சைட் அடிக்கும் பெண்கள்.. கம்பர் வாழ்க..
சென்னை மாயாஜால்.. இளைஞர்களின் கொண்டாட்டம்.. குடும்பஸ்தர்களின் திண்டாட்டம்..(குடும்பத்தோடு போனால் பர்ஸ் பனால்.) நிறைய காதலர்கள்.. அதைவிட நிறைய கல்லூரி மாணவ மாணவிகள் குரூப் என பட்டாம்பூச்சி(விட்டில்?)மயம்.. மாயாஜால் திரையரங்க..உணவக என அடுத்த கட்ட முயற்சி.. அங்கே தான் நம் கதாநாயகிகள் திவ்யாவும் ப்ரியாவும் பாப்கார்னை நுனிவிரலில் எடுத்து நுனிநாக்கில் வைத்து..இப்படி நுனிநளினங்கள் எல்லாம் வெளியேதான்..வாய்க்குள் அதே பாப்கார்ன் என்ன பாடுபடுகிறது..அட இதில் என்ன ஒரு வாழ்க்கைத் தத்துவம்."என்னயா..சுகன்யா வருவாளா இல்ல நம்ம உள்ள போகலாமா?"
"வெயிட்பண்ணலாம்ப்பா.. வருவா..அங்க பார்த்தியா.. க்யூட் பேபி இல்ல.."
என்று சொல்லிக்கொண்டே கன்னத்தை உப்பிக் காட்டி சிரித்தாள்.. அந்த குழந்தையும் சிரித்தது..
ஒரு சிகப்பு டீ சர்ட் இளைஞன் க்ராஸ் செய்தான்..
"நல்லா இருக்கான் இல்ல.."
"இல்ல.. செளவ்செளவ் காய் மாதிரி இருக்கான்யா.. நீ இன்னும் அங்க பார்க்கல.."
"ஹே.. ஆமா.. அதான் நீ இந்த பக்கமாவே பார்த்து பேசிட்டு இருக்கியா..பாதி மறைக்கிதே.."
"ஸோ வாட்? அந்த ஷோல்டர் செம மேன்லியா இருக்கு இல்ல.. "
"நான் எங்க அதப்பார்த்தேன்.. இன்னும் அவன் கண்ணத்தான் பார்த்துட்டே இருக்கேன்.. "
இதைக் கேட்டுக்கொண்டே வந்த சுகன்யா..
"ஆமா.. அவரு பெரிய ராமரு.. நீங்க அயோத்தியா அழகிகங்க.. இவ கண்ண மட்டுமே பார்க்குறாளாம் அவ தோள மட்டுமே பார்க்குறாளாம்.. வாங்கடி.. படம் போட்டுற போறான்.."
"லேட்டா வந்ததும் இல்லாம ஆரம்பிச்சுட்டியா.. ஹே அந்த ராமாயண மேட்டர் புரியலடி.. எக்ஸ்பைளைன் ப்ளீஸ்.."
"ராமர் சீதை இருக்குற மண்டபத்துக்கு வந்தப்ப.. அங்க இருக்குற பொண்ணுங்க எல்லாம் அவர் அழகுல மயங்கி பார்த்துட்டே இருந்தாங்களாம்.. அதுவும் நீங்க இப்ப சொன்னீங்களே அந்த மாதிரி.. அவரோட தோளப் பார்த்த கண்கள் அதையே கடைசி வரைக்கும் பார்த்துட்டே இருந்துச்சாம்.. காலப் பார்த்தவங்களும் அந்த கால் அழக மட்டும் பார்த்துட்டே இருந்தாங்களாம்.. மொத்தத்துல யாருமே முழு அழகையும் பார்க்கலயாம்..
இப்படி நடந்துச்சோ இல்லையோ.. ஆனா கம்பரோட பார்வையும், வார்த்தைகளும்.. ஒருத்தரோட அழக வர்ணிக்கிறதுனா இதைவிட சிறப்பா யாரும் எழுத முடியாதுங்கறதும் மட்டும் உண்மையோ உண்மை..
பேசிக்கொண்டே தியேட்டருக்குள் நுழைந்து மறைந்துபோனார்கள்..
அந்த பாடல்..
தோள்கண்டார் தோளே கண்டார்
தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கொண்ட சமயத்து அன்னான்
உருவுகண் டாரை ஒத்தார்.
( தோளைப் பார்த்தவர்கள் அதை மட்டுமே பார்த்தார்கள். தாமரைப் பூ போன்ற காலையும், கைகளயும் பார்த்தவர்களின் நிலையும் அதுதான்..வாளைப்போல கண்களை பார்த்தவர்கள் கண்களை மட்டுமே பார்த்தார்கள்.. ஆக முழு வடிவையும் யாரும் பார்க்கவில்லை..அத்தனை அழகுவாய்ந்த உருவம் கொண்ட ராமன்)
மிகைப்படுத்தி வர்ணித்தாலும், எத்தனை அழகான சொற்கள்..எவ்வளவு கற்பனை..அதுதான் கம்பர்..!
No comments:
Post a Comment