவ்வாறு ஷேக் முகமது தெஹ்லான் தெரிவித்தார். மாநில தலைவர் முகமது அலி ஜின்னா, துணைத் தலைவர் இஸ்மாயில், பொதுச் செயலர் அகமது பக்ருதீன் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment