1865 முதலே இந்தியாவில் வகுப்புவாத வன்முறைகள் மூலம் சிறுபான்மை முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றார்கள்.
இன்றளவும் பலகோடி முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள். 1947 இல் இந்தியா விடுதலையடைந்தபோது எல்லா மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பது அரசின் அடிப்படைக் கடமை என சட்டம் அமைக்கப்பட்டது. இது குடிமக்களின் அடிப்படை உரிமை.
இந்திய அரசியல் நிர்ணயச்சட்டம் பிரிவு 21. சட்டப்படி உருவாக்கப்பட்ட விசாரணை முறைப்படியன்றி வேறெந்த விதமாகவும் ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும், உயிரையும் பறிக்கக் கூடாது எனக் கூறுகின்றது. இதன் விளக்கம் (24) எந்த அளவுக்குச் செல்கின்றது என்றால், ஒருவர் தன்னைத் தானே மாய்த்துக்கொள்ள முயற்சி செய்வது அதாவது தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்கின்றது.
ஆனால் வகுப்புக் கலவரங்களின்போது குடிமக்களின் உயிரை - குறிப்பாக சிறுபான்மையினரின் உயிரைப் பெரும்பான்மையினர், பட்டபகலில் பறித்து விடுகின்றார்கள். கும்பல், கும்பலாக வந்து சிறுபான்மையினரின் உயிரைப் பறித்து விடுகின்றார்கள். அத்தோடு இந்தக் கும்பலுடன் அரசியல் நிர்ணயச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை நிலைநாட்டிட வேண்டிய அரசும், அதன் அதிகாரிகளும், காவல் துறையினரும் இணைந்து கொள்கின்றார்கள். தவறிவிடுகின்றார்கள், என்பது மட்டுமல்ல, அவர்கள் பெரும்பான்மை கும்பல்களுடன் இணைந்து சிறுபான்மையினரைக் கொலையும் செய்கின்றார்கள் பல நேரங்களில் மாநில அரசுகளே இதற்குத் துணை நிற்கின்றன.
வகுப்புக் கலவரங்கள் ஒரு பார்வை:
ஜபல்பூரில் 1961 ஆம் ஆண்டு நடந்த தொடர் வகுப்பு கலவரங்களில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டார்கள். காவல்துறை இந்துத்துவவாதிகளுக்குத் துணை நின்றது. நாடே அல்லோலகல்லோலப்பட்டது. காவல் துறையினரின் செயல்பாடுகள் கண்டிக்கப்பட்டன. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
1967 - இல் ஒரு குஜராத் போன்ற படுகொலைகள் ராஞ்சியில் நடைபெற்றது. எண்ணிக்கையில் அடங்காத முஸ்லிம்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.
தொடர்ந்து எழுந்த மக்கள் எழுச்சியை வழிமறிக்க, அல்லது மக்களின் கவனத்தை வேறு திசைகளின் பக்கம் திருப்பி விட ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. நீதிபதி ரகுபீர் தயாள் என்பர்தான் விசாரணையை மேற்கொண்டார். அவர்தான் முதன் முதலில் சுதந்திர இந்தியாவில் வகுப்புக் கலவரங்களின் தனித் தன்மைகளில் இரண்டனவற்றைக் குறிப்பிட்டார்.
ஒன்று வகுப்புக் கலவரங்களுக்கு முன்பு திட்டமிட்ட வெறுப்புப் பிரச்சாரம், முஸ்லிம்களுக்கு எதிராக களமிறக்கப்படுகிறது. இரண்டு கலவரத்தின்போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறையினர், பெரும்பான்மை சமூகத்தோடு கைகோர்த்துக் கொள்கின்றனர். அதிக அளவில் சிறுபான்மை முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்படுவதற்கும் அவர்களின் உயிர்கள் பறிக்கப்படுவதற்கும் இது மிகவும் முக்கியமான காரணம்.
குஜராத் 2002 இனப்படுகொலைகள் குஜராத் முழுவதும் நடைபெற்றன. அதே குஜராத்தில் 1969இல் ஒரு பெரும் இனப்படுகொலை நடைபெற்றது. அது அஹ்மதாபாத்-ஐ மையப்படுத்தி நடைபெற்றது. இப்போதும் நாடெங்கும் எதிர்ப்புகள் கிளம்பின. அரசு இயந்திரத்தை சுழற்றிடும் பொறுப்பிலும் அதிகாரத்திலும் இருப்பவர்கள் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள், மனுக்கள், ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் நடைபெற்றன.
வழக்கம் போல் ஓர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணையை நீதிபதி ஜக் மோகன் ரெட்டி என்பவரே முன்னின்று நடத்தினார் அவரும் முஸ்லிம்களைப் பாதுகாத்திட வேண்டியவர்களே அவர்களுக்கெதிரான இனப்படுகொலையில் பங்கெடுத்திருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டார்கள். ஆனாலும் அவர்களுக்கெதிராகக் 'கனைத்துக்' கூட காட்டவில்லை நமது மத்திய மாநில அரசுகள்.
1970 இல் பிவாண்டி, ஜால்கோன், மாஹாத் ஆகிய இடங்களில் தொடர் இனப்படுகொலைகள் இடம்பெற்றன.
இதிலும் காவல்துறை கொலைவெறிபிடித்த இரத்தக் காட்டேரிகளோடு துணை நின்று சிறுபான்மை முஸ்லிம்களின் இரத்தத்தை சுவைத்ததோடு அவர்களின் உயிர்களையும் உடமைகளையும் பறிமுதல் செய்தது. இதனையும் விசாரிக்க ஒரு 'விசாரணை கமிஷன்' ஏற்படுத்தப்பட்டது இதற்கு நீதிபதியாக மாடோன் என்பவர் நியமிக்கப்பட்டார்.
1984 - இல் நெல்லிப் படுகொலைகள், மூன்று நாள்களாக இந்துத்துவவாதிகள், வேலும், வில்லும், வாளும் ஏந்தி வந்து ஓர் பள்ளிக் கூடத்தில் குழுமினார்கள் முஸ்லிம்களைக் கூட்டாகக் கொலை செய்திட! அவர்கள் தங்கள் எண்ணங்களை - என்ன செய்யப் போகின்றோம் என்பதை எள்ளவும் மறைக்கவில்லை.
ஆனாலும் தடுப்பாரோ தட்டிக் கேட்பாரோ இல்லை. மறுநாள் காலையில் தாரை தப்பட்டைகளை அடித்துக் கொண்டு மேளதாளங்களோடு வந்து முஸ்லிம்களை இனப்படுகொலை செய்யும் ஈனச் செயலை எளிதாக நிறைவேற்றினார்கள்.
இப்படி ஒரு நாளல்ல, மூன்று நாள்கள் தொடர்ந்து முஸ்லிம்களை கொலை செய்தார்கள். இந்த இனப்படுகொலையின்போது அரசின் அதிகாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையில் கொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் 2400. இதில் பெண்களும் குழந்தைகளும் - கர்ப்பிணிகளின் வயிற்றிலிருந்த சிசுக்களும் உண்டு.
அருகாமையில் இராணுவ முகாம். அலறி அடித்துக் கொண்டு செய்தியைச் சொன்னார்கள் முஸ்லிம்கள், காவல்துறை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றது என்றால் இராணுவம் இது எங்கள் வேலை இல்லை எனக் கூறிவிட்டது.
1987 - இல் ஹாசிம்புரா..., இனப்படுகொலைகள். படுகொலைகள் நடந்து கொண்டிருக்கும் போது காவல்துறைக்கு முஸ்லிம்கள் தொடர்ந்து தொலைபேசி மூலம் நடந்தவற்றைச் சொல்லுகின்றார்கள். வாருங்கள், காப்பாற்றுங்கள், என் கூப்பாடு போடுகின்றார்கள்.
என்ன ஆச்சரியம்...!
சற்று நேரத்திற்கெல்லாம் ஓர் காவல் துறை ஊர்தி வந்து நிற்கின்றது முஸ்லிம்கள், காப்பாற்றப்பட்டு விட்டோம் என நிம்மதி அடைந்தார்கள்.
காவல் துறையினரின் கருணை சற்று நீண்டது. எல்லோரும் வந்து காவல்துறையின் ஊர்தியில் ஏறிக்கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுத்தார்கள் ஏறிக்கொண்டார்கள் உயிருக்கு ஏங்கி நின்ற முஸ்லிம்கள். ஏறியவர்களுடன் ஊர்தி விரைந்தது. ஓரிரு நாட்களாகியும் ஊர்தியில் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் திரும்பி வரவேயில்லை. தேடினார்கள் அலைந்து அலைந்து அழுது புலம்பினார்கள். எந்தத் துப்பும் கிடைக்க வில்லை. அவர்கள் அத்தனை பேரையும் காவல்துறையினரே கொலை செய்து ஒரு ஏரியில் போட்டு விட்டார்கள். அந்த அப்பாவி முஸ்லிம்களின் இரத்தத்தால் அந்த ஏரியே சிவப்பு நிறமாக மாறிப்போனது செந்நிற ஏரி என்றே அதற்கு இப்போது பெயர்.
1989 - இல் பாகல்பூர் படுகொலைகள், இன்னும் கோரமும் குரூரமும் நிறைந்தனவாக நடைபெற்றன மனசாட்சி உள்ளவர்களின் இதயங்களில் இந்தச் சம்பவம் ஈட்டிகளாய் இறங்கியது.
முஸ்லிம் ஆண்களையெல்லாம், தனிமைப்படுத்தினர் சங்கப்பரிவாரத்தினர். அவர்களைஅழைத்துச் சென்று ஒரு குளத்தில் வெட்டிப்போட்டார்கள். பெண்களைப் 15 நாள்கள்வரை வைத்து தங்கள் இச்சைகளை விருப்பம்போல் தீர்த்துக் கொண்டார்கள். பின்னர் அழைத்துச் சென்று அதே குளத்தில் வெட்டிப்போட்டார்கள். பின்னர் அரசின் உதவியுடன் அந்தக் குளத்தையே மூடிவிட்டார்கள்.
ஒரு காவல்துறை தலைமை கண்கானிப்பாளர் ஒரு நூறு முஸ்லிம்களை அழைத்துச் சென்று காவல்துறை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டுச் சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தார். அவர்கள் அத்தனை பேரும் பிணங்களாக வீழ்ந்துகிடந்தார்கள். காவலுக்கு நின்றவர்களின் கைங்கர்யம் அது.
இனப்படுகொலைகள் நடந்து கொண்டிருந்தபோது பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரில் ஒருவர் முஸ்லிம் இன்ஸ்பெக்டர். அப்பாவி முஸ்லிம்கள் கொலை செய்யப்படுவதை அவரால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. அதையும் காவல் துறையினரே செய்வதை அவரால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. என்ன அநியாயம்? என்ன செய்கின்றீர்கள்? என தனக்குக் கீழுள்ள காவல்துறை அதிகாரிகளைக் கேட்டார். கேள்வியை முடிப்பதற்குள் அந்த இன்ஸ்பெக்டர் பிணமாக சாய்ந்தார். அவரது முதுகையும் மார்பையும் துளைத்துக் கொண்டு சென்றது ஒரு துப்பாக்கிக் குண்டு.
அந்த முஸ்லிம் இன்ஸ்பெக்டர் உடலில் குண்டைப் பாய்ச்சியவர் அவருக்குக் கீழ் வேலை செய்த சப் - இன்ஸ்பெக்டர். இந்த சப் - இன்ஸ்பெக்டரை தண்டிக்க முடியவில்லை, இடமாற்றம் கூட செய்ய முடிய வில்லை
பின்னர் வழக்கம் போல விசாரணை கமிஷன் என்ற கண்துடைப்பு நாடகம் நடைபெற்றது.
நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அவர்கள் மிகவும் சிரமப்பட்டு விசாரணையை நடத்தினார். அரசியல்வாதிகள் யார், யார் அந்த இனப்படுகொலைகளுக்குக்குக் காரணம் என்பதைக் குறிப்பிட்டார். அரசு அதிகாரிகள் யார்? யார் இனப்படுகொலைகளைச் செய்தார்கள் என்பதைக் குறிப்பிட்டார்.
ஆனால் நடந்தது வேறு : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கையில் பிரதான குற்றவாளியாகக் காட்டப்பட்ட பால் தாக்கரேயின் கட்சி ஆட்சிக்கு வந்தது. பல அதிகாரிகள் ஓய்வு பெற்றார்கள். மீதமிருந்தோர் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக, பதவி உயர்வைப் பெற்றார்கள்.
2002 குஜராத் இனப்படுகொலையின் தளகர்த்தனாக இருந்த மோடி இரண்டு முறை முதலமைச்சரானார். அந்த இனப்படுகொலைகளின்போது, நியாயமாக அதிகாரிகள் (ஸ்ரீகுமார்) போன்றவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணி உயர்வு மறுக்கப்பட்டது. இன்னும் 'சஞ்சய்பாட்' போன்றவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். இனப்படுகொலைகளுக்க உதவியாக இருந்த அதிகாரிளுக்குப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன.
தடுப்புச்சட்டம் 2005
இப்படி வகுப்பு கலவரங்களுக்கும், இனப்படுகொலைகளுக்கும் உதவிகளைச் செய்வோர் ஆட்சிளையும் பதவி உயர்வையும் பெற்றுக் கொண்டிருந்த நிலையில்தான் இவர்களைத் தண்டிக்கும் வழிமுறைகளைக் காண மனித உரிமையாளர்கள் ஒரு சட்டம் வேண்டும் என்றதொரு கோஷத்தை முன்வைத்தார்கள். இந்த கோஷங்கள் 2005 முதலே எழுப்பப்பட்டன. காங்கிரஸ் அரசும் முஸ்லிம்களை காப்பாற்றாவிட்டாலும், ஏமாற்றவது கடமை என நினைத்தது. தனது ஆகவே அப்படியரு சட்டத்தை யாத்திடும் வழிமுறைகளை மேற்கொண்டது.
இதற்கான பொறுப்பை தேசிய ஆலோசனை குழுவிடம் ஒப்படைத்தது. இந்த தேசிய ஆலோசனை குழு மிகவும் முக்கியமானதொரு அமைப்பு. நாட்டை ஆளும் அமைப்பு எனச் சொன்னால் அது மிகையாகாது. இதனால்தான் இதன் தலைவராக சோனியா காந்தி அவர்கள் இருக்கின்றார்கள்..
திருமதி சோனியா காந்தி அவர்களின் தலைமையிலான இந்த தேசிய ஆலோசனை குழு, ஒரு சட்டத்தை வரைந்தது.
இந்தச் சட்டத்தின் நோக்கம் இனப்படுகொலைகளை - வகுப்புவாத கொலைகளைச் செய்கின்றபோது அதைத் தடுக்கத் தவறிய, ஆட்சியாளர்கள் உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் தண்டிக்கப்பட வேண்டும்.
வகுப்பு கலவரங்களை நடத்துவதற்கு முன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் (சங்கப்பரிவாரம்) போன்ற கும்பல்களைத் தடுக்க தவறிய அதிகாரிகளைத் தண்டிக்கவேண்டும்.
வகுப்புக் கலவரங்கள் நடக்கின்றபோது தடுக்கத்தவறும் அதிகாரிகள், அதற்கு உதவிகளைச் செய்ய முன்வரும் அதிகாரிகள் கீழ்நிலை காவல்துறையினர், இவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
வகுப்புக் கலவரங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.
கற்பழிக்கப்படும் பெண்கள், அவமானப் படுத்தப்படும் பெண்கள், இவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வகை செய்யவேண்டும்.
வகுப்புக் குரோதங்களை மனதில் வைத்துக் கொண்டு, சிறுபான்மையினரை தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றுவது - அல்லது வெளியேறுவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்துவது. இதற்கு காரணமானவர்களைத் தண்டிப்பது.
நம்மைப் பொறுத்தவரை சங்கப்பரிவார அமைப்புகளை முழுமையாகத் தடை செய்யாத வரை வகுப்புக்கலவரங்களை தடுத்து நிறுத்திட இயலாது.
வகுப்புக் கலவரங்களை நிகழ்த்தினால், சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை தரை மட்டமாக்கினால், தேர்தலில் வென்று, பதவிகளைப் பெறலாம் என்றாகிவிட்ட நிலையில், முழுமையான தடையை அரசு ஆலோசிக்கத் தயங்குகிறது.
இந்தச் சட்டம் வந்தால் எல்லாம் நடந்துவிடும் வகுப்பு கலவரம் குறைந்துவிடும் என்பது கனவுதான்.
இந்தச் சட்டவரைவில் சொல்லப்படும் பல குற்றங்கள் எற்கனவே நமது இந்திய தண்டனைச் சட்டத்தில் இருப்பவைதான். ஆனால் அவை செயல் படுத்தப்படுவதில்லை.
வெறுப்புப் பிரச்சாரங்கள் செய்பவர்களை தடுக்க, சமூகங்களுக்கிடையேயுள்ள நல்லுறவை கெடுக்க முனைபவர்களை, தண்டிக்க இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 இருக்கின்றது. ஆனால் இஃது அப்பாவித்தனமாகக் குழுமும் முஸ்லிம்களை கேள்விக்கணக்கில்லாமல் தடுப்புக் காவலில் வைப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிறது.
சட்டத்தின் சிறப்பு :
மனித உரிமை அமைப்புகள் இந்தச் சட்டம் கடமை தவறும் அதிகாரிகளைத் தண்டிக்க வகைசெய்கின்றது எனக் கூறுகின்றார்கள். வகுப்புக் கலவரங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டால். அவை நீண்ட நாள்களாக நீடித்தால், அந்தப் பகுதியிலுள்ள அதிகாரிகள், தங்கள் கடமைகளில் தவறிவிட்டார்கள் எனக்கருதப்படும் என்றொரு பிரிவு இந்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
கடமை தவறுவோரை தண்டிப்பதற்கு நமது இந்திய தண்டனை சட்டத்தில் வழி இருந்தாலும் இந்தப்பகுதி சற்று விசாலமானது என்கின்றார்கள், மனித உரிமை ஆர்வலர்கள்.
நடப்பிலிருக்கும் சட்டங்கள் வகுப்புக் கலவரத்திற்கான முன்னேற்பாடுகளைத் தடுக்கத் தவறியதை கடமை தவறிய குற்றமாக ஏற்பதில்லை மாறாக கலவரம் நடந்தபின்பு வரும் நிகழ்வுகளில் கடமை தவறுபவர்களையே தண்டிக்க வகை செய்கின்றது.
சட்டத்தின் இந்தப் பிரிவுகள், நிச்சயமாக அதிகாரிகள் வகுப்புவாத சக்திகளுக்கு துணைபோவதை, உதவி செய்வதை நிச்சயமாகத் தடுக்கும் என்கின்றார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.
சட்டத்தின் செயல்பாடுகள்:
இந்தச் சட்டத்தின் படி, தேசிய அளவில் ஓர் முகவாண்மை ஏற்பாடு செய்யப்படும். அதன் பெயர், தேசிய வகுப்பு நல்லிணக்கம், நீதி மற்றும் இழப்பீட்டு ஆணையம்.
இந்த ஆணையம் தான் இந்தச் சட்டத்தை அதாவது வகுப்புவாத வன்முறை தடுப்புச் சட்டத்தைச் செயல்படுத்தும்.
இதன் தலைவராக மத்தியில் பிரதமர் இருப்பார். மாநில அளவில் இதுபோன்ற ஆணையம் ஒன்று அமைக்கப்படும். அதன் தலைவராக மாநில முதலமைச்சர் இருப்பார்.
மாநில அமைப்பில் இந்த ஆணையத்தை ஏற்படுத்துவதன் நோக்கம், மாநில அரசுகளின் அதிகாரத்தில் மத்திய அரச தலையிட்டு விடக்கூடாது என்பதே!
ஏனெனில் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவது என்பது, மாநில அரசின் கடமை, உரிமை. இச்சட்டம் மாநில அரசின் உரிமைகளில் தலை இடுகிறது என குஜராத் முதல்வர் மோடியும். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் எதிர்த்தார்கள். ஆகவே இந்த ஆணையம், மாநில அமைப்புகளை ஏற்படுத்திற்று. இதையும் பலர் எதிர்த்தார்கள். ஆனால் மத்திய அரசு விட்டுத் தந்திடவில்லை.
தேசிய சமய நல்லிணக்க ஆணையம் சட்டத்தின் செயல்பாடு
சிறுபான்மையினரை ஒட்டுமொத்தமாகப் பாதுகாக்கப் போகின்றோம், என மார்தட்டி வந்த இந்தச் சட்டம் இந்திய தேசிய மத நல்லிணக்க ஆணையம் என்ற அளவில் சுருங்கிக் கொண்டது.
என்ன அதிகாரம்?
மொத்தச் சட்டத்தையும் செயல்படுத்துகின்ற பொறுப்பு இந்த ஆணையத்திற்கு உண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்களை பெற்றுத் தந்திடுவதும் இந்த ஆணையத்தின் பொறுப்பு இந்தச் சட்டத்தின் அதாவது வகுப்புவாத வன்முறை தடுப்புச்சட்டத்தின் சொல்லாட்சியில் நிவாரணங்களுக்குப் பெயர் இழப்பீடுகள். இழப்பீடுகள் உரியவர்களுக்குச் சென்று சேருகின்றனவா? என்பதைக் கண்காணிக்கின்ற பொறுப்பும் இந்த ஆணையத்திற்கு உண்டு.
ஆணையத்தின் அதிகாரம்?
இப்படி எல்லாப் பொறுப்புகளையும் ஒன்றாய் சுமக்கும் இந்த ஆணையத்தின் அதிகாரம் என்ன?
இந்த ஆணையம் மாநில அரசுக்கு ஆலோசனைகளை வழங்கலாம். இந்த ஆணையத்தின் ஆலோசனைகளை ஏற்கமறுத்து விட்டால், இந்த ஆணையம் நீதிமன்றங்களை அணுகலாம் என்று கூறுகின்றது.
அரசுகள் ஏற்கமாட்டா என்பதை நாமறிவோம். நரேந்திர மோடிகள் முதலமைச்சராக ஆகிவிட்டால் என்ன செய்வது? 'வாஜ்பேயி' போன்றவர்கள் பிரதம அமைச்சராக ஆகிவிட்டால் என்ன செய்வது?
2002 இனப்படுகொலைகளின்போது 'வாஜ்பேயி' குஜராத் நமது சோதனை கூடம் இதனை நாம் இந்தியா முழுவதும் கொண்டு சென்றிட வேண்டும் எனப் பேசியதை யாரும் மறந்திருக்க முடியாது.
இந்தச் சட்டம் பாதிக்கப்படுபவர்கள் நேரடியாகப் பயன்படுத்துகின்ற அளவில் மாற்றி அமைக்கப்படவேண்டும்.
நேரடியாகவே அவர்கள் அத்தனை அதிகாரங்கள் மீதும் வழக்குத் தொடர்ந்திட தேவையானால் முதலமைச்சர் மீதும், வாஜ்பேயி போன்றவர்கள், பிரதம அமைச்சரானால் அவர்கள் மீதும் வழக்குத் தொடர்ந்திட வழிவகை செய்திட வேண்டும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கூப்பாடு நம் நாட்டைப் பொறுத்தவரை ஏட்டுச் சுரைக்காய்தான். அவை நாட்டு நடப்பாக ஆகாதவரை எந்தச் சட்டமும் எந்த நிவாரணத்தையும் தந்திட முடியாது
நீதி மன்றங்கள்...?
நீதி மன்றங்கள், இந்தியாவில் சிறுபான்மையினரைப் பொறுத்தவரை அநீதி மன்றங்களாகி வெகுநாள்களாகி விட்டன. ஷைத்தானும் குரங்குகளும் நீதிமன்ற தீர்ப்புகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அப்பாவி சிறுபான்மை சமுதாயத்தவர்களை ஆண்டுக்கணக்கில் சிறையில் வைத்திடும் கோரம், அதுவும் எந்த ஆதாரமுமில்லாமல் சிறையில் வைத்திடும் அவலம் இந்தியாவில் தான் மிகவும் அதிகம். பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு தீவிரவாதிகள் என முத்திரை குத்தி சிறையில் வைத்தபின், அவர்கள் விடுவிக்கப்பட்டு, இந்துத்தீவிரவாதிகள் கைது செய்யப்படுகின்றார்கள்.
அதேபோல் நீதிபதிகளை தண்டிக்கவும் வேண்டும். இல்லையேல் எந்தச் சட்டமும் சிறுபான்மையினர் மீது ஏவிவிடப்படும் எந்தத் தாக்குதலிலிருந்தும் இச்சட்டங்கள் அவர்களைக் காப்பாற்றிடாது. சிறுபான்மையினருக்கு நீதிமன்றங்கள் வழி என்ன கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பதை உச்சநீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர், ராஜீவ்தாவான் அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள்.
“சிறுபான்மையினருக்கு (நமது நீதி மன்றங்களில்) நீதி கிடைக்காது என்பது மட்டுமல்ல, அவர்கள் நீதியின் பெயரால், கொடுமைப்படுத்தப்படுவார்கள்.”
ராஜீவ்தாவான் அவர்களின் சொற்கள் எந்த அளவுக்கு நம் நாட்டின் நிதர்சனம் என்பதை, உணர்ந்திட பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் கீழ் நீதிமன்றங்களிலிருந்து உச்ச நீதி மன்றம் வரை வழங்கிய தீர்ப்புகளிலிருந்து தெரிந்திடலாம்.
அதேபோல், குண்டு வெடிப்பு விவகாரங்களில், அப்பாவி முஸ்லிம்களை சிறையில் வைத்திட நீதிமன்றங்கள் எந்தத் தயக்கத்தையும் காட்டுவதில்லை.
அதே நேரத்தில் உண்மையிலேயே அந்த குண்டு வெடிப்புகளில், கைதாகும், இந்துத் தீவிரவாதிகளுக்கு உடனேயே பிணைகளை வழங்கிவிடுகின்றது. ஆக நீதிமன்றங்களின் பார்வையும் போக்கும் மாறிடாதவரை எந்தச் சட்டத்திலும், சிறுபான்மையினர் பாதுகாப்பைப் பெற்றிட மாட்டார்கள்.
வகுப்புவாத வன்முறைத் தடுப்புச்சட்டத்தின் இப்போதைய நிலை....?
இந்தச் சட்டத்தைத் தயாரித்தது என்,ஏ,சி என்ற தேசிய ஆலோசனை குழு, அதன் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள். இந்தச் சட்ட வரைவு இதுவரை அமைச்சரையின் ஒப்புதலுக்குக் கூட வைக்கப்படவில்லை காரணம், இதற்கு இந்துத்துவ தீவிரவாதிகளிடமிருந்து மட்டுமல்ல, முஸ்லிம்களின் நண்பர்களைப் போல்காட்டிக் கொள்ளும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போன்றவர்களிடம் இருந்து வந்த எதிர்ப்பும் தான்.
அமைச்சரவையின், ஒப்புதலுக்குப்பின், இது நாடாளுமன்றத்தின் விவாதத்திற்கு வைக்கப்பட வேண்டும். நாடாளுமன்ற விவாதத்தில் வென்றபின் இந்தச் சட்டம் தேர்வுகுழுக்களில் (sறீமீநீt நீஷீனீனீவீறீறீநீமீ) விவாதிக்கப்படும் பின்னர் மேலவையில் விவாதிக்கப்படும் பின்னர் இந்தச் சட்டம், குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு வைக்கப்பட வேண்டும் இத்தனையையும் இது கடக்கும் என எதிர்ப்பார்பதற்கில்லை.
இரண்டு சட்டவரைவுகள்
இந்தச் சட்டத்தின் முதல்வரைவு சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனை குழு வரைந்தது.
இந்த வரைவில் எது வகுப்புவாத வன்முறை என்பதை வரையறுப்பதில் பல குளறுபடிகள்.
இதனால் மனித உரிமை அமைப்புகள், ஓர் சட்டவரைவை முன் வைத்தன. அது ஹர்ஷ் மந்திர் அவர்களின் தலைமயில் அமைந்த குழு. இந்தக் குழு வரைந்த சட்டம் செயலுக்கு வந்தால் நாம் எதிர்ப்பார்ப்பதைப் போல் பல நேரடி நிவாரணங்கள் கிடைக்கலாம். ஆனால் வரவாய்ப்பில்லை என்றே படுகின்றது.
திருமதி சோனியா காந்தி அவர்களின் தலைமையிலான குழுவின் சட்டவரைவே இன்னும் அமைச்சரவையை எட்டிப்பார்க்காத நிலையில் ஹர்ஷ் மந்திர் தலைமையிலானவர்கள் எழுதிய சட்ட வரைவு எந்த அங்கீகாரத்தையும் பெறப்போவதில்லை.
தேசிய ஒருமைப்பாட்டுக் குழு கூட்டம்.
இந்த வருடம் 2011 செப்டம்பர் திங்கள் 10 ஆம் நாள் நமது தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தச் சட்ட வரைவு பற்றிய ஒரு விவாதமே முழுமையாக நடைபெற்றது.
இந்த விவாதத்தில் பாரதீய ஜனதா கட்சியைச் சார்ந்த சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி போன்றவர்கள் எல்லா நேரத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டு சட்டத்தை எதிர்த்தார்கள் இதனை ஆதரித்து அழுத்தமாகப் பேசியிருக்க வேண்டிய காங்கிரஸ் கட்சிக்காரர்கள் மௌனம் சாதித்தார்கள் இதனால் இந்தச் சட்டம் கிடப்பில் போடப்படும் நிலையே அதிகம் என்றானது.
இல்லையேல் நாடாளுமன்றத்தின் இந்தக் குளிர்காலத் தொடரில் இச்சட்டம் விவாதத்திற்கு வந்திருக்க வேண்டும்.அண்ணாஹஸாரேயும் வகுப்புவாத வன்முறை சட்டமும்.
அண்ணா ஹஸாரே-இன் வாழ்க்கையும் இப்போதைய சமூக நடவடிக்கைகளும் இந்துத்துவாவில் தேய்த்து எடுக்கப்பட்டதாகவே அமைந்திருக்கின்றது.
அவருடைய அனைத்து நடவடிக்கைகளும் இந்துத்துவ கட்சியாகிய பாரதீய ஜனதா கட்சிக்கும், இந்துத்தீவிரவாத அமைப்புகளுக்கும் உதவும் வகையிலேயே அமைந்திருக்கின்றன.
சமூக ஆர்வலர்கள் இந்தியாவை மூன்று 'C'கள் பீடித்திருக்கின்றன அவை Castism, Communalism, Corruption அதாவது ஜாதியம், வகுப்புவாதம், லஞ்சம் என்பவைதான் இந்தியாவின் தீர்க்க முடியாத நோய் என்பார்கள். அதில் முதலில் ஒழிக்கப்பட வேண்டிய ஜாதியத்தில் அழுத்தமான பிடிப்புக் கொண்டவர் அண்ணாஹஸாரே! அடுத்து ஒழிக்கப்பட வேண்டிய வகுப்பு வாதத்திலும் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டவர் செயல்படுபவர். எந்த அளவுக்கு என்றால் மோடியையே புகழும் அளவுக்குப் போய் விட்டார். அதன்பின் மக்கள் தந்த அழுத்தங்களால்தான் அதனை பின்வாங்கினார்
'லஞ்சத்தை' கையிலெடுத்துக் கொண்டார் மற்ற இரண்டு பிரச்சனைகளிலிருந்தும் மக்கள் கருத்தையும் கவனத்தையும் திசை திருப்பிவிட்டார் மீடியாக்களின் மொத்த இடத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டார். இதனால் இந்த சட்டத்தையும் - வகுப்புவாத வன்முறை தடுப்புச்சட்டத்தையும் மக்கள் கவனத்திலிருந்து மறைத்துவிட்டார். மக்கள் மத்தியில் ஓர் விவாதமாகாமல் போய்விட்டது.
இந்த வகையிலும் அவர் இந்துத்துவ அமைப்புகளுக்கு ஓர் செஞ்சோற்றுக் கடனையே ஆற்றி இருக்கின்றார்.
சுப்பிரமணியசாமி முஸ்லிம்களுக்கு வாக்குரிமையை மறுக்கும் கட்டுரையை எழுதி நான்தான் மிகப்பெரிய இந்துத்துவாதி எனப் பிரகடனப்படுத்திக் கொண்டார். இப்போது இந்த வகுப்புவாத வன்முறை தடுப்புச்சட்டத்திலும் தனது மூக்கை நுழைத்திருக்கின்றார்.
இந்தச் சட்டத்தை வரைந்ததன் மூலம் சோனியா காந்தி இந்துக்களுக்குத் தீராத துரோகத்தைச் செய்துவிட்டார் எனக் கூறி அவர் மீது ஓர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்திருக்கின்றார் டெல்லியில்.
தாருல் இஸ்லாம் வைகறை வாசகர் வட்டம்.
சோனியா காந்தி தலைமையிலான குழுவரைந்த சட்டம், ஜீலை 4 ஆம் நாள்வரை மக்களின் கருத்துக்காக இணையதளத்தில் வைக்கப்பட்டிருந்தது நாம் இந்தக் கட்டுரையில் சுட்டிக் காட்டி இருப்பவற்றை அதில் நமது கருத்தாகத் தெரிவித்தோம்.
ஆனால் இப்படி ஒரு சட்டம் வேண்டும் என்பதை வலியுறுத்தினோம், காரணம் சங்கப்பரிவாரத்தின் வெறுப்புப் பிரச்சாரத்தை ஓரளவுக்கு குறைக்கவாவது இந்தச் சட்டம் பயன்படும்.
கிருஸ்தவ அமைப்புகள்
அத்தோடு கிருஸ்தவ அமைப்புகள் இந்தச் சட்டமே வரவேண்டும் என வரிந்து கட்டிக் கொண்டு உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதில் ஜான் டயான் அவர்கள் தேசிய ஒருமைப்பாட்டுக் குழு கூட்டத்தில் அழுத்தமாகப் பேசினார். மற்றொரு சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் கிருஸ்தவர்களோடு, தோளோடு தோளாக நிற்கவிரும்பினோம். ஆகவே இந்தச் சட்டத்தை ஆதரித்தோம்.
கிருஸ்தவ அமைப்புகள் 57 திருத்தங்களை இந்தச் சட்டத்தில் கொண்டு வந்தார்கள் அவற்றில் பெரும்பான்மையானவை ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இந்தச் சட்டத்தைப் பார்த்து இந்துத்துவவாதிகள் பதறுகின்றார்கள். அவர்கள் தாங்கள் செய்யும் சிறுபான்மையினர் வெறுப்புப் பிரச்சாரத்தைச் செய்திட இயலாது. சுருங்கச் சொன்னால் அவர்கள் இயங்கிட முடியாது
No comments:
Post a Comment