அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, January 21, 2009

தடுமாறும் இந்திய திரைப்படத் துறை

2008 ஆம் ஆண்டில் வெளிவந்த "கஜினி" 200 கோடி வசூல், "சிங்க் இஸ் கிங்" வசூல் மழை, "தசாவதாரம்" வரலாறு காணாத வெற்றி என்றெல்லாம் ஊடகங்களால் வர்ணிக்கப் பட்டாலும் உண்மையில் கடந்த ஆண்டு திரைப்படத் துறைக்கு சரிவைத் தந்த ஒரு ஆண்டாகவே இருந்தது. பொதுவாக வெற்றிவிகிதம் மிகக் குறைவாக உள்ள ஒரு துறையாகவே சினிமா தொழில் கருதப் பட்டாலும், பெரிய தொழிற் முறையிலான இந்திய மற்றும் வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் (இரோஸ் இன்டர்நேஷனல், ரிலையன்ஸ் அட்லாப்ஸ், பிரமிட் சமிரா போன்றவை) சில காலத்திற்கு முன்னர் பெருமளவில் இந்திய திரைப்படத் துறையில் நுழைந்தது அனைவரிடமும் புதிய நம்பிக்கைகளை உருவாக்கியது.

ஆனால் நடந்ததோ வேறு. முன்பெல்லாம் பட்ஜெட்/பார்முலா/ஸ்டார் அந்தஸ்து குறைந்த படங்கள் மட்டுமே அதிக தோல்வி அடைந்தன. ஆனால் சென்ற வருடம், மிகப் அதிக பொருட்செலவுடன் ஸ்டார் அந்தஸ்து உள்ள நடிகர்கள் துணையுடன் பெரிய நிறுவனங்கள் பிரமாண்டமாக தயாரித்து வெளி வந்த பல படங்கள் (துரோணா, லவ் 2050, யுவராஜ், குசேலன், ஏகன், குருவி மற்றும் பல) வணிக ரீதியாக தோல்வி அடைந்தன என்பது குறிப்பிடத் தக்கது. கடந்த வருடம் திரைப் படத் துறையைச் சேர்ந்த பல வணிக நிறுவனங்களின் பங்குகள் மற்ற தொழிற் துறைகளைச் சேர்ந்த பங்குகளை விட மிக அதிகமாக வீழ்ச்சி அடைந்ததும் சினிமா துறையின் வீழ்ச்சிக்கு கட்டியம் கூறுகிறது.

தெலுங்கு திரையில் வெளிவந்த படங்களில் தொண்ணூறு சதவீதம் வணிக ரீதியான தோல்வி பெற்றன எனவும் தமிழில் வெளி வந்த 115 படங்களில் 100 படங்கள் தோல்வியைச் சந்தித்தன என்றும் தகவல்கள் கூறுகின்றன. தமிழ் திரைப் படத் துறை கடந்த வருடம் மட்டும் சுமார் 700 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது என்று விநியோகஸ்தர் சங்கத் தலைவர் (கலைப் புலி சேகரன்) கூறுகிறார். மற்ற மொழி திரை உலகங்களும் இதற்கு விதி விலக்கல்ல. ஹிந்தி திரையுலகம் கூட இந்த வருடம் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளதாக சில திரையுலக வணிக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மொத்தத்தில், இந்திய திரையுலகம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக தெரிகிறது. பல புதிய திரை முயற்சிகள் (மர்ம யோகி போன்றவை) தள்ளிப் போடப் பட்டுள்ளன. ஹிந்தியில் தொண்ணூறு சதவீத புதிய முயற்சிகள் நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாகவும் தயாரிப்பில் உள்ள திரைப் படங்கள் வெகுவாக காலதாமதமாகுவதாகவும் பிரபல ஹிந்தி திரைப் பட தயாரிப்பாளர் மகேஷ் பட் கூறுகிறார். நம்மூரில் கூட ரஜினி-சங்கர் கூட்டணியில் உருவாகும் "எந்திரன்" கைமாறியதற்கும் திரையுலகை வாட்டும் நிதி நெருக்கடி ஒரு முக்கிய காரணம் எனக் கருதப் படுகிறது.

இந்த வீழ்ச்சிக்கு காரணங்கள் என்ன என்பது பற்றி இங்கே ஒரு சிறு அலசல்.

காசுக்கேற்ற பணியாரம் இல்லை.

மல்டிப்ளெக்ஸ் கலாச்சாரம் திரைப் படங்களைப் பார்ப்பதற்கான செலவினை கடந்த சில வருடங்களில் பல மடங்கு உயர்த்தியுள்ளது. மாநகரத்தில் வாழும் ஒரு சிறிய குடும்பம் ஒரு சினிமாவைப் பார்ப்பதற்கு சாதாரணமாக ஆகும் செலவு கிட்டத் தட்ட ஆயிரம் ரூபாய். செய்த செலவிற்கு கணக்குப் பார்க்க கூடிய இந்திய கலாச்சாரத்தில், செலவு செய்த ஆயிரம் ரூபாய்க்கு குறிப்பிட்ட திரைப் படம் தகுதிதானா என்ற கேள்வி பலருடைய மனதிலும் எழுகிறது. அதிக செலவு செய்து பார்த்த படம் திருப்தி இல்லாத போது பணம் ஏமாற்றப் பட்டது போன்ற உணர்வு பலருக்கும் ஏற்படுகிறது. அதே நடிகர் அல்லது இயக்குனரின் அடுத்த படத்தை அவர்கள் பார்க்க இரு முறை யோசிப்பார்கள். மேலும், ஒட்டு மொத்த பொருளாதாரம் தேக்க நிலையைச் சந்திக்கும் இன்றைய காலகட்டத்தில் பெருமளவு பொருட் செலவு செய்து அரங்குகளுக்கு சென்று படங்களைப் பார்க்க முன் போல மத்திய தர வர்க்கத்தினர் முன் வருவார்களா என்பது ஒரு கேள்விக் குறி.

சின்னத் திரை வழங்கும் போட்டி

வீட்டிற்குள்ளேயே வரும் சின்னத் திரை முக்கியமாக நெடுந்தொடர்கள் பெரிய திரைக்கு கடும் போட்டியைத் தருகின்றன. நெடுந்தொடர்களின் ஒரு நாள் பகுதியைக் கூட தியாகம் செய்ய (திரைப்படம் பார்க்க) பல தாய்மார்கள் தயங்குவது பெண்களின் கூட்டம் வார நாட்களில் அரங்குகளில் குறைந்துக் காணப் பட முக்கிய காரணமாகிறது. திரை இயக்குனர் செல்வராகவன் சொல்வது போல, சின்னத் திரையில் ஏராளமான திரைப்படங்கள் தொடர்ந்து காட்டப் படுவது மக்களுக்கு ஒரு வித திகட்டலையே தருகிறது.

மலிவான வியாபார தந்திரங்கள்

மக்களை திரை அரங்குக்கு வரவழைக்க திரை உலக வியாபாரிகள் மேற்கொள்ளும் மலிவான முயற்சிகள் நீண்ட கால நோக்கில் எதிர்வினையையே ஏற்படுத்துகின்றன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், இந்த "பல நாட்களுக்கு அனைத்துக் காட்சிகளும் புக் செய்யப் பட்டு விட்டன", "இது வரை இல்லாத அளவிற்கு வசூல் மழை" (வெளிநாட்டு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வர இது ஒரு ஹவாலா முயற்சி என்று கூட சொல்லப் படுகிறது) என்றெல்லாம் விளம்பரம் செய்யப் படுவதைக் கூறலாம். "சிங்க் இஸ் கிங்" என்ற படத்திற்கு இவ்வாறே விளம்பரம் செய்யப் பட்டிருக்க, மேலும் ஒரு தினப் பத்திரிக்கையோ மிகச் சிறந்த படம் என சான்றிதழ் வழங்க, நான் இது ஒரு காணுதற்கரிய படம் என்று நம்பி அரங்கிற்கு செல்ல மிஞ்சியது ஏமாற்றமே. படம் வெளி வந்து நான்காவது நாள் மாலைக் காட்சியில் முன்னூறு பேர் அமரக் கூடிய அந்த அரங்கில் இருந்தது என் குடும்பத்தையும் (3) சேர்த்து மொத்தம் பத்திற்கும் கீழே. சான்றிதழ் வழங்கிய தினத்தாள் அந்த படத்திற்கு ஒரு "மீடியா பார்ட்னர்" என குறிப்பிடப் பட்டிருந்தது எனக்கு வெறுப்பையே தந்தது.

நிதி பற்றாக் குறை.

இந்திய திரையுலகம் ஒரு தொழிற் துறையாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் சரிவர அங்கீகரிக்கப் படாதது, திரை உலகம் சந்திக்கும் நிதி நெருக்கடிக்கு முக்கிய காரணம். மேற்சொன்னபடி, வெற்றி விகிதம் மிகவும் குறைவாக உள்ள துறையாக சினிமாத் துறை இருப்பதால், வங்கிகள் கடன் வழங்க தயங்குகின்றன. சினிமா துறை பங்குகளின் செயல்பாடு போதுமான அளவிற்கு திருப்தியாக இல்லாததால் பங்கு சந்தையிலும் நிதி திரட்ட திரையுலகத்தினருக்கு சிரமமான காரியமாகவே உள்ளது. இதனால் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப் படுகின்றனர். ஒரு படம் தயாரிக்கும் செலவில் பெரிய பங்கு (நடிகர்களின் ஊதியத்திற்கு அடுத்தபடியாக என்று கூட கூறலாம்) வட்டிக்கே போகிறது. திரைப் படம் தயாரிப்பில் மற்றும் வெளியீட்டில் ஏற்படும் தாமதங்கள் படத்தின் வணிக ரீதியான தோல்விக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.

நடிகர்களின் ஸ்டார் அந்தஸ்து ஒரு கேள்விக் குறி

ஸ்டார் நடிகர்களுக்கு உள்ளதாக சொல்லப் படும் "மக்களை அரங்குகளுக்கு கவர்ந்திழுக்கும் காந்த சக்தி" இந்த ஆண்டு பெருமளவு வெளிப் பட வில்லை என்றே சொல்ல வேண்டும். உதாரணம், பெரிய நடிகர்கள் நடித்த குசேலன், யுவராஜ் போன்ற படங்கள் அடைந்த தோல்வி. ஏகன் மற்றும் குருவி படங்கள் பார்த்து வெளிவந்த போது மனதில் எழுந்த கேள்வி "குறிப்பிட்ட நடிகர்கள் பிடிக்கும் என்ற ஒரே காரணத்திற்காக இவ்வளவு பெரிய தண்டனை தேவையா?" என்பதே. எனவே மக்களின் விருப்பங்கள் வேகமாக மாறும் இன்றைய காலகட்டத்தில் ஸ்டார் நடிகர்களின் காந்த சக்தி என்பதே ஒரு கேள்விக் குறியான நிலையிலும் கூட அவர்களுக்கு மிக அதிக சம்பளங்கள் வழங்கப் படுவது, திரைப் படத்தின் வணிக ரீதியான தோல்விக்கு முக்கிய காரணமாகும்.

ஹாலிவுட் படங்கள் தரும் போட்டி

மொழிமாற்றம் செய்யப் படும் ஹாலிவுட் படங்கள் இந்தியப் படங்களுக்கு கடும் சவாலாக விளங்குகின்றன. சிறந்த தொழிற் நுட்பம், நேர்த்தியான கதை அமைப்பு, அரங்குகளில் மட்டுமே அனுபவிக்க முடிகிற பிரமாண்டம், கலைஞர்களின் தொழிற் அர்ப்பணிப்பு தன்மை இவற்றுடன் எளிதில் புரிய உதவும் தாய்மொழி மாற்றம் ஆகியவை ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் பெரும் வெற்றி பெற காரணமாக அமைகின்றன.

இந்திய திரைத் துறை வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.


இதற்கான பதிலை நாம் சென்ற ஆண்டில் வெற்றி பெற்ற படங்களில் இருந்தே பெற முடியும். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் குறிப்பிடத் தக்கவை கஜினி மற்றும் தசாவதாரம் ஆகியவை. எதிர்பார்ப்புகளை ஈடுகட்டும் அளவிற்கு கடும் உழைப்பு மற்றும் சரியான திட்டமிடல் இருந்ததே இந்த இரண்டு படங்களின் வெற்றிக்கும் முக்கிய காரணங்களாக இருந்தன. இவ்விரண்டு படங்களும் வெளி வர நீண்ட காலம் பிடித்தாலும் இடை பட்ட காலத்தில் மிகச் சிறந்த விளம்பர யுக்திகள் பின் பற்றப் பட்டதும் இவற்றின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லாமல் வந்து வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களில் குறிப்பிடத் தக்க அஞ்சாதே மற்றும் சுப்ரமணியபுரம் ஆகியவை ஸ்டார் நடிகர்கள் இல்லையென்றாலும் கூட சிறந்த வித்தியாசமான கதையமைப்பு கொண்டிருந்தன.

எந்த ஒரு தொழிற்துறையிலும் செய்த முதலீட்டைப் போல பல மடங்கு லாபம் அதுவும் அதிக உழைப்பின்றி குறுகிய காலத்தில் பார்க்க முனைவது பல சமயங்களில் எதிர் வினையையே ஏற்படுத்தும் என்பது வணிக நியதி. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டிய திரைத் துறையினர் செய்ய வேண்டியது என்ன?

௧. தமது (மொழிக்கான அல்லது வட்டாரத்திற்கான) சந்தை வீச்சை முழுமையாக புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் பட்ஜெட் இடுதல். தேவையற்ற ஆடம்பர செலவுகளைத் தவிர்த்தல். சிக்கனம் கூட ஒரு வகையில் வணிக ரீதியான வெற்றிக்கு உதவும்.


௨. ஸ்டார் நடிகர்களின் சம்பள பணத்தை படத்தின் மொத்த பட்ஜெட்டின் குறிப்பிட்ட விகித்தத்திற்குள் வைத்தல். முடிந்த வரை சிறந்த கதையமைப்பிற்கு மற்றும் தொழிற் நுட்ப நேர்த்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தல். இதன் மூலம் நுகர்வோருக்கு அதுதாங்க ரசிகர்களுக்கு அதிக திருப்தியை வழங்க முடியும்.

௩. சிறந்த திட்டமிடல் அதுவும் படம் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னதாகவே முழுமையான திட்டம் இருப்பது படத்தின் செலவைக் குறைப்பதோடு திரைப் படம் நேர்த்தியான முறையில் வெளியாக உதவும். சிறந்த திட்டம் பாதி வெற்றிக்கு கியாரண்டி.

௪. அரங்கு உரிமையாளர்களும் திரைப் பட தயாரிப்பாளர்களும் கலந்து பேசி அரங்கு நுழைவுக் கட்டணம் மற்றும் இதர செலவினங்களின் அளவைக் குறைத்தல். "குறைந்த விலை அதிக லாபம்" என்பது வெற்றி பெற முக்கியமான வணிக நியதி.

லட்சக் கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும் கோடிக் கணக்கான மக்களின் பொழுது போக்கு சாதனமாகவும் உள்ள இந்திய திரைப் படத் துறை ஆரோக்கியமான வளர்ச்சியை அடைந்து வரும் ஒரு தொழிற் துறையாக நீடித்திருப்பது அவசியமான ஒன்றாகும். இந்தியரின் வாழ்வோடு இரண்டற கலந்து விட்ட நமது திரைத் துறையினர் இந்த 2009 ஆம் ஆண்டில் தாமும் வணிக ரீதியாக வெற்றி கண்டு ரசிகர்களுக்கும் நல்ல படங்கள் பல வழங்க வாழ்த்துவோம்.

No comments: