தமிழகத்தை ஆண்ட சிறந்த முதல்வர் என்று ஒருவரை சொல்லவேண்டும் என்றால், சுதந்திரத்திற்கு முன் நீதிக்கட்சியின் சார்பாக சென்னை மாகாண முதல்வராக இருந்த ‘பனகல் அரசர்’ என்று அன்போடு அழைக்கப்பட்ட, ராமராயநிங்காரைச் சொல்லலாம்.
நேற்று நடந்த ஆர்ப்பாட்டாம்
இவர் காலத்தில்தான் அதாவது 1925 - ஆம் ஆண்டு கோடிக்கணக்கான சொத்து மதிப்புக் கொண்ட, இந்து கோயில்கள் ‘இந்துமத பரிபாலனச் சட்ட மசோதா’ என்கிற சட்டத்தின் மூலம் அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது.
இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு நிறையப் பாடுபட்டிருக்கிறார் பனகல் அரசர். 1922 - ஆம் ஆண்டு இந்துமத பரிபாலன சட்ட மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார். இதைச் சமூகத்திலும், சட்டசபையிலும் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள் பார்ப்பனர்கள். இந்த மசோதா மீது மொத்தம் 800 திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். அதில் 475 திருத்தங்களைத் தீவிர பார்ப்பன உணர்வாளரான சத்தியமூர்த்தி அய்யர் மட்டுமே கொண்டு வந்திருக்கிறார்.
கடைசி ஆயுதமாக, இந்தச் சட்டத்தில் இருந்து திருப்பதி கோயிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று, கோரி பனகல் அரசருக்கு ரூ. 5 லட்சம் லஞ்சம் தர முயன்று இருக்கிறார்கள்.
இவற்றை புறக்கணித்து, எதிர்ப்பை முறியடித்து மூன்றாண்டுகள் போராடி, இந்தச் சட்டத்தை அமல் படுத்தினார் பனகல் அரசர். ‘சமூக நீதி அரசு, அல்லது பார்பபனரல்லாதார் உரிமைக்கான அரசு’ எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு பனகல் அரசரின் ஆட்சி உதாரணம்.
மிகச் சிறந்த சீர்திருத்த அரசாக இருந்தால், ஒரு கோயிலை அரசுடமையாக்குவது மிகச் சாதாரணம். ஒரு காலை பொழுதில் ஒரே ஒரு கையெழுத்தில் அதை செய்துவிடலாம். தமிழக முதல்வர் தன்னை நீதிக்கட்சியின் வாரிசாக பலமுறை சொல்லியிருக்கிறார்.சொன்னதைசெயலிலும் காட்ட வேண்டும். சிதம்பரம் கோயிலை அறநிலையத்துறை தன் வசப்படுத்த வேண்டும். அரசு நினைத்தால் இது மிகச் சாதாரணம்.
பொருளாதார அடியாளாக இருந்து, போராளியாக மாறிய அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் பெர்கின்ஸ் சொல்வார்:
“நிலவில் மனிதனைக் கால்பதிக்கச் செய்வதைவிட, சோவியத்யூனியனைத் துண்டாடுவதைவிட, மாபெரும் நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதைவிட, வறுமையை ஒழிப்பது நடமுறையில் எளிதானது” என்று.
அதையே நாம் ‘சமூக நீதி’ அரசான திமுக அரசிற்கு சொல்வோம்:
‘தங்க நாற்கர சாலைகள் அமைப்பதை விட, சேது பாலம் கட்டுவதை விட, பல பன்னாட்டு கம்பெனிகளை இங்கு வநது தொழில் தொடங்க வைப்பதைவிட, காங்கிரஸ் அரசைப் பாதுகாப்பதைவிட மிக எளிதானது சிதம்பரம் நடராஜன் கோயிலை அரசுடமையாக்குவது’.
-வே. மதிமாறன்
No comments:
Post a Comment