துக்ளக் ஆண்டுவிழா கூட்டம் - 14.01.2009: பகுதி - 4
மூன்றாம் பகுதிஇரண்டாம் பகுதி
முதல் பகுதி
முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும். சோ அவர்கள் பேச்சு கோர்வையின்றி போவது போன்ற தோற்றம் சில இடங்களில் வரலாம். அதற்கு முக்கியக் காரணமே பார்வையாளர்கள் தரப்பிலிருந்து அவ்வப்போது உரத்த குரலில் வரும் கேள்விக்கணைகளே. அவை பல நேரங்களில் பேச்சின் போக்கை மாற்றின. இருந்தாலும் சோ அதை செய்ததற்கு காரணம் அக்கேள்விகளின் முக்கியத்துவத்தைக் கருதியே. அவர் பேச்சு எதுவும் தயார் செய்து கொண்டு வரவில்லை என்பதையும் கூற வேண்டும் (extempore).
சோ அவர்கள் மன்மோகனின் அரசை தான் பாராட்டிய ஒரு விஷயத்துக்கு வந்தார். அதுதான் அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்காவுடன். அவரது பிடிவாதத்தால்தான் இது நிறைவேறவே செய்தது. அவரை இந்த விஷயத்தில் பாராட்ட வேண்டும். ஒரு பிரதமராக நடந்து கொண்டார். மற்றப்படி ஒரு பியூன் போலவே அவர் செயல்பாடு இருந்தது.
இத்தருணத்தில் இதிலும், இலங்கை விஷயத்திலும் கருணாநிதி எடுத்த “தெளிவான” நிலைகளையும் அவர் பட்டியலிட்டார். இந்த ஒப்பந்தம் வரவேண்டும் - இடதுசாரிகளின் எதிர்ப்பு நியாயமானதே. ஏன் எதிர்க்கிறீர்கள் என கேட்டால், இல்லையே ஆதரித்தேனே என கூறலாம். ஏன் ஆதரிக்கிறீர்கள் என்றால் இல்லையே எதிர்த்தேனே என்று கூறிவிடலாம். அதே போல இலங்கை விஷயத்தில்: ஈழத்தமிழ்தான் தீர்வு - அங்குள்ள மக்களின் விருப்பமே முக்கியம் - மத்திய அரசின் நிலையே என் நிலை. (எஸ்.வி. சேகரின் ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி நினைவுக்கு வருகிறது. அதில் சிகாமணி எம்.எல்.ஏ.வாக நாடகத்தினுள்ளேயே வேடம் கட்டுகிறார். ரிப்போர்டர் இலங்கை பற்றி கேட்க அவர் பதில் சொல்கிறார்: இலங்கை விஷயம் அன்னிய நாட்டின் சதி - ஏழை மக்கள் முன்னேற வேண்டும் - இந்த ஊர் எல்.கே.ஜி. வகுப்பில் படிக்கும் குழந்தைகள் ஒரு நாள் பள்ளிக்குன் செல்லாமல் புறக்கணிப்பார்கள். என்னங்க இது என ரிப்போர்டர் கேட்க சேகரின் பதில், “பின்னே என்னங்க, அங்கே என்ன நடக்கிறது என்பது யாருக்குமே தெரியாது, ஏதோ இந்தமாதிரி சொல்லிக் கொண்டால்தான் பிழைக்கலாம்)
பிறகு சோனியா காந்தி பற்றி பேச ஆரம்பித்தார். அவருக்கு இந்தியா மேல் அவ்வளவு அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை என்றார். அவர் இந்திய குடியுரிமையைப் பெறவே பல ஆண்டுகள் யோசித்துள்ளார். க்வாட்ரோக்கி பணம் வங்கியிலிருந்து எடுக்க உதவி செய்துள்ளார். அவரால் கருணாநிதி மற்றும் மன்மோகனுடன் மட்டுமே ஒத்து போக முடிந்தது. ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, மாயாவதி முதலிய பெண்மணிகளுடன் அவருக்கு ஆகவில்லை. அவருக்கு பிடித்த ஒரே பெண்மணி அவரது கணவர் ராஜீவின் கொலைக்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவரான நளினி மட்டுமே (அரங்கில் சிரிப்பு). இவ்வாறான கூத்துக்கெல்லாம் இடம் தரும் மத்திய அரசு போக வேண்டியதே.
தமிழக அரசு? கலைஞர் அவர்களுக்கு குடும்ப பாசத்துக்கான அவார்ட் நிச்சயம் தரவேண்டும். குடும்பத்தின் எல்லா கிளைகளுக்கும் (பயங்கர சிரிப்பு) பங்கீடுகள், பட்டுவாடாக்கள். இருந்தும் அவர் குடும்பத்தினர் யாருக்கும் திருப்தியில்லை. தனக்கு கிடைத்ததைவிட இன்னொருவருக்கு கிடைத்ததை நினைத்து மனப்புழுக்கங்கள். இது மேலும் மேலும் தொடரும்.
இருப்பினும் இந்த குடும்ப ஒற்றுமை ஒரு சாதனையே. ஸ்பெக்ட்ரம் ஊழல் முடிந்தது. தினகரன் எரிப்பு மற்றும் கொலை விவகாரங்கள் ஒழிந்தன. பி.எஸ்.என்.எல். விவகாரம் பழைய கதை. டி.ஆர். பாலு எரிவாயு பிரச்சினை பற்றி பேசும்போது அரங்கத்தில் எழுந்த சிரிப்பால் அவர் சொன்னது காதில் விழவில்லை. நான் பக்கத்தில் இருந்தவரை கேட்ட போது அவரும் பேய்முழி முழித்தார். அரசு கேபிள் காலி. ஆக ஊழல் விஷயத்தில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையே வல்லிய கூட்டணி.
முன்பெல்லாம் லட்சமெல்லாம் பெரிய தொகை. இப்போது ஆயிரம் கோடி கூட சாதாரணமாக உச்சரிக்கப்படுகிறது. நமக்குத்தான் ரோஷம் வேண்டும். எலெக்ஷனில் கண்டிப்பாக ஓட்டு போட வேண்டும். ஆனால் அன்றைக்கென்றுதான் கிரிக்கெட் மேட்ச் டிவியில் வரும், அதை பார்க்க உட்கார்ந்து விடுவார்கள்.
இலங்கை பிரச்சினை தமிழகத்தை பொருத்தவரை இன்னொரு தமாஷ். ராஜினாமா என ஒரு பெரிய நாடகம் ஆடப்பட்டது. அதுவும் கருணாநிதி யார் ராஜினாமாக்களை பெற்று கொள்ள? சபாநாயகருக்கல்லவா அவற்றை அனுப்ப வேண்டும்? கனிமொழி அம்மையார் செய்தது சுத்தம். அப்பாவிடம் ராஜினாமா கொடுத்து விட்டார். கனிமொழி ராஜினாமா என கொட்டை எழுத்துக்களில் பத்திரிகைகளில் தலைப்பு செய்தி? யாரிடம் கொடுத்தார்? அப்பாவிடம். கூடவே மனித சங்கிலி தமாஷ். எல்லோரும் நடுரோட்டில் நின்று கொண்டு ஒருவர் கையை இன்னொருவர் பிடித்து கொள்வார்களாம். சார், அப்படி கையை பிடிக்காவிட்டால் பாக்கெட்டில் கை போட்டு விடுவார்களே (சிரிப்பு, கைதட்டல்).
பிரணாப் முகர்ஜி இலங்கை போவாரா? போனால் மட்டும் என்ன செய்யப் போகிறார்? சிலோன் டீ நன்றாக இருந்தது எனச் சொல்லுவார். மன்மோகன் சிங் கூறுகிறார், அவருக்கு இங்கு அதிக வேலை என்று. என்ன வேலை? எச்சரிக்கை விடுவதுதானே, அதை கொழும்புவிலிருந்தும் செய்யலாமே. எல்லாமே நாடகம். கருணாநிதி லெட்டர் எழுதுவார், மன்மோகன் கவனிப்பதாக சொல்லுவார். காரியம் ஆயிற்று. இல்லாவிட்டால் கருணாநிதி உயிரையே தருவேன் என்பார்? எத்தனை முறை தருவார்? அதற்கு பதிலாக கையைத் தருகிறேன், காலைத் தருகிறேன் என்று சொன்னாலாவது ஏதோ சீரியசாக இருப்பதாக கற்பனை செய்து கொள்ளலாம்.
“கூவம்”? என்று ஒரு குரல் பார்வையாளர்கள் தரப்பிலிருந்து வர அதுதான் எழுபதிலேயே மணந்து விட்டதே என்றார். ஒக்கேனக்கல்? சினிமா நடிகர்களை நன்கு பழி வாங்கினார். முதலில் கர்நாடகா தேர்தலுக்காக அதை தள்ளி வைக்கிறேன் என்றார். இப்போது தேர்தல் முடிந்து ஆறுமாதம் ஆகிவிட்டதே.
இன்னொரு கூத்து உண்ணாவிரதம். காலையிலேயே மூக்கு பிடிக்க சாப்பிட வேண்டியது. அது ஜீரணம் ஆகவே மாலைவரை ஆகிவிடுமே. நடுவில் நினைத்தாலும் சாப்பிட முடியாதே. இவர்கள் என்ன அகத்திய முனிவரா, “வாதாபி ஜீரணோபவ” என்று கூறுவதற்கு?
சட்டக் கல்லூரி விஷயம், போலீஸ் வேடிக்கை பார்க்கிறது. இப்போது கூட அதற்கான வீடியோக்களில் போலீசார் பத்தடி தூரத்திலேயே இருக்கின்றனர், செல்பேசியில் பேசிக் கொண்டு? யாரிடம் இருந்து ஆணைகள் பெற்றனர்? திருமங்கலம் தொகுதியில் தங்கள்மீது தாக்குதல் நடந்ததற்கு கம்ப்ளைண்ட் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் (ஆடியன்ஸில் சிரிப்பு) கல்வி செய்யப்படுகிறார். எங்கோ கோர்ட்டில் நின்று வாதாடி கொண்டிருந்த பாண்டியன் குண்டுவீச்சு செய்ததாக கூறுகிறார்கள். காடுவெட்டி குருவை முதலில் கைது செய்தார்கள். பிறகு அவரை கைது செய்தது சரியான நடவடிக்கையே என கோர்ட் கூறிய பிறகு பாமகவுடன் சுமுகமாக போய்விட்டதாக எண்ணி அவர் விடுதலை செய்யப்படுகிறார். இப்போது பாமக பிடி கொடுக்காத நிலையில் குருவை விட்டது குறித்து கையை பிசைகிறார்கள்.
மின்சார வெட்டு விவகாரம். அதிமுக அரசு காலத்தில் போடப்பட்ட அத்தனை திட்டங்களும் நாசம் செய்யப்பட்டன. ஆற்காட்டாரின் சால்ஜாப்புகள். மழையில்லை, காற்றில்லை, மத்திய மின்தொகுப்பிலிருந்து மின்சாரம் வரவில்லை.
முதல்வர் தலைமையில் ரெவ்யூ மீட்டிங்குகள் நடக்கும்போது ஜெயலலிதா காலத்தில் அது அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு சிம்ம சொப்பனம். முதல்வர் எல்லா விஷயங்களையும் நன்கு படித்து அதிகாரிகளை கேள்விகளால் வாட்டி விடுவார். கலைஞர் விஷயத்தில்? அவர் கேட்பார் “உளியின் ஓசை” பார்த்தீர்களா? அதிகாரி சொல்வார் “அது ஒரு காவியம் ஐயா” (சத்தியமாக அவர் அதை பார்த்திருக்க மாட்டார்). “எனது லேட்டஸ்ட் கவிதை எப்படி”? “அற்புதம் சார்”. “இன்றைய பேப்பர் படி, இன்னும் அருமையான கவிதை எழுதியுள்ளேன்” ரிவ்யூ மீட்டிங் ஓவர்.
கலைஞரும் வீரமணியும் ஒருவரை ஒருவர் பாராட்டுவது ரொம்பவே ஓவர். அதுவும் முதல்வருக்கு பாராட்டுகளை கேட்பதில் அலுப்பே ஏற்படவில்லையே. ஏதோ வயதானவர் தன்னை பாராட்டும் வார்த்தைகளை கேட்க விருப்பபடுகிறார் என விட்டாலும் அதை முதல் மந்திரியாக இருந்து கொண்டு செய்வதா? முதல்வராக இருக்கவே தகுதியற்றவர்.
காவேரி விஷயம்? மறந்தே போச்சு. நானே அதை பற்றி பேசுவதில்லை. ஒக்கனேக்கல் தண்ணீர் விஷயம் தகராறு. தண்ணியில் தகராறு என்பதால் ராமதாசுடன் தகராறு. அவர் மதுவிலக்கு வேண்டுமென்றால் டாஸ்மாக் கடைகளை இரவு பத்து மணிக்கே மூடுவேன் என்ற கண்துடைப்பு. ஏன், பத்துமணிக்குள் ஒருவன் அன்று இரவுக்கு தேவைப்படும் அளவுக்கு பாட்டில்களை வாங்கி எடுத்து போக இயலாதா?
பாபர் மசூதிக்கு பிறகுதான் பாஜக விரும்பத்தகாத கட்சி என்பதை உணர்ந்தேன் என்று சொல்லும் கருணாநிதி அந்த இடிப்புக்கு பிறகுதான் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஐந்து ஆண்டுகள் மந்திரி சபையில் இருந்து மாறனுக்கு அரசு செலவில் மருத்துவம் எல்லாம் பார்த்திருக்கிறார். இப்போது பசப்புகிறார். முந்தைய கூட்டணிக்கு முன்னாலேயும் பாஜகவினர் பண்டாரங்கள், பரதேசிகள் என்றெல்லாம் கூறியுள்ளார். காந்தியை கொன்ற கட்சி என்கிறார். கோட்சே ஆர்.எஸ்.எஸ். தேவைக்கதிகமாக மென்மையாக இருக்கிறது என அதிலிருந்து விலகி பத்தாண்டு கழித்துத்தான் மகாத்மா காந்தியை கொன்றது நடந்தது. ஆக, கருணாநிதி வாயைத் திறந்தாலே குழப்பம்தான்.
பாவம் தமிழக காங்கிரஸ். ஆட்சியில் பங்கு கேட்பார்கள். கிடைக்காது. அன்னை சோனியாவிடம் கேட்போம் என்பார்கள். அடுத்த நாள் அன்னை சோனியா சொல்வதை கேட்போம் என்பார்கள்.
விஜயகாந்த்? தெளிவின்மைக்கு கலைஞருடன் போட்டி. கூட்டணி வைக்க மாட்டேன். தமிழ் மக்களின் நலனுக்கு ஆதரவாக இருப்போம் என எழுதித் தரும் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி. மின்வெட்டை ஆறுமாதங்களில் தீர்ப்பேன். ஆனால் எப்படி என சொல்ல மாட்டேன். ஏனெனில் அதை வைத்து மின்வெட்டு பிரச்சினையை தீர்த்து விடுவார்கள். குடும்ப ஆட்சியை எதிர்ப்பார். ஆனால் அவரது எல்லா கட்சி விவகாரங்களிலும் அவர் மனைவி என்னவோ அவருடனேயே இருப்பார். அவர் செய்வதெல்லாம் திமுகவுக்கு எதிராக உள்ள வாக்குகளை பிரிப்பதுதான் ஆகவே அவரை ஒரு மாற்றாக நினைப்பவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றி கொள்கிறார்கள். அவர் கட்சிக்கு ஓட்டு போடாதீர்கள்.
மத்தியில் பிஜேபிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. அது அரசு அமைத்தால் தீவிரவாதத்தை இரும்பு கரத்துடன் அணுகுவார்கள். லஞ்ச ஊழல் விவகாரங்கள் குறையும். கூட்டணி கட்சிகளால் கேவலப்படுவது குறையும். (இந்த இடத்தில் ஜெயலலிதா பாஜகவை நடத்தியது பற்றி அவர் மழுப்பியது எனக்கு ஏற்புடையதல்ல). பொருளாதார தாரளமயமாக்கம் ராஜீவ் நரசிம்மராவால் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு அதிக ஊக்கம் தந்தது பாஜக.
தமிழகத்தில்: பல சமயங்களில் அதிமுகவை நானே எதிர்த்திருக்கிறேன். ஜயலலிதா தன் கட்சியில் சர்வாதிகாரியாக செயல்படுகிறார் என்று கூறும் பிறகட்சித் தலைவர்கள் தங்களாலும் அப்படி நடந்து கொல்ள முடியவில்லையே என்று மனதுக்குள் பொருமுகின்றனர். அவர் ஆட்சி காலத்தில் போலீஸ் திறமையுடன் செயல்பட்டது. வீரப்பன் ஒடுக்கப்பட்டான். கலைஞரோ தமிழ்தீவிரவாதம் ஏற்புடையதே என கூறி சொதப்பினார். சட்டக் கல்லூரி விவகாரம் அவர் ஆட்சியில் நடந்திராது. மந்திரிகள் மேல் அவரது ஆளுமை முழுமையாக இருந்தது. வணிகர்கள் வணிக வரிகளை ஒழுங்காக கட்டினர். எல்.டி.டி.இ. அடக்கி வாசிக்க நிர்பந்தப்படுத்தப்பட்டது. தேசீய ஒருமைப்பாட்டு குழுவில் அவர் பலமுறை தேசீய பார்வையுடன் பேசியுள்ளார். திமுகவிடம் அந்த பார்வை இல்லை. தொழில் முன்னேற்றத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். மழைநீர் சேமிப்பு திட்டம் அவரது வெற்றிகளில் ஒன்று. மாநில அரசு ஊழியர்கள் ஸ்ட்ரைக் விஷயத்தில் முதலில் அவர் எடுத்த நடவடிக்கைகள் ஊழியர்களை யோசிக்க வைத்தன. அவற்றை பின்னால் விலக்கி கொண்டதுதான் துரதிர்ஷ்டவசமானது. மோடியை தவிர்த்து வேறு எந்த முதல் மந்திரியும் அவர் அளவுக்கு தீவிரவாதிகளை இரும்புக் கரம் கொண்டு கையாளவில்லை.
தைரியமாக தன்னை ஆத்திகர் என காட்டிக் கொண்டார். இந்த விஷயத்தில் கருணாநிதி செய்வதுபோல நடிப்பு எல்லாம் இல்லை. மற்ற மந்திரிகளும் கோவில்கள் எல்லாம் போவார்கள். ஆனால் அதை திருட்டுத்தனமாக செய்வார்கள். இப்போது தமிழகமே கொந்தளிப்பில் உள்ளது. அவர் முதன் மந்திரியாக இப்போது தேவைப்படுகிறார். அவருடன் நான் பல விஷயங்களில் மாற்று கருத்து கொண்டுள்ளேன். அணுசக்தி ஒப்பந்தம், காஸா விவகாரம் போன்ற உதாரணங்களை இங்கு தரலாம்.
கூட்டத்தின் தரப்பிலிருந்து வைக்கோ? என்ற குரல் வர, சோ கூறினார். வைக்கோவை பக்கத்தில் வைத்து கொண்டே அவர் புலிகள் விரோத நிலையை எடுக்கிறார். அவர் தெளிவாகத்தான் உள்ளார். நீங்கள் கேள்வி கேட்க வேண்டுமானால் வைக்கோவை கேளுங்கள் என்றார்.
சத்யம் விவகாரத்தில் வெளியில் தெரிவது பனிப்பாறையின் மேல்முனை என்றார். ராமலிங்க ராஜு எந்த பெரிய குற்றத்தை மறைக்க இந்த குற்றச்சாட்டை ஏற்று கொண்டார் என்பது யோசிக்க வேண்டிய விஷயம் என்றார். இன்னும் எத்தனை பேர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர், நஷ்ட அளவுகள் என்ன என்பதெல்லாம் அவதானித்து பார்க்க வேண்டும் என்றார்.
வரும் தமிழகத் தேர்தலில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை. ஆகவே அதிமுகவுக்கே வாக்களிக்க வேண்டினார். இன்னும் ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் திமுக குடும்பம் தமிழகத்தையே அழித்துவிடும் என எச்சரித்தார்.
அரங்கம் தந்து உதவியதற்கு அரங்க நிர்வாகிகளுக்கு நன்றி, திறமையாக பாதுகாப்பு ஏற்பாட்டை செய்த போலீசாருக்கு நன்றி, திரளாக வந்த வாசகர்களுக்கு நன்றி. “என்னால் முடிந்தது கருத்துக்களை நாணயமான முறையில் தெரிவிப்பதே (honest expression of opinion). அதனாலேயே எனக்கு மரியாதை தரப்படுகிறது. அதற்கு பங்கம் வருமாறு நடக்க மாட்டேன்.
தேசீய கீதத்துடன் விழா முடிந்தது.
சில கொசுறு தகவல்கள் டோண்டு ராகவன் பார்வை கோணத்திலிருந்து. மீட்டிங்கிற்கு சில நாட்கள் முன்னால் ராம்குமார் என்பவர் என்னை செல்பேசியில் தொடர்பு கொண்டு மீட்டிங்கிற்கு சீஃப் கெஸ்ட் யாரென்று கேட்டார். அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லை என கூறிவிட்டேன். அவரும் மீட்டிங்கிற்கு வந்திருக்கிறார். அரங்கின் வெளியில்தான் இடம் கிடைத்தது. நடுவில் ஆடியோ பிரச்சினை வர பேச்சுக்களை கேட்க இயலவில்லை. அவர் தான் பாதியிலேயே சென்று விட்டதாய் பின்னால் எனக்கு போன் செய்து சொன்னார். நல்ல வேளையாக நேற்று நான் வந்த நேரம் அரங்கம் இன்னும் நிரம்பவில்லை. இனிமேலும் இம்மாதிரி நடக்காமல் இருக்க சோ அவர்கள் தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். வெளியில் ஒரு டெக்னீஷியன் செல்பேசியுடன் தயாராக இருக்க வேண்டும். இணைப்பு ஒயர்கள் மக்கள் காலில் இடறி அறுபடாமல் இருக்க அவற்றை சுவற்றின் வழியாக உயரே வைக்க வேண்டும். போன ஆண்டு போலவே இந்த ஆண்டும் நான் செல்பேசி எடுத்து செல்லவில்லை. போலீசார் அதை அனுமதிக்காவிட்டால் எங்கு வைப்பது என்ற தயக்கமே. அப்படியே எடுத்து வருபவர்களும் அவற்றை வைப்ரேஷன் மோடில் வைப்பது நலம்.
No comments:
Post a Comment