இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனை இடியும் நிலையில் இருப்பதால், அதை கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மூடுவதற்கு ராணி எலிசபெத் திட்டமிட்டு இருக்கிறார்.
லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் அரச குடும்பத்தினர் தங்கி இருக்கிறார்கள். பொதுவாக கிறிஸ்துமஸ் பண்டிகை உள்ளிட்ட நாட்களில் இந்த அரண்மனை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக திறக்கப்படும். இந்த ஆண்டு இந்த அரண்மனை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு அனுமதிப்பது இல்லை என்றும், அரண்மனையை மூடிவிடுவது என்றும் ராணி எலிசபெத் திட்டமிட்டு இருக்கிறார்.
அரண்மனை கட்டிடம் இடியும் நிலையில் உள்ளதால் இந்த நடவடிக்கையை அவர் எடுக்க இருக்கிறார்.
சமீப காலமாக சுவர்களில் பதிக்கப்பட்டு உள்ள கற்கள் விழுந்து வருகின்றன. இப்படி ஒரு முறை கற்கள் விழுந்ததில் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர் ஒருவர் லேசாக காயம் அடைந்தார். இதே போல இளவரசி ஆன்னி பயணம் செய்த கார், அரண்மனையின் போர்ட்டிகோவில் வந்து நின்றபோது கட்டிடத்தின் கற்கள் விழுந்தன. இதில் இளவரசி மயிரிழையில் தப்பினார்.
அரண்மனையின் தரையில் கீறல்கள் விழுந்து உள்ளன. இதனால் அரண்மனை ஊழியர்கள் நடப்பதற்கு கூட இயலாமல் அவதிப்படுகிறார்கள்.
இதனால் ராணி எலிசபெத் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அரண்மனையை மூடிவிடுவது என்று முடிவு எடுத்து இருக்கிறார். அரண்மனையை அடுத்த ஆண்டு பழுது பார்ப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு 310 கோடி ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகையை ஒதுக்கும்படி அரசாங்கத்தை அரண்மனை அதிகாரிகள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment