மோத்திஹரி (பிகார்), டிச.22: பிகாரில் ஜீப் மீது ரயில் என்ஜின் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் என்ஜினுக்கு தீ வைத்ததோடு, தண்டவாளங்களையும் தகர்த்தனர்.
பிகார் மாநிலத்தின் கிழக்கு செம்பரன் மாவட்டத்தில் சீதள்பூர் என்ற பகுதியில் ஆள்இல்லாத ரயில்வே லெவல் கிராஸிங் உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை ஒரு ஜீப் கடக்க முயன்றது. அப்போது அவ்வழியாக வந்த ரயில் என்ஜின் எதிர்பாராதவிதமாக மோதியது.
சுஹாயுலி-ரக்ஸல் ரயில் நிலையங்களுக்கு இடையே காலை 7.30 மணிக்கு நடைபெற்ற இச்சம்பவத்தில் ஜீப்பில் பயணம் செய்த 5 பேர் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து ரயில் என்ஜின் டிரைவர் தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்து அப்பகுதியில் கூடிய கிராம மக்கள் ரயில் என்ஜின் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கக்கோரியும் மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆத்திரமடைந்த அவர்கள் ரயில் என்ஜினுக்கு தீ வைத்ததோடு, தண்டவாளங்களையும் தகர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.
தகவலறிந்ததும் ரயில்வே உயரதிகாரிகள் சம்பவ இடம் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்தில் காயமடைந்த இருவர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
No comments:
Post a Comment