அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, November 19, 2009

தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவரே படு சாதாரணமான முறையில் கொல்லப்பட முடியும் என்றால், சாதாரண மக்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்? கவிதா கர்கரே



மும்பை: தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவரே படு சாதாரணமான முறையில் கொல்லப்பட முடியும் என்றால், இந்த நாட்டில், சாதாரண மக்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்? என்று முகத்தில் அடித்தாற் போல கேட்டுள்ளார் மும்பை தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரேவின் மனைவி கவிதா கர்கரே.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒய்.பி. சிங் மற்றும் அவரது மனைவி அபா ஆகியோர் இணைந்து காவல்துறையில் ஊழலை விரட்டுவதற்காக இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
யஹி சச் ஹை என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆல்பத்தை இன்று கவிதா கர்கரே வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் படு சாதாரணமாக கொல்லப்பட்டுள்ளார். அவரை இவ்வளவு சாதாரணமாக கொல்ல முடிகிற அளவுக்கு அவருக்கான பாதுகாப்பு இருந்துள்ளது. அப்படியானால் இந்த நாட்டில் உள்ள அப்பாவி பொதுமக்களின் நிலை என்ன?, அவர்களது பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் உள்ளது? எப்படி நாம் பாதுகாப்பு இருக்கிறோம் என்று நினைக்க முடியும்.
நமது பாதுகாப்பு முறையில் என்ன தவறு என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பத்து தீவிரவாதிகள், பயங்கரமான ஆயுதங்களுடன், வெடிபொருட்களுடன் நமது நாட்டுக்குள் எப்படி ஊடுறுவ முடிந்தது?.

மும்பை தாக்குதல் சம்பவம் நடந்த முதல் ஆறு மாதத்திற்கு எனக்கு எதுவுமே தெரியாது. ஏராளமான அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், சமூகத்தின் பல்வேறு தரப்பினர் எனது வீட்டுக்கு வந்தனர், பேசினர், போயினர். என்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே எனக்கு அப்போது தெரியவில்லை.

உண்மையில் நவம்பர் 26ம் தேதி என்ன நடந்தது எனக்கு யாருமே சொல்லவில்லை. இந்த நாள் வரை எந்த ஒரு மூத்த காவல்துறை அதிகாரியும், எனது கணவருக்கு என்ன நேர்ந்தது என்பதை என்னிடம் விளக்கவில்லை. பத்திரிக்கைச் செய்திகள், நாளிதழ் செய்திகள் உள்ளிட்டவை மூலம்தான் எனக்கு மும்பைச் சம்பவம் குறித்த விவரங்கள் தெரிய வந்ன. இந்த நிமிடம் வரை சம்பவத்தன்று நடந்த எதுவுமே எனக்கு தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் சில அரசியல்வாதிகள், எனது கணவரும், அவருடன் தீவிரவாதிகளுடன் மோதச் சென்ற இரு போலீஸ் உயர் அதிகாரிகளும் அவசரம் அவசரமாக செயல்பட்டனர். போதிய தகவல்களைச் சேகரித்துக் கொள்ளாமல் அவசர கோலத்தில் செயல்பட்டனர் என்று சொல்ல ஆரம்பித்த பின்னர்தான் எனக்கு அன்றைய சம்பவங்கள் குறித்து நிறையத் தெரிய வந்தது.

எனது கணவரும் காம்தே, சலஸ்கர் ஆகியோர் காமா மருத்துவமனை அருகே முகாமிட்டு தீவிரவாதிகளை சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக கூடுதல் படையினரைக் கோரியுள்ளனர். ஆனால் கிட்டத்தட்ட 40 நிமிடங்களாக அவர்களுக்கு கூடுதல் படையினர் அனுப்பப்படவில்லை. உதவி கோரியும் முக்கால் மணி நேரமாக அவர்களுக்கு அது வந்து சேரவில்லை. ஏன் அந்த 40 நிமிடமாக யாரும் அவர்களுக்கு உதவவில்லை, கூடுதல் படையினர் அனுப்பப்படவில்லை. இந்த கேள்விக்கு இதுவரை எனக்கு பதில் கிடைக்கவில்லை.

தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின்போது எனது கணவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து விரிவாக விளக்க முடியாது என்று சில காவல்துறை அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர்.
கர்கரே காயமடைந்த நிலையில் கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருந்தார். ஆனால் அவரை உரிய நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை. காமா மருத்துவமனை வளாகத்தில் கிட்டத்தட்ட 40 நிமிடமாக எனது கணவரும், காம்தே, சலஸ்கர் உள்ளிட்டோரும் உதவி கிடைக்காமல் துடித்துள்ளனர். ஏன் அவர்களுக்கு யாரும் உதவவில்லை.

அதை விட கொடுமையாக இந்த மூன்று அதிகாரிகளும் உயிரிழந்த நிலையில் கிடந்தபோது கிட்டத்தட்ட 40 நிமிடமாக உடல்களை எடுக்கக் கூட யாரும் வரவில்லை. ஏன்?

தாக்குதல் நடத்திய 9 தீவிரவாதிகளின் உடல்களை இன்று பெரும் பணத்தை செலவழித்து பத்திரப்படுத்தி பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம். சர்வதசே அரங்கில் நாம் மனிதாபிமானம் மிக்கவர்கள் என்பதைக் காட்டுவதற்காக இவ்வாறு செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் தியாகம் செய்து உயிர் நீத்த அந்த மூன்று அதிகாரிகளின் உடல்களை கிட்டத்தட்ட 40 நிமிடம் யாருமே தொடக் கூட வராததன் காரணம் என்ன. நமது நாட்டில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது. எப்போதுதான் இது மாறப் போகிறது? என்றார் கவிதா.
தனது பேச்சு முழுவதும் கண்களில் கண்ணீர் ததும்பக் காணப்பட்டார் கவிதா கர்கரே.
source:thatstamil

No comments: