தலைக்கவசம் போட வைத்த 25 ரூபாய்
நான் ஈரோட்டில் இருந்த 4 வருடங்களும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் தான் இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தேன். பிறகு கோவையில் அலுவலகம் தொடங்க திட்ட்மிட்டதும், கோவையில் நம்ம தில்லாலங்கடி வேலை செல்லாது என்று ஓட்டுநர் உரிமம் பெற்றேன். நான் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த போது ஒரு போக்குவரத்து/போக்காவரத்து காவலரும் என்னை விசாரித்ததில்லை. இரவில் திரைப் படம் பார்க்க செல்வது, நண்பர்கள் வந்தால் அவர்களை அழைத்துவர செல்வது, தொடர்வண்டி நிலையம் செல்வது என முக்கிய்மான எல்லா இடங்களுக்கும் அடிக்கடி சென்றிருக்கிறென். ஆனால் என்னிடம் ஓட்டுநர் உரிமமோ வாகனத்திற்கான சான்றிதல்களோ எந்த அலுவலரும் விசாரித்ததில்லை. பல சமயங்களில் நான் செல்லும் சாலைகளில் இரவில் வாகன தணிக்கையில் காவலர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் என்னை யாரும் நிறுத்தியதில்லை. இன்றுவரை அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. பார்ப்பதற்கு மிக நாகரிகமானவன் போல் கூட இருக்க மாட்டேன். ஆனால் ஓட்டுநர் உரிமம் பெற்ற ஒரு வாரத்திற்குள் இரவு நேரத்தில் பேருந்து நிலையம் அருகில் ஒரு காவலர் என் வாகனத்தை நிறுத்தினார். அதான் உரிமம் இருக்கே. :).. நல்ல வேளை அவர் வாகனத்திற்கான சான்றிதல்கள் எதுவும் கேட்கவில்லை. கேட்டிருந்தால் சங்கு தான். :)
நாங்கள் கோவையில் அலுவலகம் தொடங்க ஆரம்பித்த சமயம் தமிழக அரசு , அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் உபயோகிக்க வேண்டும் என உத்தரவு போட்டது. ஓட்டுபவர் மட்டுமின்றி பின்னாடி அமர்ந்து வருபவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது அரசாணை. அப்போது நான் தினமும் ஈரோட்டிலிருந்து கோவை வந்து அலுவலகம் மற்றும் சேமிப்புக் கிடங்கிற்கான இடம் தேர்வு செய்ய ஒரு இடைத்தரகர் மற்றும் என் நண்பர் ஒருவருடன் இரு சகக்ர வாகணத்தில் சென்று சரியான இடம் பார்த்துக் கொண்டிருந்தேன். வாகனத்தில் பின்னாடி அமர்பவரும் தலைக்கவசம் போட வேண்டும் என்பதால் நான் புது இருசக்கர வாகனம் வாங்கும் முன்பே தலைக்கவசம் வாங்கி விட்டேன். தினமும் அதை ஈரோட்டிலிருந்து பேருந்தில் வரும் போது கொண்டுவந்து கோவையில் வாகனத்தில் செல்லும் போது உபயோகிப்பேன்.
பிறகு சில நாட்களிலேயே அந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டுவிட்டது. ஆகவே நான் தலைக்கவசம் பயன்படுத்துவதையும் தவிர்த்துவிட்டேன். பிறகு கோவை வந்து புதிய வாகனம் வாங்கும் போது அவர்கள் கொடுத்த தலைக்கவசமும் திருப்பிக் கொடுத்துவிட்டேன். நான் ஆரம்பத்தில் வாங்கியதை வைத்திருந்தேன். ஆனால் அதை அணிந்து வாகனம் ஓட்டியதே இல்லை. வாகனம் வாங்கும் முன்பே தலைக்கவசம் வாங்கிவன் நான் ஒருவனாகத் தான் இருப்பேன்.
சமீபத்தில் திருப்பூர் சென்றுவிட்டு என் இருசக்கர வாகனத்தில் வந்துக் கொண்டிருந்தேன். அப்போது பின்னாடி அமர்ந்திருந்த எங்கள் விற்பனை அலுவலர் தான் வண்டி ஓட்டுவதாக கூறினார். சரி.. பாசக்கார பய.. ரொம்ப தூரம் வாகனம் ஓட்டியதில் நான் களைப்பாக இருப்பேன் என்று எண்ணி கேட்கிறார் போலும் என்று நினைத்து அவரை ஓட்ட சொன்னேன். கொஞ்ச தூரம் வந்ததும் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிரில் மூன்று போக்குவரத்துக் காவலர்கள் எங்களை நிற்க சொன்னார்கள். எப்போதுமே நம்ம பாசக்கார பயலுக நேரம் காலம் தெரியாமல் சொதப்புவதில் நம்மையே மிஞ்சுபவர்களாச்சே என்று நினைத்துக் கொண்டு, வாகனத்தில் இருந்து இறங்குவதற்கு முன் அவரிடம் உரிமம் உள்ளதா என விசாரித்தேன். நான் நினைத்த மாதிரியே நடந்தது. உரிமத்தை தொலைத்துவிட்டாராம். அதான பார்த்தேன். சரி கொஞ்சம் முன்னாடி நிறுத்துங்கள் என்று சொல்லிவிட்டு அவரை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு வாகனத்தில் இருந்த சான்றிதல்களை எல்லாம் எடுத்துக் கொண்டு நான் காவல் அதிகாரிகள் அருகில் சென்றேன். எங்களை நிறுத்திய அதிகாரி மற்றவர்களை ஓரங்கட்டுவதில் மும்முரமாய் இருந்தது எனக்கு வசதியாய் இருந்தது. ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டிருந்த அதிகாரி அருகில் சென்று பவ்யமாய் எல்லா ஆவணங்களியும் கொடுத்தேன். பதிவு சான்றிதல், வாகன காப்பீட்டுச் சான்றிதல் எலலாம் சரியாக இருந்தது. அடுத்து?.. வேறென்ன.. ஓட்டுநர் உரிமம் இருக்கா என்று வினவினார். ஹிஹி.. ஓட்டியவ்ரிடம் தானே இல்லை.. உட்கார்ந்து வந்த என்னிடம் இருக்கே.. ஒருவழியாய் அன்று தில்லாலங்கடி வேலை செய்து தப்பித்தேன். அது வரை நான் அபராதம் என்று ஒரு பைசாவும் கட்டியதில்லை.
இதெல்லாம் பழங்கதை.. இப்போ கோவை மாநகர காவல்துறை ஆணையர் மஹாலி அவர்கள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்தே ஆக வேண்டும் என்று உத்தரவு போட்டுவிட்டார். அப்படியும் நான் அதை பின்பற்றாமல் தான் சுற்றிக் கொண்டிருந்தேன். சில தினங்களுக்கு முன் இரவு ஒரு பாசக்கார முகவர் அவராகவே அழைத்தார் காசோலை தருவதற்கு. அது கனவா நனவா என்ற ஆச்சர்யத்தில் சென்ற எனக்கு நிஜமாகவே காசோலை அளித்து திக்குமுக்காட வைத்தார். அந்த மிதப்பிலேயே வந்துக் கொண்டிருந்த என்னை லட்சுமி ஆலைகள் தாண்டி ஒரு காவல் துறை அக்கா நிறுத்தவிட்டார். நான் நல்ல பிள்ளையாய் வாகன ஆவணங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு அருகில் போய் நின்றேன். அதற்கு அந்த அக்கா “ அதெல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் தம்பி. தலைக்கவசம் எங்கே?” என வினவினார். அங்க அக்காவை பார்ப்பதற்கு மிக நல்லவராகவே தெரிந்தார். இத்தனை ஆண்டுகால சந்தைப் படுத்துதல் துறையில் இருந்து நான் கற்றுக் கொண்ட ஒரே சிறப்பம்சம் இது தான். யாராக இருந்தாலும் முகம் பார்த்ததுமே அவர் எப்படிப் பட்டவராக இருபபார் என ஓரளவுக்கு கணித்து விட முடிகிறது. ஆஹா.. மாட்டிக்கிட்டயே காந்தி.. என்று நினைத்த வாறே “ அக்கா.. மன்னித்துக் கொள்ளுங்கள் அக்கா. காலையில் இருந்து வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கிறேன். அப்போது தலைக்கவசத்துடன் தானக்கா ஓட்டினேன். இப்போது வீட்டிலிருந்து ஒரு நண்பரை பார்ப்பதற்காக வந்தேன். இப்போது தான் தலைக்கவசத்தை வீட்டில் வைத்துவிட்டு வந்தேன். இதுவரை நான் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதே இல்லை. இந்த ஒருமுறை மட்டும் விட்டுவிடுங்கள் அக்கா. இனி தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்ட மாட்டேன்..” என்று கூச்சநாச்சமே இல்லாமல் பொய் சொன்னேன். நிச்சயம் அபராதம் கட்டியாக வேண்டும் என்றாலும் கட்டிவிடுகிறேன். தவறு என்னோடது தானே என்று மிக நல்லவன் போல் நன்றாகவே நடித்தேன். அவரும் அதை நம்பியது போல் தான் தெரிந்தது. இன்னொருவரும் இதே போல் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் அபராதம் கட்ட 100 ரூபாய் இல்லை என்று அளந்து விட்டுக் கொண்டிருந்தார். பிறகு அந்த அக்கா என்னைப் பார்த்து “ பாருங்க இவரிடம் 100 ரூபாய் இல்லையாம். கோவைக்காரங்க சட்டைப் பையில் 100 ரூபாய் கூட இல்லாமல் சுற்றுவார்களாம். இதை நான் நம்பனுமாம்” என்று சொனனார். சரி இருங்க என்று சொல்லிவிட்டு மற்ற எல்லாரிடமும் அபராதம் வசூலித்து தவறாமல அதற்கான ரசீதையும் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆஹா.. நம்மை இன்னுமா இந்த உலகம் நம்புகிறது. விட்டுவிடுவார் போல் இருக்கே என்று நினைத்து ஓரமாக நின்றுக் கொண்டேன். அந்தக் கூட்டத்தில் ஒருவருக்கு அபராதம் போட்டு ரசீதும் எழுதிவிட்டார்கள் அந்த அக்கா. ஆனால் அந்த தோழரோ 50 ரூபாய் தான் இருக்கிறது. 100 ரூபாய் இல்லை என்று நிஜமோ பொய்யோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர் புலம்பலில் கடுப்பான அக்கா வாகன சாவியை கொடுத்துவிட்டு செல்லுங்கள். பணம் கொடுத்துவிட்டு வாகனத்தை எடுத்து செல்லுங்கள் என்று கோபமாக சொல்லிவிட்டார். இன்னும் சற்று நேரம் இருந்தால் நமக்கும் ஆப்பு அடிப்பார் போல என்று நினைத்து “ அக்கா.. நான் வேண்டுமானால் அபராதம் செலுத்திவிடுகிறேன்.. நேரம் ஆகிறது “ என்று சொன்னேன். உடனே இன்னொரு நண்பரையும் என்னையும் பார்த்து அந்த 50 ரூபாய் தோழரை காண்பித்து இவருக்கு ஆளுக்கு 25 ரூபாய் கொடுத்துவிட்டு செல்லுங்கள். நான் ரசீது எழுதிவிட்டேன். இவர் 50 ரூபாய் மட்டும் கொடுத்தால் மீதம் 50 ரூபாய் நான் தான் கட்ட வேண்டும்.” என்றார். நான் 25 ரூபாயை அக்காவிடம் கொடுத்தேன் . ஆனால் அவர் அதை அந்தத் தோழரிடம் கொடுக்க சொன்னார். ஆஹா .. காவல் துறையில் இவ்வளவு நல்ல அக்காவா என்று நினைத்துக் கொண்டு அந்த தோழரிடம் 25 ரூபாய்க் கொடுத்து விட்டு அக்காவிர்கு நன்றி சொல்லி கிளம்பினேன்.
கிளம்பும் போது அக்கா சொன்னாங்க. “ நகரில் மொத்தல் 21 இடத்தில் இது போன்ற தணிக்கையில் காவலர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆகவே யாரும் தப்ப முடியாது. இனி தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்ட வேண்டாம். மீறினால் ஒரு நாளைக்கு குறைந்தது 100 ரூபாய் நீங்கள் அபராதம் கட்டுவது உறுதி” என்றார்
அவர் சொன்னது போலவே நகரில் எங்கெங்கு காணினும் தலைக்கவச சோதனைகள் நடந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் என்னை யாரும் நிறுத்தவில்லை. பின்ன.. தலைக்கவசம் இல்லாமல் ஓட்டினால் தானே நிறுத்துவார்கள். :))
பின்குறிப்பு : காலையில் இணையத்தில் என்னைக் கண்ட தாரணிபிரியா அக்கா “ டேய் தம்பி, என்னடா எப்போவும் அரசியல் பதிவா எழுதிட்டு இருக்க.. உன்னை திட்ட வேண்டும் போல் ஆசையா இருக்கு..ஒரு மொக்கை பதிவு போடுடா.. வந்து கும்மி அடிச்சிடறேன்” என்று பாசமாய் கேட்டதற்காகத் தான் இந்த மொக்கை.. எதுவாக இருந்தாலும் அவர திட்டிக் கொள்ளவும். :)
பிகு2 : என்னாலும் ஆங்கில சொற்கள் கலக்காமல் தமிழில் எழுத முடியும். :))
பிகு3 : ஆனாலும் எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுத முடியாது. :))
மொக்கை போட்டவன்..
ஓட்டு போடுங்க சாமியோவ்..
No comments:
Post a Comment