அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, July 23, 2009

வறுமையின் கொடூரத்தால் உடல் உறுப்புகளை விற்கும் ஈராக் மக்கள் - அதிர்ச்சி தகவல்



அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கை ஆக்கிரமித்து 6 ஆண்டுகள் முடியும் வேளையில் ஈராக் மக்கள் வாழ்வதற்காக தங்கள் உடல் உறுப்புகளை விற்கும் கொடூரம் ஈராக்கில் நடந்துக்கொண்டிருப்பதாக அல்ஜஸீரா தொலைக்காட்சி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பாக்தாதில் இம்மாதிரியான உடல் உறுப்புகளை விற்கும் நூற்றுக்கும் மேற்பட்ட‌ ஒப்பந்தங்கள் நடந்துமுடிந்ததாக அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. தரகர்கள் மூலம் இத்தகைய உடல் விற்பனை வர்த்தகங்கள் நடைபெறுகிறது. விற்ற பணத்தில் மூன்றில் ஒரு பாகம்தான் உடல் உறுப்பின் உரிமையாளருக்கு கிடைக்கிறது.
வாழ்க்கையை ஓட்டுவதற்கு வேறு வழிகள் இல்லாதவர்களும்,கடனில் மூழ்கிப்போனவர்களும்தான் உடல் உறுப்புகளை விற்கிறார்கள். ஈராக்கின் தெற்கு மாகாணமான அமாராயிலிருந்து நீண்ட தூரம் பயணம்செய்து பாக்தாதிற்கு வந்து சேர்ந்த கரீம் ஹுசைன் என்பவரின் அனுபவத்தை அல் ஜஸீராவின் ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுகிறது. வீடு கட்டுவதற்காக வங்கியிலிருந்து கடன் வாங்கியிருந்த கரீம் வேலைச்செய்து கடனை அடைக்கலாம் என்று நினைத்திருந்தபோதுதான் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு அவருடைய கனவுகளை தகர்த்தது. அவர்கூறுகிறார்,"எனக்கு 8 குழந்தைகள் எனக்கு தினமும் கிடைக்கும் கூலி எனது அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு போதுமானதாக இல்லை". கரீம் பாக்தாதிற்கு 3 ஆயிரம் டாலருக்கு தனது சிறு நீரகத்தை விற்க வந்துள்ளதாக கூறியுள்ளார். உறுப்பு மாற்று அறுவைச்சிகிட்சையில் பிரசித்திப்பெற்ற மருத்துவமனைதான் அல் கயால் தனியார் மருத்துவமனை.
உறுப்பு மாற்று அறுவை சிகிட்சைக்காக வரும் நபர்கள் பொருளாதார பிரச்சனையால்தான் விற்க வருகிறார்கள் என்பதை எங்களால் கண்டறிய இயலாது என்கிறார் தலைமை மருத்துவர் காலித் அல் கயால். சிறு நீரக தானம் செய்கின்றவருக்கு ஏதேனும் நோய்கள் உள்ளதா?, சிறு நீரகம் செயல்படத்தகுந்ததுதானா?, சிறு நீரகத்தை பிறருக்கு மாற்றும்பொழுது ஏதேனும் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதா? என்பன போன்ற ஆய்வுகள் மட்டுமே தாங்கள் நடத்துவதாக காலித் மேலும் தெரிவித்தார்.
ஈராக்கில் உறுப்புகளை தானம் செய்வது சட்டத்திற்குட்பட்டது என்றாலும் உறுப்புகளை விற்பது தடைச்செய்யப்பட்டுள்ளது. ஈராக்கில் 23 சதவீத மக்கள் கொடும் வறுமையில் உழல்வதாக அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது. ஆனால் அதிகாரமற்ற தகவலின் படி இன்னும் எவ்வளவோ அதிகம்.

No comments: