அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, January 21, 2009

கல்யாண் சிங் விலகல் : பாஜக ஏற்க மறுப்பு

மும்பை/ லக்னோ : பாஜக துணைத் தலைவரும், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான கல்யாண் சிங் இன்று அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில், அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பாஜக தெரிவித்துள்ளது.

தனது விலகல் குறித்து லக்னோவில் இன்று செய்தியாளர்களிடம் கல்யாண் சிங் கூறுகையில், தாம் அங்கம் வகித்து வந்த பாஜக கட்சியினரால் தாம் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வந்ததன் காரணமாகவே கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

தனது ராஜினாமா கடிதத்தை எல்.கே.அத்வானிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், புதிய கட்சி துவக்குவது அல்லது பிற அரசியல் கட்சியில் இணையும் திட்டம் எதுவும் இல்லை என்றும் கல்யாண் சிங் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் உங்கள் மகனுக்கு கட்சி சார்பில் போட்டியிட அனுமதி அளிக்கப்படவில்லை என்ற காரணத்திற்காக, தாம் விலகியுள்ளதாக வெளியான தகவல்களை அவர் மறுத்தார்.

இதனிடையே, கல்யாண் சிங்கின் மகன் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடலாம் என அக்கட்சித் தலைவர் முலாயம் சிங் நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், "கட்சியின் மீது கல்யாண் சிங் கொண்டிருக்கும் அதிருப்திக்கும், கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் உரிய அடிப்படை இல்லை," என்று பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர் மும்பையில் தெரிவித்தார்.

மேலும், "வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் வரை அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது," என்று அவர் கூறினார்.

No comments: