அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, June 15, 2010

யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ் வருகை


'இறுதியில் யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள், உடனே அவர்கள் (வெள்ளம் போல்) ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைந்து வருவார்கள்'... (அல் குர்ஆன் 21:96).

மறுமை நாளின் அடையாளமாக யஹ்ஜுஜ் எனும் கூட்டத்தினரும், மஹ்ஜுஜ் என்ற கூட்டத்தினரும் வருவார்கள் என்பதும் ஒன்றாகும். இந்த வசனத்தில் 'அவர்கள் திறந்து விடப்படுவார்கள்' என்று உள்ளது. இதிலிருந்து அவர்கள் அடைத்து வைக்கபட்டுள்ளனர் என்பது தெரியவருகிறது.

மேலும், அவர்கள் இனி படைக்கப்பட்டு வருபவர்கள் இல்லை. எற்கனவே உள்ள படைப்பினம் தான் என்பதையும் புரிய முடிகிறது.

'அவர்கள் மேடான பகுதியிலிருந்து விரைந்து வருவார்கள்' என்ற வாசகத்தின் மூலம் அவர்கள் மலைப் பகுதிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் விளங்க முடிகிறது.

இரும்பு சுவருக்கு பின்னே...!

(துல்கர்ணைன் எனும் மன்னர்) இரண்டு மலைகளுக்கும் முன்னே ஒரு கூட்டத்தினரைக் கண்டார்கள். இவர்கள் பேசுவதை அவர்கள் விளங்கிக் கொள்பவர்களாக இல்லை. துல்கர்ணைன் அவர்களே! யஹ்ஜுஜ் மற்றும் மஹ்ஜுஜ் கூட்டத்தினர் இந்த பூமியல் குழப்பம் விளைவித்து வருகின்றனர் எனவே, எங்களுக்கும் அவர்களுக்குமிடையே நீங்கள் தடுப்பு (ச் சுவர்) ஏற்படுத்துதுவதற்காக உங்களுக்கு நாங்கள் வரி செலுத்தட்டுமா, என்று கேட்டனர்.

'என் இறைவன் எனக்களித்துள்ள வசதி எனக்குச் சிறந்ததாகும் எனவே, (உடல்) உழைப்பைக் கொண்டு எனக்கு உதவுங்கள். அவர்களுக்கும் உங்களுக்குமிடையே ஒரு தடுப்பை நான் ஏற்படுத்துகிறேன்' என்று துல்கர்ணைன் கூறினார்.

'என்னிடம் இரும்புக் பாளங்களைக் கொண்டு வாருங்கள்' (என்றும் கூறினார்), இரு மலைகளுக்கிடையே (உள்ள இடைவெளி) மட்டமானதும் 'ஊதுங்கள்' என்றார். அது நெருப்பாக ஆனதும் (செம்பை) என்னிடம் கொண்டு வாருங்கள் இதன் மீது அதை நான் ஊற்றுகிறேன் என்று கூறினார்.

இதில் ஏறவும் அவர்கள் சக்தி பெற மாட்டர்கள். அதில் துவாரமிடவும் சக்தி பெற மாட்டார்கள்.

இது என் இறைவனின் அருட்கொடையாகும். (எனினும்) என் இறைவனின் வாக்கு வரும்போது அதை அவன் தூள்தூளாக்குவான். என் இறைவனின் வாக்கு உண்மையானதாகும்' என்றும் அவர் கூறினார்.

அந்நாளில், அவர்களில் சிலரை மற்றும் சிலருடன் அலை மோதவிடுவோம். மேலும் 'சூர்' ஊதப்பட்டதும் அவர்களை ஒன்று திரட்டுவோம்..
. (அல்குர்ஆன் 18:94-99).

மலைப்பகுதியில் வாழ்ந்த யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டத்தினர் அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு பெரும் துன்பங்களை அளித்து வந்துள்ளனர். இதைக் கண்டு செய்வதறியாது நின்ற மக்கள். அப்போது உலகின் அனைத்துப் பகுதியையும் ஆட்சி செய்த மன்னர் துல்கர்ணைன் அவர்களிடம் முறையிட்டனர், அவர் இரும்பைக் காய்ச்சி, அதன் மீது செம்பை ஊற்றியதும், கெட்டியான சுவராக ஆகிpட்டது. கெட்டியான அந்த இரும்புச்சுவருக்குப் பின்புறம் தான் யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டம் உள்ளது என்பது தெரிய வருகிறது. திறந்துவிட்டால் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டு அலைகள் போல் வருவார்கள் என்பதிலிருந்து அவர்கள் எண்ணிலடங்கா கூட்டம் என்பதும் புரிய வருகிறது.

இவ்வாறு அவர்கள் அடைத்து வைக்கப்பட்ட பகுதி எங்குள்ளது என்ற விபரம் குர்ஆனிலோ, ஹதீஸிலோ கூறப்படவில்லை.

தெரியாமல் இருப்பது ஏன்?

நவீனக் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டு அது நடைமுறையில் உள்ள காலம் இது. ஆகாய விமானங்களும். ராடார் கருவிகளும், தொலை நோக்குக் கருவிகளும் என அதி நவீனக் கருவிகள் உள்ள இந்தக் காலத்தில், யஹ்ஜுஜ் - மஹ்ஜுஜ் கூட்டத்தினர் வாழும் மலைப் பகுதியயைக் கண்டு பிடிக்கப்படாமல் இருக்க முடியுமா? செம்பை உருக்கி ஊற்றப்பட்டு இரும்புச் சுவர் அமைத்திருக்கும் போது அதன் பளபளப்பைக் கண்டே அவர்களின் இருப்பிடம் அறியலாம் தானே? என்ற கேள்விகள் நமக்குள் எழலாம்.

இது ஒன்றும் ஆச்சரியமான விஷயமில்லை. மனிதனிடம் நவீனச் சாதனங்கள் இருக்கிறது என்பது உண்மைதான், ஆனால் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வில்லை என்பது அதைவிட உண்மையாகும்.

பூமிக்கு அப்பாற்பட்டு நின்று பூமியைப்படம் பிடித்து இருக்கிறார்கள், பூமியின் பரப்பளவைத்தான் கண்டு பிடித்துள்ளார்கள் தவிர, பூமியை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து பார்க்கும் அளவுக்கு கருவிகள் பயன்படவில்லை. சில பகுதிகள் இப்போதுதான் கண்டு பிடிக்கப்பட்டு வருகிறது என்றுதான் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த மண்ணில் இன்றும் மனிதக்கால்களோ, பார்வையோ படியாத இடங்கள் ஏராளமாக உள்ளன.

சுக்கிவாய்ந்த கருவிகள் மூலம் பூமி முழுதும் ஆராயப்பட்டாலும் கூட, காடுகளை மேலோட்டமாகத்தான் பார்க்கலாமே தவிர, துல்லியமாக காணமுடியாது. மரமும், செடிகளும் நிறைந்திருப்பதே இதற்குக் காரணமாகும்.

மலைகளால் சூழப்பட்ட காடுகளிலோ, குகைகளிலோ யஹ்ஜுஜ் மற்றும் மஹ்ஜுஜ் கூட்டத்தினர் இருந்தால் எந்த கருவிகள் மூலமும் அவர்களைக் காண முடியாது. செம்பு எனும் உலோகம் பாசிபடிந்து பச்சை நிறத்தில் இருக்கும். இதனால் அந்த பளபளப்பை கண்டுபிடிக்க முடியாமல் அதை அருகில் இருந்து பார்த்தாலும், தூரத்தில் இருந்து பார்த்தாலும் மலைமேல் புல் வளர்ந்துள்ளது போல் பசுமையாகவே தெரியும்.

எனவே, எவரது கண்களுக்கு புலப்படாத பகுதியில் அந்தக் கூட்டத்தினர் வாழ்கின்றனர். இனி வருங்காலத்தில் மனிதர்கள் அவர்கள் வாழும் பகுதியை அடைய நேரிடலாம். அந்த நேரமும், மறுமை நாளின் அடையாளமாக, அவர்கள் வெளியேறும் காலமாகவும் இருக்கலாம். எல்லாவற்றையும் விட மறுமையின் அடையாளமாக அவர்களின் வருகை இருக்கும் என்பதாலேயே அல்லாஹ் மனிதர்களின் பார்வையை விட்டு மறைத்து வைத்திருக்கலாம்.

யஹ்ஜுஜ் - மஹஜுஜ் மனித இனமே!

அவர்கள் மனித இனத்தை விட்டும் அப்புறப்படுத்தி, மறைக்கப்பட்டிருப்பதால் அவர்களை ஏதோ ஒரு புது இனம் என்று விளங்கிவிடக்கூடாது, அவர்களும் மனித இனமே!.

யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் கூட்டத்தினர் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்பட்டால் மக்களின் வாழ்க்கையைப் பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் மேலான வாரிசுகளை உருவாக்காமல் மரணிப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) நூல் - அஹ்மத், தப்ரானி.

அவர்களின் உருவம்

'யஹ்ஜுஜ் மற்றும் மஹ்ஜுஜ் கூட்டத்தினர் வரும் வரை நீங்கள் போராடிக் கொண்டே இருப்பீர்கள். அவர்களின் முகங்கள் அகன்றதாகவும், கேடய(ம் போல்) வட்ட)மாகவும், கண்கள் சிறிதாகவும், முடிகள் செம்பட்டையாகவும் அமைந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பாளர் : காலித் இப்னு அப்துல்லாஹ் (ரலி) நூல்கள் - அஹ்மத், தப்ரானி.

18:99 வது வசனத்தில் உள்ள 'அவர்களில் சிலரை மற்றும் சிலருடன் அலை மோத விடுவோம்' என்ற வாசகப்படி நெருக்கடி ஏற்படும் அளவுக்கு கூட்டமாக இருப்பர் என்பது புரிந்தாலும், அவர்கள் உயரம் குறைந்தவர்களாக இருப்பார்கள் என்பதும் புரிகிறது.

இதே போல் புகாரீ ஹதீஸ் (எண் 3348) 'நரகத்தில் நாம் ஒருவர் என்றால் 1000 பேர் யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டத்தினர் இருப்பார்கள்' என்று கூறுகிறது. இந்த வாசகம் மூலமும் அவர்களின் எண்ணிக்கை கூடுதலானது. அதே வேளையில் உயரமும் குறைவானது என்பதைப்புரியலாம்.

இது போல் ஒரு நபர் ஆயிரம் குழந்தைகளை வாரிசாகப் பெறுவார்' என்ற வாசகம் மூலம், அவர்களின் பிறப்பின் போதே உயரம் மிகச்சிறியதாக இருக்கும் என்றும் புரியலாம். இவர்களின் உயரம் ஒரு சாண், அல்லது இரு சாண் அளவுக்கே இருக்கும். இவர்களில் மிகவும் உயரமானவர் மூன்று சாண் அளவுக்கு இருப்பார்' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக ஹாகிம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 21:96 வது வசனத்தில் உள்ள 'விரைந்து வருவார்கள்' என்ற வாசகம் மூலம், அவர்கள் அதிவேகமாக இயங்குவார்கள் என்பதும் விளங்குகிறது.

ஈஸா நபியின் பிரார்த்தனையால் அழிவர்!

'யஹ்ஜுஜ் - மஹ்ஜுஜ் கூட்டத்தினரை அல்லாஹ் வெளிப்படுத்துவான். அவர்கள் முதல் கூட்டத்தினர் ஒரு நீரோடையைக்கண்டு அதன் நீரைப்பருகுவார்கள். அடுத்த கூட்டத்தினர் வரும் போது (தண்ணீர் இல்லாமல் இருப்பதைக் கண்டு) 'அந்த இடத்தில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்தது' என்று கூறுவார்கள். பின்னர் பைத்துல் முகத்தஸ் பகுதியில் உள்ள ஒரு மலையை அடைவார்கள்.

'பூமியில் உள்ளவர்களைக் கொன்று விட்டோம். வாருங்கள்! வானில் உள்ளவர்களைக் கொல்வோம்' என்று கூறுவார்கள், தங்கள் அம்புகனை வானை நோக்கி எய்துவார்கள். அவர்களின் அம்புகளில் இரத்தம் பூசி அல்லாஹ் திருப்பி அனுப்புவான். பிறகு அவர்கள் ஈஸா நபியையும், அவரின் தோழர்களையும் முற்றுகையிடுவார்கள்.

பின்னர், ஈஸா நபியும், அவர்களின் தோழர்களும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வார்கள். அல்லாஹ் புழுக்களை அவர்களிடம் அனுப்புவான். அந்தப் புழுக்களின் தாக்குதல் காரணமாக அனைவரும் ஒரேடியாக செத்து விடுவார்கள். பின்னர். ஈஸா நபி அவர்களும் அவர்களின் தோழர்களும் (மலையிலிருந்து) தரைக்கு வருவார்கள். யுஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் கூட்டத்தரின் (பிணங்களின்) நாற்றமும், நெருக்கடியும் ஒரு சாண் அளவு இடத்தைக் கூட விடாது பரவி நிற்கும். பின்னர் ஈஸா நபி அவர்களும், அவர்களின் தோழர்களும் அல்லாஹ்விடம் துஆச் செய்வார்கள். உடனே அல்லாஹ் ஒட்டகங்களின் கழுத்துக்கள் போன்ற வடிவில் சில பறவைகளை அனுப்புவான். அப்பறவைகள் பிணங்களை சுமந்து சென்று அல்லாஹ் நாடிய இடங்களில் போட்டுவிடும்' என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல் - முஸ்லிம்.

கடும் அமளி – துமளியில் ஈடுபடும் யஹ்ஜுஜ் - மஹ்ஜுஜ் கூட்டம், இறுதியில் ஈஸா நபியிடமும் போருக்கு நிற்பார்கள். அவர்களை முற்றுகையிடும் வேளையில் அவர்களின் பிரார்த்தனை காரணமாக அழிவார்கள். இந்தக் கூட்டத்தினர் வெளியேறிய நாட்களில் கடும் பஞ்சமும் ஏற்படும் என்பதையம் இந்த ஹதீஸில் புரிய முடிகிறது.

யஹ்ஜுஜ் - மஹ்ஜுஜ்களின் அழிவுக்குப் பின்...

(யஹ்ஜுஜ் - மஹ்ஜுஜ் கூட்டத்தினர் அழிவுக்குப் பின்) அவர்கள் (பயன்படுத்திய) அம்புகள், வில், அம்பாரத் தூளிகள் போன்றவற்றை முஸ்லிம்கள் ஏழு ஆண்டுகளுக்கு விறகாகப் பயன்படுத்துவார்கள். பின்னர் அல்லாஹ் மழையை அனுப்புவான், அனைத்து வீடுகளையும் பூமியையும் அந்த மழை கண்ணாடி போல் கழுவி விடும். பின்னர் பூமியை நோக்கி, 'உன் கனிகளை முளைக்கச் செய்! உன்னிடமிருந்த பரக்கத்தையும் திரும்பக்கொடு' என்று கூறப்படும். (நல்ல விளைச்சல் ஏற்படும்) அந்நாளில் ஒரு மாதுளம் பழத்தை ஒரு கூட்டமே உண்பார்கள். அதன் தொலி மூலம் (குடை போல் அமைத்து) நிழல் பெறுவார்கள். அந்த அளவுக்கு அது பெரிதாக இருக்கும். பாலிலும் பரக்கத் செய்யப்டும். ஒரு ஒட்டகத்தில் கறக்கப்படும் பால், ஒரு பெரிய கூட்டத்தாருக்குப் போதுமானதாக இருக்கும். ஒரு மாட்டில் ஒரு முறை கறக்கப்டும் பால் ஒரு சமூக மக்களுக்குப் போதுமானதாக இருக்கும். மக்களின் இந்த வளமான வாழ்க்கையின் போது, அல்லாஹ் ஒரு சுகமானக் காற்றை அனுப்புவான். அக்காற்று அக்குள்வரை செல்லும். மூஃமின்கள், முஸ்லிம்கள் அனைவரின் உயிர்களும் கைப்பற்றப்படும். கழுதைகள் வெருண்டோடுவது போல் வெருண்டோடுவர். கெட்டமக்கள் மட்டுமே எஞ்சி நிற்பர். அவர்கள் இருக்கும் போதுதான் மறுமைநாள் நிகழும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல் - திர்மிதீ.

இந்த ஹதீஸ் மூலம், யஹ்ஜுஜ் - மஹ்ஜுஜ் கூட்டத்தாரின் மறைவுக்குப் பின், மக்களிடையே செல்வம் பெருகி, வளமாக வாழ்வு ஏற்படும் என்பதைப் புரிய முடிகிறது. வளமான வாழ்க்கையை அனுபவிக்கும் காலத்தில் முஸ்லிம்களின் உயிர்கள் மட்டும் கைப்பற்றப்பட்டுவிடும் என்பதும், அதன்பின்னர் இறைமறுப்பாளர்களும் தீய நடத்தை உள்ளவர்களும் வாழும் போதே உலகம் அழியும் என்பதும் தெரிகிறது. தஜ்ஜால் வருகை, ஈஸா நபி வருகை, யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டம் வருகை என இம்மூன்றும் அடுத்தடுத்து நடைபெறும் என்பதும் நமக்குத் தெரிகிறது.

No comments: