"நடக்கும் அகராதி" என அழைக்கப்பட்ட மதிப்புக்குரிய மார்க்ஸ் முடங்கிப் போனது ஜென்னியின் மரணத்தில் தான். 1881- டிசம்பர் 2- இல் தன் மனைவி இறந்த போது மார்க்ஸீம் செத்துப் போய்விட்டார் என்கிறார் எங்கெல்ஸ். மார்க்ஸீன் நெருங்கிய தோழன் மார்க்ஸ் மரணத்தைப் பற்றி நம்முடன் பகிந்து கொள்கிறார் மேலும்...
ஜென்னியை மிகவும் நேசித்தவன் மார்க்ஸ். ஜென்னியின் மரணத்திற்கு பின் 15- மாதங்கள் வரையில் மார்க்ஸ் இருந்தாலும் அவனுடைய வாழ்க்கை இறந்த வாழ்க்கை தான். இருந்த வாழ்க்கையல்ல...
மனைவி இருந்த போதே மார்க்ஸ் பல வியாதிகளால் துன்பப்பட்டான். இருப்பினும் வியாதிக்காக மருந்துக்களை சாப்பிட்டு குணப்படுத்திக் கொள்ளும் சிந்தனை இருந்தது. ஆனால் ஜென்னி இறந்த போது முற்றிலும் அந்நினைவு அவனை விட்டு போய்விட்டது. தன் வீட்டின் அறைக்குள் முடங்கிப் போய்விட்டான். இன்னொரு அதிர்ச்சி அவனுக்கு பெண்ணின் மரணத்தில் காத்திருந்தது. ஆம்! மார்க்ஸீன் முதல் மகள் ´ஜென்னி லொங்குவே´ 1883- ஜனவரி 11- ஆம் தேதியில் பாரீசில் இறந்து போனாள்.
தன் குழந்தைகளையும் குடும்பத்தையும் மிகவும் நேசித்தவன் மார்க்ஸ். தொடர்சியான மரணத்தில் துடித்துப்போய்விட்டான். மற்றவர்களிடம் பேசுவது மிகக் குறைந்து போய்விட்டது. வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. வாழும் ஆசையை உதறிவிட்டான் என் மார்க்ஸ். வியாதிக்கு மருந்துக்களை உட்கொள்வதை நிறுத்திவிட்டான். அதன் பின் உடல் மிகவும் பலவீனமடைய ஆரம்பித்திருந்தது. நண்பர்கள் சிலருடன் மார்க்ஸை கவனித்துக் கொண்டோம்.
1883- இல் மார்ச் 14- ஆம் தேதியின் பிற்பகல் மார்க்ஸீடன் கடைசி மூச்சு நிற்பதற்கு 2- நிமிடங்களுக்கு முன்பாக அவனை தனியாக இருக்க விட்டோம். அவன் எப்போதும் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும் சாய்வு நாற்காலியில் அவன் இருந்தான். மூச்சு விட மார்க்ஸ் மிகவும் சிரமப்பட்டான். என்னால் சகிக்க முடியாத காட்சியாக இருந்தது. மார்க்ஸ் சிறிது தனிமையாக இருக்க ஆசைப்பட்டான். அதனால் நாங்கள் வெளியில் இருந்தோம்.
திரும்பிச் சென்று பார்த்த போது மார்க்ஸ் தனது நாற்காலியில் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான். ஓயாமல் சிந்தித்துக் கொண்டிருந்த மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திவிட்டான். என் மார்க்ஸ் நிரந்தரமாக தூங்கிப் போய்விட்டான்.
மார்ச் மாதம் 17- ஆம் தேதி லண்டனில் ஹைகேட் என்னும் மயானத்தில் மார்க்ஸ் அடக்கம் செய்யப்பட்டான்.
000
அதன் பின் எங்கெல்ஸ் சிறு உரை நிகழ்த்தினார். அதன் சுருக்கம் :
மனிதன் எப்படி படிப்படியாக வளர்ச்சியடைந்தான் என்பதை டார்வின் கண்டுபிடித்தான். மானிட ஜாதியின் சரித்திரம் எப்படி படிப்படியாக வளர்ச்சியடைந்தது என்பதை மார்க்ஸ் கண்டு பிடித்தான். மனிதர்கள், அரசியல், விஞ்ஞானம், கலை, மதம் முதலியவைகளில் கவனஞ் செலுத்துவதற்கு முன் உண்ண வேண்டும்; குடிக்க வேண்டும்; நிழலில் இருக்க வேண்டும்; உடுக்க வேண்டும். எனவே அன்றாடத் தேவைகளுக்கான பொருள்களை உற்பத்தி செய்துக் கொள்வது அவசியம். அதற்கு ஏற்றார் போல்தான் அக்காலத்தினுடைய பொருளாதார அமைப்பு இருக்கும். அப்பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டே காலத்தினுடைய ராஜ்ய ஸ்தாபனங்கள், சட்டக் கொள்கைகள், கலைகள், மதக் கோட்பாடுகள் முதலியன அமைகின்றன.
இந்த அடிப்படையைக் கொண்டே ராஜ்ய ஸ்தாபனங்கள் முதலியவற்றிற்கு வியாக்கியானம் செய்ய வேண்டும். இந்த சரித்திர உண்மையோ மார்க்ஸ் காலத்திற்கு முன் லட்சிய உலகத்தில் மறைந்து கொண்டிருந்தது. இந்த உண்மையை அறிஞர்கள் விபரீதமாக வியாக்கியானம் செய்து கொண்டு வந்தார்கள்.
இன்றைய முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்தி முறை எப்படி வளர்ச்சியடைந்திருக்கிறது. இதிலிருந்து எப்படி பணக்காரக் கூட்டத்தினர் உற்பத்தியாயினர் என்பதையும் மார்க்ஸ் கண்டுபிடித்திருக்கிறான். பொருளுற்பத்தி முறையில் மிஞ்சிய மதிப்பு என்னும் புதிய அம்சத்தைக் கண்டுப் பிடித்த பிறகு பொருளாதார சாஸ்திரிகள் எந்த இருளில் சென்றுக் கொண்டிருந்தார்களோ அதில் இருள் நீங்கி வெளிச்சம் ஏற்படத் தொடங்கியது.
இப்படியான ஆராச்சிகளைச் செய்தாலே வாழ்க்கை பூர்த்தியடைந்து விடும். ஆனால் மார்க்ஸ் பல துறைகளில் ஆராய்ச்சி செய்திருக்கிறான். இவையெல்லாம் மேலோட்டமான ஆராய்ச்சிகள் இல்லை. கணித சாஸ்திரம் உட்பட பல புதிய உண்மைகளைக் கண்டுப்பிடித்து வெளியிட்டிருக்கிறான் மார்க்ஸ்.
மார்க்ஸீக்கு விஞ்ஞான சாஸ்திரமென்பது சிருஷ்டித்தன்மை வாய்ந்த சரித்திர ரீதியான ஒரு புரட்சி சக்தி. தத்துவ அளவில் மார்க்ஸ் எந்த உண்மையை கண்டுபிடித்தாலும் மகிழ்ச்சி அடைந்தான். அதையும் விட தொழில் வளர்ச்சி, சரித்திர வளர்ச்சிகளில் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வந்த போதோ மிகுந்த மகிழ்ச்சியடைந்தவன் மார்க்ஸ்.
முதலாளித்துவத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும் சமூதாய அமைப்பு அதனால் உண்டாக்கப்பட்ட ராஜ்ய ஸ்தாபனங்கள் ஆகியவற்றை வீழ்ச்சியடைய வைக்க எந்த வகையிலாவது, யாருடனாவது ஒத்துழைக்கவும் இன்றைய தொழிலாளர் உலகத்திற்கு விடுதலை தேடிக் கொடுக்க வேண்டுமென்பதில் எந்த வகையிலாவது ஒத்துழைக்க வேண்டும் என்பதும் மார்க்ஸீன் நோக்கமாக இருந்தது.
சமூதாயத்தில் தொழிலாளர்களுக்கும் ஓர் அந்தஸ்து உண்டென்பதையும் அவர்கள் விடுதலை பெறுவதற்கு அவர்களுடைய நிலைமையை அவர்களே உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதிலும் முதன்மையாக உலகுக்கு எடுத்துக் காட்டியவன் மார்க்ஸ்.
போராடுவது மார்க்ஸீன் சுபாவத்திலேயே அமைந்திருந்தது. உற்சாகத்தோடும், உறுதியோடும் போராடுபவன் மார்க்ஸ். மார்க்ஸீக்கு அதில் வெற்றியும் கிடைத்தது. மார்க்ஸ் பத்திரிக்கைகளுக்குப் பல கட்டுரைகள் எழுதி இருக்கிறான். தர்க்க ரீதியில் பல வியாசங்கள் எழுதியிருக்கிறான். பாரிஸ், ப்ரெஸ்ஸெல்ஸ், லண்டன் முதலிய இடங்களில் சங்கங்கள் உருவாக்கி இருக்கிறான். எல்லாவற்றிற்கும் மேலாக சிகரம் வைத்தார் போல் "சர்வதேச தொழிலாளர் சங்கத்தை" உருவாக்கி இருக்கிறான். இதைக் கொண்டு மார்க்ஸ் பெருமையடைவதற்கு நியாயம் உண்டு.
ஆனால் மார்க்ஸ்...
அதிகமாகத் துவேஷிக்கப்பட்டான்; அதிகமாக அவமதிக்கப்பட்டான்; சுயேச்சாதிகார அரசாங்கங்களும், குடியரசு அரசாங்கங்களும் நாட்டை விட்டு வெளியேற்றின. முதலாளிகளில் மிதவாதிகளும், தீவிரவாதிகளும் மார்க்ஸை கேவலமாக தூற்றினர். ஆனால் மார்க்ஸோ ஒட்டடைகளை ஒதுக்கித் தள்ளுவது போல் அலட்சியமாக ஒதுக்கித் தள்ளினான் மார்க்ஸ். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே எதிர்விணை ஆற்றுவான் மார்க்ஸ்.
இன்று ஐரோப்பாவின் கிழக்குக் கோடியில் இருக்கும் ஸைபீரியச் சுரங்கங்களிலும், அமெரிக்காவின் மேற்குக் கோடியில் இருக்கும் கலிபோர்னியாவின் கடற்கரையோரத்திலும் வேலை செய்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் அன்பையும், மதிப்பையும் பெற்றுக் கொண்டு அவர்களை துக்கத்தில் ஆழ்த்தி விட்டு இறந்து போய்விட்டான் மார்க்ஸ்.
"மார்க்ஸீக்கு அநேக எதிரிகள் இருந்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், மனிதனுக்கு மனிதன் என்ற முறையில் மார்க்ஸீக்கு ஒரு விரோதி கூடக் கிடையாது" என்று நான் திட்டவட்டமாக சொல்வேன்.
மார்க்ஸ் இறந்தாலும் மார்க்ஸீனுடைய சித்தாந்தங்கள் இன்னும் அநேக நூற்றாண்டுகள் உயிரோடு இருக்கும்.
(எங்கெல்ஸீன் இரங்கல் உரையின் சுருக்கம்)
No comments:
Post a Comment