அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, January 21, 2009

கனடாவில் வேலை வாங்கித்தருவதாக லட்சக்கணக்கில் பணம் சுருட்டல்

கனடாவில் வேலை வாங்கித்தருவதாக லட்சக்கணக்கில் பணம் சுருட்டல்
இலங்கை மோசடி ராணி ஷர்மிளா சென்னையில் கைது


சென்னை, டிச.22-

கனடாவில் வேலை வாங்கித்தருவதாக லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய இலங்கைப்பெண் ஷர்மிளா மீண்டும் கைது செய்யப்பட்டார்.

மோசடி ராணி

இலங்கையைச் சேர்ந்தவர் ஷர்மிளா (வயது 53). 10 வருடங்களுக்கு முன்பு அகதியாக சென்னை வந்த இவர் பின்னர் சென்னையிலேயே நிரந்தரமாக தங்கி விட்டார். சென்னை வந்த பிறகு இவரது கணவர் பிரிந்து சென்று விட்டார். இதனால் 2 குழந்தைகளையும் காப்பாற்ற ஷர்மிளா மோசடி தொழிலில் இறங்கினார். கனடாவில் வேலை வாங்கித்தருவதாக லட்சம், லட்சமாக பணம் வாங்கி பலரிடம் மோசடி செய்தார்.

சென்னை அரும்பாக்கத்தில் வசித்த இவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் தள்ளினார்கள். ஜாமீனில் வெளிவந்த இவர் சென்னை அருகே உள்ள மறைமலை நகருக்கு குடிபெயர்ந்தார். மீண்டும் ஓசையில்லாமல் மோசடி வேலையை தொடங்கினார்.

கோர்ட்டு ஊழியரிடம் மோசடி

குலதீபன் என்ற இலங்கை நபரிடம் கனடாவில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.6 லட்சம் பணம் வாங்கினார். குலதீபன் இலங்கையில் கோர்ட்டு ஊழியராக பணியாற்றினார். கனடா சென்றால் லட்சம், லட்சமாக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டு கோர்ட்டு வேலையை உதறி விட்டு, சென்னை வந்தார். ஷர்மிளாவிடம் பணம் கொடுத்து கனடா வேலைக்காக காத்திருந்தார்.

ஆனால் ஷர்மிளா வேலையும் வாங்கிக் கொடுக்காமல், வாங்கிய பணத்தையும் ஏப்பம் போட்டு விட்டார். இதுதொடர்பாக குலதீபன் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். துணை கமிஷனர் விஜயகுமாரி, உதவி கமிஷனர் செல்வராஜ் ஆகியோர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

கைதானார்

ஷர்மிளா நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய போது, அவர் மேலும் பலரிடம் பண மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. அவரோடு மோசடியில் ஈடுபட்ட மேலும் 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். மோசடி செய்த பணத்தில் வாங்கி குவித்த டி.வி, வாஷிங் மிஷின், வி.சி.டி பிளேயர், சொகுசு ஷோபா, மற்றும் 16 சவரன் தங்க நகைகள் போன்ற பொருட்களையும், ரூ.35 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் ஷர்மிளாவிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

No comments: