மனிதத்துடனும் அமைதியுடனும் வெற்றிகளை படைப்போம் : ஒபாமா | | | |
Wednesday, 21 January 2009 08:07 |
வாஷிங்டன் : நாம் மனிதநேயத்துடனும், அமைதியுடனும் நமது வெற்றிகளை படைப்போம் என்று அமெரிக்காவின் 44-வது அதிபராக பதவியேற்ற பராக் ஒபாமா தனது முதல் உரையில் பேசினார். அந்த உரையின் சாரம் இதோ... "நமது பொருளாதாரத்தை மீண்டும் செயல்பட வைக்க விரைவான, துணிச்சலான நடவடிக்கைகளே இப்போதைய தேவை. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க மட்டும் அல்ல, புதிய அடித்தளத்தை அமைக்கவும் கடினமாக உழைப்போம். சாலைகளையும், பாலங்களையும், மின்விநியோக கட்டமைப்புகளையும் தகவல் தொழில்நுட்ப தடங்களையும் உருவாக்குவோம். அறிவியலுக்கு உரிய இடத்தை அளிப்போம், மக்களுக்குத் தரமான சுகாதார வசதிகள் குறைந்த செலவில் கிடைக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவோம். சூரியனையும் காற்றையும், மண்ணையும் பயன்படுத்தி நம்முடைய கார்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தேவைப்படும் எரிபொருள்களைப் பெறுவோம். புதிய காலத்துக்கு ஏற்ப நம்முடைய பள்ளிக்கூடங்களையும் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் தயார்படுத்துவோம். இவற்றையெல்லாம் நாம் செய்வோம், நம்மால் செய்ய முடியும். நாம் சந்திக்கும் சவால்கள் உண்மையானவை, அவை பலதரப்பட்டவை, அவை கடுமையானவை. மிகவும் குறுகிய காலத்தில் இவற்றையெல்லாம் தீர்த்துவிட முடியாது. ஆனால் அமெரிக்காவைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும், நம்மால் இவற்றுக்குத் தீர்வு காண முடியும். என்னுடைய லட்சியங்களை, நோக்கங்களைக் கேள்வி கேட்பவர்கள் இருக்கிறார்கள். இவையெல்லாம் பேராசைகள் என்றுகூட அவர்கள் விமர்சிக்கிறார்கள். அவர்களுடைய நினைவாற்றல் மிகவும் குறுகியது என்றே கருதுகிறேன். இந்த நாடு இதுவரை புரிந்துள்ள சாதனைகளை அவர்கள் மறந்துவிட்டார்கள். மிகப்பெரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் நாம் இருக்கிறோம். நமது பொருளாதாரம் பலவீனமாக உள்ளது. அனைத்து சவால்களையும் சமாளித்து புதிய அமெரிக்காவை நிர்மாணிக்கும் பணியை இன்று முதல் தொடங்குவோம். தற்போதைய சூழ்நிலையில், ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் பொறுப்புணர்வு என்ற புதிய சகாப்தம் அவசியம். அமெரிக்க கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். பயங்கரவாதத்தை தோற்கடித்து சிறப்பான வரலாற்றை உருவாக்குவோம். ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றி அந்த நாட்டு மக்களிடமே ஈராக்கை ஒப்படைப்போம். ஆப்கானிஸ்தானில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவோம். கிறிஸ்தவர், முஸ்லிம், யூதர், இந்துக்கள் மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர்களை உள்ளடக்கிய நாடே அமெரிக்கா. இதில், எந்த மதமும் ஏற்றத்தாழ்வு உடையதல்ல. நாம் பல்வேறு மொழி, கலாசாரத்தால் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நாம் மனிதநேயத்துடனும், அமைதியுடனும் நமது வெற்றிகளை படைப்போம் என்றார். முஸ்லிம் நாடுகளை பொறுத்தவரை பரஸ்பர நலன், மரியாதை அடிப்படையிலான புதிய வழிமுறை ஒன்றை காண்பது அவசியம்," என்றார் ஒபாமா.
|
No comments:
Post a Comment