ஹிரா என்றொரு தேசம். அங்கு நுஃமான் என்ற அரசர் ஆட்சிச் செய்து வந்தார்.ஒரு நாள் நுஃமான் தனது பாதுகாவலர்களுடன் காட்டுக்கு வேட்டைக்கு சென்றார்.வேட்டையின்போது காட்டில் தன்னந்தனியாக வெகு தூரம் சென்றுவிட்டார் நுஃமான். அந்தி சாயும் வேளையில் மேகம் கறுத்து கடும் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது.
அரசர் நுஃமான் ஒதுங்குவதற்கு ஏதாவது வாய்ப்புகளுண்டா என்று சுற்றும் முற்றும் அலைந்தபொழுது ஒரு ஏழை விவசாயியைக் கண்ணுற்றார். அவர் பெயர் ஹன்ழலா. அவரிடம் தன்னை அரசர் என்பதை காட்டிக்கொள்ளாத நுஃமான் தனக்கு இன்றிரவு தங்கிச்செல்ல ஒரு இடம் வேண்டும் என்று கோரினார். உடனே தனது வீட்டிற்கு அழைத்துச்சென்ற ஹன்ழலா அவருக்கு ஒரு ஆட்டை அறுத்து உணவை தயாரித்துக் கொடுத்ததுடன் சிறந்த முறையில் உபசரித்தார்.
மறுநாள் காலை துயிலெழுந்த நுஃமான் புறப்படத் தயாரான பொழுதுதான் கூறினார் தான் இந்நாட்டின் அரசர் என்றும் ஒரு நாள் தன்னை தனது அரண்மனையில் வந்துக்காணுமாறும் அப்பொழுது உதவிபுரிவதாகவும் ஹன்ழலாவிடம் கூறிவிட்டு சென்றார்.
ஏழை விவசாயியான ஹன்ழலாவுக்கு தனது குடும்பத்தோடு வாழ்க்கையை ஓட்ட போதிய வருமானமின்றி மிகுந்த சிரமத்திற்காளான நேரத்தில் முன்பு அரசர் கூறியதை நினைவுக்கூர்ந்து அரசரை காண அரண்மனைக்கு புறப்பட்டார்.
அரண்மனைக்குள் நுழைந்த ஹன்ழலாவைக் கண்டதும் அடையாளம் கண்டுக்கொண்ட அரசர் நுஃமானுக்கு தூக்கி வாரிப்போட்டது. ஏனெனில் வருடத்தில் ஒருநாள் காலையில் அரசர் யாரைப்பார்க்கிறாரோ அவரை கொலைச்செய்யவேண்டும் என்பது அந்நாட்டின் சட்டமாகவிருந்தது. அந்த நாளில் முதன்முதலில் ஹன்ழலாவைப் பார்த்துவிட்டுத்தான் தனக்கு இக்கட்டான வேளையில் உதவிய இந்த மனிதரையா நாம் கொலைச்செய்யபோகிறோம் என்று திடுக்கிட்டார் அரசர்.
ஹன்ழலாவைப் பார்த்துக்கேட்டார் அரசர், "இந்த நாளிலா நீ இங்கு வரவேண்டும்?" என்று கேட்டவாறு அந்த நாட்டின் நடைமுறையை விளக்கினார். இதனைக்கேட்ட ஹன்ழலா, "எனக்கு இந்த நாளைப்பற்றி தெரியாதே" என்று அப்பாவித்தனமாக பதில் கூறினார்.
வேறு வழியில்லை உன்னை கொன்றுத்தான் ஆகவேண்டும், எனவே உனக்கு சாகுமுன் ஏதாவது ஆசை இருக்கிறதா என்றுக்கேட்டார் நுஃமான். அப்பொழுது ஹன்ழலா, "என்னை நீங்கள் கொலைச்செய்வதற்கு முன் ஒரு ஆண்டு அவகாசம் தாருங்கள்" என்றார். உடனே அரசர், "உனக்கு பிணையாள் யாராவது இருக்கின்றார்களா? எனக்கேட்டார். ஹன்ழலா தனக்கு பிணை யார் தருவார் என்று தேடியபொழுது குராத் என்ற நபர் தான் ஹன்ழலாவுக்கு பிணைதருவதாக வாக்குறுதியளித்தார். இதற்கு சம்மதித்த அரசர் நுஃமான் ஹன்ழாவைச் செல்ல அனுமதியளித்தார். பின்னர் அவருக்கு 500 ஒட்டகங்களை அளித்தார்.
ஒரு வருடம் முடிந்துவிட்டது. ஹன்ழலா திரும்பி வரவேண்டிய நாள். நாட்டின் எல்லையில் அரசர் நுஃமானும் தண்டனையை நிறைவேற்றுபவரும் ஹன்ழலாவுக்காக காத்திருந்தனர். அரசருக்கோ ஹன்ழலா வராமலிருக்க வேண்டுமே என்ற எண்ணத்துடன் கவலையுடன் காணப்பட்டார்.
ஹன்ழலா வருவதற்கான நேரம் முடிவடையும் வேளை தூரத்தில் ஒரு உருவம் தென்பட்டது பக்கத்தில் வந்தவுடன்தான் அரசர் நுஃமானுக்கு தெரிந்தது அது ஹன்ழலா என்று. ஆடிப்போனார் அரசர், தன்னிடம் அவகாசம் கேட்டுவிட்டு தப்பிச்செல்வார் என்று எதிர்பார்த்தால் இவர் இவ்வாறு சரியான நேரத்திற்கு வந்துவிட்டாரே என வருத்தப்பட்டார்.
அருகில் வந்த ஹன்ழலாவிடம் மெல்லக்கேட்டார் அரசர் நுஃமான், "கொலையிலிருந்து தப்பியபிறகு மீண்டும் இங்கு வர உன்னைத்தூண்டியது எது?" என வினவினார். ஹன்ழலா சற்றும் தாமதிக்காமல் பதில் கூறினார், "வாக்குறுதியை பேணவேண்டும் என்பதாலேயே".
நுஃமானின் அடுத்த கேள்வி ஹன்ழலாவுக்கு பிணையளித்த குராதை நோக்கியிருந்தது, "ஹன்ழலா திரும்பி வருவார் என்பது உறுதியில்லாத நிலையில் நீ எதற்கு பிணை வழங்கினாய்?" எனக்கேட்டார். "மனிதநேயம்" என்று பதில் கூறினார் குராத். இந்த பதில்கள் அரசர் நுஃமானின் உள்ளத்தை உலுக்கியது. பின்னர் நுஃமான் அவ்விருவரையும் பார்த்துக்கூறினார், "இவ்விரு குணங்களில் எது சிறந்தது என்று எனக்கு தெரியாது. ஆனால் மூன்றாவது ஒரு நபராக மாற என்னால் இயலாது" என்று கூறி அவ்விருவரையும் விடுதலைச் செய்தார்.
இச்சம்பவத்தைத்தொடர்ந்து அரசர் நுஃமான் தனது பிறரைக் கொலைச்செய்யும் தீய குணத்தை அடியோடு கைவிட்டார்.
No comments:
Post a Comment