புதுடில்லி: ""மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு சட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த சட்டத்திலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்'' என்றும், தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு சட்டம் ஏற்கனவே பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டு, அது நிலைக்குழு முன் பரிசீலனையில் இருக்கிறது. இந்நிலையில், அந்த சட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்த்துள்ளது. டில்லியில் நடைபெற்ற உணவு அமைச்சர்களின் மாநாட்டில், தமிழக அரசின் சார்பில் உணவு அமைச்சர் காமராஜ், விவசாய அமைச்சர் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் அமைச்சர் காமராஜ் பேசியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லா தரப்பு மக்களுக்குமே பொது வினியோக கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், மத்திய அரசு கொண்டு வரும் திட்டம் என்பது சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். மத்திய அரசின் இத்திட்டம் மூலம், கிராமப்புறங்களில் வசிக்கும் 75 சதவீத மக்களுக்கு பயன் கிடைக்கும். நகர்ப்புறங்களில் வசிக்கும் 50 சதவீத மக்களை மட்டுமே பயனளிக்கும். மீதமுள்ள மக்கள் எல்லாரும் இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என்றாகி விடுவர். இதை தமிழக அரசு ஒப்புக் கொள்ளாது. தமிழக அரசின் சார்பில் எண்ணற்ற நலத்திட்ட உதவிகள் தற்போது நிறைவேற்றப்படுகின்றன.
14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவு அளிக்கப்படும் திட்டத்தை வெற்றிகரமாக தமிழகம் நிறைவேற்றி வருகிறது. தற்போதைய பொது வினியோக திட்டமே நல்ல முறையில் உள்ளது. விலைவாசி உயர்வை இத்திட்டங்கள் மூலம் சமாளிக்க முடிகிறது. தவிர புதிய சட்டத்தின் மூலம், புதிதாக கூடுதல் செலவினங்கள் ஆகும். ரேஷன் கார்டுகளை கணிணி மயமாக்குவதற்காக, 700 கோடி ரூபாயில், தமிழக அரசு திட்டம் தீட்டி, நடவடிக்கை எடுத்து வருகிறது. 1.97 கோடி ரேஷன் கார்டுகள் தமிழகத்தில் உள்ளன. இந்த கணினி மயமாக்கும் திட்டத்திற்கு ஆகும் செலவிற்கு மத்திய அரசு நிதியுதவி அளித்திட வேண்டுமென்ற கோரிக்கைக்கு இதுவரை பதில் இல்லை. இந்த சட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது. அப்படியே கொண்டுவர முடிவெடுக்கப்பட்டால், அதில் தமிழக அரசுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு காமராஜ் பேசினார்.
No comments:
Post a Comment