ஹம்ஸா (ரழி)
ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்து தம் உயிரை அர்ப்பணம் செய்த உத்தம சஹாபாக்களில் ஒருவர்.
அப்துல் முத்தலிபின் மகனான ஹம்ஸா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையாவார். மேலும் வைபா எனும் செவிலித்தாயிடம் பால் அருந்தியதில் நபிகளாருக்கும் இவருக்கும் பால்குடிச் சகோதர உறவும் இருந்தது. இவர் நபிகளாரின் வயதினை ஒத்தவரும் நபிகளாரின் சிறந்த நண்பரும் கூட. வாலிபப் பருவத்தில் சிறந்த உடல்வாகும் வளப்பு மிகு தோற்றமும் கொண்டு விளங்கிய ஹம்ஸா(ரழி) சிறந்த வாக்குச் காதுரியமும், நேர்மையும் நிறைந்த பண்பாளராகத் திகழ்ந்தார். அண்ணலாரின் அழகிய நற்பண்புகள் ஹம்ஸா (ரழி) அவர்களைப் பெரிதும் கவர்ந்தன.
இஸ்லாத்தை ஏற்பது நபிகள் (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்த ஆரம்பகட்டத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோரில் இவரும் ஒருவர். அண்ணலார் போதித்த ஏகத்துவ இறைவழிபாட்டுக் கொள்கையை எதிர்ப்பின்றி மனதால் ஏற்றுக் கொண்டாலும் அவர்களின் சிந்தனை சலனமற்ற நீர்போல நிலைபெற்றிருந்தது. ஏகத்துவ எதிர்ப்பாளர்களின் விமர்சனங்கள் நபி(ஸல்)அவர்கள் மீது வீசப்பட்ட போதுதான் சலனமற்ற நீரில் எறியப்பட்ட கல்லினால் நீரில் உருவாகும் வண்ண வளையங்களின் அழகுத் தோற்றங்கள் போல ஹம்ஸா(ரழி) அவர்களின் சிந்தனையில் ஏகத்துவ இறைவழிபாட்டுக் கொள்கையின் இனிமை புரிந்தது.
கஃபாவின் அருகில் இணைவைப்பாளர்களில் முக்கியமானவானான அபூஜஹ்ல் தலைமையில் ஏகத்துவ எதிர்ப்பாளர் கூட்டம் நபி(ஸல்)அவர்களின் பிரச்சாரத்தை குறைகூறி நடக்கிறது. முஹம்மதுவின் பிரச்சாரங்கள் நம் முன்னோர்களின் அனுஷ்டானங்களுக்கு எதிராகவும், நம் வழிபாட்டுத் தெய்வங்களின் மகிமைக்கு பங்கம் விளைவிப்பதாகவும் உள்ளது. தம் சகோதரர் மகன் செய்யும் இப்பிரச்சாரங்கள் ஹம்ஸாவும் அறிவார் எனக்கூறி நபிகளாரைத் தூசித்துப் பேசுகிறான் அபூஜஹ்ல். இதனை செவிமடுத்த ஹம்ஸா(ரழி) முஹம்மதுவைத் தவறாக எவரும் எடைபோட வேண்டாம் என எச்சரிக்கிறார். இதனால் வாக்குவாதம் ஏற்பட, கூட்டம் குழப்பத்துடன் கலைகிறது. அதன் பிறகு தனிமையில் அமர்ந்து சிந்தித்த ஹம்ஸா(ரழி)அவர்களுக்கு நபிகளாரின் ஏகத்துவப் பிரச்சாரமும் அவர்களின் போதனைகளும் சரியானதே என மேலும் உறுதி ஏற்படுகிறது.
வேட்டையாடுதலில் ஆர்வம் கொண்ட ஹம்ஸா(ரழி) ஒருநாள் வேட்டைக்கு சென்று திரும்பிய பின்னர் கஃபாவை வலம் வர நாடியவராக அதனை நோக்கி செல்லும் போது அப்துல்லாஹ் இப்னு ஜுத்ஆன் என்பவனின் அடிமைப் பெண்ணொருத்தி ஹம்ஸா(ரழி) அவர்களை அபூஉமாராவே! முஹம்மதுவைப் அபூஜஹ்ல் மிக இழித்துரைக்கிறான், கொடுமைகள் புரிகிறான். முஹம்மது இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருக்கிறார் என்று எடுத்துரைத்தார். இதனைக் கேட்டு வெகுண்ட சினங்கொண்டவராக ஹம்ஸா(ரழி) கஃபா சென்று அபூஜஹ்ல் எங்கே? என்று கேட்டவராக கஃபாவின் ஒரு ஓரத்தில் தன் நண்பர்களுடன் அமர்ந்திருந்த அபூஜஹ்லை நோக்கி தம்மிடம் இருந்த வில்லின் நானை விரைப்புடன் இழுத்து அபூஜஹ்லின் தலைக்கு அம்பினைச் செலுத்தினார். தலையில் காயமுற்ற அவனிடம் ஏகத்துவத்தின் சிறப்பினை எடுத்துக் கூறியவராக அண்ணலார் போதிக்கின்ற போதனைகளை தாம் ஏற்றுக் கொண்டதையும் இஸ்லாத்தின் இனிய கொள்கைகளால் தாம் ஈர்க்கப் பட்டதையும் வீரத்துடன் எடுத்துரைக்கிறார்.
இஸ்லாத்தை எப்படியும் ஒழித்தே தீருவேன் எனக்கங்கனம் கட்டித் திரிந்த அபூஜஹ்லிடம் இதுபோன்ற மிரட்டல்கள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு எந்த தடையும் இழைக்க முடியாது என உறுதியாக எண்ணிய ஹம்ஸா(ரழி) சிங்கத்தின் குகையிலேயே சிங்கத்தை நேரிட்டு வீழ்த்தும் துணிவுடன் தாம் ஈமான் கொண்டதை எடுத்துரைத்தார். ஹம்ஸா(ரழி)வின் இடிமுழக்க குரலைக் கேட்ட குறைஷிகள் நிலை தடுமாறி ஓட்டம் பிடித்தனர். சிலர் அபூஜஹ்லுக்கு பரிந்து பேச முனைந்தும் அவன் அவர்களைத் தடுத்து விட்டான். இணைவைப்பாளர்கள் இந்நிலையில் தம் கடவுளர்களுக்கு என்ன நேருமோ என்று ஒரு புறம் சிந்திக்க, சத்தியத்தை போதித்த சகோதரரின் மகன் தூசிக்கப்பட்டதால், விமர்சனங்களைச் செவியுற்ற நான் விபரீதங்கள் ஏதும் புரிந்து விட்டேனோ? என்ற மனக்குழப்பம் ஹம்ஸா(ரழி)க்கு ஏற்படுகிறது. தம் இதயத்தை விசாலமாக்கி உள்ளம் பக்குவப்பட கஃபா சென்று பிராத்தனை புரிந்ததோடல்லாமல் அண்ணல் நபிகளாரையும் பிராத்திக்க வேண்டுகிறார் ஹம்ஸா(ரழி)அவர்கள். நபி(ஸல்)அவர்கள் பிராத்திக்கிறார்கள்.
ஈமானிய உறுதி இன்னும் மெருகேறுகிறது. அண்ணல் நபிகளாரின் அடிச்சவடுகளைப் பின்பற்றும் உத்தம சஹாபாக்களில் ஒருவராகவும் நபிகளாரின் பக்கபலமாகயிருந்து ஏகத்துவ கொள்கையை எடுத்துரைப்பதில் வரும் இடர்களை துச்சமென மதித்து துயரேதுமின்றி துணிந்து செயல்பட்ட தீரர்களில் ஹம்ஸா(ரழி)அவர்கள் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அஸதுல்லா-அல்லாஹ்வின் சிங்கம் என்ற சிறப்புப் பெயருக்கும் சொந்தக்காரர் இவர் நபிகளார் மதீனத்துக்கு ஹிஜ்ரத் செய்தபின் நிகழ்ந்த பத்ருப் போரில் பங்கேற்று (ஹஜ்ரி 2ம் ஆண்டு) முஸ்லீம்களின் வெற்றிக்காக முனைந்து பேரிட்டு வெற்றிக் கனியைச் சுவைப் பதில் ஹம்ஸா(ரழி) அவர்கள் ஆற்றிய பங்கு நினைவு கூறதக்கது. அன்றைய அராபியர்களின் போர் வழக்கப்படி முதலில் தனித் தனியாக போராடும் முறையில் அண்ணல் நபிகளால் நியமிக்கப்பட்ட மூவர் ஹம்ஸா(ரழி), அலி(ரழி), அபூஉபைதா(ரழி) ஆகியோராவர். உத்பா, ஸைபா, வலீத் ஆகியோர் நிராகரிப்போரால் நிறுத்தப் பட்டவர்கள் இத்தனிப் போரில் ஹம்ஸா(ரழி)அவர்கள் உத்பாவை வீழ்த்தி வெற்றியின் ஆரம்ப நிலையை இஸ்லாத்துக்கு துவக்கி வைத்தார்கள்
இப்போரில்தான் குறைஷி இணைவைப்பாளர்களின் முக்கியமானோர்களாகிய அபூஜஹ்ல், உத்பா, ஸைபா, வலீத் போன்றோரின் உடல்கள் கொல்லப்பட்டு கோர நிலையில் துர் நாற்றத்திற்குள்ளாகி தீண்டுவாரின்றி கிடந்தன. உத்பாவின் மகளாகிய ஹின்தா(அபூஸுப்யானின் மனைவி) ஹம்ஸாவின் ஈரலைப் பிடுங்கி பற்களால் கடித்து துப்புவேன் என்று சபதமேற்கிறார். ஹம்ஸாவைக் கொன்றால் உம்மை அடிமைத் தலையிலிருந்து விடுவிப்பதோடு பொன்னும் பொருளும் சன்மானமாய்த் தந்து சிறப்புவிக்கிறோம். என்று வஹ்ஷீ இனம் நீக்ரோ அடிமையையும் தயார் செய்தார்கள் இவன் ஜுபைர் இப்னு முத்அம் என்பவரின் அடிமை. வஹ்ஷீ குறிபார்த்து ஈட்டி எறிவதில் கைதேர்ந்தவன். பத்ருப் போரின் தோல்வியை ஜீரணிக்க முடியாத மக்கா நிராகரிப்பாளர்கள் பழிதீர்க்கும் பொறுட்டு துவங்கிய போர்தான் உஹதுப் போர். இப்போரின் ஆரம்ப நிலை இஸ்லாமியர்களின் பக்கம் சாதகமாகத்தான் இருந்தது. குறைஷியர்கள் விட்டு விட்டு ஓடிய போரின் கனீமத் -போர்ப் பொருட்-களை கண்ணுற்ற முஸ்லீம் வீரர்கள் அண்ணலாரின் கட்டளையை மீறி அங்கிருந்து இடம் பெயர்ந்து அப்பொருட்களை வாரி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் போதுதான் நிராகரிப்பாளர்கள் தருணம் பார்த்து பின்புறமாக தாக்குதல் நடத்தி பெருஞ் சேதத்தை விளைவித்தனர். ஆக ஆரம்பத்தில் வெற்றியடைந்த முஸ்லிம்கள் நபிகளாரின் கட்டளையை சிலர் புறக்கணித்ததால் இறுதியில் பெரும்பாதிப்பைச் சந்திக்கின்றனர். சிலர் செய்த தவறின் விளைவால் 70 நபித்தோழர்கள் ஷஹீதாக்கப்படுவதுடன் நபி (ஸல்) அவர்களும் காயப்படுத்தப்படுகிறார்கள்.
போர்களத்தில் ஹின்தா ஹம்ஸா(ரழி)யைக் கொல்வதற்கு உரிய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு சந்தர்ப்பத்தில் ஹம்ஸா(ரழி) வேறு ஒருவனுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் போது வஹ்ஷீ வீசிய ஈட்டி ஹம்ஸா(ரழி) அவர்களின் இடுப்பில் நுழைந்து கால்கள் வழியாக வெளியேறியது. அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்த நிலையில் எதிரிகளால் தாக்கப்பட்டுத் தம் இன்னுயிரை நீத்தார் ஹம்ஸா(ரழி). அவர்களின் உடலை சின்னாபின்னப் படுத்தி உடலை கூறு போடுகின்றனர் நிராகரிப்பாளர்கள். அவரின் ஈரக்குலையை பல்லினால் கடித்து துப்புகிறாள் ஹிந்தா. போர் முடிந்து ஷஹீதான சகாபாக்களின் உடல்களை சேகரித்து கபனிட்டு அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த அண்ணலாருக்கு ஹம்ஸா(ரழி)யின் சிதைக்கப்பட்ட உடலைக் கண்டதும் நான் இது போன்ற வேதனை இதுவரையில் அனுபவிக்கவில்லை என சோகத்தினால் கண்ணீர் வடிக்கிறார். மக்கா வெற்றிக்குப் பின் ஹிந்தாவும் வஹ்ஸியும் இஸ்லாத்தை தழுவி விடுகின்றனர். இருப்பினும் நீங்கள் என் கண்முன் தோன்ற வேண்டாம் என அவர்களை மன்னித்து அப்புறப்படுத்தி விடுகின்றனர். நபிகளார்.
படிப்பினை:
ஹம்ஸா(ரழி) அவர்கள் முதலில் நன்றாக சிந்தித்து மார்க்கத்தை ஏற்றார்கள். ஈமான் கொண்ட பிறகு அதிலே மிகவும் உறுதியாக நின்று தன் இறுதி மூச்சுவரை இஸ்லாத்திற்காகவே போராடினார்கள். அவர்களுடைய வீரம் எதிரிகளை நடுங்கச் செய்யக் கூடியதாக இருந்தது.
தொழுகையை அதற்குரிய நேரங்களில் தொழுவது, பெற்றோரைப் பேணுவது, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது - இவை செயல்களில்(அமல்களில்) மிகச் சிறந்தவை. (புகாரி, திர்மிதி-இப்னு மஸ்ஊத்)
பேரீத்தம் பழம் ஒன்றை கையில் வைத்திருந்த நபித்தோழர் ஒருவர் அண்ணல் நபி(ஸல்)அவர்களிடம் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவோர்க்கு சுவனம் கிடைக்குமா? என்று வினவ நபிகளார் ஆம் என்று பதில் அளித்தவுடன் கையிலுள்ள பேரீத்தம் பழத்தை தூக்கி எறிந்து விட்டு போர் புரிந்து வீரமரணமமைகிறார் - புகாரி.
மேற்கூறிய இரு நபிமொழிகளின் படியும் அருள்மறையின் 2:155,156 வசனத்திற்கேற்ப அனைத்து சோதனைகளுக்கும் ஆட்பட்டு இறுதியாக தனது உயிரையும் இறைவனுக்காகவே அர்ப்பணித்தார்கள். அதே போன்று நம்மையும் ஈமானில் உறுதியும், எதிரிகளைக் கண்டு நடுங்காமல் அவர்களை நடுங்கச் செய்யக் கூடிய வீரமும் உடையவர்களாக ஆக்க வல்ல நாயனிடமே வேண்டுவோம்.
No comments:
Post a Comment