அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, April 1, 2009

அதிமுகவுடன் மனித நேய மக்கள் கட்சி கூட்டணி? - நாளை முடிவு


சென்னை: திமுகவில் சீட் இல்லாமல் விடப்பட்டுள்ள மனித நேய மக்கள் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவுதான் மனித நேய மக்கள் கட்சி. இக்கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. ஏகப்பட்ட சீட் தர வேண்டும் என இக்கட்சி கோரி வந்தது. ஒரு சீட் தந்தால் ஏற்க மாட்டோம் எனவும் கூறியிருந்தது.

ஆனால் திமுக இக்கட்சியின் கோரிக்கையை நிராகரித்து விட்டதாக தெரிகிறது. இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சிக்கே ஒரு சீட் மட்டும்தான் திமுக தந்துள்ளது. இந்த நிலையில் புதிதாகப் பிறந்த மனித நேயக் கட்சிக்கு இத்தனை சீட் தர முடியாது என திமுக கூறி விட்டதாம்.

இதனால் நேற்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடந்த இறுதிக் கட்ட தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் மனித நேயக் கட்சியைச் சேர்ந்த யாரும் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் மனித நேய மக்கள் கட்சியின் கூட்டம் சென்னையில் நாளை மாலை நடக்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது இதுகுறித்துக் கூறுகையில்,

மாறிவரும் தமிழக அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, மனித நேயமக்கள் கட்சியின் உயர் நிலைக்குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது.

இதில் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட விருக்கிறது. எந்த நிலையிலும் தன்மான அரசியலை மனித நேய மக்கள் கட்சி விட்டுக்கொடுக்காது என்பதை தொண்டர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம் என்றார் அப்துல் சமது.

அதிமுக தரப்பில் கூட்டணி குறித்து மனித நேய மக்கள் கட்சியுடன் கூட்டணி பேசப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

நன்றி : தட்ஸ்தமிழ்

No comments: