அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, April 4, 2009

இஸ்லாம் கவிதையை நிராகரிக்கின்றதா?

செவ்வாய், 24 மார்ச் 2009
விமர்சனம்: ''உங்களில் ஓருவருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிட சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று.''
புகாரி 6154, முஸ்லிம் 4191.

இப்படியிருக்கயில் ஏன் கவிதை என்ற பகுதி? அதனை எடுத்துவிடலாமே. கட்டுரையிலேயே நம் கருத்துக்களைச் சொல்லலாம்.

- மின்னஞ்சல் வழியாகச் சகோதரர் முஹம்மது சுல்தான்.

விளக்கம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்புச் சகோதரர் முஹம்மது சுல்தான்,

''உங்களில் ஒருவருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர்கள்: அபூஹுரைரா,(ரலி) ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) (நூல்கள்: புகாரி 6154. 6155 முஸ்லிம் 4546, 4547, 4548)

கவிதை கூடாது என்று நீங்கள் எடுத்துக்காட்டிய அறிவிப்புகள் இருப்பதுபோல் கவிதையை ஆதாரித்தும் ஆதாரப்பூர்வமான பல அறிவிப்புகள் உள்ளன.

கவிதைகளுக்கும் கவிஞர்களுக்கும் இஸ்லாம் எதிரானதல்ல. "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கவிஞர் என்று அழைக்கப்படும் ஹஸ்ஸான் (ரலி) அவர்களுக்காக பள்ளிவாசலில் ஒரு மேடை அமைக்கப்பட்டு, அதில் நின்று இஸ்லாத்தின் மேன்மைகளையும் நபியவர்களின் பண்புகளையும் அவர் பாடுவார்" என நபிமொழிகளின் விரிவுரைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன! கவிஞருக்கு மேடை அமைத்துக்கொடுத்துக் கவிபாடச் சொன்ன மார்க்கம் இஸ்லாம்.

இஸ்லாம் கவிபாடுவதைத் தடை செய்யவில்லை!

இஸ்லாத்தில் கவிதை கூடுமா? கூடாதா? என்பதில் கவிதை கூடும் என்பதற்கான இஸ்லாத்தின் சான்றுகளை முதலில் பார்ப்போம்:

கவிதை கூடும்; கூடாது என்ற இருவாதங்களுக்கும் வைக்கப்போகும் அறிவிப்புகளில் கவிதை என்ற சொல்லுக்கு அரபியில் ''ஷிஅர்'' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. வார்த்தை மாற்றங்கள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதற்கு வாய்ப்பில்லை.

''நிச்சயமாக கவிதையிலும் ஹிக்மத் - ஞானம் உண்டு'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 6145)

(பனூ குறைழா போரின்போது கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் ''எதிரிகளுக்கு எதிராக வசைக்கவி பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (உறுதுணையாக) இருப்பார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன். அறிவிப்பாளர்கள்: பராவு பின் ஆஸிப் (ரலி) அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரி 3213, 4123, 4124, 6153. முஸ்லிம் 4897, 4899)

மேலும், மக்காவைத் துறந்து மதீனா வந்தபோது நபித்தோழர்கள் அபூபக்ர் (ரலி) பிலால் (ரலி) ஆகியோருக்குக் காய்ச்சல் ஏற்பட்டு, தங்கள் உடல் நலக்குறைவைக் கவிதை நடையில் கூறியதாக புகாரியின் 1889, 3926, 5654, 5677 ஆகிய ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும், விரிவஞ்சிக் கவிதையை ஆதரிக்கும் பல அறிவிப்புகள் இங்குச் சேர்க்கப்படவில்லை.

கவிதை பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானதல்ல என்றும் கவிதையையும் கவிஞரையும் உற்சாகமூட்டும் மார்க்கமே இஸ்லாம் என்பதையும் பல நபிமொழிகள் வழியாக அறிந்துகொள்ள முடிகின்றது. "இஸ்லாத்தின் எதிரிகளுக்குப் பதிலடி கொடுத்து கவிபாடும்போது வானவர்கோன் ஜிப்ரீலைக் கொண்டு கவிஞருக்கு இறைவன் வலுவூட்டுகின்றான்" என்ற அறிவிப்பு இங்குக் குறிப்பிடத்தக்கது.

இஸ்லாம் ஆதரிக்கும் கவிதைகள்.

எவ்வகையான கவிதைகளை இஸ்லாம் ஆதரிக்கிறது? என்றால் இஸ்லாம் விதிக்கும் ஒரே நிபந்தனை, கவிதையில் உண்மை இருக்க வேண்டும். கவிதை என்ற பெயரில் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டுப் பொய்யையும் புனைச் சுருட்டையும் சேர்த்து இட்டுக்கட்டக்கூடாது.

''கவிஞர்களின் சொற்களிலேயே மிகவும் உண்மையான சொல், (கவிஞர்) லபீத் சொன்ன, 'அறிக! அல்லாஹ்வைத் தவிர அனைத்துப் பொருட்களுமே அழியக்கூடிவையே' எனும் பாடல்தான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரி 3841, 6147, 6489. முஸ்லிம் 4541, 4542, 4543, 4544, 4545,)

கவிதையின் இலக்கணம் அதன் ஒவ்வொரு வாசகத்திலும் உண்மை பொதிந்திருக்க வேண்டும். இதையே இஸ்லாம் விரும்புகின்றது.

எடுத்துக் காட்டாக: கவிமணி தேசிக விநாயகம் பாடிய ஒரு கவிதை. உண்மையும் உள்ளத்து எழுச்சியும் உணர்ச்சி மயமாகிப் பிறப்பதே கவிதை என்பது அவரது சார்பு.

''உள்ளத்து உள்ளது கவிதை - இன்பம்

உருவெடுப்பது கவிதை,

தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை

தெரிந்து உரைப்பது கவிதை''

வாழும் காலத்தில் மனிதர்களிடையே சமநிலை இல்லாமல் ஏற்றத் தாழ்வுகளே நிலைத்து நிற்கின்றன. ஆனால் மரணத்திற்குப்பின் ''பிரேதம்'' என்ற ஒரு சொல்லில் மண்ணறையில் சமநிலை சமரசம் ஏற்படுகின்றது! இதைச் சில கவித்துளி வரிகளில் மிகச் சுருக்கமாக ஒரு கவிஞன் பாடுகிறான்:

''ஆண்டி இங்கே அரசனும் இங்கே

அறிஞன் இங்கே அசடனும் இங்கே''

ஆண்டிக்கும் அரசனுக்கும் சமரசம் சமத்துவம் ஏற்படும் இடம் மண்ணறை!

அரசன் மரணித்தாலும், அறிஞன் மரணித்தாலும் அரசனை எடுத்தாச்சா? என்று கேட்பதில்லை! பிரேதத்தை எடுத்தாச்சா? என்றும், முஸ்லிம்கள் சொல் வழக்கில் ஜனாஸா" title="Definition : உயிர் பிரிந்த உடல்">ஜனாஸாவை எடுத்தாச்சா? மையித்தை எடுத்தாச்சா? என்றே விசாரிக்கப்படும்.

உண்மை, உயிரோட்டம், உணர்ச்சிகள் அடங்கிய கவிதைகளை இஸ்லாம் வரவேற்கின்றது.

ஆமிர்(ரலி) அவர்கள் கவிஞராக இருந்தார்கள். அவர்கள் (தம் வாகனத்திலிருந்து) இறங்கி மக்களுக்காகப் (பின்வரும் யாப்பு வகைக் கவிதையைப்) பாடி அவர்களின் ஒட்டகங்களை விரைந்தோடச் செய்தார்கள்.

'இறைவா! நீ இல்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்,

தர்மம் செய்திருக்கவுமாட்டோம்,

தொழுதிருக்கவுமாட்டோம்,

உனக்காக (எங்களை) அர்ப்பணம் செய்கிறோம்,

உன் வழியைப் பின்பற்றும்வரை எங்களை மன்னிப்பாயாக!

நாங்கள் (போர்க்களத்தில் எதிரியைச்) சந்திக்கும்போது எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக!

எங்களின் மீது அமைதியைப் பொழிவாயாக!

(அறவழியில் செல்ல) நாங்கள் அழைக்கப்பட்டால் நாங்கள் (தயாராக) வந்துவிடுவோம்.

எங்களிடம் மக்கள் (அபயக்) குரல் எழுப்பினால் (உதவிக்கு வருவோம்)' என்று பாடிக் கொண்டிருந்தார்கள். (வழக்கம் போன்று பாடலைக் கேட்டு ஒட்டகங்கள் விரைந்தோடலாயின.)

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'யார் இந்த ஒட்டகவோட்டி?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆமிர் இப்னு அக்வஃ' என்று பதிலளித்தனர். அப்போது, 'அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்கள்: புகாரி, 6148 முஸ்லிம் 3695).

இறைவன் இல்லை என்றால் நேர்வழி என்பதே இல்லை என்பதை ஆணித்தரமாக விளக்குகிறது மேற்கண்ட கவிதை.

இஸ்லாம் தடை விதிக்கும் கவிதைகள்.

கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள். அவர்கள் ஒவ்வொரு பள்ளத் தாக்கிலும் தட்டழிந்து திரிவதை நீர் அறியவில்லையா? அவர்கள் செய்யாததைக் கூறுகின்றனர். ( அல்குர்ஆன், 26:224-226)

அல்குர்ஆனின் ''கவிஞர்கள்'' என்ற 26வது அத்தியாயத்தில் ''கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள்'' என்ற இறைவாக்கு சத்தியத்திற்கெதிராகவும் அசத்தியத்திற்கு ஆதரவாகவும் போலித்தனத்தைப் பொய்யாகப் புனைந்து கவிதை வடித்த நிராகரிப்பளார்களைக் குறிப்பிட்டுப் பேசுகின்றது.

ஒரு கவிதை அனுமதிக்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் அது சொல்லக்கூடிய தகவலைப் பொறுத்தே அமையும். இறை உணர்வு, இறைவாழ்த்து, ஓரிறைக்கொள்கை, நல்லறம் போன்ற நல்ல கருத்துகளைக் கொண்டதாக இருந்தால் அது அறியாமைக்கால கவியாக இருந்தாலும் வரவேற்கப்படும்.

ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், ''உமய்யா பின் அபிஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். ''ஆம் தெரியும்!'' என்றேன். ''பாடு'' என்றார்கள். நான் பாடலைப் பாடினேன். ''இன்னும் பாடு'' என்றார்கள். இன்னொரு பாடலைப் பாடினேன். ''இன்னும் பாடு'' என்றார்கள். இவ்வாறு அல்லாஹ்வின் தூதருக்காக நூறு பாடல்களைப் பாடிக்காட்டினேன். அறிவிப்பவர்: ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) (நூல்: முஸ்லிம் 4540)

உமய்யா பின் அபிஸல்த் அறியாமைக் காலக் கவிஞர் ஆவார். - ''அவர் தமது கவிதையின் கருத்துகளால் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்து விட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வேறோர் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. அந்த அளவுக்கு - அவரது கவிவரிகளில் ஓரிறைக் கோட்பாடு, சத்தியம், அறநெறிகள், நல்லறங்கள் நிறைந்திருந்திருந்தன. கலப்பற்ற உண்மையான உயிரோட்டமான கவிதைகளுக்கு இஸ்லாம் மறுப்புச் சொல்லவில்லை.

ஆனால், ''கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு'' என உண்மைக்குப் புறம்பாக, கற்பனை கவிவரிகளுக்கு வார்த்தைகளைத் தேடிப் புனைவதும் கவிதை என்ற பெயரில் பெண்களின் அங்கங்களை வர்ணிப்பதும் குர்ஆன் சுன்னாவுக்கு எதிரானவையாகும். இப்படியான புனைவுக் கவிதைகளில் எந்நேரமும் மூழ்கிக் கிடக்கும் கவிஞனின் வயிறு கவிதையால் நிறைந்திருப்பதைவிட சீழ் சலத்தால் நிறைந்திருப்பது எவ்வளவோ மேல் என்ற கருத்தைச் சொல்லிக் கண்டிக்கிறது இஸ்லாம். அவ்வாறான கவிதைகளையும், கவிஞர்களையும் விட்டு மக்கள் விலகிக்கொள்ள வேண்டும்.

உண்மையான - உயிரோட்டமான நல்ல கவிகளைப் பாடுவதையும் கேட்பதையும் குர்ஆன், சுன்னா தடை செய்யவில்லை. ''கவிதையிலும் ஹிக்மத் - ஞானம் உண்டு'' ஞானமுள்ள கவிதைகளை மக்கள் கேட்கலாம்; அதிலிருந்து படிப்பினையும் பெறலாம் என்று விளங்கினால் கவிதைகள கூடும்; கூடாது என்ற இரு கருத்திலுள்ள முரண்பாடு நீங்கிவிடும்.

.

No comments: