அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, January 19, 2009

நீதிகிடைக்க அல்லது உதவிபுரிய இத்தளம் பயன்படுமேயானால் நான் உவகை கொள்வேன்.

ஏராளமான பாவனைகளை கொண்டது நம் சமூகம். பாவனைகள் வழியாகவே நாம் பலவற்றை அடைந்திருக்கிறோம் அல்லது அடைந்திருப்பதாக கற்பனை செய்துகொள்கிறோம். ஆனால் எதார்த்தங்களோ பாவனைகளுக்கு அப்பால் மிதந்துகொண்டிருக்கின்றன. "When a man reaches a certain age, there are many things he can feign; happiness is not one of them; என்கிறார் இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கிய படைப்பாளியான ஜார்ஜ் லூயிஸ் போர்ஹஸ். போர்ஹஸைப் போலவே நானும் மனநிறைவை கற்பனைகள் வழியாகவோ பாவனைகள் வாழியாகவோ அடையமுடியாது என்றே நம்புகிறேன். நம் இருப்பை அர்த்தப்படுத்திக்கொள்ள மனநிறைவு தேவை. மனநிறைவை அடைய செயல்கள் தேவை. செயல்களுக்கு மேன்மையான அர்த்தம் தேவை. மேன்மையான அர்த்தங்களுக்கு மேன்மையான லட்சியங்கள் தேவை. மேன்மையான லட்சியங்களை நான் என் தந்தையிடம் தான் கண்டடைந்தேன்.

ஒரு தகப்பனாகவும் ஒரு படைப்பாளியாகவும் என்னை மிகவும் பாதித்த மனிதர் அவர். அவருடைய படைப்புகள் முழுவதும் எளிய மனிதர்களே நிறைந்திருந்தார்கள். சாமானி்யர்களிடமும் ஓடுக்கப்பட்ட மனிதர்களிடமும் அவர் கொண்ட நேசம் நெகிழ்ச்சி தரதக்கது. கழுத்தை நெறிக்கும் பிரச்சனைகளோடு அலையும் அம்மனிதர்களுக்கு குறைந்த பட்ச ஆசுவாசம் சமூகவிடுதலையிலும் சமூகநீதியிலும் தான் அடங்கியுள்ளது என்பது அவருடைய தரிசனம். அவருடைய லட்சியத்தின் கற்பனையின் உன்னத வடிவம் தான் என் காவல்துறை பணி.

ஏற்றதாழ்வுகள் மலிந்த ஒரு சமூகத்தில் சமூக நீதிக்கான தேவை என்றும் இருந்துகொண்டே இருக்கிறது. ஒரு களப்பணியாளராக; ஒரு காவல்துறை அதிகாரியாக; ஒரு எளிய பிரஜையாக, சமூக நீதிக்கான போரட்டங்களில் ஜனநாயகத்திற்கு உட்பட்ட; சாத்தியப்பட்ட வழிகளியெல்லாம் தொடர்ந்து என்னை ஈடுபடுத்தி வந்திருக்கிறேன். கடந்த முப்பத்திநாலு வருட என் காவல்துறை பணியைக்கூட அவ்வாறே தான் நான் நம்புகிறேன் அல்லது அவ்வாறாக அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்.

எரியும் பிரச்சனைகளோடு ஒரு எளிய பிரஜை வெளியில் காத்துகொண்டிருக்கிறான் என்ற பிரக்ஞை எனக்கு என்றும் உண்டு. அவனை சென்று அடைவதற்கான மற்றொரு பாதை எனத்தான் இணையத்தையும் நம்புகிறேன். ஒரு சாமானிய மனிதனுக்கு நீதிகிடைக்க அல்லது உதவிபுரிய இத்தளம் பயன்படுமேயானால் நான் உவகை கொள்வேன்.
///

No comments: