அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, March 6, 2011

தேர்தல் கமிசனின் ஆச்சரியமான செயல்பாடு!

தமிழகம் உள்ளிட்ட 4 மாநில சட்டமன்றங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேசி அறிவித்தார். அந்த அறிவிப்பில் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 13 அன்றும் அஸ்ஸாம் மாநிலத்துக்கு ஏப்ரல் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளிலும், மேற்கு வங்கத்துக்கு மே 18 ,23 ,27 , மே 3 , 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஆறு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப் பட்டது.

தேர்தல் முடிந்த பிறகு மொத்தமாக 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் சேர்த்து மே 13 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி மேற்கு வங்கத்தைத் தவிர மற்ற மாநிலங்கள் வாக்கு எண்ணிக்கை முடிவுக்காக தேர்தல் முடிந்து 1 மாதம் காத்து இருக்க வேண்டும். இந்திய தேர்தல் வரலாற்றிலேயே ஒரு மாத காலம் இடைவெளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பது இதுவே முதல்முறை. எதற்காக இந்த ஒரு மாத கால இடைவெளி என்று தெரிய வில்லை. கடந்த 2006 தமிழக சட்டசபைத் தேர்தல் மே 8 அன்று தேர்தல் நடத்தப் பட்டு மூன்று நாட்கள் இடைவெளியில் மே 11 அன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்பட்டது.

மேற்கு வங்கத்திலும் கடந்த 2006 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 17 முதல் மே 8 வரை 5 கட்டங்களாக நடத்தப் பட்டு மே 11 அன்று மூன்று நாட்களிலேயே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அது போலவே இந்த முறையும் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்தலைத் தாமதமாக நடத்தி வாக்கு எண்ணிக்கையை எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரே நாளில் நடத்த திட்டமிட்டு இருக்கலாம் அல்லது மேற்கு வங்கத்தைத் தவிர்த்து மற்ற மாநிலங்களுக்குத் தேர்தல் நடைபெற்ற மூன்று நாட்களுக்குள் தேர்தல் முடிவை அறிவிக்கலாம். இரண்டையும் தவிர்த்து விட்டு அரசியல் கட்சிகளின் நலனுக்காக தேர்தல் ஆணையம் இத்தகைய முடிவெடுத்து இருக்கிறதோ என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.

மேலும் அதிகபட்சமாக மூன்று நாட்கள் அல்லது ஒரு வார கால அளவிற்குள் வாக்கு எண்ணிக்கையை நடத்தி முடிப்பது வாக்கு இயந்திரங்களை இரவு பகலாக பாதுகாத்து வரும் காவல்துறையினருக்குப் பெரும் உதவியாக இருக்கும். ஒரு மாத கால இடைவெளி இருப்பதால் தவறுகள் நடைபெறவும் பிரச்சனைகள் ஏற்படவும் சாத்தியக் கூறுகள் உள்ளன. மேலும் தமிழகத்தில் புதிய சட்டசபை தேர்ந்தெடுக்கப் பட மே 16 வரை கால அவகாசம் உள்ள நிலையில் ஏப்ரல் 13 அன்றே தமிழகத்தில் தேர்தல் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்து இருப்பது ஏன் என்ற கேள்வியும் நம்முள் எழவே செய்கிறது.

தேர்தல் ஆணையம் என்பது அரசியல் கட்சிகளுக்குக் கட்டுப் படாத சுதந்திரமான ஒரு அமைப்பு. டி.என் சேஷன் போன்ற சிலர் தைரியமாக சில முடிவுகளை எடுத்த போதும் ஆளும் கட்சிகளுக்கு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்குச் சில ஆணையர்கள் இப்பொறுப்பை வகித்துள்ளனர் என்பதும் நமக்குத் தெரியாததல்ல. 4 மாநில மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச தேர்தல் அறிவிப்பிலும் தேர்தல் ஆணையம் ஆளும் அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதோ என்ற சந்தேகமும் எழுகிறது.

இதற்கிடையில், ஏப்ரல் 13 தேர்தல் தேதி அறிவிப்புக்கு எதிராக கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இறுதியாக தமிழக முதல்வர் கருணாநிதியும் தன் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். இந்த எதிர்ப்புக்குப் பாஜக, "சித்திரை தமிழ் வருடப்பிறப்பு கொண்டாட்டத்துக்கு இத்தேதி அறிவிப்பு தடையாக இருக்கும்" என்று காரணம் தெரிவித்துள்ளது. பள்ளி இறுதி ஆண்டுத்தேர்வுகள் இதே காலகட்டங்களில் நடைபெறும் என்பதால், தேர்தல் பிரச்சாரம் பள்ளி மாணவர்களின் படிப்புக்கு மிகப்பெரிய இடையூறாக இருக்கவும் வாய்ப்புள்ளது. அதே போன்று தேர்தலுக்காக அரசு ஊழியர்கள் பயன்படுத்தப்படுவர் என்பதால், அதுவும் பள்ளித்தேர்வுகளுக்குப் பல இடையூறுகளை ஏற்படுத்தும்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, இப்போதே பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் தேதியை மாற்ற கோரிக்கை விடுத்து வருகின்றன. தமிழக முதல்வரும் தமிழகத் தேர்தல் தேதியை அறிவித்ததில் இவ்வளவு அவசரம் ஏன்? என்று வினவியுள்ளார். ஆனால், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று அறிவித்து விட்டார்.

ஏப்ரல் 13ஆம் தேதி தேர்தல் நடத்தி 15 அல்லது 16ஆம் தேதி தேர்தல் முடிவுகளை வெளியிட்டால், அந்த முடிவுகள் மற்ற மாநிலத்தின் தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளதாகக் கருதினால், ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்த உத்தேசித்துள்ள தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தலை இறுதிக்கட்டமாக நடத்தி இருக்கலாம். அதைவிடுத்து, தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள 1 மாதம் காத்திருக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு ஏமாற்றத்தையே தருகிறது.

எது எப்படியோ தேர்தல் ஆணையத்தின் இத்தகைய தேர்தல் அறிவிப்பால் பெரிதும் பாதிக்கப் பட போவது மாணவர்களே என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இன்னும் ஒன்றரை மாத காலம் கூட இல்லாத நிலையில் கல்லூரிகள் அனைத்தும் ஏப்ரல் 13 க்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிட வேண்டும். தமிழகத்தில் அமைதியான முறையில் மாணவர்களுக்கோ பொதுமக்களுக்கோ பெரிதும் சிரமத்தைத் தராமல் இத் தேர்தல் நடத்தி முடிக்கப் படுவதோடு, ஒரு மாதகாலத்துக்கு ஓட்டு இயந்திரங்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாகும்

திக மூலம் காங்கிரஸுக்கு மீண்டும் எச்சரிக்கை!

"திமுக கூட்டணியில் அதிக இடங்களைக் கேட்டுத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் காங்கிரசை கூட்டணியில் இருந்து வெளியேற்றுவது பற்றி திமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும்" என்று திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

தொகுதி பங்கீடு விஷயத்தில் நாளுக்கு நாள் காங்கிரஸ் அதிக நெருக்கடிகளைத் திமுகவுக்குக் கொடுத்துவருகிறது. இறுதியாக 51 லிருந்து 60 தொகுதிகள் வரை இறங்கி வந்த கருணாநிதி, இன்று தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், நேற்றிரவு "63 தொகுதிகள் மற்றும் கேட்கும் தொகுதிகள்" என்ற புதிய கோரிக்கையைக் காங்கிரஸ் வைத்தது.

இதில் அதிக எரிச்சலடைந்த முதல்வர் கருணாநிதி, "இது முறைதானா?" என்று காட்டமான கேள்வியுடன் இன்று அறிக்கை வெளியிட்டார். அத்தோடு, இன்று கூடும் திமுக உயர் நிலைக்குழு கூட்டத்தில் இது தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில், "இன்றைய உயர் நிலைக்குழு கூட்டத்தில் காங்கிரஸைக் கூட்டணியிலிருந்து வெளியேற்ற முடிவெடுக்கவேண்டும்" என தி.க தலைவர் கி. வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது, "தொகுதிப் பங்கீடு விஷயத்தில் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் காங்கிரசுக்குத் திமுக உடன்படக் கூடாது. கூட்டணியில் காங்கிரசைத் தவிர்ப்பது பற்றி திமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும்.

மக்களிடையே திமுகவிற்குச் செல்வாக்கு இருக்கிறது. இந்தச் செல்வாக்கையும் இப்போது கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளையும் வைத்து தேர்தலைச் சந்தித்தாலே திமுக வெற்றி பெற்றுவிடும்" என்று கூறினார்.

இதற்கு முன்னரும் ஒருமுறை வீரமணி இத்தகையதொரு அறிக்கை வெளியிட்டிருந்தார். திமுக தலைவர் கருணாநிதியின் சம்மதமின்றி தி.க தலைவர் கி.வீரமணி இது போன்ற அரசியல் விஷயங்களைப் பேசுவதில்லை என்றொரு கருத்து நிலவும் நிலையில், அவருடைய இப்போதைய கருத்து முதல்வர் கருணாநிதியே வீரமணி மூலமாக காங்கிரசுக்கு இறுதி எச்சரிக்கை கொடுப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முந்தைய வீரமணியின் அறிக்கையில், "இனியும் இனியும் திமுக குட்டக் குட்டக் குனியக் கூடாது. சுயமரியாதையைக் காக்க துணிச்சலுடன் முடிவெடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

"இன்று மாலை கூடும் திமுக உயர் நிலைக்குழு கூட்டத்தில், காங்கிரஸை வெளியேற்றும் முடிவை எடுக்க நாங்கள் தயங்கமாட்டோம்" என்று மறைமுகமாக திமுக காங்கிரஸுக்குக் கூறும் இறுதி எச்சரிக்கையாகவே இப்போதைய வீரமணியின் அறிக்கையையும் எடுத்துக்கொள்ள வழியிருக்கிறது.

ஆனால்,

நடிகர் விஜயகாந்தின் தேமுதிக, அதிமுக கூட்டணியில் போட்டியிடுவது உறுதியாகி விட்ட நிலையில் மூன்றாவது அணி அமைவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லையாதலால், திமுக கூட்டணியினை விட்டுக் காங்கிரஸை வெளியேற்ற திமுகவும் திமுகவிலிருந்து விலகி தனித்துப் போட்டியிடும் விஷப்பரீட்சை முடிவைக் காங்கிரஸும் எடுக்காது என்பதே இப்போதைய நிலை. என்ன நடக்கப்போகிறது என்பது இன்னும் 24 மணி நேரத்துக்குள் தெளிவாகி விடும்

இலை' தேடும் 'சிறுத்தை'!

தி மு க வின் தோழமைக் கட்சியாக இருந்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், அதிலிருந்து விடுபட்டு அதிமுக அணியில் இடம்பெறத் தீவிர முயற்சிகளை மேற்கொள்வதாகத் தகவலறிந்த அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. வர இருக்கும் 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக அணியில்தான் விடுதலைச் சிறுத்தைகள் தொடர்கிறது என்று தில்லியில் செய்தியாளர்களிடம் முதல்வர் கருணாநிதி அறிவித்தார் என்றாலும், விடுதலைச் சிறுத்தைகள் இதே அணியில் இருக்குமா என்கிற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

விஜயகாந்த்தின் தே மு தி க அதிமுக ஆதரவு நிலைப்பாட்டுக்குப் பின்னர் சிறுத்தை கட்சி இம்முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது.

பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் திமுக அணியில் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு இணையாகத் தங்களுக்கும் மரியாதையான எண்ணிக்கையில் திமுக அணியில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது . இந்த முறை இரட்டை இலக்கத்தில் எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெறும் அளவுக்கு கூடுதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது அக்கட்சியின் விருப்பக் கோரிக்கையாக உள்ளது.

கடந்த 2006 ச.ம. தேர்தலில் அதிமுக அணியில் இருந்து 9 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

பின்னர் அந்த அணியில் இருந்து வெளியேறி திமுக அணிக்கு ஆதரவு தெரிவித்தது.அதன்பிறகு 2009 மக்களவைத் தேர்தலில் திமுக அணியில் 2 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மட்டும் வெற்றி பெற்றார்.

.காங்கிரஸ் கூடுதல் தொகுதிகள் கேட்பதால், விடுதலைச் சிறுத்தைகளுக்கு அவர்கள் எதிர்பார்ப்பது போல குறைந்தது 15 தொகுதிகளைத் தி.மு.க.வால் தர முடியுமா என்பது சந்தேகம்தான்.

அதுவுமில்லாமல், பா.ம.க.வுடன் சேர்ந்து திமுக அணியில் தேர்தலைச் சந்தித்தால், தங்களுக்கு அரசியல் ரீதியாக பெரிய லாபம் எதுவும் இருக்காது என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்களின் பரவலான கருத்தாக உள்ளது.

மேலும் ஆளும் திமுக கூட்டணியில் இருந்தும், தங்கள் கட்சியைச் சேர்ந்த சுமார் 50 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும், சில முக்கிய நியமனப் பதவிகளுக்கு திருமாவளவனின் பரிந்துரையை ஏற்காததும் தங்களின் அதிருப்திக்குக் காரணம் என அவர்கள் பட்டியலிடுகின்றனர்.

மேலும், இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் நிலைப்பாடு தங்களுக்கு ஏற்புடையதாக இல்லாத நிலையில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணியில் நீடிப்பதிலும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு தயக்கம் காணப்படுகிறது.

1998-ல் ராஜீவ் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஒரே ஒரு உறுப்பினராக இருந்த போதும், வாழப்பாடி ராமமூர்த்திக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் அமைச்சர் பதவியை அதிமுக தலைமை வாங்கிக் கொடுத்ததுபோல இந்த முறை தொல். திருமாவளவனுக்கு மத்திய அமைச்சரவையில் ஓர் இணையமைச்சர் பதவி கூட திமுக வாங்கித் தரவில்லை என்கிற மனக்குறை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் மத்தியில் காணப்படுகிறது.

பா ம க, வி சி இவ்விரு காட்சிகளின் தொண்டர்கள் இணைந்து செயல்படுவது சாத்தியமில்லை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அப்படி பாமகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒரே அணியில் இருந்து செயல்படுவதாக இருந்தால், இரண்டு கட்சியின் வாக்கு வங்கியிலும் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டு, அது அதிமுக - தேமுதிக கூட்டணிக்கு சாதகமாகி விடலாம் என்று கணிக்கிறார்கள். குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வாக்கு வங்கி கணிசமாக பாதிக்கப்படுமென்று அந்தக் கட்சித் தொண்டர்களே பயப்படுவதாகத் தெரிகிறது.

"திமுகவில் எங்களுக்கு கௌரவமான இடங்கள் தரப்படாத நிலை ஏற்பட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது? தேமுதிகவும் இணைந்து விட்டநிலையில் அதிமுக அணி பலமடைந்து இருக்கிறது. குறைந்த இடங்களில் போட்டியிட்டாலும் அந்த அணியில் வெற்றி உறுதி பெறும்போது, இங்கே திமுக அணியில் குறைந்த இடங்களைப் பெற்று போட்டியிட வேண்டிய அவசியம் என்ன?எங்களுக்கு 15 இடங்கள் தருவதால் திமுக அணிதான் பலப்படுமே தவிர அதனால் நாங்கள் அடையும் பலன், குறைந்த இடங்களில் அதிமுக அணியில் போட்டியிடுவதால் கிடைக்கும் வெற்றிக்குத்தான் சமமாக இருக்கும்' என்கிறார் தொல்.திருமாவளவனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான தளபதி ஒருவர்.

அதெல்லாம் சரி, பல தொகுதி பங்கீடுகள் முடிந்து விட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அதிமுக அணியில் ஏற்றுக்கொள்வார்களா என்கிற கேள்விக்கு, தங்களுக்கு "தட்டுங்கள் திறக்கப்படும்' என்ற சமிக்ஞை வந்திருப்பதாக வி.சி யின் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்

விமானங்கள் நடு வானில் மோதல்!

கொழும்பில் இன்று நடக்க உள்ள விமான சாகச நிகழ்ச்சிக்காக விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக இரண்டு விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டு தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்தன.

இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட கேபிர் ரக விமானங்கள், இலங்கை விமானப்படையில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. விமானப்படையின், 60ம் ஆண்டு விழாவையொட்டி, கொழும்பில் இன்று விமான சாகச நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சாகச நிகழ்ச்சிக்காக, கேபிர் ரக விமானங்கள், நடுவானில் சீறி பாய்ந்து பயிற்சி செய்து கொண்டிருந்தன. திடீரென, இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி தீ பிடித்து கீழே விழுந்தன. இவ்விபத்தில், விமானிகளின் கதி என்னவானது என்பது தெரியவில்லை. காம்பகா மாவட்டத்தின் வாரனா என்ற இடத்தில், ஒரு விமானத்தின் எரிந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. மற்றொரு விமானத்தின் சிதைந்த பாகங்கள், சில கி. மீ., தள்ளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

பலஸ்தீன் மஸ்ஜிதைத் தாக்கிய யூத ஆக்கிரமிப்பாளர்கள்.

கடந்த வியாழக்கிழமை (03.03.2011) அதிகாலையில் தீவிரவாத யூத ஆக்கிரமிப்பாளர்கள் அல் கலீல் பிரதேசத்தில் உள்ள நபி யூனுஸ் மஸ்ஜிதைச் சுற்றிவளைத்துத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் ஒத்துழைப்போடு ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான தீவிரவாத யூத ஆக்கிரமிப்பாளர்கள் தல்மூதிய வழிபாட்டுச் சடங்குகளை மேற்கொண்டதோடு, மஸ்ஜிதைக் கற்களாலும் பிற ஆயுதங்களாலும் தாக்கினர். அத்துடன், உள்ளூர் பலஸ்தீனர்களைப் புண்படுத்தும் வகையில் உரத்த குரலில் திட்டித் தீர்த்துத் தம்மை எதிர்க்க வருமாறு சவால் விடுத்துள்ளனர். எனினும், அவர்கள் தம்மை வேண்டுமென்றே சண்டைக்கு இழுக்க முனைவதை உணர்ந்தவர்களாய் உள்ளூர்வாசிகள் பொறுமை காத்துள்ளனர்.

யூதச் சடங்குகள் யாவும் சுமுகமாக நிறைவேற்றப்படும்வரை நபி யூனுஸ் மஸ்ஜித் அமைந்துள்ள நகரத்தின் பிரதான நுழைவாயில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் பல மணிநேரம் மூடப்பட்டு பலத்த காவல் போடப்பட்டிருந்தது.

இதற்கிடையில், அல் கலீல் நகரத்தின் வாகன உதிரிப்பாகங்கள் விற்கும் கடையொன்றை முற்றுகையிட்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர், அதன் உரிமையாளர்களான இரு பலஸ்தீன் சகோதரர்களைக் கைதுசெய்துள்ளதோடு, அவர்களுக்குச் சொந்தமான கார் மற்றும் வாகன உதிரிப் பாகங்களையும் கைப்பற்றிக்கொண்டுள்ளனர்

கற்ப மூலிகை மரண மாற்று மூலிகை ஆடாதோடை.

மக்கள் ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப மூலிகைகள்.

இந்த வகையில் நீண்ட ஆரோக்கியத்தை கொடுக்கவல்ல காய கற்ப மூலிகையான ஆடாதோடை பற்றித் தெரிந்து கொள்வோம்.

இது சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் காணப்படும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும். ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என மருவி பெயர் பெற்றுள்ளது.

ஆடாதோடை அதிகளவு கரியமில வாயுவை உள்வாங்கி, பிராண வாயுவை வெளியிடுகிறது. இது அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால் இதனை ஆயுள் மூலிகை என்றும் அழைக்கின்றனர். இதன் வேர், பட்டை, பூ, இலை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது. மனிதனை அன்றாடம் துரத்தும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது அருமருந்தாகும்.

ஆடாதோடை தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் மூலிகையாகும். எந்தவகையான மண்ணாக இருந்தாலும் இந்த ஆடாதோடை செழித்து வளரும் தன்மை கொண்டது. கிராமப்புற மக்களும் சரி, அங்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்களும் சரி, ஆடாதோடை இலையை அதிகம் பயன்படுத்துவார்கள். நெஞ்சில் சளி, அதனுடன் வலி, உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள். இது சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. அதுபோல் தடுக்கி விழுந்து மார்புப்பகுதியில் அடிபட்டால் உடனே முதலுதவியாக ஆடாதோடை இலை ஒன்றுடன் வெற்றிலை 2 சேர்த்து மென்று தின்னக் கொடுப்பார்கள். இது உடனடி நிவாரணமாகும்.

மனித உடலில் நுரையீரல் முக்கிய உறுப்பாகும். இது சுவாசக் காற்றை உள்வாங்கி அதிலுள்ள பிராணவாயுவைப் பிரித்து எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. நுரையீரல் நன்கு செயல் பட்டால்தான் இரத்தம் சுத்தமடையும். இதனால் நீண்ட ஆயுளும் கிடைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நுரையீரலைப் பலப்படுத்த ஆடாதோடை சிறந்த மருந்தாக உள்ளது. இது நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள அசடுகளை (சளி) நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் இதை மரணமாற்று மூலிகை என்றும் கூறுகின்றனர்.

ஆடாதோடை இலை, தூதுவளை இலை (2010 மார்ச் இதழில் இதுபற்றி விரிவாகக் கூறியுள்ளோம்) சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை வேளைகளில் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும். சளித் தொல்லை அணுகாது. நுரையீரல் பலம்பெறும். மேலும் இரத்த நாளங்களில் உள்ள சளியை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாற்றும் தன்மை ஆடா தோடைக்கு உண்டு.

ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்து தினமும் காலை வேளையில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல், இரைப்பு நீங்கும். நெஞ்சுச் சளியைப் போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும். இதில் பச்சயம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச்சளி, இருமல் போன்றவற்றை உடனே மாற்றும். குத்து இருமல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.

மேற்கண்ட முறைப்படி 1 மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு எப்போதுமே சளித் தொல்லை உண்டாகாது.

ஆடாதோடை வேரையும், கண்டங்கத்திரி வேரையும் இடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக மாற்றி அதனுடன் திப்பிலி பொடி சேர்த்து அருந்தி வந்தால் வறட்டு இருமல் மற்றும் தொண்டைப் புகைச்சல் குணமாகும்.

ஆடாதோடை இலை, தூதுவளை, துளசி இலை இவைகளை வெயிலில் உலர்த்திப் பொடியாக்கி வைத்துக்கொண்டு 1 ஸ்பூன் பொடியில் தேன் கலந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு, தும்மல், இருமல், சுவாச காச நோய்கள் நீங்கும். ஆடாதோடை இலையைக் குடிநீர் செய்தோ, அல்லது பொடி செய்து தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் நல்ல குரல் வளம்கிடைக்கும். ஆடாதோடை இலைகளை உலர்த்திப் பொடியாக்கி சிறிது நீர்விட்டு குழைத்து நெஞ்சில் பற்றுப் போட்டால், நெஞ்சுச்சளி அறவே நீங்கும்.

ஆடாதோடை இலை - 2, வெற்றிலை - 2, மிளகு - 5, சுக்கு - 1 துண்டு சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல்வலி, நெஞ்சுச் சளி நீங்கும்.

இண்டு, இசங்கு, தூதுவளை, கண்டங்கத்திரி , ஆடாதோடை, நறுக்குமூலம் இவற்றின் இலைகளைச் சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு தினமும் இருவேளை, கஷாயம் செய்து அருந்தி வந்தால், ஈளை, இழுப்பு, இருமல், சுவாசகாசம், போன்றவை குணமாகும்.

காயவைத்த ஆடாதோடையிலை - 5, அதிமதுரம்-2 கிராம், திப்பிலி-1 கிராம், தாளிச பத்திரி - 1 கிராம், சிற்றரத்தை 1/4 கிராம் எடுத்து இடித்து பொடியாக்கி அதனை 500 மி.லி. நீர்விட்டு கொதிக்க வைத்து அது 200 மி.லி.யாக வரும்போது இறக்கி வடிகட்டி காலை மாலை என இருவேளையும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சளி நீங்கும். கோழை வெளியேறும். இரைப்பு நீங்கும்.

கழுத்து வலி, கை, கால் மூட்டு வலி, தோள்பட்டை வலி இவைகளுக்கு ஆடாதோடை காய்ந்த இலையுடன் வசம்பு, மஞ்சள், சுக்கு இவைகளை சம அளவு எடுத்து இடித்து அதனுடன் தவிடு சேர்த்து துணியில் கிளி பொட்டலமாகக் கட்டி சட்டியில் வைத்து சூடாக்கி வலி உள்ள இடங்களில் ஒற்றடம் கொடுத்தால் வலிகள் நீங்கும்.

ஆடாதோடை இலை, வேர்ப்பட்டை, கண்டங் கத்திரி, இண்டு இவற்றை காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் மண்டைக்குத்து, தொண்டைவலி, வறட்டு இருமல் போன்றவை நீங்கும். இந்த பொடியை தேனில் கலந்துகூட அருந்தலாம்.


Wednesday, March 2, 2011

Raja's Letter to Karunanidhi..


அன்புள்ள தலைவரே…..

நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் நன்றாக இல்லை தலைவரே…

நீ ஜெயிலுக்குப் போக மாட்டாய், போக மாட்டாய் என்று சொல்லி சொல்லியே, என்னை திகார் ஜெயிலுக்கு அனுப்பி விட்டீர்களே தலைவரே.. நீங்கள் கொடுத்த ஒரே வார்தையில் தானே தலைவரே, நான் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் வாய்த் திறக்காமல் இருந்தேன் ?

சிபிஐ அதிகாரிகள் கடந்த 14 நாட்களாக என்னை எத்தனை அவமானப் படுத்தினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா தலைவரே… ? இந்தி பேசும் அதிகாரிகள், என்னை இந்தியிலேயே கெட்ட வார்த்தையில் திட்டினார்கள் தலைவரே…. இந்தியாவின் சொத்தை கொள்ளையடித்தவனே என்று என்னை திட்டிய போது, “அண்ணா சொன்ன எதையும் தாங்கும் இதயம்“ என்ற கோஷம் எனக்கு உதவி செய்யவில்லை தலைவரே.. நான் என்ன இந்தியாவின் சொத்தைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவா மந்திரியாக ஆனேன்… ? நீங்கள் சொன்னதைத் தானே தலைவரே செய்தேன்…

முதல் நாள் தொலைத்தொடர்பு மந்திரியாக பொறுப்பேற்ற உடனேயே, எனக்கு வந்த அந்த பெரும் தொகையை எடுத்துக் கொண்டு, அடுத்த விமானத்தை பிடித்து உங்களிடம் வந்துதானே தலைவரே கொடுத்தேன்… ? அப்போது ஒன்றுமே சொல்லாமல், ‘நீ இவ்வளவு கொடுக்கிறாயே… ஆனால் தயாநிதி இது போல் கொடுத்ததேயில்லையே‘ என்று தானே தலைவரே சொன்னீர்கள்.

நான் இன்று உடுத்தியிருக்கும் பேண்ட், சட்டை முதற்கொண்டு, நான் பதினைந்து நாட்களுக்கு முன்பு வரை குடித்துக் கொண்டிருந்த 12 ஆயிரம் ரூபாய் மதுவும் நீங்கள் போட்ட பிச்சை என்பதை நான் மறுக்கவில்லை தலைவரே… நீங்கள் தான் எனக்கு வாழ்வழித்தீர்கள். நீங்கள் தான் என்னை மனிதனாக்கினீர்கள்.

20 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு சாதாரண லாம்ப்ரேட்டா ஸ்கூட்டரில், வழக்கறிஞர் தொழிலில் பெரிய அளவுக்கு வெற்றி பெற முடியாமல் தவித்துக் கொண்டிருந்த என்னை எப்போதும் விமானத்திலேயே பறக்க வைத்தது நீங்கள் தான் தலைவரே…

அதற்கு பதிலாக நான் மட்டும் நன்றி மறந்தேனா தலைவரே… எப்போது வனத்துறைக்கு இணை அமைச்சராக ஆனேனோ, அன்று முதல், எனக்கு வந்த அத்தனை பணத்தையும், உங்களிடம் தானே தலைவரே கொடுத்தேன்.

ஊருக்கும் உலகத்துக்கும், ஒரு தலித்தின் மீது தாங்கள் இவ்வளவு பாசம் காட்டுகிறீர்களே என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும். ஆனால், தாங்கள் காட்டிய அத்தனை பாசமும், நான் கொடுக்கும் பணத்துக்காகத் தான் என்பது எனக்கு அப்போதே தெரியும் தலைவரே… ஆனாலும் நான் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். எப்படியும் என்னைக் காப்பாற்றி விடுவீர்கள் என்று.

அந்த நம்பிக்கையில் தான் 14 நாட்களாக எனக்கு ஏற்பட்ட அவமானங்களையும், துன்பத்தையும் சகித்துக் கொண்டிருந்தேன். எத்தனை ஏச்சுக்களும், பேச்சுக்களும் தெரியுமா தலைவரே… ? நண்பர்களிடம் கூட என்னை சிபிஐ அதிகாரிகள் பேச விடவில்லை தலைவரே… ஆரம்பத்தில் உனக்கு ஒன்றுமே ஆகாது, கவலைப் படாதே நான் இருக்கிறேன் என்று சொன்னீர்களே… உன்னை சிபிஐ எதுவும் செய்யாது என்று சொன்னீர்களே…

இதற்கெல்லாம் மேலாக, நீ பதவி விலகக் கூட வேண்டியதில்லை என்று சொன்னீர்களே தலைவரே… ஆனால், டெல்லி வரை சென்று விமான நிலையத்திலிருந்து இறங்கிய உடன், பதவி விலகு என்று சொன்னீர்களே தலைவரே…..

இந்தியாவில் அத்தனை மூலைகளிலும் என்னை திட்டுகிறார்களே தலைவரே…. இந்த அவமானத்திற்கு நான் செத்திருக்கலாமே… இதற்கா என் தாய் தந்தையர் என்னை படிக்கவைத்து வளர்த்தார்கள். இந்தியாவின் அத்தனை குடிமக்களும் என்னை திட்டுகிறார்களே…

பெரம்பலூரில், அந்த லாம்ப்ரெட்டா ஸ்கூட்டரை வைத்துக் கொண்டு, சிசர்ஸ் சிகரெட் பிடித்துக் கொண்டு சுற்றிய போது, என்னிடம் பணம் இல்லை. ஆனால் நிம்மதி இருந்தது. யாரும் என்னைத் தூற்றவில்லை. போற்றவும் இல்லை.

ஆனால் இன்று …. …. ….. ….

ஒரு நாளைக்கு ஒரு ஃபுல்லை முழுதாக குடித்துக் கொண்டிருந்தேன் தலைவரே… கைது செய்யப் படுவதற்கு முன்னால்…. அப்போதும் தூக்கம் வரவில்லை. எனக்கு இருந்த ஒரே ஒரு நம்பிக்கை என்னை சிறைக்கு மட்டும் அனுப்ப மாட்டீர்கள் என்பது. நீங்களும் அதைத் தானே தலைவரே சொன்னீர்கள்… ?

நான் கைது செய்யப் படும் நாளன்று, கடைசியாக உங்களிடம் பேசினேன் ஞாபகம் இருக்கிறதா …. ? அப்போது உங்களிடம் நான் ஒரே ஒரு கோரிக்கை தானே தலைவரே வைத்தேன். என்னை சிறைக்கு மட்டும் அனுப்பாதீர்கள் என்று தானே ?.

என்னிடம் பல கோடிகளை வாங்கித் தின்ற, என் சொந்த மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் நான் கைது செய்யப்படும் நாளன்று என்னிடம் பேசினார் …. அப்போது நீங்கள் சொன்னதாக அவர் என்னிடம் சொன்னது, சிபிஐ கஸ்டடி முடிந்ததும், சிறைக்கு போகும் நாள் வரும் போது, பெயில் போட்டு விடலாம். அன்றே பெயில் கிடைத்து விடும். சிறைக்கு போகாமல், நேராக சென்னை வந்து விடலாம் என்று நீங்கள் சொன்ன பொய்யான வாக்குறுதியை நம்பித் தானே தலைவரே, அவ்வளவு அவமானங்களையும் சகித்துக் கொண்டு, உங்களைப் பற்றியும், உங்கள் குடும்பத்தைப் பற்றியும் வாயைத் திறக்காமல் இருந்தேன்… ?

ஆனால், கலைஞர் டிவியைப் பற்றி விசாரணை தொடங்கப் பட்டுள்ளது என்பது தெரிந்த உடனேயே, உங்கள் நடவடிக்கைகளில் மாற்றம் வந்து விட்டதாக சிபிஐ அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தார்கள் தலைவரே… உங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக, காங்கிரசிடம் என்னைப் பற்றி பேசுவதைக் கூட நீங்கள் நிறுத்தி விட்டீர்கள் என்று சிபிஐ அதிகாரிகள் என்னிடம் தெரிவித்த போது அதை என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை தலைவரே….

நாட்கள் செல்லச் செல்ல, நான் சிறையில் இருந்து வெளியே வருவேன் என்ற நம்பிக்கை அற்றுக் கொண்டே போகிறது தலைவரே…

பதவியும், பணமும், பகட்டும், பட்டாடைகளும் என்னைச் சூழ்ந்திருந்த போது இருந்த மகிழ்ச்சியையும் ஆணவத்தையும் விட, பெரம்பலூரில் லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டு, சிசர்ஸ் சிகரெட் குடித்த நாட்களில் நான் நிம்மதியாக இருந்தேன் தலைவரே.

அந்த நாட்கள் மீண்டும் என்றுமே வராது என்பது எனக்கு நன்கு புரிகிறது தலைவரே….

நான் சிறையிலிருந்து வெளியில் வந்தாலும், இந்தியாவின் சொத்தை கொள்ளை அடித்தவன் என்றே அழைக்கப் படுவேன். ஊர் தூற்றும், மக்கள் தூற்றுவார்கள். குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் போது கூட, “ராஜா வந்து எல்லாத்தையும் கொள்ளையடிச்சுக்குவான்” என்று பயமுறுத்தி சோறூட்டுவதாக தகவல்கள் வருகின்றன தலைவரே….. அவமானம் என்னை நெருப்பாக வாட்டுகிறது தலைவரே…..

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், நான் சம்பாதித்தது எவ்வளவு, நீங்களும் உங்கள் குடும்பமும், சம்பாதித்தது எவ்வளவு, என்பது ஊருக்கும் சிபிஐக்கும் தெரியாமல் இருக்கலாம், எனக்கும் உங்களுக்கும் தெரியும் தானே….

இந்த திகார் சிறையில் நான் இருக்கிறேனோ இல்லையோ… நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இருக்க வேண்டும் தானே…..

உங்கள் நெஞ்சுக்கு நீதியில் எழுதியிருக்கிறீர்கள் நினைவிருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. நான் நினைவு படுத்துகிறேன்.

“நண்பர்களே….இந்த சிம்மாசனத்தில் உள்ள மகிழ்ச்சியை விட, ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியை தரக்கூடியது சிறைக்கூடம். ஆனால் அடக்குமுறைகளும் சிறைச்சாலைகளும் நல்ல லட்சியங்களை அழித்து விட முடியாது.”

சிம்மாசனத்தை விட மகிழ்ச்சி தரக்கூடிய சிறைச்சாலையில் நான் இருக்கிறேன்…. என்னோடு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள நீங்களும் வாருங்கள் தலைவரே…..

ஸ்பெக்ட்ரம் பணத்தை கொடுக்கும் வரை உங்களின் பாசத்திற்குரிய அன்பு உடன்பிறப்பு

ஆண்டிமுத்து ராசா.

IAS, IPS படிக்க Civil Services தேர்வு கனவை நினைவாக்க களம் இறங்குங்கள் மாணவர்களே!

இந்தியாவை நிர்வகிக்கும் முக்கிய பதிவிகளுக்குக்கான நுழைவு தேர்வை

மத்திய அரசின் UPSC வருட வருடம் நடத்தி வருகின்றது. மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்), சுங்கத்துறை, வெளியுறவு துறை உட்பட 24 அரசு உயர் பதவிகளுக்கான (IAS, IPS, IFS etc...) முதல் கட்ட நுழைவு தேர்வு Civil Services Preliminary Examination 2011 விண்ணப்பம் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றன. தேர்வை பற்றிய முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவையே நிர்வகிக்கும் முக்கிய அரசு பதவிகளுக்கான தேர்வு என்றும் இதை சொல்லலாம். முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவதற்க்கும், உரிமைகள் நசுக்கப்படுவதர்க்கும் இது போன்ற மாவட்ட ஆட்சியர், காவல் துறை ஆணையர், கண்கானிப்பாளர் போன்ற பணிகளில் முஸ்லீம்கள் இல்லாததே (அல்லது மிக குறைவாக இருப்பதே) காரணம். இந்த
தேர்வை எழுதி வெற்றி பெறுவதன் மூலம் நாமும் மாவட்ட ஆட்சியராகவும், காவல் துறை ஆணையராகவும், உள்துறை, உளவுத்துறை என இந்தியாவின் முக்கிய அதிகார பொருப்புகளில் அமர முடியும். இந்த தேர்விற்க்கான கட்டணம் வெரும் ரூ.70 தான். இப்படி அதி முக்கியதுவம் வாய்ந்த இந்த தேர்வை எழுதும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக குறைவு.

முஸ்லீம் சமூகத்தை பாதுகாக்க களம் இறங்குங்கள் மாணவர்களே!

இது வெறும் தேர்வு அல்லது வேலை மட்டும் அல்ல, இந்த பணிகளில் நாம் சேர்ந்தால்தான் நமது சமுதாயத்திற்க்கு பாதுகாப்பு அளிக்க முடியும்,
குஜராத்திலும், கோவையிலும் இன்னும் இந்தியாவின் பல்வேறு பகுதியிலும் முஸ்லீம்களுக்கு எதிரான கோர தாக்குதலுக்கு இந்த துறைகளில் நாம் இல்லாததே (அல்லது மிக குறைவாக இருப்பதே) காரணம். சமுதாய முன்னேற்றத்திற்க்கும், பாதுகாப்பிற்க்கும் இது போன்ற தேர்வுகளில் நமது சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் தேர்சி பெற வேண்டும், தேர்சி பெற்று இது போன்ற பதவிகளில் அமருவதின் மூலமே நமது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இன்னும் எத்தனை காலம் தான் நாம் ஆர்பட்டம் போராட்டம் என்று வாழ்வது, நமது உரிமையை மீட்க,
சமுதாயாத்திற்க்கு பாதுகாப்பு வழங்க நாமும் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்), காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) ஆகுவோம் வாருங்கள்.

இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை. இது போன்ற தேர்வுகளை எழுதி உயர்பதிகளில் இருப்பவர்கள் உயர் சாதியினர் என்று தங்களை சொல்லிகொள்பவர்கள், இதற்க்கு அவர்கள் செய்யும் முதல் வேலை, IAS,IPS தேர்வு மிக மிக கடினம், சாதாரண மக்கள் இந்த தேர்வுகள் எழுத முடியாது என்று ஒரு கருதாக்கத்தை சமுதாயத்தில் பரவவிட்டிருப்பது, இதனால் தேர்வு எழுத துணியும் மற்ற சமுதாய மாணவர்களின் தன் நம்பிக்கையை தகர்பதும், பிறறை இந்த தேர்வுகளை எழுதவிடாமல் தடுப்பதும் ஆகும்.

இதை மாற்ற நாமும் UPSC (IAS,IPS) தேர்வு எழுதி தேர்சி பெற வேண்டும்,
தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.

இந்த தேர்விற்க்கு எப்படி தயாராவது?

இந்த தலைப்பிலே பல புத்தகங்கள் புத்த கடையில் கிடைக்கும். அந்த அளவிற்க்கு இந்த தேர்வுகள் பிரபலம். பொதுவாக பயிற்சி நிறுவங்களில் சென்று பயிற்சி பெறுவதன் மூலம் எளிதில் இந்த தேர்வுகளில் வெற்றி பெறலாம். தமிழகத்தில் சென்னை சைதாபேட்டையில் உள்ள மனித நேர அறகட்டளை நடத்து பயிற்சி மையம் இது போன்ற தேர்வுகளுக்கு பிரசித்தி பெற்றது. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவசமாகவும் பயிற்சி அளிக்கின்றனர்.

முஸ்லீம்களில் சிலர் Civil Services Examination பயிற்சி மையங்களை நடத்தி வருகின்றனர். சிலர் துவங்க இருகின்றனர். குறிப்பாக சென்னையில் கிரசென்ட் கல்லூரியில் ஒரு பயிற்சி மையமும், சகோ.M.F. கான் அவர்கள் நடத்தும் ஒரு பயிற்சி மையமும் உள்ளது. கள்ளகுறிச்சியில் சகோ. ரஹ்மதுல்லாஹ் நடத்தும் பயிற்சி மையம் உள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய முஸ்லீம் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுவதாக கள்ள குறிச்சி ரஹ்மதுல்லாஹ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
எப்போது நாம் இதில் தேர்சி பெறுவது?
பயிற்சி மையங்களுக்கு பஞ்சமில்லை, பணமும் ஒரு பிரச்சனை இல்லை ( இலவச பயிற்சிகள் பல நடத்தப்படுகின்றன). வேறு என்ன குறை? தகுதி உள்ள முஸ்லீம் மாணவர்கள்தான் குறை. முஸ்லீம் மாணவர்களிடம் இதில் தேர்சி பெரும் அளவிற்க்கு அறிவு இருகின்றது ஆனால் தன்னம்பிக்கைதான் இல்லை, பொருமையும் இல்லை. முஸ்லீம்களில் படிப்பவர்களே குறைவு, படித்துவிட்டு அதற்க்கு தகுந்த வேலை பார்ப்பவர்கள் மிக குறைவும். ஏதோ உணவு உன்ன வேலைகிடைத்தால் போதும் என்ற நிலையிலேயே முஸ்லீம் சமுதாயம் உள்ளது. இதை மாற்ற வேண்டும். முஸ்லீம் மாணவர்களுக்கு தன் நம்பிக்கையை ஊட்ட வேண்டும். பொருமையை போதிக்க வேண்டும். விடா முயற்சியை விதைக்க வேண்டும். நாம் சாப்பிட பிறந்தவர்கள் இல்லை, சாதிக்க பிறந்தவர்கள் என்ற உணர்வை சிறுவயதிலேயே விதைக்க வேண்டும். உணவு, இருப்பிடம் என்பது வாழ்கையின் ஒரு பகுதிதானே தவிற வாழ்கையே அதுவல்ல, முஸ்லீம்களின் இந்த குறுகிய சிந்தனையைவிட்டு அவர்களை வெளிகொண்டு வர வேண்டும். அதற்க்கு தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் முஸ்லீம் மாணவர்களுக்கு விழிபுணர்வும், ஊக்கமும், வழிகாட்டலும், பயிற்சியும் அளிக்க வேண்டும்.

தேர்வை பற்றிய முழு விபரங்களும் ஆங்கிலத்தில் அட்டாச் செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்கள் அறியவும் தேர்விற்க்கு தயாரவாதற்க்கான வழிமுறைகள் பற்றி அறியவும் Sithiqu.mtech@gmail.com என்ற E - மெயிலில் தொடர்பு கொள்ளவும்.

S.சித்தீக்.M.Tech

Civil Services Examination - 2011 தேர்வை பற்றிய விபரம்.

இது 3 கட்டங்களாக நடைபெறும் தேர்வு. முதக் கட்ட தேர்வு, இரண்டாம் கட்ட தேர்வும் எழுத்து தேர்வாகும், மூன்றாம் கட்ட தேர்வு நேர்முக தேர்வாகும். முதல் கட்ட தேர்வு தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறும்.

விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : 21/03/11 இன்ஷா அல்லாஹ்
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : அனைத்து தபால் அழுவலகங்கள்
கட்டணம் : விண்ணப்பத்தின் விலை ரூ.20 மற்றும் தேர்வு கட்டணம் ரூ.50.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :Secretary,
Union Public Service Commission, Dholpur House, Shahjahan Road, New
Delhi - 110069
தேர்வு நடைபெறும் தேதி : 12/06/11 இன்ஷா அல்லாஹ்
வயது வரம்பு : 33 வயது (முஸ்லீம்கள் உட்பட) பிற்படுத்தபட்ட
வகுப்பினர்களுக்கு. பொது பிரிவினருக்கு 30 வயது
தேர்வு எழுத தகுதி : ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்து இருக்க வேண்டும், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.


கூலிப்படையை அழைத்து வந்து சொந்த மக்களை தாக்கிய கடாபி : அமெரிக்க பத்திரிகை அதிர்ச்சி தகவல்

அல்பைடா : லிபியாவில் மக்கள் கிளர்ச்சியை ஒடுக்க, அந்நாட்டு தலைவர் கடாபி கூலிப்படையினரை பயன்படுத்தினார். அந்த கூலிப்படையினர் யார் என்பது பற்றிய சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் ஏற்பட்டுள்ள மக்கள் கிளர்ச்சியை அடக்க, கடாபி வித்தியாசமான ஒரு வழியைக் கையாண்டார்.
அண்டை நாடுகளான சாட் மற்றும் நைஜரில் இருந்து நூற்றுக்கணக்கான ஆப்ரிக்கர்களை வரவழைத்து, அவர்களின் கைகளில் நவீன ரக துப்பாக்கிகளை கொடுத்து, தன்னை எதிர்க்கும் மக்களை கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளும்படி கூறினார். இதற்கு லிபியா ராணுவமும் உதவியது. இந்த கூலிப்படையினரில் சிலர், அல்பைடா நகரில் மக்களுடன் மோதலில் ஈடுபட்ட போது, அவர்களில் 200 பேரை மக்கள் சிறைபிடித்தனர்.சிறை பிடிக்கப்பட்ட அவர்கள், அல்பைடாவின் ஷெகட் பகுதியில் பள்ளி ஒன்றில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தப்பித்து விடாமல் இருக்க பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "டைம்' நாளிதழ், இவர்களை நேரில் சந்தித்து பேட்டி எடுத்து ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:மொத்தம் 325 பேர், அண்டை நாடுகளான சாட் மற்றும் நைஜரில் இருந்து திரட்டப்பட்டு, லிபியாவின் தென் மேற்கில் உள்ள சபாநகருக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு, கடாபி கட்சியின் இளைஞர் அணி பிரிவு தலைவர் அலி உஸ்மான் என்பவர், டிரிபோலியில் நடக்க உள்ள கடாபி ஆதரவு பேரணிக்கு அழைத்து செல்வதாக அவர்களிடம் கூறியுள்ளார்.பின் அவர்கள் அனைவரும் ஒரு விமானம் மூலம் டிரிபோலிக்கு புறப்பட்டனர். விமானம் சென்ற இடமோ, லபார்க் என்ற நகரம். இது அல்பைடாவுக்கும், டெர்ணாவுக்கும் இடையில் உள்ளது. கடந்த 16ம் தேதி, அல்பைடாவில் நடந்த கடாபி ஆதரவு போராட்டத்தில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அப்போது எதிர்ப்பாளர்களும் பேரணி நடத்தினர். சிறிது நேரத்தில் இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.அப்போது ராணுவம், ஆப்ரிக்கர்களின் கைகளில் துப்பாக்கிகளை கொடுத்து, "நீங்கள் அனைவரும் கூலிப்படையினர் என்று எதிர்ப்பாளர்கள் நினைத்து உங்களை கொல்ல திட்டமிட்டுள்ளனர். தற்காப்புக்காக அவர்களை தாக்கி பிழைத்து கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டது.இந்தச் சண்டை நடந்து இரு நாட்கள் கழித்து 18ம் தேதி ராணுவப் பிரிவு, பொதுமக்களுடன் சேர்ந்து கொண்டது. அப்போது, கூலிப்படையினரிடம் லிபியா ராணுவத்தினர், "உயிர் பிழைக்க வேண்டும் என்றால் இங்கிருந்து சென்றுவிட வேண்டும். இல்லையெனில், கொல்லப்படுவீர்கள்' என்று பீதியூட்டியது.ராணுவம் சொன்னபடி சிலர் தப்பித்தனர். 200 பேர் மாட்டிக் கொண்டனர். முதலில் பிடிப்பட்டவர்களில் 15 பேர் அல்பைடாவில், கோர்ட் வாசலில் பொதுமக்களால் தூக்கில் இடப்பட்டதாக, கடாபி அமைச்சரவையில் இருந்து வெளியேறிய முன்னாள் நீதித்துறை அமைச்சர் முகமது அப்த் அல் ஜலீல் தெரிவித்தார்.

இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அடையாள அட்டை மூலம், சாட் மற்றும் நைஜர் நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்களில் சிலர் லிபியாவில் பிறந்து, சாட் மற்றும் நைஜரில் குடியேறியுள்ளனர். பலர் அந்த நாடுகளை சேர்ந்தவர்கள். சிலர் கடாபி மகன் கமீசின் ராணுவப் பிரிவை சேர்ந்தவர்கள்.இவ்வாறு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

127 இந்திய மீனவர்கள் மீதான வழக்கை கைவிட்டது பாகிஸ்தான்!!!

127 இந்திய மீனவர்கள் மீதான வழக்கை கைவிட்டது பாகிஸ்தான் அரசு. இதை இந்திய மீனவர்கள் கைது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட உயர் நீதிமன்றக் குழு, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் சனிக்கிழமை தெரிவித்தது.

இதையடுத்து கைதாகி பாகிஸ்தான் சிறைகளில் அவதியுற்றுவந்த இந்திய மீனவர்கள் 127 பேரும் தாயகம் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் புகுந்து மீன்பிடித்ததாக இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அந்நாட்டு மீனவர்கள் அமைப்பு அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

இதை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், கைதாகியுள்ள இந்திய மீனவர்கள் குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க தனிக் கமிட்டியை அமைக்குமாறு சிந்து உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.

இதை ஏற்று உயர் நீதிமன்றம் தனிக் கமிட்டி அமைத்தது. அந்தக் கமிட்டி இந்திய மீனவர்கள் 127 பேர் மீது பதிவு செய்யப்பட்ட 13 வழக்குகளை கைவிடுவதற்கான முடிவை எடுத்தது.

அக்கமிட்டி தனது முடிவை உச்ச நீதிமன்றத்தில் இப்போது தெரிவித்துள்ளது.

இந்திய மீனவர்கள் மீதான வழக்குகள் கைவிடப்பட்டது இரு நாட்டு மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தன்னார்வ நிறுவனங்கள் வழக்குத் தொடுத்ததை அடுத்து 442 மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுவித்தது