கடந்த காலங்களை போன்று இவ்வருடமும் இந்தியா ஃபிரடர்னிடி ஃபோரம், தம்மாம் தமிழ் பிரிவு சார்பாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
டிஸம்பர் மாதம் 11ஆம் தேதி தம்மாமில் அமைந்துள்ள பாரகன் உணவக அரங்கில் வைத்து மாலை நான்கு மணிக்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஹாஜா குத்புதீன் அவர்கள் திருக்குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் ரியாஸ் அஹமது அனைவரையும் வரவேற்று பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியின் நோக்கத்தை கூறினார். இந்தியா ஃபிரடர்னிடி ஃபோரமின் பணிகளை ஆஷிக் அவர்கள் எடுத்துரைத்தார். இந்தியா ஃபிரடர்னிடி ஃபோரம் என்பது மதம், இனம் மற்றும் மொழி வேறுபாடின்றி அனைத்து இந்திய மக்களுக்காகவும் பாடுபட்டு அமைப்பு என்பதை தனது உரையில் தெளிவாக எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திரு.பால சுப்ரமணியன் அவர்கள் கலந்து கொண்டார்கள். தம்மாமிலுள்ள ஸாமில் ஸ்டீல் நிறுவனத்தில் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றி வருகிறார்.தற்போது அந்நிறுவனத்தில் முதுநிலை பொறியாளராக உள்ளார்.தம்மாம் முத்தமிழ் மன்றத்தின் இசைத்துறை தலைவர், ஸாமில் டோஸ்ட் மாஸ்டர் கிளப்பின் தலைவர், WAMY- தம்மாம் மாணவர் பயிற்சி முகாமின் ஆசிரியர் மற்றும் நீதிபதி உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்து அதன் மூலம் சமுதாய பணிகளில் ஈடுபட்டு வருபவர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இவர் 'எனது பார்வையில் இஸ்லாம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகள் குறித்து தான் விளங்கிக் கொண்ட விஷயங்களை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார்.அரபு நாடுகள் குறித்து நமது நாட்டில் பலர் பல தவறான எண்ணங்களை கொண்டுள்ளதாகவும் அதனை களைவதற்கான ஒரே வழி அவர்கள் நேரடியாக இங்கு வந்து பார்ப்பதுதான் என்பதை தனது உரையில் தெரிவித்தார்.
கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தில் பணியாற்றி வருபவரும் முதுபெரும் மார்க்க அறிஞருமான மௌலவி ரஹ்மதுல்லாஹ் இம்தாதி அவர்கள் 'இஸ்லாம் ஓர் அறிமுகம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இஸ்லாம் எனறால் என்ன என்று தெளிவாக கூறிய அவர், 1400 ஆண்டுகளுக்கு முன் காட்டுமிராண்டிகளை போல் வாழ்ந்து கொண்டிருந்த அரேபிய மக்களை இஸ்லாம் எவ்வாறு நேர்வழி படுத்தியது என்பதை அழகாக எடுத்துரைத்தார்.இறுதி வேதம் குறித்தும் இறுதி நாள் குறித்தும் தனது உரையில் சுருக்கமாக கூறினார். இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை என்பதையும் விரும்பியவர் எவரும் இதனை ஏற்றுக்கொள்ளலாம் என்பதையும் தனது உரையில் தெளிவாக்கினார்.
மூத்த பொறியாளரும் மாற்று மத அன்பர்களுக்கான நிகழ்ச்சிகளை நடத்துவதில் அனுபவம் பெற்றவருமான ஜக்கரிய்யா அவர்கள் மாற்று மத நண்பர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.தீவிரவாதம், மக்காவிற்குள் முஸ்லிம் அல்லாதவர்கள் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை, இஸ்லாமிய வரலாற்றில் போர்கள் ஏன் நடைபெற்றன உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. அனைத்து கேள்விகளுக்கும் தெளிவாகவும் விளக்கமாகவும் ஜக்கரிய்யா அவர்கள் பதில் அளித்தார்கள்.
சிறப்பு விருந்தினர்களுக்கான நினைவு பரிசுகளை இந்தியா ஃபிரடர்னிடி ஃபோரம்,தம்மாம் தமிழ் பிரிவின் தலைவர் முஹம்மது ஃபைஸல் அவர்கள் வழங்கினார்கள்.
சிறந்த கேள்விகளை கேட்ட ஐந்து நபர்களுக்கும் மற்றும் குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து நபர்களுக்குமான பரிசுகளை இந்தியா ஃபிரடர்னிடி ஃபோரம், சவூதி அரேபியாவின் துணைத்தலைவர் சாதிக் மீரான் அவர்கள் வழங்கினார்கள்.
மாற்று மத சகோதரர்களுக்கு இலவச குர்ஆன்களை மௌலவி உவைஸி அவர்கள் வழங்கினார்கள். ஹம்ஸா அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. மாற்று மத அன்பர்கள் உள்ளிட்ட 225 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்தியா ஃபிரடர்னிடி ஃபோரம், தம்மாம் பிரிவை சேர்ந்தவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment