அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, November 19, 2009

இன்றையச் சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும்


இன்றைய உலகம் சந்திக்கும் முதன்மையான சிக்கல்கள் யாவை?

இக்கேள்வியை இன்று யரிடம் கேட்டாலும் - அவர் சமூக ஆர்வலராக இருந்தாலும் சரி, பாமரனாக இருந்தாலும் சரி, அறிவில் சிறந்த சான்றோர்களாய் இருந்தாலும் சரி - பதில் ஒன்று தான்.

வன்முறை, வறுமை, ஒழுக்கச் சீர்கேடுகள், போதை - இது தான் அந்தப் பதில்.

இன்று எவ்வகைச் சிக்கல்களானாலும் அவை மூன்று பரிமாணங்களைக் கொண்டுள்ளன:

1. உளவியல் சார்ந்தது.
2. சமூகம் சார்ந்தது.
3. உலகளாவியது.
அதாவது, தனிமனிதனின் உள்ளம் சார்ந்த பலப் பண்புகள்தாம் இறுதியில் உலகளாவியச் சிக்கல்களாய் வெடிக்கின்றன.

அதனால்தான் திருக்குர்ஆன் 'உள்ளம்' தொடங்கி 'உலகம்' வரை நடைமுறைப்படுத்தும் வகையில் தீர்வுகளைத் தருகின்றது.

எடுத்துக்காட்டாக, மனிதனின் உள்ளத்தில் தோன்றும் பழிவாங்கும் பண்பே இறுதியில் வன்முறையாக - தீவிரவாதமாக உலகைப் பாதிக்கிறது. இது போன்றுதான் இதரச் சிக்கல்களும்!

1. தீவிரவாதம்: தீர்வு என்ன?

திருக்குர்ஆன் இந்தச் சிக்கலுக்கான உளவியல் காரணங்களை முதலில் தடுக்கின்றது. அநீதி இழைத்தலும் பழிவாங்குதலும்தான் தீவிரவாதம் தோன்ற அடிப்படைக் காரணங்கள். ஆகவே, திருக்குர்ஆன் நீதியை நிலைநாட்டும்படியும் அநீதி இழைக்காமல் வாழும்படியும் ஆணையிடுகிறது.

"இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்காக வாய்மையில் நிலைத்திருப்போராயும் நீதிக்குச் சான்று வழங்குவோராயும் திகழுங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்து விடக் கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானது" (குர்ஆன் 5:8).

"நீங்கள் எதைப் பேசும்போதும் நீதியுடன் பேசுங்கள்; உங்களின் நெருங்கிய உறவினர் பற்றிய விவகாரமாயினும் சரியே!" (குர்ஆன் 6:15).

"திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்தும் படியும் நன்மை செய்யும்படியும் உறவினர்களுக்கு ஈந்துதவும்படியும் கட்டளையிடுகிறான். மேலும், மானக்கேடான, வெறுக்கத்தக்க, அக்கிரமமான செயல்களை விலக்குகிறான்.." (குர்ஆன் 16:90).

நீதி செலுத்துவதைக் கடமையாகக் கூறும் குர்ஆன், அநீதி இழைக்கப் பட்டவனுடைய நியாயமான உணர்வுகளுக்கும் மருந்திடுகிறது.

பொதுவாக அநீதி இழைக்கப் பட்டவனுக்கு நீதி கிடைக்காதபோது அவனுள் பழிவாங்கும் உணர்வு எழுவது இயற்கை. ஆனால் தண்டனை அளிக்கும் அதிகாரத்தை இஸ்லாம் அரசுக்குத்தான் அளித்துள்ளது. தனிமனிதன் பழிவாங்குவதை -அதாவது சட்டத்தைக் கையில் எடுப்பதை- இஸ்லாம் அனுமதிக்கவில்லை. தனிமனிதன் பழிவாங்குவதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. மாறாக, மன்னிக்கும் பண்பை ஏவுகிறது.

"..அவர்கள் கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான்" (குர்ஆன் 3:134).

"நன்மையும் தீமையும் சமமாக மாட்டா. நீர் நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்ளும். அவ்வாறாயின் உம்முடைய கொடிய பகைவனும் உற்ற நண்பனாய் மாறி விடுவான்" (குர்ஆன் 41:34).

இன்று பயங்கரவாதம் உருவாவதற்கு முதன்மைக் காரணம் குற்றங்களுக்குத் தண்டனை கிடைக்காததே ஆகும். இஸ்லாமிய அரசு தண்டனைச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கண்டிப்பாக இருக்கும்.

"...இறைநம்பிக்கையாளர்களே, கொலைக்குப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது" (குர்ஆன் 2:178). இது அரசுக்கு குர்ஆன் இடும் கட்டளை.

"எவர்கள் தம்மீது கொடுமை இழைக்கப் பட்டபின் பழி வாங்குகிறார்களோ அவர்கள் மீது ஆட்சேபணை கூற இயலாது" (குர்ஆன் 42:41).

எனவே அநீதி இழைக்கப்பட்டவன் அரசை அணுகித் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஏற்ற அளவு பழி தீர்த்துக் கொள்ள அனுமதி அளிக்கிறது குர்ஆன். இதனால் அவன் உள்ளத்தில் பழிவாங்கும் எண்ணம் அழிந்து விடுகிறது. அதே சமயம் தீங்கிழைத்தவனை மன்னிக்கும் அதிகாரத்தையும அவனுக்குத் திருக்குர்ஆன் வழங்குகிறது.

"கொலை செய்தவனுக்கு அவனுடைய சகோதரனால் (அதாவது கொல்லப்பட்ட உறவினரால்) சலுகை அளிக்கப்பட்டால் பிறகு நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும் உயிரீட்டுத் தொகையை நேர்மையான முறையில் அவன் வழங்கிட வேண்டும். இது உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையுமாகும்" (குர்ஆன் 2:178).

"ஆயினும் யார் பொறுமையை மேற்கொண்டு மன்னித்து விடுகிறார்களோ அவர்களின் இந்தச் செயல் திண்ணமாக உறுதி மிக்க (வீரச்) செயலைச் சேர்ந்ததாகும்" (குர்ஆன் 42:43).

மன்னிப்பது தான் வீரமிக்கது என்று குர்ஆன் கூறுகிறது.

இவ்வாறு அநீதிக்கு நீதமான முறையில் தீர்வு கண்டு விட்டால் வன்முறை எனும் எண்ணமே அடியோடு நீங்கி விடும் அல்லவா?

2. வறுமை: தீர்வு என்ன?

நவநாகரீக உலகில் வறுமையா? தொலைக்காட்சிப் பெட்டியின்முன் வெட்டியாய்ப் பொழுதைக் கழிக்கும் நமக்கு வறுமை பற்றிய சிந்தனையா? ஆயினும் உலகில் பெரும்பகுதி இன்று வறுமையில் வாடுகிறது என்பது உண்மை. ஏன், வளர்ந்த நாடு என்று அழைக்கப்படும் அமெரிக்காவில்கூட வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வறுமைக்கான காரணங்களாகத் திருக்குர்ஆன் இரண்டு முக்கிய விஷயங்களைக் கூறுகிறது:

அ) தவறான பொருள் பங்கீடு
ஆ) வட்டியும் பதுக்கலும்.
அ) செல்வம் உங்களிலுள்ள செல்வர்களிடையே மட்டும் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது (59:7).

ஆனால் இன்று வளர்ந்த நாடுகள் செல்வர்களை மேலும் செல்வர்களாக்கிக் கொண்டிருக்கின்றன. ஏழைகளை மேலும் ஏழைகள் ஆக்கிக் கொண்டிருக்கின்றன. அண்மைக்காலப் புள்ளி விவரங்கள் இதனை மெய்ப்பிக்கின்றன. உலகின் 0.13 விழுக்காடு மக்கள் 25 விழுக்காடு உலக வளங்களை அனுபவிக்கின்றனர் (பார்க்க: குளோபல் இஷ்யு -2004).

ஆ. வட்டி: இன்று உலக நாடுகளின் கடன் சுமையை ஆண்டுதோறும் அதிகரிக்கச் செய்வதில் வட்டியின் பங்கு முதன்மையானதாகும். வட்டிக் கொடுமையைப் பற்றி நாம் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. அனைவரும் அறிந்ததே.

"இறைவன் வணிகத்தை ஆகுமானதாக்கி வட்டியைத் தடுத்து (ஹராமாக்கி) விட்டான்" (குர்ஆன் 2:215).

"மக்களுடைய பொருள்களுடன் கலந்து பெருக வேண்டும் என்பதற்காக நீங்கள் வட்டிக்கு விடும் பணம் அல்லாஹ்விடத்தில் பெருகுவதில்லை" (குர்ஆன் 30:39).

"உங்களில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்" (குர்ஆன் 2:188).

மேற்கூறிய வசனங்களைப் பொருளாதார விதிகளாக மனிதர்களுக்குக் குர்ஆன் வழங்குகிறது. மேலும் செல்வம் என்பது இறைவன் வழங்கிய அமானிதம் எனும் அடிப்படையை இஸ்லாம் வலியுறுத்துகிறது. எனவே இறைவன் கூறியவாறு செல்வத்தைச் செலவு செய்யப் பணிக்கிறது.

* "உங்கள் செல்வத்திலிருந்து வறியவர்களுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் பங்கு உண்டு" (குர்ஆன் 9:60).

* ஒவ்வோர் ஆண்டும் செல்வர்கள் தங்களின் செல்வத்திலிருந்து 2.5 விழுக்காடு தொகையை ஜகாத்தாக (கட்டாய அறமாக) ஏழை எளியோருக்கு வழங்க வேண்டும் என்று குர்ஆன் விதித்துள்ளது. இஸ்லாமிய நெறியின் ஐந்து அடிப்படைக் கடமைகளில் இதுவும் ஒன்று.

* கடன் கொடுக்கல் - வாங்கல் முறைகளையும் அவற்றின் ஒழுங்குகளையும் குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது.

இவ்வாறு குர்ஆன் படிப்படியாக சமுதாயத்திலிருந்து இல்லாமையைப் போக்கி விடுகிறது. இத்தகைய சமுதாயத்தில் வாழும் ஒரு மனிதனிடம் பிறர் பொருளை அபகரித்தல் எனும் எண்ணம் ஏற்பட வாய்ப்பே இல்லை. அதையும் மீறி ஒருவன் அடுத்தவனின் பொருளைத் திருடுவானேயானால் அதற்கான தண்டனையையும் குர்ஆன் கூறுகிறது:

"திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, அவர்களுடைய கைகளைத் துண்டித்து விடுங்கள். இது அவர்களுடைய சம்பாதனைக்கான கூலியாகும். மேலும் அல்லாஹ் வழங்கும் படிப்பினை மிக்க தண்டனையாகும்" (குர்ஆன் 5:38).

நல்லுரை, இறையச்சம், தண்டனை ஆகிய இம்மூன்றும் சமூகத்தில் பொருளியல் சிக்கல்களைத் தீர்த்து விடும் என்பது திண்ணம்.

3. ஒழுக்கக்கேடுகளும் புதிய நோய்களும்

இன்று புதிது புதிதாக உருவாகும் நோய்களுக்கு ஒழுக்கச் சீர்கேடுகளும் விபச்சாரமும்தான் முதன்மைக் காரணங்கள். "விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்" என்று குர்ஆன் கட்டளையிடுவதுடன் "அது மானக்கேடான செயலாகவும் தீய வழியாகவும் இருக்கிறது" (17:32) என்றும் எச்சரிக்கிறது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பைக் காத்துக் கொள்ளுமாறு கூறுகிறது.

"(நபியே) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம் அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும்" (குர்ஆன் 24:30).

"மேலும் (நபியே) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பாதுகாக்கட்டும்" (குர்ஆன் 24:31).

இறுதியாக, கற்பைப் பாதுகாத்துக் கொள்ள மிகச் சிறந்த வழியாகத் திருமணத்தை முன்னிறுத்துகிறது.

"உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவர்களுக்குத் திருமணம் செய்து வையுங்கள்" (குர்ஆன் 24:32).

இன்று மேலை நாடுகளில், "தவறே இல்லை; இயற்கையானது" என்று விவாதிக்கப்படும் ஓரினத் திருமணங்களையும் ஓரினச் சேர்க்கையையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது (குர்ஆன் 26:165).

4. சுற்றுச் சூழல் பாதிப்பு

இந்தச் சிக்கல் இன்று உலகைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறது. நிலநடுக்கங்கள், ஆழிப்பேரலை (சுனாமி), புயல், வெள்ளம், வறட்சி என அனைத்திற்கும் மனிதனின் செயல்கள்தாம் காரணம். அறிவியல் முன்னேற்றங்களும் தொழில் மயமாக்கலும் கால நிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

திருக்குர்ஆன் இது குறித்தும் கவலை தெரிவிக்கிறது. பூமியிலும் கடலிலும் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். இதனால் முன் சென்ற சமூகங்கள் அழிந்தன என எச்சரிக்கிறது.

"மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தார்களோ அதன் காரணமாகத் தரையிலும் கடலிலும் அராஜகமும் குழப்பமும் தோன்றி விட்டிருக்கின்றன. அவர்கள் செய்த சில செயல்களின் விளைவை அவர்கள் சுவைப்பதற்காக" (குர்ஆன் 30:41).

18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாவீரன் நெப்போலியன் கூறுகிறார்:

"நான் உலகிலுள்ள அறிவாளிகளை அழைத்து குர்ஆனின் அடிப்படையிலான சமநீதிமிக்க அரசை அமைக்க எண்ணுகிறேன். அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை. ஏனெனில் குர்ஆன் மட்டுமே உண்மை. குர்ஆனால் மட்டுமே மனிதர்களுக்கு மகிழ்ச்சியைத் தர முடியும்.(பார்க்க: Bonaparte et I'Islam Paris, France PP 105-125)

சென்ற நூற்றாண்டின் தலை சிறந்த அறிவாளி எனக் கருதப்படும் ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறுகிறார்:

"முஹம்மத் அவர்களின் மார்க்கம் எதிர்காலத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும். ஏனெனில் ஐரோப்பியர் அதனை இப்பொழுதே ஏற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டார்கள்.....முஹம்மத் அவர்களைப் போன்ற ஒரு மனிதர் இப்பூமியின் அதிகாரியாகப் பொறுப்பேற்பாரானால் புதிய உலகின் சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து அமைதியும் மகிழ்ச்சியும் மலரும்."(A collection of writings of some of the eminent scholars - 1935 ed P. 77)

No comments: